11
Sep
2021
தப்பிப் பிழைத்துத் தைரியத்தை வளர்த்துக் கொண்டு ஒரு வழியாகப் பள்ளியைத் திறந்து கல்விச் செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அன்றையிலிருந்து கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி. கொரோனா பரவுகிறதாமே! பள்ளி எப்போது அடைக்கப் போகிறது! என்பதுதான் எங்கும் ஒரே பேச்சு.
எல்லோருக்கும் தெரியும் உயிர் முக்கியம்தான் அதைவிட முக்கியம் அர்த்தமுள்ள வாழ்க்கை. அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்தத் தரித்திரம் பிடித்த உயிரைத் தக்க வைத்து என்ன செய்யப்போகிறோம்.?
இதற்குமுன் ஊரடங்கு என்பது நமது அண்டை நாடான இலங்கையில் கேள்விப்பட்டோம் இந்தியாவில் ஒரு சில இடங்களில் ஓரிரு நாட்கள் ஊரடங்கு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்று நாம் ஊரடங்கோடு வாழப் பழகிவிட்டோம். கொரோனா என்னும் தொற்று வந்தபிறகு நமக்கு தொடர் ஊரடங்குகளால் தொல்லைகள் அதிகமாகிப் போய் விட்டது.
நமது அரசுகள் ஊரடங்கு அறிவித்தபிறகு ஊர் அடங்கியதோ! இல்லையோ? வேலை இருந்ததோ? இல்லையோ கல்வி மட்டும் சத்தமில்லாமல் செத்துவிட்டது.
Online கல்வி மூலம் அதனைத் தொடர நினைத்தார்கள். வகுப்பறையில் ஒருவிதக் கட்டுப்பாடுகளுடன் கற்ற கல்வியை Online கல்வி மூலம் கற்க நினைப்பது கோமாவில் இருப்பவனுக்குக் குளுக்கோஸ் ஏற்றுவது போன்று.
மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பள்ளிக்கூடம் போகாமலே பாஸான கூட்டம் இது. கல்விக் கட்டணம் கட்டாமலே கரையேறிய கூட்டம். அறிவை வளர்க்காமலே அடுத்த வகுப்பிற்கு சென்ற கூட்டம்.
மரம் ஏறுகிறவர்களும் சரி, மலையேறுகிறவர்களும் சரி உயரம் சென்ற பிறகு பயப்படுவதில்லை காரணம் தாமே முயன்று ஏறுகிறவர்கள். ஆனால் ஊஞ்சல் ஆடுபவர்கள் உயரம் சென்றால் பயப்படுவார்கள் காரணம் தானே உயர்ந்தது அல்ல. ஊஞ்சல் உயர உயர்ந்தவர்கள். அதனால் அந்த உயரத்தைக் கண்டுப் பயப்படுகிறார்கள். அதுபோல்தான் இன்றையக் கல்வி. தேர்வு என்ற முறையில் தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளாமல் அரசு கொடுத்த சலுகையால் சறுகாகிப்போனார்கள்.
இப்போது ஒவ்வொருவரும் இரண்டு வகுப்புகள் தாண்டி வந்து நிற்கிறார்கள். தலைசுத்தித் தடுமாறி நிற்பவர்களைப்போல் அவர்கள் இப்போது வகுப்பறையில் நிற்கின்ற கொடுமையைப் பார்ப்பதற்கேப் பரிதாபமாக இருக்கிறது.
இப்போது பள்ளி திறந்தாலும் அரசு ஒரு உத்தரவு போட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அறிவித்துள்ளது. இதனால் தட்டிக்கேட்க முடியாத, தகப்பன் இல்லாத குழந்தைகள், கண்டிப்பு வளையத்திற்குள் இல்லாத குழந்தைகள் பள்ளிக்கு வராமல் தன் தலையில் தானே மண்ணள்ளிப்போட்டுக் கொண்டவர்களும் உண்டு.
ஊரடங்கில் பல்வேறு குடும்பங்களில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டன. அரங்குகள், மண்டபங்கள், கடைகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டதால் பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். ஆகவே கிடைத்த வேலைக்கு மாணவர்கள் சென்று குடும்பத்தைக் காப்பாற்றும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்போது பள்ளி திறந்தாலும் கல்வியா? வேலையா? என முடிவெடுக்க முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடிப்பவர்களும் உண்டு.
பொருளாதார வீழ்ச்சியால் பல்வேறு குடும்பங்களில் ஆங்கிலவழிக் கல்வியைக் கட்டணம் கட்டித் தொடர முடியாமல் தமிழ்வழிக் கல்வியில் சேர்ந்து தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிற கூட்டமும் உண்டு.
ஒருவழியாகப் பள்ளிக்கு வந்தவனும் அஸ்திவாரம் இல்லாமல் ஆட்டம் போடும் கட்டிடம் போல நடத்துவது புரியாமல் பித்துப்பிடித்துப் பிதாமகன் விக்ரம் போல விழித்துக் கொண்டு உன் குற்றமா? என் குற்றமா? என்று பாட்டுப்பாடாமல் பரிதாபத்திற்குரிய நிலையில் அவர்களைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. ஆசிரியர்கள் நிலையோ அதைவிட கோமாவில் இருப்பவர்களோடு குடும்பம் நடத்துவது போலவே இருக்கிறது.
இனியும் ஒரு ஊரடங்கு வந்தால், பள்ளிகள் அடைக்கப்பட்டால் இப்போது கோமாவில் இருக்கிற கல்வி இனி குழிதோண்டிப் புதைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படும். நோய்த் தொற்றுப்பரவி கல்விக்கூடம் அடைக்கப்பட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன?
பெற்றோர்களே! பெரியோர்களே ஒவ்வொரு ஊரிலும் பொது இடங்கள் கல்விக் கூடங்களாக மாற வேண்டும். ஊரில் உள்ள படித்த இளைஞர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள் தன்னால் முடிந்தமட்டும் முடிந்த கிராமங்களுக்குச் சென்று கற்றுக் கொடுக்க வேண்டும். அங்கே தேர்வு நடத்த வேண்டும். அங்கேயே மதிப்பீடு செய்ய வேண்டும். அங்குத் தேறுகின்ற மாணவர்களுக்கே அடுத்த வகுப்புக்குச் செல்லும் தகுதிச் சான்று தர வேண்டும். இல்லையென்றால் படிக்காமலே தேர்ச்சி அடைவது கண்களை விற்று ஒவியம் வாங்கியது போல் ஆகும். அறிவு இல்லாமல் தேர்ச்சி பெறுவது பல் இல்லாதவன் பருப்புவடை எப்படி சாப்பிட முடியும்? இதயம் உள்ளவர்கள் இளைய சமுதாயத்தைக் காப்பாற்றுவோம். இனி ஒரு நிலை வந்தால் வாருங்கள். கிராமத்திற்குச் செல்வோம். பாடங்களைச் சொல்வோம் தலைமுறையைக் காப்போம் அவர்கள் தலையெழுத்தை மாற்றுவோம். நான் ரெடி நீங்கள் ரெடியா?.
“அன்ன யாவினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”