04
Dec
2020
நாடே பரபரப்பாகி விட்டது. நடுத்தெரு போர்க்கோலம் பூண்டுள்ளது. உலக நாடுகள் உற்றுப்பார்க்கிறது. உள்ளுக்குள் கேலியாகச் சிரிக்கிறது. உணவு கொடுப்பனைத் தெருவில் எறிந்து விட்டு வல்லரசாவோம் என்று வாய்ச் சவுடால் பேசுகிறது. விவசாயி போராட்டம் விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தட்டுகிற கதவுகள் எதுவுமே இன்னும் திறக்கப்படவில்லை. இன்று நாமும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகிறோமா? நெஞ்சைத் தொட்டு நீங்களே கேட்டுப்பாருங்கள்.
அவனவன் தனக்குத் தேவைக்காகத்தான் போராடுவான். ஆனால் விவசாயி போராட்டம் உங்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கிறேன். அவன் நமக்குச் சோறு போடுவதற்காகத் தனக்குத்தானே தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
உணவு உண்ணும் முன் நம் உடலை வளர்த்தது தாய்ப்பால். அந்த தாயே எத்தனை முறை நம்மைச் சொல்லிக் காண்பிப்பாள். உன்னிடம் எவ்வளவு எதிர்பார்ப்பாள். ஆனால் நாம் உணவு உண்டபின் ஊட்டி விடுவது என்றால் தாயின் கையாக இருக்கலாம். ஆனால் அந்த உணவு என்ற உயிரானது விவசாயின் உதிரமல்லவா? அவன் இன்று வலியோடு வீதியில் நிற்கும் போது சோறு போட்டவன் என்பதனை மறந்து இன்று சூடு சுரணையின்றி வேறு வேலையில் கவனமாக இருக்கிறோமே நாமெல்லாம் என்ன ஜென்மங்கள்?
உழுகிறவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது என்பார்கள். அதுகூட பரவாயில்லை நம்மை நம்பி இருக்கிறவர்களுக்கு உணவு கொடுத்தே ஆக வேண்டும் என்று வேலை என்ற பெயரில் வேள்வித் தீயில் தினமும் வெந்து கொண்டிருக்கிறானே அவனை வேதனைப் படுத்தலாமா? அவன் இதயத்திலிருந்து வடிக்கின்ற இரத்தக் கண்ணீரைத் துடைக்காமல் வேடிக்கை பார்க்கிறோம் அவர்களுக்காய் என்ன செய்யப் போகிறோம்?
எந்த விவசாயியாவது ஏஸியில் இருப்பானா? யாராவது வயலுக்குக் காரில் செல்வானா? ஆடை அலங்காரம், ஒப்பனைகள் அவனது பணிக்காலத்தில் உண்டா? அவனுக்காக சுயநலத்திற்காக போராடியது உண்டா? பெற்ற தாய்கூட பல நேரங்களில் நம்மை பட்டினி போட்டிருப்பாள் எந்த விவசாயியாவது இதுவரை நம்மைப் பட்டினி போட்டிருப்பானா? அந்த விவசாயிக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?
படியளக்கிற சாமி மடிந்து போகிறானே! என்று எந்தச் சோறு திங்கிறவனுக்காவது அக்கறை இருக்கிறதா? உணவு உண்கின்ற ஒவ்வொருவனும் முதலில் நன்றி சொல்ல வேண்டியது இறைவனுக்கல்ல விவசாயிக்குத்தான் பரந்து கொடுத்தவன் இறைவன் என்றால் அதனைத் தேடிக் கொடுப்பவன் விவசாயி அவனுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?
படித்த பள்ளியைக்கூட தேடிவந்து புகைப்படம் எடுத்துச் செல்லுகிறோமே. நம் சின்ன வயதில் தூங்கிய தொட்டில் கட்டியமரம், பழம்பறித்த மரம், விளையாடிய, விளையாட்டுப் பொருட்கள் தந்த மரம், சோறு தந்த வயல், குளித்து மகிழ்ந்த குளம், கிணறு வாழ்க்கையில் ஒரு முறையாவது இதனை மீண்டும் சென்று இளைப்பாறிவிட்டு வந்திருக்கிறோமா? எந்தெந்த வகையில் எல்லாம் நாம் நன்றி மறந்தவர்களாக இருக்கிறோமே?
கற்றுக் கொடுத்த ஆசிரியர் வந்தவுடன் எழுந்து நின்று வணக்கம் சொல்லுகிறோமே! உணவு கொடுத்த விவசாயி வந்தால் எழுந்து நின்றிருப்போமா! அவன் எழுந்து நிற்க ஏதாவது உதவி செய்திருப்போமா?
ஒவ்வொரு சிவனுக்குள்ளும் ஒரு உமையவள் நிறைந்திருப்பது போல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணற்ற விவசாயி இருந்து கொண்டுதான் இருக்கிறான். அலைபேசி, ஆல்கஹால், ஆடம்பரப் பொருள்கள் என்று நமக்குத் தேவையில்லாததைத் தரும் முதலாளிகள் இன்று பணத்தில் குளிக்கிறார்கள். நம் உயிர் வாழத் தேவையான உணவுப் பொருள் கொடுக்கும் விவசாயி தெருவில் நிற்கிறான்.
இந்திய விவசாயிகளுக்குக் கனடப் பிரதமர் ஆதரவு கொடுக்கிறார். ஆனால் நாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிற கயமைத் தனம் புரியவில்லை. விவசாயி வேறெங்கும் இல்லை நம் வீட்டில், நம் தெருவில், நம் நாட்டில் இருக்கிறான். அது ஏன் நமக்கு விளங்கவில்லை?.
நீங்கள் உடையைக் கண்டு, கல்வியைக் கண்டு, வசதியைக் கண்டு எவனை வேண்டுமென்றாலும் மதித்துவிட்டுப் போங்கள். ஆனால் துதிக்கப்படுகிறவன் விவசாயியாக இருக்க வேண்டும். ஆசிரியரை மருத்துவமனை அரசியல்வாதியை, அலுவலர்களை உருவாக்குவதைவிட விவசாயி உருவானால்தான் நமது அடுத்த தலைமுறை உயிர் வாழ முடியும்.
மற்றவர்களை உருவாக்கலாம். விவசாயி தானாக உருவாக்க வேண்டும். அதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் விவசாயிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் தேசியக் கொடியை ஏற்றும் கரங்கள் ஏர்பிடித்த கரங்களாக இருக்க வேண்டும். கிராமங்கள், நகரங்களின் பிரதிநிதிகள் விவசாயியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பொதுக் கூட்டங்களிலும் விவசாயிக்கே முதல் மரியாதை வழங்கப்பட வேண்டும்.
இன்று விவசாயி தெருவில் நின்றால் நாளை நாம் மண்ணுக்குள் இருப்போம். இன்று ஏர் மறக்கப்பட்டால் நாளை நாடு சுடுகாடாக மாறிவிடும். இயற்கை விவசாயம் இல்லாத காரணத்தினால் இன்று எத்தனையோ உயிர்களைத் துள்ளத் துடிக்கக் தூக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமே இன்றுமா நமக்கு விளங்கவில்லை.
சூடு சுரணை இருக்கிறதா? என்று கேட்பார்களே அதனைப் போல் நான் கேட்கிறேன் சோறு தின்பவர்களே கொடுத்தவனுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? அதனைக் கெடுப்பவனை என்ன செய்யப் போகிறீர்கள். நீங்கள் வீதிக்கு இறங்கினால் தான் அவர்கள் வீட்டுக்கு வரமுடியும் அவர்கள் விரும்புவதைக் கொடுக்காமல் அவர்களுக்குத்தான் எல்லாம் செய்கிறேன் என்பது பூனைக்கு புணுகு தடவுற வேலை அந்தப் பொய்யுரைகளை நம்ப வேண்டாம். விவசாயிகளுக்கு முடிந்ததைச் செய்வோம். முடியும் வரைச் செய்வோம். நான் ரெடி…..நீங்கள்?
“கடவுளைக் கண்டிருக்கிறேன்
கலப்பை பிடித்துக் கொண்டு
கதிர் அறுத்துக் கொண்டு
கழனியின் சேர்த்துக் கொண்டு
இன்று தெருவில் கலங்கிக்கொண்டு
வயலில் அழுதுகொண்டு
கடனில் கலங்கிக் கொண்டு
மனதில் புலம்பிக்கொண்டு”
நமது தொழுகைகள் அவர்களுக்குத் தொண்டாக மாறட்டும்.