13
Feb
2026

இது ஒரு குழந்தையின் அலறலா? கதறலா? என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு ஆசிரியனாய் இதைக் கேட்கும் போதெல்லாம் என் சுயநலத்திற்குச் சூடு வைக்கப்படுகிறது. “குருவியின் தலையில் பனங்காயை” வைப்பதுபோல் இருக்கின்ற பழியை எல்லாம் என் பிள்ளையின்மீது போட்டுவிட்டு ஆசிரியராகிய நான் நிரபராதி என நிருபிக்கத் துடிக்கின்ற இடத்திலெல்லாம் என் பள்ளிக்குழந்தைகள் நிர்கதியாகி விடுகின்றது. பாவம் ஒரு பக்கம்! பழி ஒரு பக்கம்?
என் பிள்ளைகள் என்னிடம் சில கேள்விகள் கேட்பதுபோல சித்த பிரம்மையில் நான் சிதறித்தான் போகிறேன். தேர்வு வருகிறது தேருவோமா? தவறுவுமோ? என்று என் மாணவர்கள் தூக்கம் வராமல் தடுமாறிக் கொண்டிருக்கும் போது நான் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கும்போது கனவில் கண்ட ஒரு காட்சி என்னைக் கண்கலங்க வைத்துவிட்டது.
கனவில் அந்தப் பையன் கேட்ட கேள்வி என் உள்ளத்தை உடைத்தே விட்டது. வகுப்பறையில் நாங்கள் இருக்கிறோம். அலைபேசி உங்களை அழைக்கிறது. C.E.O சார் எதற்குப் பிள்ளைகள் பெயிலாச்சு என்று கேட்கிறார்! நீங்கள் சொல்கிறீர்கள் ஒழுங்கா பள்ளிக்கு வரமாட்டான்! சாயங்காலப் படிப்புக்கு நிக்கச் சொன்னா நிக்கமாட்டான்! சிறப்பு வகுப்பு வரமாட்டான்! என்று நீங்கள் சொல்லும் போதுதான் எங்கள் ஆசிரியரும் பொய் சொல்வார்கள் என்று எனக்குத் தோன்றியது! என்றான் அந்த பையன்.

டீச்சர் நீதிக்காக மனுநீதிச் சோழன் தன் மகனையே தேர்க்காலில் போட்டுக் கொன்றான் என்று கற்றுக்கொடுத்த நீங்களே கல்வி அதிகாரிகளிடம் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள எங்களைக் காவு கொடுத்துவிட்டீர்களே! நீங்கள் நிரபராதியாக! எங்களை நிராயுதபாணியாக! மாற்றி விட்டீர்கள்! உங்களைக் காப்பாற்றிக் கொள்ள எங்களை ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லிவிட்டீர்கள் வருந்தவில்லை டீச்சர். நீங்கள் யாரிடமும் ஏச்சு வாங்கக் கூடாது அது போதும் டீச்சர்.
ஆசிரியர்கள் எல்லோரும் சொல்வார்கள் அனைவரும் தேர்ச்சி (All Pass) வந்தபிறகுதான் கல்வித்துறையே கெட்டதாகக் கடும் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்! அனைவரும் தேர்ச்சியடையத்தானே கல்விக் கூடமே வைத்திருக்கிறோம். ஒரு பேருந்தில் பயணிக்க வருகிறோம். அத்தனைபேரையும் அவரவர் விரும்பும் இடத்தில்தானே அவர்கள் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். யாரையும் தகுதியற்றவர்கள் என்று இடையில் இறக்கிவிடுவதில்லையே. ஆனால் அவர்களுக்கு நன்றிகூடச் சொன்னதில்லை! ஆனால் உங்களை நாள்தோறும் கும்பிடுகிறோம் டீச்சர்! நீங்கள் ஏன் எங்களை இடையிலேயே இறக்கி விட நினைக்கிறீர்கள்?
9ஆம் வகுப்பு வரை நான் தேர்ச்சியடைந்ததை நினைத்து அனைவரும் (All Pass) தேர்ச்சியா? என்று வருத்தப்படுகிறீர்கள்! பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடையவில்லை என்றால் கோபப்படுகிறீர்கள்! நான் தேர்ச்சியடைவதும், அடையாமல் இருப்பதும் உங்கள் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் இருக்கிறதே தவிர என்னுடைய விருப்பத்தின் அடிப்படையில் இல்லையே டீச்சர்.

டீச்சர் ஆறாம் வகுப்பில் இருந்து எனக்குச் சொல்லிக் கொடுத்தீர்கள்? அத்தனை வருடமும் என்னை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் பத்தாம் வகுப்பில் என்னைப் படாதபாடு படுத்துகிறீர்கள்! காரணம் எனது வெற்றிக்காக அல்ல. நீங்கள் தோற்றுப் போய்விடக்கூடாது என்பதற்காக! அப்படித்தானே! இதுவரை உங்களோடு இருந்தும் எங்களுக்கு அந்த வேலை இருக்கிறது! இந்த வேலை இருக்கிறது நீ படி! என்று என்னை பாராமுகமாக இருந்துவிட்டு பத்தாம் வகுப்பு வந்தவுடன் படி! படி! எனப் படாதபாடு படுத்துவது என்பது… பயிற்சியே இல்லாமல் போருக்கு அனுப்பி எங்களைச் சாகடிப்பதற்குச் சமம்.
ஒரு குடும்பத்தில் கடைசிக் குழந்தைதான் செல்லமாகக் கொண்டாடப்படும். மற்றப் பிள்ளைகள் கண்டு கொள்ளப்படாது. ஆனால் கல்விக்கூடத்தில் இதற்கு மாறாக மூத்த பிள்ளைகள் மீது முழுக் கவனம் செலுத்தப்படுகிறது. 10, 12ஆம் வகுப்புப் பிள்ளைகள் மீதுதான் உங்களுக்குக் கவனம். எங்களைப் பார்த்தால் ஏதாவது படிங்க என்று கண்டுகொள்ளாமல் விட்டதால் இன்று என்னையே நான் கண்டுபிடிக்க முடியவில்லை. கலங்கி நிற்கிறேன்.

எங்க அப்பா அம்மாவிற்குப் படிக்கத் தெரியாது. உங்களை நம்பித்தான் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். நீங்களே என்னை நிராகரித்தால் யார் எனக்கு வாழ்வு கொடுப்பார்? எங்கள் வீட்டில் இருவரும் வேலைக்குப்போனால்தான் எங்களுக்குச் சாப்பாடு. ஆனால் நீங்களே பாதி நேரம் என் பெற்றோரை பள்ளிக்கு அழைப்பதால் பாதி நாட்கள் நாங்கள் பட்டினி கிடக்கின்றோம் டீச்சர்.
டீச்சர் நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் சரி எத்தனைமுறை திட்டினாலும் சரி உங்களைவிட்டுப் போகவே மாட்டேன். ஆனால் நீங்கள் வெறுத்துவிட மட்டும் செய்யாதீர்கள். ஒருமுறை விடுப்பு எடுத்தாலும் எனக்குத் தண்டனை கொடுக்கிறீர்கள்! சரிதான். காரணம் நீங்கள் சொல்லிக் கொடுக்கும்போது நான் இல்லையென்றால் நான் எப்படிப் படிப்பேன்? என்றுதானே! உண்மைதான் ஆனால் நான் பள்ளிக்கு வந்த நாட்கள் எல்லாம் உங்களுக்கு எத்தனை லீவு உண்டோ அத்தனையும் எடுத்துவிட்டு அன்றைய நாளில் என்னை அனாதையாக்கி விடுகிறீர்கள். நீங்கள் வரவில்லை என்று நான் வருத்தப்பட மாட்டேன். ஆனால் உங்களைத் தேடுவேன்!
நான் ஒரு நாள் கோவிலுக்குப் போய்விட்டேன் பள்ளிக்கு வரமுடியவில்லை என்று என்னை வெளியில் நிற்க வைத்தீர்கள். ஆனால் மதத்தின் R.H பெயரில் லீவு இருந்தால் தேடிப்பார்த்து எடுத்து நீங்களும் பள்ளிக்கு வராமல் இருந்திருக்கிறீர்கள். நான் உங்களை குறை சொல்லவில்லை.
இதனைச் சொல்வதற்கு எனக்குத் தகுதி கிடையாது இருப்பினும் என் இயலாமையை சொல்லுகிறேன். ஒரு நாள் உடல்நிலை சரியில்லாதபோது விடுமுறை எடுத்திருந்தேன். அதனை உண்மை தானா? என்று கேட்டீர்கள். மருந்துச் சீட்டு கேட்டீர்கள் சரிதான். ஆனால் கடந்த மாதம் நீங்கள் மருத்துவ விடுப்பில் இருந்தீர்கள்! ஆனால் மருத்துவமனைக்கே போகாமல்! கடைசியில் வரும்போது மருத்துவரிடம் ஒரு சான்றிதழோடு எங்களைச் சந்திக்க வந்தீர்கள். இதே தவறை நான் செய்திருந்தால் நீங்கள் எனக்கு என்ன தண்டனை கொடுத்திருப்பீர்கள் என்று சிந்தித்துப் பார்த்தேன் பயமாயிருந்தது?

டீச்சர் முட்டாளை அறிவாளியாக்குவதுதானே ஆசிரியர் வேலை. ஆனால் இங்கு பல அறிவாளிகளை சின்ன வயதில் முட்டாள் என்று எத்தனையோ ஆசிரியர்கள் திட்டியிருக்கிறார்கள்!. ஏன்? எடிசனைக் கூட ஒரு ஆசிரியை எதற்கும் பயனற்றவன் என்று சொன்னார்கள். ஒரு தாய் அவரை விஞ்ஞானியாக்கிய போதுதான் இந்த ஆசிரியச் சமூகம் தலை கவிழ்ந்துவிட்டது. அப்துல் கலாம் போன்றோர்களால்தான் மீண்டும் ஆசிரியச் சமூகம் தலைநிமிர்ந்தது.
டீச்சர் என்னுடைய இயலாமையின் காரணமாக நான் ஏதேதோ உளறி விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் சாமியைச் சந்தேகப் படுவதும் ஆசிரியரிடம் குறைகாண்பதும் ஒன்றுதான் என்று எனக்குத் தெரியும். என் குடும்பம் வறுமையான குடும்பம் ஆனால் படித்தவர்கள் பக்கத்தில் நான் நிற்கிறேன் என்றால் அது ஆசிரியருடன் நிற்கும் போதுதான். ஆனால் படிப்பு வரவில்லை என்று என்னைத் துரத்தும் போதும் பள்ளிக்கு வரவில்லை என்று கண்டிக்கும் போதும் நான் கண்கலங்கிப் போகிறேன் என்றவுடன் நான் கண்கலங்கினேன் எனது கனவும் கலைந்தது.

டீச்சர் எத்தனை பிறவி எடுத்தாலும் நான் உங்களுக்கு மாணவன்தான். அதனை நான் விடமாட்டேன் என்பதுதான் ஒரு மாணவனின் அன்பாகும். ஒருமுறைத் தொலைகாட்சியில் ஒரு ஆசிரியர் மாறிப்போகிற காட்சி. அத்தனை மாணவர்களும் அழுது புரள்வது இன்னும் கண்ணுக்குத் தெரிகிறது. மலைவாழ் மக்களிடத்திற்கு மாறிப்போன ஒரு ஆசிரியயை மலைவாழ் மக்களாகவே மாறிய டீச்சர்களும் உண்டு.
இன்னும் எத்தனை ஆசிரியர்கள் தன்னுடைய சொந்தச் செலவில் மாணவர்களைப் படிக்க வைக்கிறார்கள். பள்ளிகளைப் புதுப்பிக்கிறார்கள். கல்வி உபகரணங்கள் வாங்கிக் கொடுக்கிறார்கள். உணவு, உடைக்கு வழி செய்கிறார்கள். பலர் இங்கு காக்கைகள் போல குயில் குஞ்சுகளை வளர்த்தெடுத்துக் கூவ வைப்பதுபோல தன்னிடம் படிக்க வந்த பிள்ளைகளை உலகை ஆள வைத்து உற்சாகமடைகிறார்கள். ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே நல்ல ஆயன் 99 ஆடுகளை விட்டு விட்டுக் காணாமல் போன ஒரு ஆட்டினைத் தேடிச் செல்வதுபோல தன் பிள்ளைக்காக பள்ளிப் பிள்ளைகளை எல்லாம் விட்டுவிட்டு விடுமுறையில் சென்று விடுவார்கள் அது சிலரால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட சறுக்கல்.

எந்தக் குழந்தையும் வளர்வதற்குப் பெற்றோர் காரணமாக இருக்கலாம். ஆனால் அவன் அறிவாளியாகவும் பிறர் போற்றதலுக்குரியவனாகவும் மாற்றுவது ஆசிரியர்களால் மட்டுமே! உங்கள் கடைக்கண் பார்வை பட்டால்போதும் நாங்கள் கலங்கரை விளக்காக மாறிவிடுவோம். என்னைப் போன்ற கடைநிலை மாணவர்கள் ஏக்கமெல்லாம் படிப்பில் தோற்றுப்போனாலும் பாசத்தில் நாங்கள் வெற்றியடைய வேண்டும். எங்க டீச்சர் எங்களை அன்பு செய்ய வேண்டும். மனப்பாடம் செய்யவில்லை என்றாலும் எங்கள் மனதைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்;. நம்புங்கள் கற்றுக் கொடுங்கள் நாங்கள் வென்று காட்டுகிறோம். பெற்றெடுக்காத தாய்! பேர் வாங்க வைக்கும் தாய்! அகரம் தந்த அன்னை! தரத்தை உயர்த்திய தாய்! எனக்கு எல்லாம் நீங்களே. உங்கள் அன்பால் உலகை வெல்வோம்! டீச்சர் படிப்பு வேண்டும். அதைவிட உங்கள் பாசம் வேண்டும் நாங்கள் எப்போதும் நீங்கள் பெற்றெடுக்காத பிள்ளைகளே! நிச்சயம் பேர் வாங்கித் தருவோம்!
“கருவறையில் கொன்றால்
சிசுக்கொலை….
வகுப்பறையில்…?
………?