23

Dec

2022

அன்பிற்கு எதற்கு அலங்காரம்?

மார்கழி மாதம் எல்லா மனங்களும் கடவுளைத் தேடி ஓடும். சிலர் காலையில் எழுந்து குளித்து பஜனை பாடி பகவானைத் துதிப்பவர்களும் உண்டு. மார்கழிக் குளிரில் மாடடைக் குடிலில் மாபரன் இயேசு பிறக்கிறார் என்று சந்திப்பதற்குத் தன்னை தயாரிப்பவர்களும் உண்டு. இப்படிப் பலரும் கடவுளைத் தேடிக் கொண்டு இருக்கும்போது இறைவனே மனிதனைத் தேடி வருவதைத்தான் கிறிஸ்து பிறப்பு விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் நிறுவனங்கள் பல கிறிஸ்துமஸ், புத்தாண்டைக் கொண்டாடினாலும் பிற மதத்தவர்கள் அதிகமாக இருப்பதினால் இதனை அனைவரும் மத விழாவாக அல்லாமல் பகிர்வு விழாவாகக் கொண்டாடுவார்கள்.

பகிர்வு விழா என்பது இருப்பதனை இல்லாதவர்களுடன் பகிர்வது. கொடுப்பதில் இன்பம் என்ற கொள்கையினைக் கொண்டாடுவது. தருவதில் தாராள உள்ளம். இதனை மையப்படுத்திக் கொண்டாடுவதுதான் பகிர்வு விழா. இது அதிகமாகப் பள்ளிகளில் தேவையில் இருக்கின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களே உடைகள், தேவைப்படும் பொருட்களைக் கொடுத்து மகிழ்கிறார்கள். இதனை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மகிழ்ச்சியாகவும், மனிநிறைவாகவும் இருக்கிறது. இந்தப் பகிர்வு என்பது இளைய தலைமுறைக்கு இந்தக் கலிகாலத்தில் இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது. இத்தகைய நல்ல எண்ணத்தை இளைய தலைமுறைக்கு இந்த விழா விதைப்பதை நினைத்து அனைவரும் மனமுவந்து கொண்டாடி மகிழ்வோம்.

இந்த விழா என்பது கடவுள் தான் படைத்த மனிதனை அன்பு செய்ய அவனைத் தேடிப் பூமிக்கு வருகின்ற நாள். அவர் மனிதனைச் சந்திக்கவும், உறவாடவும், அவனை அவனது தவறுகளில் இருந்து மீட்டெடுத்து புனித வாழ்வுக்கு அவனை அழைத்துச் செல்லவும் மனிதனாக வாழும்போதே புனிதனாக வாழ்ந்து இறைவனுக்குள் இணைந்து நிற்க ஆசைப்படுகிறார். இதன் காரணமாக விண்ணகத்தில் இருந்து மண்ணகம் தேடி மனித உருவில் வருகிறார்.

மண்ணகம் தேடி வருகிறவர் மாட்டுத்தொழுவம் தேடி வருகிறார். ஏன்? மாட்டுத் தொழுவத்திற்கு ஏன் வருகிறார்? ஏழைகள் வாழும் இல்லம் எளியவர்களின் கூடாரம் அதனால் யாவரும் வந்து கண்டு செல்லலாம் என்று வருவார்கள் அதற்காகவே இறைவன் ஏழையாய் வருகிறான். மாட்டுத் தொழுவத்திற்கு வருகிறவர்கள் அன்போடு வருவார்கள். அலங்காரத்தோடு வரமாட்டார்கள் சுத்தமாக வருவார்கள். ஆடம்பரமாக வரமாட்டார்கள். குனிந்து வருவார்கள். செருக்கோடு வரமாட்டார்கள். சத்தமின்றி பேசுவார்கள். சந்தை ஒலிகள் போல் சச்சரவு செய்யமாட்டார்கள். இதுதானே நியதி. இதற்குத்தானே இறைவன் ஏழையாகவும், எளிய குடிசையிலும் பிறந்தார்.

இப்போது காட்சிகள் மாறுகிறது. கடவுள் பிறக்கத்தான் செய்கிறார். குடிசையில் இல்லை கோபுரங்கள் தரித்தக் கோவிலிலே!. கோவிலுக்கு உள்ளும் அதற்கென அமைக்கப்பட்ட அலங்காரக் குடிலிலே!. வண்ண விளக்குகளோடு கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்திலே! இறைவன் வந்து பிறக்கிறார். குடிசையில் மாட்டுக் கொட்டடியில் கந்தைத்துணியில் பிறக்கின்ற ஒரு குழந்தையைப் பார்க்க எவ்வளவு விலையுயர்ந்த பட்டுடையில் பார்க்கப்போகிறோம்?. கோட்டும் சூட்டும் அணிந்து சாக்ஸ் ஷீ உடன் அந்த மாட்டுச் சாணிகள் கிடக்கின்ற இடத்திற்கு. நமக்கு அங்கு என்ன வேலை? இறைவனே எளிமையாக பிறந்திருக்கும் போது அவரின் அவதாரம் நமக்கு எதற்கு அலங்காரம்?

இது நாம் வேண்டுமென்று செய்வதல்ல நாம் ஆண்டாண்டு காலமாக தலைமுறை தலைமுறையாக ஒரு கொண்டாட்டமாக இதனைக் கொண்டாடி வருகிறோம். இது ஒருவிதமான மகிழ்ச்சிதான். இதில் மாற்றுக்கருத்து கிடையாது. கண்டிப்பாக மனிதனுக்குள் இருக்கும் பல்வேறு இறுக்கத்திற்கும் வரும் இடைஞ்சலுக்கும் கூடி மகிழ்ந்து ஒரு கொண்டாட்டம் இருப்பது அத்தியாவசியமும், அவசியமும் ஆகும். ஏனென்றால் பல்வேறு மன இறுக்கத்தினால்தான் மனிதனானது அவற்றில் இருந்து வெளிப்படவே போதைப்பொருளில் பொழுதைக் கழிக்கிறான். நிம்மதி இல்லாமல் நடைப்பிணமாக அலைகிறான். அவற்றில் இருந்து விடுபட்டு வாழ பல்வேறு விழாக்கள் அவசியமே!.

விழாக்கள் அவசியமென்றாலும் பொருளற்ற பொழுதுப் போக்கும் ஒருவிதமான போதையே ஆகும். ஆகவே விழாவினைப் புரிந்து தெரிந்து கொண்டாடுவது இன்னும் சிறப்பாகும், இறைவனுக்கும் மகிழ்வாகும். அதுபோல்தான் இறைவன் பூமிக்கு வந்ததை இருப்பதை இல்லாதவர்களோடு பகிரும் விழாவாகக் கொண்டாடுவோம். மனிதர்கள் அனைவரும் சமமாக இறைவன் நமக்குச் சமமானார். இறைவனே நமக்கு சமமாக வந்தபிறகு இன்னும் நம் பூமியில் மட்டும் மனிதர்கள் ஏன் சமமாகவில்லை? உலகிலே உயர்ந்த பணக்காரர்களும் இங்குதான் இருக்கிறார்கள். ஒன்றுமே இல்லாத ஏழையும் இங்குதான் இருக்கிறான்.

பந்தியில் மிச்சம் உள்ளதை வெளியில் கொட்டுவதை எடுத்துச் சாப்பிடுகின்ற கொடுமையும் நம் நாட்டில் தான் நடக்கிறது. இங்கு பல நேரங்களில் குப்பைத் தொட்டிகள் எல்லாம் உணவுப் பொருட்கள் நிரம்பிக் கிடக்க மனித வயிறுகள் முழுவதும் காய்ந்து கிடக்கிறது. சன்னல்கள் எல்லாம் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டிருக்க ஏழையின் குடிசையில் குழந்தைகள் நிர்வாணமாகத் திரிகிறார்களே!. இறந்தவர்களுக்கெல்லாம் நினைவகங்கள் கட்டிக் கொண்டிருக்க இருக்க இடமில்லாமல் பாலத்தடியில் படுத்துக் கிடக்கிறார்களே! இதையெல்லாம் சமமாக்கத் தானே இறைவன் வந்தார். அதை உங்கள் மூலமாகவும், என் மூலமாகவும் உருவாக்கத்தானே இங்கு வந்தார். எதுவுமே நடக்காமல் வருடம் ஒரு முறை அவர் வந்துவிட்டு போகும் பொருள் என்ன? அர்த்தமற்றதா அந்த விழாக்கள்?

கோவில்களில் எல்லாம் குடிலை அமைப்பதை விட குடிசை இல்லாதவனுக்கு ஒரு குடிசை தரலாமே? பட்டு உடையுடன் பாலனை பார்க்க வருவதை விட பிறருக்கு பகிறும் உடையுடன் பாலனைப் பாhக்க வரலாமே! வண்ண விளக்குகளால் அவர் குடிலை அலங்கரிப்பதைவிட மெழுகுவர்த்தியால் படிக்கும் குழந்தைகளுக்கு விளக்குகள் அமைத்துத் தரலாமே! கோவிலுக்குள் இருக்கும் சீமான்களுக்கு கேக் ஊட்டுவதை விட பசியால் துடிக்கும் குழந்தைகளுக்கு ஒரு வாய் சோறு ஊட்டலாமே! இனியும் பாலனைத் தேடுவதை விட அதாவது கோவிலில், கோபுரத்தில் குடிலில் தேடுவதைவிட ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போமே தம்மிடம் இருப்பதை ஆடம்பரத்திற்கு பகிர்வதை விட அவசியத்திற்கு பகிருங்கள். நீங்கள் இல்லாதவர்களைத் தேடிச் சென்றால் இறைவன் உங்கள் உள்ளத்தில்தான் பிறப்பார்.

“கிறிஸ்து கிறிஸ்மஸ் அன்று
குடிலில் பிறக்கவில்லை – ஒரு
குடிசையில் பிறக்கிறார்
போய்ப் பார்ப்போம்”

ARCHIVES