11
Aug
2023
நான் நடந்து போகிறேன். நமது நாடாளு மன்றம் போல் ஒரு கட்டிடம் தெரிகிறது. ஆனால் மிகப்பழமை வாய்ந்த கட்டிடம் அதனை நோக்கிப் போய் கொண்டிருந்தேன். அங்கே ஒரு பெரிய அறை பூட்டப்பட்டிருந்தது. ஆனால் உட்புறமாகப் பூட்டி இருந்தது தட்டினேன். பலமுறை தட்டியபின் யாரோ ஒரு வயதானவர் வந்து திறந்து விட்டு ஆடைகளைச் சரி செய்து தூக்கக் கலக்கத்தோடு அங்கு இருந்த ஒரு இருக்கையில் போய் அமர்ந்தார். அந்த அறையில் பலர் பலவிதமாக அங்கும் இங்கும் படுத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். இப்போதுதான் ஏறிட்டுப் பார்த்தேன். அந்தக் கதவைத் திறந்துவிட்டு அரைத்தூக்கத்தில் போய் அமர்ந்தவர் அண்ணல் காந்தி சுற்றும் முற்றும் பார்த்தேன். அங்கு நேரு, வ.உ.சி, படேல், ராஜாஜி, காமராஜர் போன்றோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். அப்போது காந்தி என் பக்கம் திரும்பி பல ஆண்டுகள் கடுமையாகப் போராடினோம் அதனால் இப்போது அயர்ந்து தூங்கிவிட்டோம் என்றார்.
சுதந்திரம் வாங்கியதை நீங்கள் சொல்லவே இல்லையா? என்றேன். அதனால் என்ன ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுப் போய் விட்டார்கள். அல்லவா? என்றார். ஆம் என்றேன். பிறகென்ன நமது அடிமைத்தனம் ஒழிந்தது! என்று பூரிப்புடன் சொன்னார். நான் அவரைப் பார்த்து ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள்! ஆனால் அடிமைத்தனம் போகவில்லை என்றேன். இன்னும் எதற்கு? ஏன் அந்த அடிமைத்தனம்? என்றார் ஆச்சரியத்துடன்.
நான் நிதானமாகப் பதில் சொன்னேன் போராளிகளாகத்தான் உங்களோடு புறப்பட்டு வந்தார்கள் இப்போது ஏமாளிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தனக்குரியத் தலைவனைத் தானே தேர்ந்தெடுக்க வேண்டும், மக்களாட்சி மலர வேண்டும் என்று தானே ஆசைப்பட்டீர்கள். இங்கு தன்னைத்தானே விற்றுவிட்டு தன்மானம் இழந்து கிடக்கிறார்கள்.
சுதந்திரத்தின் உரிமை வாக்குரிமை தானே. அதனைக் கூட இங்கு அடமானம் வைத்துவிட்டு. காசு கொடுப்பவனுக்கு வாக்குக் கொடுக்கின்ற தரங்கெட்ட செயலால் வேட்பாளனிடம் வாக்காளன் தன்னை விற்றுவிடுகின்ற வெட்கங்கெட்ட நிலை வெளியே நிலவுகிறது. இதனால் வேட்பாளன் வாக்குறுதிகளை விற்று விட்டு அடிமைகளை ஐந்து ஆண்டுகள் வாங்கி எதிர்த்துப் பேசவிடாமல் எதையும் கேட்கவும் விடாமல் அடிமைகளை விலைக்கு வாங்கிய ஆட்சியாளர்கள் ஆட்டிப்படைக்கிறார்கள். ஆடித் தீர்க்கிறார்கள். இல்லற வாழ்வு நல்லறமாக அமைய இணைக்கின்ற நேரத்தில் ஆண்மகன் வரதட்சனை வாங்கிக் கொண்டு தன்னையே விற்று விடுகிறான். தன்னை விற்றதனால் கற்பிழந்த கணவனாகிறான்.
வேலை செய்கிறமோ, இல்லையோ, நீங்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தால் வீதிதோறும் அரசு சாராயம் விற்றுக் கொண்டு இருக்கிறது. அதனால் நாம் சுதந்திர இந்தியக் குடிமகன் என்பதனைத் தவறாகப் புரிந்து கொண்டு இன்று குடிக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஆங்கிலேயர்கள் வெளியேறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் மொழிதான் இன்றும் மக்களின் மனங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஆங்கில வழிக் கல்வி கற்பதே கௌரவம் என்று நினைக்கின்ற அரைவேக்காடுகள் இங்கு அதிகம். தமிழ்வழிக் கல்வியை இங்கு தரம் தாழ்ந்ததாக நினைக்கின்ற ஆங்கிலமே தெரியாத ஆங்கில அடிமைகள் இங்கு அதிகம்.
சரி வெள்ளையர்கள் போய்விட்டார்கள் தானே! என்றார். ஆமாம் வெள்ளையர்கள் போய்விட்டார்கள் ஆனால் இன்று பல கொள்ளையர்கள் ஊருக்குள் புகுந்து விட்டார்கள். இவர்கள் கண்ணில் கண்டதையெல்லாம் சுருட்டுகிறார்கள். கையில் அகப்பட்டதையெல்லாம் எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். கடவுள் தங்கமானால் அவரையும் களவாடி விடுகிறார்கள். கடவுள் கைவசம் இருந்த நிலங்களையெல்லாம் அவர் கையிலிருந்து புடுங்கிவிட்டார்கள். மலையை உடைத்து விலை பேசிவிட்டார்கள். மணலை அள்ளி விற்றுவிட்டார்கள். நதிகளை நகருக்குள் இருந்து நகர்த்திவிட்டார்கள். குளங்கள் ஏரிகளை கூறுபோட்டு விற்றுவிட்டார்கள். பள்ளிக் கூடங்கள் கல்லூரிகள் வைத்து பகல் கொள்ளை அடிக்கிறார்கள். முகமூடி அணியாமல் திருடுகிறார்கள். காரணம் இவர்கள் பெரிய மனிதர்கள்!
ஆளுக்கொரு மதத்தை வைத்துக் கொண்டு அகப்பட்டவனையெல்லாம் அடிக்கிறார்கள், மாடுகளைக் காப்பாற்ற மனிதர்களை வெட்டுகிறார்கள். காடுகளையெல்லாம் அழித்துவிட்டு நாட்டியத்தின் மூலம் ஆண்டவனைத் தேடுகிறார்கள். நாட்டைக் காப்பாற்றும் இராணுவ வீரனின் வீட்டுக் காரியை மானபங்கப்படுத்தி வீதியில் நடக்கவிடுகிறார்கள. பெண்கள் எல்லாம் அரைகுறை ஆடையுடன் Tik Tak என்ற பெயரில் அங்கங்கள் தெரிய ஆடி அதனை அடுத்தவர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
மாணவ மாணவிகள் அதிகமாகப் போதைப் பொருளில் புதைந்து கொண்டு இருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்கள் தனியார்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டைத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சுதந்திரமாக சாதிச்சண்டை மதச்சண்டையில் நாட்டையே நாசப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆற்று நீரை அடுத்த மாநிலத்திற்குக் கொடுக்காமல் அடைத்து வைக்கிறார்கள். மசூதிகளை இடித்து கோயில்கள் கட்டுகிறோம். தேவாலயங்களை இடித்து தீக்கிறையாக்குகிறோம். அலைபேசியில் இளைய சமுதாயம் தொலைந்துவிட்டது. இப்படியாக நீங்கள் வாங்கிக் கொடுத்த சுதந்திரத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு இப்போது நெருப்பு ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கிறோம்.
நீங்கள் சொன்னீர்களே நடு இரவில் ஒரு பெண் நகைகளுடன் தனியாகப் பயமின்றி சென்றால் அதுதான் சுதந்திரம் என்றீர்கள். இப்போது பட்டபகலிலே ஒரு பெண் தெருவுக்குள் வரமுடியவில்லையே. எங்கள் பெண்கள் Red Light ஏரியாவில் மட்டுமே சுதந்திரமாகச் சுற்றுகிறார்கள் என்றவுடன் காந்தியின் கண்களில் இரத்தக் கண்ணீர் ஓடியது. உடனே அவர் என்னை சத்தமிட வேண்டாம் இவர்களாவது சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்ற நிம்மதியில் தூங்கட்டும் எழுந்து இதைக் கேள்விப்பட்டால் இறந்து விடுவார்கள் சத்தமில்லாமல் செல் என்றார். நான் வெளியேறினேன்.
காந்தியின் கனவு தொலைந்து எனது கனவும் கலைந்தது எழுந்தேன். வெளியே மதக் கலவரம் நடந்தது. புரிந்து கொண்டேன் சுதந்திர இந்தியாவில்தான் இருக்கிறேன். வழக்கம்போல் எனது பணியை ஆரம்பித்தேன்.
“சுதந்திரம் என்பது ஒருவர் ஒருவருக்காக வாழ்வது தேவைப்பட்டால் ஏதேனும் ஒருவருக்காவது சாவது”
“சுதந்திரம் என்பது
பிறரை மகிழ்விப்பது”