05
Nov
2022
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள குடும்பங்களை மீண்டும் நினைத்துப்பார்த்தால் எட்டு, பத்து, பனிரெண்டு எனப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலும் கண்ணியமாகவும், கட்டுப்பாடாகவும் வளர்த்துள்ளார்கள். ஆனால் இப்போது ஒன்று, இரண்டு வைத்திருந்தும் உருப்படாமல், ஊருக்கு உதவாமல் தறிகட்டு அலையும் விலங்கினைப் போல் நெறி கெட்டுத் திரிகிறது என்ன சொல்லுவது. நாகரீகத்தில் வளர்ந்துவிட்டோம் என்று மார்தட்டிக்கொள்கிறோமே! எந்த வகையில் வளர்ந்து விட்டோம். காட்டுமிராண்டிகளைவிடக் கேவலமாக அல்லவா இருக்கிறோம்!. பிள்ளைகளைப் பொறுப்புடன் வளர்க்காததால் தானே பலரது வெறுப்புக்கு ஆளாகிறோம். பிள்ளைகளோடு உடனிருப்புக் குறைவு, உற்சாகப்படுத்துதல் குறைவு ஆனால் நம்பிக்கை மட்டும் வைக்கிறோம் இதனால் குழந்தை தன்னுடைய செயலால் தந்தையை தலைகுனிய வைக்கிறது.
குழந்தைகளுக்குப் போதுமான அன்பு கிடைக்கவில்லை பெற்றோர்கள் பாசம் வெற்றிடமாகிறது அந்த வெற்றிடத்தை நிரப்பக் கூட்டாளியோடு இணைகிறது அறிந்தது கொஞ்சம் அறியாதது கொஞ்சம் ஆவல் கொஞ்சம் அதனால் அதனது அடுத்த அடி பாவத்திலும், பாதாளத்திலும் விழுகிறது. தன் குழந்தை தவறுக்குள் வாழ்கிறது என்பதனை அறியாத பெற்றோர்கள் பணத்திற்காக உண்மையை மறைத்து வாதாடும் வக்கீல்களைப் போல பிள்ளைகளைப் புரிந்து கொள்ளாமலேயே தன் குழந்தை தவறே செய்யாது என நம்புகிறோம், வாதாடுகிறோம், போராடுகிறோம். இவ்வாறு பொறுப்பற்ற பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் சமுதாயத்தில் பொறுக்கிகளாக உருவாகிறார்கள்.
குழந்தைகளுக்கு அறுசுவை உணவும் ஆடம்பர உடையும் கொடுத்துவிட்டால் போதும் என்று நினைக்கின்ற பெற்றோர்களே நல்லது எது? தீயது எது? எனக் கற்றுக்கொடுக்கா விட்டால் ஒரு நல்ல பாம்பை வீட்டில் வளர்ப்பதற்குச் சமம். நல்ல பண்புகளை மட்டும் உருவாக்காமல் விட்டுவிட்டால் வீட்டில் இருப்பது குழந்தையல்ல வீட்டில் வைத்திருக்கும் வெடிகுண்டு. எனவே குழந்தை வளர்ப்பில் போதிய கவனம் செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் பிள்ளைகளை இருட்டுக்குள் தள்ளுவதற்குச் சமம்.
ஒரு நகரத்தில் சர்க்கஸ் காண்பிக்கிற ஒருவர் தன் சகாக்களோடு அந்த ஊருக்கு வந்தார். எண்ணற்ற விலங்குகள், மனிதர்கள் என ஒரு கூட்டமே இருந்தது. சிங்கம், புலி, கரடி என ஏகப்பட்ட விலங்குகளுடன் ஊரில் வந்து கூடாரம் அமைத்தார். ஊர்மக்களுக்கும் ஒரே சந்தோசம். நமது ஊருக்கு சர்க்கஸ் வந்துள்ளது. சிறந்த பொழுதுபோக்காக இருக்கும் குழந்தைகள் மகிழ்வார்கள் எனச் சந்தோசப்பட்டார்கள்.
நாட்கள் நகர்ந்தன இன்று வரும், நாளை வரும் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சர்க்கஸ் அறிவிப்பு வரவே இல்லை எப்போது ஆரம்பிப்பார்கள்? என்ற விபரமும் தெரியவில்லை என்ன காரணமாயிருக்கும் என்று மக்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு இருந்தார்கள். மக்கள் நினைத்தார்கள் பொருளாதாரத் தேவையா? போதுமான வசதி இல்லையா? பாதுகாப்புத் தேவையா? இல்லை நம்மைக் கண்டு பயப்படுகிறாரா? என்று கேள்வி மேல் கேள்வி அவர்களுக்கு எழுந்தது. ஒருவேளை அவர் வைத்திருப்பது ஆபத்தான விலங்குகளா? அதனைக் கட்டுப்படுத்த கஷ்டப்படுகிறாரா? அவர்களால் நம் குழந்தைகளுக்கும் ஊருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று பயப்படுகிறாரா? என்று பல்வேறு கேள்விகள் அவர்களுக்குள் எழும்பியது.
ஊரிலிருந்து பல பெரிய மனிதர்கள் சர்க்கஸ் கூடாரத்திற்குச் சென்றார்கள் அங்கே விலங்குகள் சுதந்திரமாக எவ்வித சீறலும் இன்றி பணிவாகவும் சுதந்திரமாகவும் திரிந்து கொண்டிருந்தன். சில கூண்டுக்குள் இருந்தன. சில வெளியில் சுதந்திரமாகத் திரிந்தன. வந்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். அவர்களிடம் சர்க்கஸ் கூடார மானேஜர் தன் விலங்குகளை வைத்து வேடிக்கை காட்டினார் இனிமையாகப் பழகின அன்பாகத் தழுவின மாஸ்டர் சொன்னதற்கு எவ்வித பிடிவாதமும் இல்லாமல் கீழ்படிந்தன.
உடனே ஊர்ப்பெரியவர்கள் இவ்வளவு கட்டுப்பாடுடனும், இவ்வளவு கட்டுக்கோப்பாகவும், அன்பாகவும், நம்பிக்கையாகவும், நன்றியின் வெளிப்பாடாகவும், நல்லபடியாகப் பழக்கி வளர்த்து வந்திருக்கிறீர்கள்! பிறகு ஏன் சர்க்கஸ் ஆரம்பிக்கவில்லை? என்றார்கள்.
சர்க்கஸிற்கு நீங்கள் மட்டுமல்ல உங்கள் குழந்தைகளும் வருவார்கள் அவர்களும் விலங்குகளைப் பார்க்க, பழக வேண்டியது வரும். விலங்குகள் நான் சொன்னா கேட்கும், அடம்பிடிக்காது, கோபப்படாது ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகளை அப்படி வளர்த்திருக்கிறீர்களா? என் விலங்கு பொய் சொல்லாது, தவற்றினை மறைக்காது, விருப்பமான பொருளைத் திருடிக் கொள்ளாது. நாம் பாராத இடத்தில் போய் பதுங்கிக் கொள்ளாது அப்படி உங்கள் குழந்தைகளை வளர்த்திருக்கிறீர்களா? ஆளுக்குத் தகுந்தபடி நடிக்காது. இல்லாத ஒன்றை எடுத்துச் செல்லாது அடுத்தவர்கள் பெயரைக் கெடுக்காது. அடுத்தவர்களை பழிவாங்குவது பிடிக்காது. அப்படி உங்கள் குழந்தைகளை வளர்த்திருக்கிறீர்களா? கொடுப்பதைப் பகிர்ந்து உண்ணும் பிடிங்கி உண்ணாது, தனக்கென்று சுயநலம் தேடாது, தனக்காக மட்டும் எதையும் பதுக்காது, ஒதுக்காது, பிடிக்காதவர்கள் என்று யாரையும் சீறாது என்னிடம் எதையும் மறைக்காது என்னை நம்பும் எனக்காக உழைக்கும் உயிரையும் கொடுக்கும் என்னைத் தனியே விடாது தவிக்கவிடாது. தேடிவந்து கட்டி அணைக்கும் கழுத்தோடு உருளும் என்றார். உடனே அனைவரும் எங்கள் பிள்ளைகளை செல்லம் கொடுத்துக் கெடுத்து வைத்திருக்கிறோம் என்றார்கள் முதலில் போய் உங்கள் குழந்தைகளை ஒழுங்காய் வளர்த்து அப்புறம் அழைத்து வாருங்கள் உங்களுக்கு சர்க்கஸ் கூடாரம் திறந்தே இருக்கும் இல்லையென்றால் உங்கள் செல்லப்பிள்ளைகள் என் செல்லப்பிராணியைக் கெடுத்துவிடக்கூடாது என்றார்.
“காட்டு விலங்குகளிடம் பழகினோம் – இன்று
வீட்டுக் குழந்தைகளிடமிருந்தும் விலகினோம்”