30

Dec

2020

அன்புள்ள(இராணுவ வீரனுக்கு)

முகம் தெரியாத, எங்கள் முகவரி அறியாத ஒரு திருமுகம் எங்களைக் காக்க இந்தியத் தாயின் எல்லையில் நிற்கிறது. என் தோழனே! எங்கள் தூயவனே உனக்கே என் முதல் வாழ்த்துக் கடிதம் வரைந்து இந்த ஆண்டினைத் தொடங்குகிறேன்.

இந்தக் கடிதம் இமய மலையின் அடிவாரம் வந்து சேருமா? என நினைத்தால் நிச்சயம் வராது. ஆயினும் இதனை வாசிக்கின்ற ஒவ்வொரு உள்ளங்களின் வாழ்த்துக்கள் எந்த வானத்தையும் கிழித்துக் கொண்டு நீ வசிக்கும் வாசலுக்கு வரும் என்ற நம்பிக்கையில் என் இதயத்தின் வார்த்தையை இங்கு இறக்கி வைக்கிறேன்.

என் தோழனே நீ எல்லையில் நிற்பதனால்தான் நான் இங்கு நிம்மதியாக நின்று கொண்டிருக்கிறேன். சின்னத்தூரல் விழுந்தால் கூட சிதறி ஓடுகின்ற கூட்டத்தில்தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். ஆனால் நீயோ பனிமலைக்குள் உன்னைப் பதுக்கிக் கொண்டு பதுங்கு குழிக்குள் உன்னை அடைத்துக்கொண்டு என்னைப் பாதுகாத்து நிற்கிறாய் உன் பாதத்தை அல்லவா நான் வணங்க வேண்டும்?

படிப்பு, பட்டம், பதவி, பணம் என்று சுயநலத்தோடு நான் சுற்றுப்பயணம் போய் கொண்டிருக்கும் போது எதிரிகள் சுவாசக் காற்றுக்கூட இங்கு வந்துவிடக்கூடாது என்று எல்லையைச் சுற்றிச் சுற்றி வருகின்ற உன் கால்களின் சுவடுகளை அல்லவா! நான் தொட்டு வணங்க வேண்டும்?

குடும்பம், விழாக்கள் என்று நான் குதுகலித்துக் கொண்டிருக்கும்போது குடும்பத்தை மறந்து, இல்லறம் துறந்து துணைவியைக் கூட ஒரு துறவியாய் வாழ வைத்துவிட்டு நாட்டுக்காக அன்னகராகிவிட்ட உன் நல்ல எண்ணத்தையும் தாலிகட்டிய உன் தாரம் தனியாய் தவமிருக்கும் அந்தத் தாய்மையையும் அல்லவா! நான் வணங்கவேண்டும்?

தன் பிள்ளையை வளர்த்து ஆளாக்கித் தனக்கே வைத்துக்கொள்ளப் பயிற்றுவிக்கும் தாய்மார்களுக்கு மத்தியில் தன் பிள்ளைகளைத் தாய் நாட்டிற்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிற உங்களைச் சுமந்த கருப்பை என்ற நெருப்பையை அல்லவா நான் நெஞ்சில் சுமக்க வேண்டும்!.

எதிர்காலத்திற்காக எதிரில் அகப்படுகிற ஏமாளிகளையெல்லாம் அரட்டி, உருட்டி அபகரித்துக் கொள்கிற அயோக்கியர்கள் வாழ்கின்ற தேசத்தில் எதிரியிடம் ஒரு இம்மியளவு இடத்தையும் இழந்து விடக்கூடாது என்பதற்காக இருக்கின்ற ஒரு உயிரையும் நீ இழந்துவிடத் துடிக்கும் போது இதயம் இருக்கும் வரை இந்த இழப்பிற்கு எப்படி கண்ணீர் சிந்தாமல் இருப்பது?

எங்கள் பிள்ளைகளைப் பக்கத்தில் வைத்துப் பாதுகாத்து, பட்டாசில் இருந்து பட்டாடை வரை நான் வாங்கிக்கொடுத்துப் பாதுகாக்கும்போது, உன் குழந்தைகளின் புகைப்படத்தைப் பர்சில் வைத்து அதிகாலை எழுந்து அதனை முத்தமிடும் உன் ஈர உதடுகளை நினைக்கும்போது என் இதயம் வறண்டு போகிறது!

குழந்தைகள் பள்ளிகளில் பரிசு வாங்கும்போது பெற்றோர்கள் கைதட்டி மகிழ்கின்ற வேளையில் இராணுவவீரர்களின் குழந்தைகள் மட்டும் அப்பாக்கள் இன்றி அந்நிய தேசத்தில், அனாதையாக நிற்பது போல நிற்கிறார்கள். இவ்வளவு தியாகத்தைச் செய்துவிட்டு எங்கள் எல்லையில் நிற்கின்ற உன் தியாகத்தைத் தொட்டு வணங்காமல் என் வாழ்வை எப்படித் தொடர்வது?

இங்கு எவன் எவனையெல்லாமோ தலைவன் என்று மாலைபோட்டு மரியாதை செய்யும்போது நீ இறந்த பிறகு உன் புகைப்படத்தை வைத்து மாலைபோட மட்டும் வரும் கூட்டத்தைப் பார்க்கும்போதுதான் இமயத்தையே என் இதயத்தின் மீது இறக்கி வைக்கின்ற கனம் எனக்கு!

எல்லோரும் பெட்டி பெட்டியாய்ப் பணத்தை வீட்டில் பதுக்கி வைக்கும்போது உன் வீட்டுக்கு வருகின்ற ஒரே பெட்டி உன் உடலைத் தாங்கி வருகின்ற பெட்டிதான். அதனையும் தாங்கிக் கொள்கிற உன் குடும்பம் உன்னை மட்டுமல்ல அவர்கள் எங்களையும் தாங்கிக்கொள்கிறார்களே! தலைவணங்குகிறேன்.

என் தோழனே உன்னைப் பற்றி படிக்கும்முன் தெய்வத்தைப் பற்றிப் படித்தேன். அதன் அத்தனை அம்சங்களும் உனக்குத்தான் பொருத்தமாக இருக்கிறது. உன்னைக் காணும் தெய்வம் என்பதா? காக்கும் கடவுள் என்பதா? என் தெய்வம் எல்லையில் நிற்கும் போது நான் ஏன் வேறு தெய்வங்களைத் தேடி அலையவேண்டும்?

கல்லையும், மண்ணையும் கடவுளாக்கிக் கலவரம் செய்யும் குழப்பவாதிகளே உண்மையான கடவுள் தொண்டு நீங்கள் ஆற்ற விரும்பினால் ஒரு இராணுவ வீரரின் குழந்தைகக்குக் கல்வியைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.

எல்லையில் நிற்கும் என் தோழனே இந்த ஆண்டின் முதல்கடிதம் உனக்குத்தான். இந்த வார்த்தைகள் உன்னிடம் வந்து சேருமோ? சேராதோ? தெரியாது! ஆனால் இதனை வாசிக்கும் ஒவ்வொரு உள்ளங்களின் வாழ்த்துக்கள் நிரம்பிய மூச்சுக்காற்று இமயத்தில் முட்டி மோதி உன் இதயத்திலும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையோடு என் வாழ்த்துக் கடிதத்தை நிறைவு செய்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
நினைவில் இருப்பவர்களின்
நிழலாக….

ARCHIVES