02

Aug

2020

தெய்வங்கள் எல்லாம்….

“ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான்
கொடுப்பவர் கரங்களில் நிதமும் சிரிக்கிறான்”

தெய்வங்கள் எல்லாம் வீதியில் கிடக்க ஒருசிலர் மட்டும் இன்னும் ஏன் வழிபாட்டுத்தலங்கள் திறக்கவில்லை என்று வருத்தப் படவேண்டும்? வாதாட வேண்டும்? கொரோனா என்ற அழகிய இராட்சசன் அடியெடுத்து வைத்தபிறகு அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம், சமூகப் பார்வை ஆகியவை அடியோடு ஆட்டம் கண்டுவிட்டதே. இன்னும் ஏன் நம்மை நாமே விமர்சித்துக் கொள்ளத் தயங்குகிறோம். இன்னும் புரியவில்லையா? நம்முடைய பயணமும், பாதயாத்திரையும் கடவுளை நோக்கியா? வழிபாட்டுத் தலங்களை நோக்கியா? என்பதுதான் இப்போதையக் கேள்வி.

நமக்குத் தெரிய நம் முன்னோர் வாழ்க்கையில் நமக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தானாகவே வந்து உதவும் சக்திகளை கடவுளாகப் பார்த்து கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள். இருளில் கிடந்தவனுக்குச் சூரியன் வந்தவுடன் கடவுளாகக் கண்டான். இருட்டை விலக்கும் ஒளியைக் கடவுளாகக் கண்டான். மழை கிணறு, மருத்துவம் தந்த மரம் செடி கொடிகள், உழைப்பிற்கு உதவிய விலங்குகள் என இயற்கையின் சக்தியையும் உதவும் கரங்களையும் கடவுளாகக் கண்டான். இதனைத் தான் வேதங்களிலும் நெருப்பு, அலை, மலை, ஆறு, கடல், பறவை, விலங்கு என பல அடையாளங்களாகக் காட்டப்படுகிறது.

இதனைக் கடந்து மனிதன் குழுவாக வாழ்ந்த பிறகு மாமனிதர்களையும், மனித நேயம் உள்ளவர்களையும் கடவுளாகக் கண்டார்கள். மக்கள் அடையும் மகிழ்ச்சியின் நிறைவாகக் கொண்டாட்டங்கள் இருந்தது. போரின் வெற்றி, அறுவடையின் வெற்றி, மக்கள் கூடி மகிழ்ந்து கொண்டாடுவதாகவே வழிபாடுகள் அமைந்தது.

இடையில் என்ன நடந்தது? என்றுதான் தெரியவில்லை! இடைத்தரகர்கள் புகுந்தார்கள் இறைவனுக்கு இவர்கள்தான் வழிகாட்டி என நம்பவைத்தார்கள், அற்புதங்கள், அதிசயங்கள் நடத்துபவர் தான் கடவுள் என்று அறிமுகப்படுத்தினார்கள் எளியவர்கள் எளிதில் அணுக முடியாதபடி வேலி அமைத்தார்கள். அதற்குச் சடங்கு என்றார்கள். பிறரிடமிருந்து தம்மைப் பிரித்துக் காட்டவே கோவில் அமைத்தார்கள். மதங்கள் உருவானது மதத்தின் அடிப்படையில் கோயில்கள் தன்னை அடையாளம் காட்டியது. ஒருவருக்கு ஒருவர் எதிரியானோம். ஒருவர் வழிபாட்டுத் தலங்களை ஒருவர் இதற்குமுன் எதிர்த்தோம் இப்போது இடிக்கிறோம்.

விவிலியத்தில் கூட மெசியா என்பவன் மேலிருந்து வருவான் என்று எதிர்பார்த்ததால் கண்ணின் முன்னால் கழுதையின் மீது கன்னிப் பெண் கடவுளைத் தாங்கி வந்தபோதும் அவர்களால் காணமுடியவில்லை. அதே அகக் குருடு இன்னும் நம்மை ஆட்கொண்டு தான் இருக்கிறது. இயேசுவே மனிதர்களைப் பார்த்துச் சொல்லுவார். ‘இச்சின்னஞ் சிறிய சகோதரர் ஒருவருக்கு நீங்கள் செய்கிற போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்பது தான். அது ஏன் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை என்பது தான் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. படைத்தவன் படைப்பிற்குப் படியளக்க வேண்டும் என்பார்கள். படைத்தவன் இரக்க குணம் உள்ளவர்கள் மூலமாக இந்த உலகைக் காப்பாற்றுகிறான். எனவே இரக்கக் குணம் உள்ளவர்கள் இறைவனாக மாறுகிறார்கள். எனவே நீ இறைவனைத் தேட வேண்டுமென்றால் உன்னையே தேடு உனக்குள் தேடு.

அந்த இறைவனைக் கண்டடைந்து விட்டால் அடுத்தவர்களுக்கு உதவு. இப்போது இறைவன் இதேதான் சொல்வார். பசியாய் இருந்தேன் உண்ண கொடுத்தாய் வேலையின்றி இருந்தேன் வேலை கொடுத்தாய் நோயுற்று இருந்தேன் மருத்துவம் செய்தாய் நம்பிக்கையின்றி இருந்தேன் ஆறுதல் அளித்தாய் தற்கொலை செய்ய நினைத்தேன். தடுத்து நிறுத்தினாய் கடன் தொல்லையில் இருந்தேன். உடமைகளை கொடுத்தாய். இத்தனை பணிகள் இந்த இக்கட்டான நிலையில் இருக்கிறது இப்போது எதற்கு வழிபாட்டுத்தலத்தை நோக்கி நம் வழிப்பயணம்?

ஆனால் பூசாரிகளும், வியாபாரிகளும் இதனை ஏற்கமாட்டார்கள். சந்தைகளைத் திறக்கவே சதித்திட்டம் தீட்டுவார்கள். ஆனால் பலர் வீட்டிலிருந்தே வழிபடுங்கள் ஆலயத்தில் இருந்து ஆசீர் அளிக்கிறோம் என்றார்கள் இதனை பக்தியோடு ஏற்று, பக்குவமாகி பக்கத்தில் பசியோடு இருப்பவர்களுக்கு உதவி செய்வோம். டாஸ்மார்க் கடைகளில் கூட்டத்தைக் கண்டு கொதித்து எழுகின்ற நாம் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் ஆடம்பரச் செலவுகளை நாம் கேள்வி கேட்டிருப்போமா? முதல் போடாமல் பொருள் தேடுவதற்காக. இன்று தெருவுக்குத் தெரு கோயில்களும் வீட்டுக்கு வீடு பூசாரிகளும் தோன்ற ஆரம்பித்து விட்டார்கள். மக்களின் முட்டாள்தனத்தையும், மூடநம்பிக்கைகளையும் அவர்கள் மூலதனமாக மாற்றி வருகிறார்கள். ஏனென்றால் ஒருகாலத்தில் சின்னப் பிள்ளையைப் பயங்காட்ட உன்னை பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்பார்கள். இப்போதைய நிலை குழந்தைகளை பூச்சாண்டியிடம் கூட கொடுத்தாலும் பரவாயில்லை பூசாரியிடம் கொடுத்து விடக் கூடாது என்றாகிவிட்டது. அத்தனை போலிகள் வளர்ந்து பூமியை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

ஆகவே இப்போது கடவுளைத் தேடுவதில் காலத்தை இழந்துவிடாதீர்கள். நீங்கள் தான் கடவுள், கொரோனாவில் கோரப்பிடியிலும், பசி, வேலையின்மை, பொருளாதார நலிவு போன்றவற்றில் இருந்தும் அருகிலுள்ளவர்களைக் காப்பாற்றுங்கள். அவர்களில் ஆண்டவனைப் பாருங்கள், அவர்களுக்கு உதவுவது உங்களது வழிபாடாக இருக்கட்டும். கொடுங்கள் உங்களுக்குக் கோடிப் புண்ணியமாக இருக்கட்டும். தெய்வங்கள் எல்லாம் வீதியில் கிடக்க தேவாலயத்தில் எதற்காகத் தேடப் போகிறோம்? “கண்ணால் காணுகின்ற மனிதனுக்கு இரங்காதவன் காணாத கடவுளை வணங்க முடியாது.” இது கடவுளே சொன்னது.

“பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்”

ARCHIVES