27
Oct
2023
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுக்கலாமா? வேண்டாமா? கொடுத்தாலும் வரும் தேர்தலில் கிடைக்குமா? கிடைக்காதா? எனறு கேள்விகள் எழுப்பிக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இது எப்போதோ கடந்துவிட்ட இரயிலுக்கு இப்போது கேட்டை மூடுவது போல் உலகம் சிரிப்பாய் சிரிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? என்று ஒரு நிமிடம் உற்றுப்பாருங்கள். நீங்கள் 33% கொடுப்பதாக முனங்கிக் கொண்டிருக்கும்போது அவர்கள் 90% முன்னேறிவிட்டார்கள். நீங்கள் இறங்க மறுக்கும்போது அவர்கள் ஏறி மிதித்துப் போய்க் கொண்டே இருக்கிறார்கள்! என்பது உங்களுக்கு புரியவில்லையா?
ஆணும் பெண்ணும் சமம் என்பதுதான் ஆண்டவன் படைப்பு. இதில் பெண்மையில் உள்ள மென்மையைப் பயன்படுத்தி ஆண் தனக்காக பெண்ணை தான் விரும்பியபடி நடத்திக் கொண்டான். பெண்களின் பலகீனமே அவர்களிடத்தில் இருக்கும் அன்பு ஒன்றுதான். அதுதான் அவர்களை அடிமைப்படுத்தி விடுகிறது. அடுத்தவர்கள் மனசு நோகக் கூடாது என்பதற்காக அவர்களே நொந்து நொந்து நூலாய் போனவர்கள்தான் அதிகம். கணவனுக்காக குழந்தைக்காக, குடும்பத்திற்காக என்று தனக்காக வாழாமல் வீட்டுக்காக வாழ்ந்து மரித்த வெளியில் தெரியாத தியாகிகளே இங்கு அதிகம்.
ஆயினும் காலம் முன்போல் இல்லை எது சொன்னாலும் சரி எனத் தலையாட்டும் தலையாட்டிப் பொம்மைகள் போல் குடும்பத்தலைவி இருந்த காலம் போய்விட்டது. பெயருக்குப் பின்னால் இருந்த கணவன் பெயரெல்லாம் பெயர்த்து எடுக்கப்பட்டுவிட்டது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?, என்ற அர்த்தமற்ற வாதத்தை ஊதி அணைத்துவிட்டு இப்போது ஊதாத அடுப்பை வைத்து உலை வைத்து சோறு சமைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
அடிமைப்பட்டுக் கிடந்தோம் என்பதை மனதில் மட்டுமே நினைத்து, அடக்கிய விலங்கினை உடைத்து வீறுகொண்டு எழும்ப வேண்டும் என்று மனத்திற்குள் ஒரு மௌனப் புரட்சியை மனதிற்குள் வளர்த்துக்கொண்டனர்.
உடைகளைத் திருத்தி, தடைகளை உடைத்துக் கல்வி நிலையங்களில் கால் பதிக்க ஆரம்பித்தனர். கலாச்சாரம் தடுத்தது, கட்டுப்பாடுகள் நெறித்தது. ஆணாதிக்கம் அடக்கியது, மதச்சடங்குகள் மறுத்தது, சமுதாயம் புறக்கணித்தது, சாதீயம் ஒதுக்கியது இதற்கெல்லாம் பெண்களிடம் இருந்த ஒரே பதில் வைராக்கியம், கத்தியின்றி, கத்தலுமின்றி, சத்தமும் இன்றி அவர்கள் தொடர்ந்த போராட்டம் இன்று அவர்கள் எட்டமுடியாத தூரத்தைத் தொட்டுவிட்டார்கள்.
இன்று பெண்கள் தொடாத உச்சமில்லை வெற்றிகளில் ஏதும் மிச்சமும் இல்லை. கல்வியில் அவர்கள் சாதனை கட்டுப்படுத்த முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. வேலை வாய்ப்புகளில் வாய்ப்புக் கிடைக்கிற இடத்திலெல்லாம் வேலையைச் செய்யும் வித்தையைக் கற்றவர்கள் பெண்கள்.
இன்று ஆசிரியர் தொழிலைக் கூடப் பாருங்கள் ஆண்கள் அதிகமாக இருந்த ஆசிரியர் தொழிலில் இன்று பெண்களே பெரும்பகுதியை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். சின்னச் சின்னப் பெட்டிக் கடைகளில் தொடங்கி பெரிய பெரிய மால்களில் கூட பெண்கள் வேலை செய்வதையே நாம் காணமுடிகிறது. இன்று ஆட்சியராக எத்தனையோ பெண்கள் வந்துவிட்டார்கள்.
எத்தனை பிரதமர் வந்தாலும் அன்னை இந்திராக் காந்தியை மறக்க முடியுமா? எத்தனை முதல்வர்கள் வந்தாலும் செல்வி ஜெயலலிதா செல்வி மம்தா பானர்ஜி போன்றவர்களை மறக்க முடியுமா? விண்வெளியில் கலக்கியவர்களை மறக்க முடியுமா? மண்ணக இராணிகளை மறக்க முடியுமா? வரலாறு பெண்கள் என்று சில பக்கங்களை மறுத்திருக்கிறது!. ஆனால் மறக்க முடியுமா?
ஒருபுறம் பெண்களின் வளர்ச்சி அசூரப்பலம் கொண்டு இருக்கிறது. இன்னொருபுறம் ஆண்களின் வீழ்ச்சி ஆரம்பமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது ஆண்கள் எல்லாம். குடிக்கு அடிமையானதால் குடும்பத் தலைவன் என்பதை மறந்து குடும்பத்தையும் இழந்து ஆண்வர்க்கத்தையே அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெரும்பான்மையிலான குடும்பத்தில் பெண்கள்தான் குடும்பத்தின் தலைவியாக இருந்து குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை ஆண்கள் கடுமையாக உழைத்தார்கள் பொருள் ஈட்டினார்கள். பெண்கள் அவர்களிடம் பெற்றுக் குடும்பத்திற்குத் தேவையானதைச் செய்து வந்தார்கள். இப்போது பெண்கள் உழைக்கிறார்கள். ஆண்கள் தேவைக்குக்கூட அவர்கள்தான் கொடுத்து உதவுகிறார்கள்.
உழைப்புக்கு ஆண் தேவையில்லை! பெண்களே உழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். செயற்கை முறைக் கருத்தரிப்பு, வாடகைத் தாய் முறை எல்லாம் வந்து விட்டது. ஒரு பெண்ணுக்கு ஆண் எப்போதெல்லாம் தேவையோ? அதற்கெல்லாம் அவர்கள் மாற்றுவழி கண்டுபிடித்துவிட்டார்கள் இனியும் நாணத்தோடு வாழ அவர்கள் நாகரீகமற்றவர்களல்ல! கலாச்சாரம், கட்டுப்பாடு என்ற கண்ணா மூச்சி ஆட்டம் எல்லாம் அவர்களிடம் இனி பழிக்காது எல்லோரும் விழித்துக் கொண்டார்கள்.
2000த்திற்கு முன் பிறந்தவர்களாயிருந்தால் ஏதோ பழைய பஞ்சாங்கம் கணவனை காப்பாற்ற வேண்டும். அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கணும் என்று நினைக்கலாம். இப்போது உள்ள குழந்தைகள் எல்லோரும் சமம். இதில் ஏற்றத்தாழ்வு கிடையாது. பிடித்திருந்தால் இணைந்து பயணிப்போம் பிடிக்காவிட்டால் விலகி வழி நடப்போம். இந்த உலகில் பிடித்தவர்கள் என்பது ஒருவர் மட்டுமல்ல எண்ணற்ற பேர்கள் இருக்கிறார்கள். அதனால் பிடித்தமில்லாமல் பிடித்துக் கொண்டு வாழ்வதைவிட பிடித்தவர்களோடு பிடிக்கும் வரை வாழ்வோம் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
கணவன் சந்தோசத்திற்காக மட்டுமல்லாமல் கணவனின் சந்தேகத்திற்குத் தகுந்த படியும் வாழ வேண்டும் என்ற கட்டாய நிலையில் இன்று பெண்கள் இல்லை. சந்தேகப்படுகிறவனோடு எப்படி சந்தோசமாக வாழ முடியும்? அடிமைப்படுத்துகிறவனிடம் எப்படி அன்பை எதிர்ப்பார்க்க முடியும்? அனுமதி கேட்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறவனிடம் எப்படி சமத்துவத்தை எதிர்பார்க்க முடியும். சுதந்திரம் கொடுக்காதவன்! சுயமரியாதை தெரியாதவனிடத்தில் எப்படி சொந்தம் கொண்டாடமுடியும்? என்ற கேள்விகளைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது விவாகரத்து வழக்குகள்தான் ஏராளம். விலகிப்போவதும் தாராளம்.
இனிவரும் காலங்களில் இதனையும் அவர்கள் தவிர்க்க எண்ணுவார்கள். இணைந்து வாழ்வது பிடிக்கவில்லையென்றால் பிரிந்து செல்வது. இதிலும் அவர்கள் கைதான் ஓங்கி நிற்கும். ஆண்கள் சோம்பேறித்தனத்தால் வேலை இழந்தோம். போதைப் பொருளால் ஆண்மை இழந்தோம். வருமானம் இன்றி மானம் இழந்தோம். அனைத்தையும் இழந்து இன்று தெருவில் நிற்கிறோம். இதற்கெல்லாம் ஒரு வழி பெண்களுக்கு இணையாக உழைப்பது பெண்களோடு இணைந்து உழைப்பது. பெண்களை மதிப்பது. எந்த வகையிலும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ்வது இணைந்து பயணிக்கும்போது இனிய குடும்பம் மலரும். இது பழைய பஞ்சாங்கங்களுக்குப் புரியாது. கொஞ்சம் ஓரமாய் ஒதுங்கிக் கொள்ளுங்கள் புதிய தலைமுறையே நீங்கள் ஒற்றுமையாய் வாழுங்கள்.அங்க எண்ண சத்தம்? 33 சதவீதமா? மூடிட்டு போங்கய்யா! 90 சதவீதம் தாண்டி விணிவெளியில் பறந்து கொண்டிருக்கிறார். அண்ணாந்து பாருங்கள்!
“படிக்கத் தெரியாத
ஆணிடம்…
கிடைக்கக் கூடாத
புத்தகம் பெண்”