09

Jun

2023

அன்புள்ள தாய்க்கு . . . .

வணக்கம். வீரத்திருமகளே! வெற்றிக் குலமகளே!!

புறநானூற்றில் தன் மகன் மீது நம்பிக்கை வைத்துப் போருக்கு அனுப்பிய வீரத்தாயைப் போல் தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பும் போது பிரம்புடன் வந்த பிரியமானவளே! தன் மகன் தவறு செய்து விடக் கூடாது என்பதில் தணியாத தாகம் கொண்டவளே! உன்னுடைய வித்தியாசமான அணுகுமுறையைக் கண்டு வியந்து நிற்கிறேன்.

தன் பிள்ளை போரில் புறமுதுகு காட்டியிருந்தால் தன் மார்பை அறுத்தெறிவேன் என்று சூளுரைத்த வீரத்தாயைப் போல தன் மகன் தவறு செய்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆசிரியர் மீது அளப்பறிய நம்பிக்கையை வைத்துப் பிரம்பைக் கொடுத்த பிரியமானவளே! உன்னை நினைத்து பெருமையடைகிறேன். நீ சத்தியம் செத்துவிடக் கூடாது என்று சிலம்பைக் கையிலெடுத்த மண்ணில் பிறந்தவள்! உன்னை மனதார வாழ்த்துகிறேன்!

பிள்ளைகள் தவறு செய்த போது பெற்றோர்களை அழைத்தால் வரமாட்டார்கள். வந்தாலும் தன் மகனைத் தவறு செய்தவனாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சிலர் ஆசிரியர் மீதே அவதூறு பேசி பிள்ளைகள் பெரிய திருடனாக மாறுவதற்குக் காரணமாய் இருக்கிற பொறுப்பற்ற பெற்றோர்கள் மத்தியில் இப்படி ஒரு பெண் பிறந்ததால்தான் இன்னும் இந்தப் பூமி புண்ணிய பூமியாக இருக்கிறது. இதனைப் புதுப்பித்துத் தந்த பொன்மகளே! உன்னைப் போற்றுகிறேன்!

பிள்ளையைப் பெற்றவர்கள் எல்லாம் பெற்றோர்கள் அல்ல. அதனைப் பேணிப் பெருமைபட வாழ வைத்தவர்களே பெற்றவர்கள். மற்றவர்கள் குட்டிச் சுவர்கள். குட்டிச்சுவர் விழுந்து குடும்பத்தை அழிப்பதுபோல பொறுப்பற்ற பெற்றோர்களிடம் வளரும் பிள்ளைகள் புதை குழிக்குள் கிடப்பதற்குச் சமம். முன்னோர்கள் பல பிள்ளைகளைப் பெற்று பொறுப்புடன் வளர்த்துள்ளார்கள். இன்று ஒரு சில பிள்ளைகளை வைத்து ஊர்மேய விட்டிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால் அன்று பெற்றோர்கள் சொல்லை பிள்ளைகள் கேட்டு நடந்தார்கள். இன்று பிள்ளைகள் பேச்சைக் கேட்டு பெற்றோர்கள் நடக்கிறார்கள். இதனால் பெரியோர்கள் பாசத்தால் முட்டாளாகி, பண்புகளில் குருடர்களாகி குடும்பத்தைச் சுடுகாடாக்குகிறார்கள்.

பிள்ளைகளுக்கு ஏற்றதை வாங்கிக் கொடுத்தவர்கள் இன்று பிள்ளைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். பிள்ளைகள் விழுந்து எழலாம். ஆனால் எழுந்த பிறகு விழக்கூடாது. ஆனால் இப்போது உள்ள பிள்ளைகள் போதையில் விழுகிறது, பொருள்களில் விழுகிறது, காமத்தில் விழுகிறது, களியாட்டத்தில் விழுகிறது, ஆடம்பரத்தில் விழுகிறது, ஆடை ஆபரணங்களில் விழுகிறது காரணம் எங்கோ ஒரு இடத்தில் அவர்களைக் கண்டிக்க மறந்து விட்டோம். கண்டிப்பவர்களையும் தடுத்து விட்டோம். இதனால் பாதை தெரியாமல் குழந்தைகள் பாதாளத்தில் கிடக்கிறார்கள்.

தாய்மார்களே! தாய்பாலை மறக்கச் சொன்னீர்கள். புட்டிப்பாலில் குழந்தைகளைப் பொழுதைக் களிக்கச் சொன்னீர்கள். தாய் மொழியை மறக்கச் சொன்னீர்கள். ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி வைத்தீர்கள். தாய்பாசத்தை மறக்கச் சொன்னீர்கள். ஆயாக்களிடம் அனுப்பி வைத்தீர்கள். பிள்ளைகளைக் கண்டிக்காத பிள்ளைகளைத் தண்டிக்காத பிள்ளைகளைப் படிக்காமல் சுயமாய் சிந்திக்காமல் தன் வேலையைத் தானே செய்யவிடாமல் சொல்வதை செய்வதும், கேட்பதை எழுதுவதுமான மாற்றுத் திறனாளியாகப் பிள்ளைகளை மாற்ற ஆசிரியர் என்ற பெயரில் சில அடிமைகளை விலைக்கு வாங்குகிறீர்கள். ஆங்கிலப் பள்ளி என்ற பெயரில் அனுபவம் இல்லாதவர்களிடம் ஒப்படைக்கிறீர்கள்.

இன்று பள்ளிக்கு வராத குழந்தைகள் அதிகம். பாடம் படிக்காத குழந்தைகள் அதிகம். பார்ப்பதற்கே அருவருப்பாகத் தோன்றும் வகையில் முடிவெட்டும் பிள்ளைகள் அதிகம். ரோட்டோர ரோமியோக்கள் போல் அலைவது அதிகம். சண்டையிடுகின்ற மாணவர்கள் அதிகம். படிக்கிற பள்ளியிலே பள்ளிக் கூடத்தையே நாசமாக்குகிற குழந்தைகள் அதிகம். உடன் படிக்கும் சக மாணவிகளை உரசத் துடிக்கும் மாணவர்கள் அதிகம். அப்படியென்றால் இவர்கள் மாணவர்களா? இவர்கள் பாதித்தவற்றை வீட்டிலிருந்தே செய்கிறார்கள். இதனைக் கேள்விக் கேட்காதவர்கள் பெற்றோர்களா? அல்லது வெறும் பதர்களா? நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

எங்கேயாவது பயங்கரவாதம் நடைபெற்றது என்றால் அங்கு காவல் துறையினர் அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கடைசித் தேர்வு அன்று காவல் துறையினர் அனைவரும் படு எச்சரிக்கையாக இருப்பார்கள். காரணம் பரீட்சை முடித்து பள்ளியிலிருந்து பயங்கரவாதிகளாக வருவார்கள். படு பயங்கரமாக மோதிக் கொள்வார்கள். இல்லையென்றால் தான் படித்த பள்ளியையே நொறுக்கி அள்ளுவார்கள் என்பது பால் குடித்த மார்பையே எவராவது அறுத்தெறிவார்களா? படுத்திருந்த மடியின் தொடையை கிழித்தெறிவார்களா? கருவறையில் வெடிகுண்டு வைத்து களித்து மகிழ்வார்களா? ஆனால் படித்த பள்ளியைப் பாழாக்குகிறார்களே! இது பாவமல்லவா? இது அனைவரும் வெட்கப்பட வேண்டாமா? இதனை வெளியில் சொல்ல முடியுமா?

அன்புமிக்கவர்களே! இந்தத் தாயைப் போல தன் குழந்தையைக் கண்ணியமுள்ள குழந்தையாக வளர ஆசிரியரிடம் நம்பி ஒப்படையுங்கள். சின்னச் சின்னத் தவறுகளைக் கூட கண்டிக்க மறக்காதீர்கள். ஆசிரியர்களின் பிரம்பை அலட்சியப்படுத்தினால் போலீஸின் தடியடியைத் தாங்க வேண்டியது வரும். செல்லம் கொடுத்துப் புள்ளையைக் கெடுப்பதை விட மலடியாய் இருப்பதே மேல். தவறான பிள்ளை பிறப்பதைவிட கருவுறாமல் இருப்பது நல்லது. எனவே, வீரத்தாயே உன்னுடைய எண்ணம் இந்த உலகில் உள்ள பெண்களுக்கெல்லாம் வர உன்னை வாழ்த்தி வணங்கி நிறைவு செய்கிறேன்.

அன்புடன்

ஆசிரியன்

“குழந்தைகள் தானாகப் பிறக்கவில்லை
தனக்காகவும் பிறக்கவில்லை”

ARCHIVES