07

Jul

2023

சர்வதிகாரம் சதிராடுகிறதா?…

மகாபாரதத்தில் தர்மன் சூதாடித் தோற்றதால் துரியோதனன் அவையில் அத்தனைபேரின் முன்னிலையிலும் கைகட்டி நிற்பதைப் பொறுக்காத பீமன் மானங்கெட்டு மாட்டிக் கொண்டதை எண்ணினான் இதற்குக் காரணமான சூதாட்டம் ஆடிய தமது அண்ணனின் கையைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என சூளுரைக்கிறான். அதே போல் இன்று உலக அரங்கில் ஒட்டுமொத்த இந்தியாவும் தலை கவிழ்ந்து நிற்கும் அளவிற்கு மத்திய பிரதேசத்தில் நடந்த மாபெரும் கொலைபாதகச் செயல் ஒரு மலைச்சாதி மனிதன்மேல் ஒரு மனித மிருகம் சிறுநீர் கழிக்கின்ற காட்சி.

இன்று ஊடகம் முழுவதும் இந்தக் காட்சியைக் காரி உமிழ்ந்து கொண்டு இருக்கிறது. அந்தத் திமிர்ப்பிடித்த மிருகம் எவ்வளவு தைரியமாக இதைச் செய்கிறது. எங்கிருந்து அவனுக்கு இந்தத் துணிச்சல் வந்தது? இது நாடா இல்லை நரிகளும் கோட்டானும் அலைகிற சுடுகாடா? தொலைக்காட்சித் தொடர்களில் நடக்கின்ற கொடுமைகளைக் கண்டு இருபத்தி நாலு மணிநேரமும் அழுதுகொண்டு இருக்கும் இல்லத்து அரசிகளே! இப்போது உங்கள் கண்முன்னால் நடந்த இந்தக் கொடுமைக்கு என்ன செய்யப்போகிறீர்கள்? அரபு நாடுகளில் பாருங்கள் திருடியவன் கையை வெட்டிவிடுவார்கள். இங்கே ஒருவன் எதிர்க்க முடியாதவன் தலையில் சிறுநீர் கழிக்கிறான். இவனை எதை நறுக்க வேண்டும்? நெஞ்சம் உள்ளவர்களே! அதில் நீதி உள்ளவர்களே! நீங்களே சொல்லுங்கள் இவனை என்ன செய்ய வேண்டும்? இதனை நாம் வேடிக்கை பார்ப்போம் என்றுதானே இந்த விஷமத்தைக் கக்கியுள்ளான்! அவனை விரட்ட வேண்டாமா? விறகில் வைத்து எரிக்க வேண்டாமா?

அனைத்தையும் சகித்துக் கொண்டே செல்கின்ற அப்பாவிகள் அல்ல நாம். வரம்பு மீறுகிறவர்களின் நரம்பினை அறுக்க வேண்டாமா? அகிம்சையைக் கடைபிடித்தவர்கள் தான்! அதற்காகப் பொறுத்துப் பொறுத்து மனசு மரத்துத்தான் போச்சு. மனமும் செத்துத்தான் போச்சு நம் கண்முன்னால் நடக்கின்ற இந்தக் கண்ராவியெல்லாம் பார்க்கும்போது நம்முடைய கையாலாகாத் தனத்தால்தான் அவர்கள் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறார்கள். இப்படி எத்தனை காலம்தான் ஊமைகளாகவும், ஊனமுற்றவர்களாகவும் உயிர்வாழப் போகிறீர்கள்?.

பருந்திடம் சிக்கிய புறாவைக் கண்டும், புலியிடம் சிக்கிய மானைக் கண்டும், விபத்தில் சிக்கிய மனிதனைக் கண்டும், படத்தில் பார்த்தே பதறுகிற மனிதர்களே! மனிதனிடம் சிக்கிய மனிதனைக் கண்டபோது ஏன் துடிக்க மறக்கிறது, மறுக்கிறது உங்கள் இதயம்? அது உண்மையிலேயே இதயமா? இல்லை வெறும் இறைச்சித்துண்டா? மலையே பெயர்ந்து வந்தாலும் மௌனமாக இருக்கப் பழகிக் கொண்டோமே இதைவிட மயானத்தில் சென்று படுத்துக் கொள்ளலாமே? யாராலும் நமக்கு இடைஞ்சல் வராதே? இதைத்தானே எதிர்பார்க்கிறோம். கூட இருக்கிறவன் பாதிக்கப்படும்போது கொதிக்காத உள்ளம் இருந்தும் என்ன பயன்? அவனைப் பாடையில் வைத்து பல்லக்குத் தூக்க வேண்டாமா? துடியுங்கள்! தூக்கத்திலிருந்து எழும்புங்கள்!

காட்டு மயில்களை வேட்டையாடக் கூடாது என்று கடுமையாகச் சட்டம் போட்டு மயிலைப் பாதுகாத்து விட்டீர்கள. ஆனால் வீட்டு மயில்கள் விதவிதமாக வேட்டையாடப் படுவதை ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள்? கேட்க ஆள் இல்லாதவர்களை, வறுமையில் வாடுபவர்களை, வேலை தேடி அலைபவர்களை, நீதிகேட்டு வருபவர்களை, உதவிகேட்டு வருபவர்களை, பணம் கொடுக்க பதவி கொடுக்க, பட்டம் கொடுக்க, வாய்ப்புக் கொடுக்க, வசதி செய்து கொடுக்க, கடனை அடைக்க, என்று பல காரணங்களால் படுக்கையில் சூரையாடப்படுகின்ற வீட்டு மயில்களின் வேதனைகளையும் வெளியில் சொல்ல முடியாத இரணங்களையும் காப்பாற்ற இனியும் கண்ணனா வருவான்? பூமியில் வேறு அண்ணன்களே இல்லையா? மயிலுக்கு ஆடை கொடுத்தான் பேகன் என இலக்கியம் சொல்கிறது. ஆனால் இன்று வீட்டு மயில்களின் ஆடையை உடல் பசிக்காக உருவுகிற அயோக்கியர்கள் தான் அதிகம். தான் அடையும் கொடுமையை எண்ணி வடிக்கின்ற கண்ணீரைக் கூடத் துடைக்க முடியாமல் துயில்கள் இன்றி நிர்வாணமாய் நிற்கும் எம் சகோதரிகளை எப்படிக் காப்பது? எப்போது காப்பது?

ஐந்து ஆறாகலாம்! ஆனால் ஆறு ஐந்தாகலாமா? நான் சொல்வது அறிவை? நாம் சின்ன வயதில் கிளியைப் பேச வைத்தோம் குரங்கை ஆட வைத்தோம், யானையை வணங்க வைத்தோம், குதிரையை ஓட வைத்தோம் நம்மைபோல, நன்மை செய்ய, ஆறறிவுள்ளதை மாற்றி இரசித்தோம். சட்டை அணிந்தோம்;, நகைகள் அணிந்தோம் சந்தோசத்தில் மிதந்தோம். ஆனால் இன்று ஆறறிவுள்ளதெல்லாம் ஐந்தறிவு உள்ளதைப் போல் காட்டுமிராண்டிகளைப் போல் கடித்துக் குதறிக் கொண்டு இருக்கிறது, மணிப்பூர் பற்றி எறிகிறது. மதவெறியால், சாதித் தீக்களால் ஆங்காங்கே சவக்கிடங்குகளை உருவாக்குகிறோம். ஏய்ப்பவர்கள், எத்தர்கள் ஏமாளிகளை மிதித்துக் கொண்டும், நசுக்கிக் கொண்டும் நகர்ந்து கொண்டு இருக்கிறோம். அரசியல்வாதிகள் எப்போதும் செத்தவர்கள் ஓட்டிலே செயித்து வந்தவர்களாக இருப்பதால், தான் செயிக்க வேண்டுமென்றால் பலர் சாக வேண்டும் என இப்போதும் பகடை உருட்டுகிறார்கள். பெட்டிகளோடும், குட்டிகளோடும், பெரும் பதவிகள் எல்லாம் பேரம் பேசப்படுவதால் பதவியிலிருப்பவர்கள் எல்லாம் போதையிலேயே புகழைத் தேடுகிறார்கள். இந்தப் பாதைகளைச் சரிசெய்ய வேண்டுமென்றால் வேடிக்கை மனிதர்களே நீங்களே கட்டியிருக்கும் உங்கள் கைகளை அவிழ்த்துவிடுங்கள். கட்டுக்களை உடைத்தெறிங்கள் உதைக்கிறவன் கைகளையும் உடைத்தெறியுங்கள். திமிர்ப்பிடித்தவர்களிடம் எல்லாம் சொல்லுங்கள் நாங்களும் திருப்பி அடிப்போமென்று!

“காடுகளை அழித்தீர்கள்!
கொடிய விலங்குகளை விட்டுவிட்டீர்கள்!
இப்போது ஊர்களுக்;குள்ளே – அது
உலவிக் கொண்டிருக்கிறது!”

ARCHIVES