14
Sep
2018
செப்டம்பர் மாதம் வந்தவுடன் கொண்டாடப்படவேண்டிய நாட்களில் ஒன்றாக ஆசிரியர் தினம் அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில்; மகத்தான மனிதர்களை உருவாக்கும் மாபெரும் சக்தி ஆசிரியர்களிடம் தான் இருக்கிறது என்பதனை இந்த உலகம் இன்றும் நம்புகிறது.
ஆனால் இக்காலக்கட்டத்தில் ஆசிரியர்தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஆசிரியர்கள் கொண்டாடப்படவில்லை. எந்த ஒரு சமூகம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை கைகழுவிவிட்டதோ அச் சமூகம் தன்னைத்தானே அழித்துக்கொள்ள ஆயத்தமாகிறது.
இன்று உயர்ந்து உன்னத இடத்தில் இருக்கும் ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் தன்னுடைய உடம்பில் உணர்வி;ல் ஏதாவது ஒரு மூலையில் உட்கார்ந்து தன்னை நல்வழிப்படுத்திக் கொண்டு இருக்கும் ஆசிரியர்களை ஒரு போதும் மறப்பதில்லை.
தன்னைப்பற்றி சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் மாணவர் கூட தாம் சாமர்த்தியமாகத் தவறு செய்ததையும் பின்பு ஆசிரியர் கண்டித்ததையும் பெருமையாச் சொல்லி மகிழ்வார்கள். ஆண்டுக்கொருமுறையோ, வாய்ப்புக்கிடைக்கும்போதோ ஒன்றாகக்கூடி, தனக்குப்பாடம் கற்பித்துக்கொடுத்த ஆசிரியர்களையெல்லாம் அழைத்துச் சிறப்பித்தும் மகிழ்வார்கள்.
சமீபத்தில் கேட்டசெய்தி ஒன்று நெஞ்சை நெகழ வைத்தது. ஒரு ஆசிரியர் ஓய்வு பெறும்போது தன்னுடைய குடும்பச்சூழலில் வறுமை நிலையில் இருந்திருக்கிறார். இதனால் தனக்கு என்று ஒரு வீடுகூட இல்லாது வாழ்ந்த ஆசிரியருக்கு அவரிடம் பயின்ற மாணவர்கள் எல்லோரும் இணைந்து அவருக்கு வீடுகட்டிக் கொடுத்துள்ளார்கள். இச்செய்தியைப் படிக்கிற அனைவருக்கும் பரவசத்தை உள்ளாக்கியது.
ஏனென்றால் இன்றையக்காலக்கட்டத்தில் பயன்படுத்திவிட்டு எறிந்து விடுகிற பழக்கத்தை அதிகமாகக் கொண்டவர்கள் நாம். அப்படி இருக்கும் காலக்கட்டத்தில் தன்னைப் பயனுள்ளவராக மாற்றியவரை நெஞ்சில் நிறுத்தி அவருக்குப் பயன்படுத்த புதிய இல்லம் அமைத்துக் கொடுத்துவிட்டார்கள் என்ற செய்தி உண்மையிலே பாராட்டப்படவேண்டிய செய்தி, பகிரப்படவேண்டிய செய்தி.
ஆனால் இன்றையக் காலக்கட்டத்தில் மாணவர்களையெல்லாம் தீவிரவாதிகளாகவும் அடங்காப்பிடாரிகளாகவும் ஆக்கி ஆசிரியர்கள் அரக்கர்களாகவும், கொடுங்கோல்காரர்களாகவும் ஊடகங்கள் சித்தரித்து உலவ விட்டுக்கொண்டிருக்கிறது.
இதனால்தான் ஆசிரியர் அடித்து மாணவர்கள் காயம், ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை, மாணவர்கள் பள்ளியிலிருந்து நிறுத்தம் பாலியல் தொல்லைகள் என பலவாறு சித்தரிக்கப்பட்டு குடும்ப உறவுகளைப்போல் குருவின் உறவையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டது ஊடகம்.
ஊடகமும் செய்தித் துறையும் நாட்டின் நான்காவது தூண்கள் என்பார்கள் ஆனால் இன்று ஊடகங்கள் எல்லாம் ஊனமாகிக்கிடக்கிறது. காரணம் ஊடகம் என்பது செய்தியைக் கடத்துதல். இது ஓரு காலத்தில் பொதுநோக்கில் செயல்பட்டுவந்தது. ஆனால் இப்போது அலைபேசி, வலைத்தளம் டிவிட்டர் என வந்து உண்மைகளை விடப் பொய்களை உரக்கச் சொல்லியும் கருமங்களையும், கண்டராவிகளையும் காட்சிப்பொருளாக்கிக் காட்டுகிறது. இதனால் வதந்திகள், வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. உண்மைகள் தண்டிக்கப்படுகிறது. நியாயங்கள் காயப்படுகிறது சத்தங்களும் எண்ணிக்கையும் அதிகாரங்களுமே சமுதாயத்தின் எல்கைகளை நிர்ணயிக்கிறது. உறவுகள் எல்லாம் சிதைக்கப்பட்டு ஊனமாக்கப்பட்டு நடைபிணங்களாக முடங்கிக்கிடக்கிறது. இதற்கு மத்தியிலும் இன்னும் பல இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு பசுமையாகப் படர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இன்னும் பல்வேறு செய்திகளில் பல்வேறு கல்லூரிகளில், பள்ளிகளில் மாணவர்கள் ஒன்றுகூடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆசிரியர்களைப் போற்றிக்கொண்டுதான் வருகிறார்கள். வெளி ஊர்களில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்கள்கூட வரும்போதெல்லாம் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் தமது ஆசிரியர்களை வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். பழைய மாணவர்கள் கூடும்போதெல்லாம் தமது பள்ளியையும், பாட ஆசிரியர்களையும் பேசிச்கொண்டே இருக்கும் இந்தப்பூமியில் ஈரம் இன்னும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. பசுமையான நினைவுகளை இவர்கள் தொடரும் வரை இந்தப்பூமி பார்ப்பதற்கு அழகாக இருக்கும் வாருங்கள் நாமும் நமது வகுப்பறைக்குச் செல்வோம்.