07
Nov
2023
எங்கள் ஊர் இயற்கையோடு கூடிய கிராமம் எங்கள் ஊரின் அடையாளங்களே எங்கள் ஊரைச் சுற்றி நின்ற காவல் தெய்வங்கள்தான். எங்கள் ஊருக்கு கூர்கா கிடையாது. காவல் எல்லாம் எங்கள் ஊர் தெய்வங்கள் தான் ஊர் எல்லையைச் சொன்னது எல்லாம் எங்கள் ஊர் தெய்வங்கள் தான். எங்கள் பயமும் அதுதான் எங்கள் பாதுகாப்பும் அதுதான்.
சில தெய்வங்களுக்கு உருவம் உண்டு அரிவாள் கத்தியோடு அருகில் நாயோடு நின்று கொண்டிருக்கும். சில தெய்வங்களுக்கு உருவம் இருக்காது. சதுரமாக உயரமாக நிற்கும் வருடந்தோறும் வெள்ளையடித்து ஒரு வனப்பாகக் காட்சியளிக்கும். பெரும்பாலும் இவை கோவிலாக இருக்காது பெரிய மரங்களுக்கு அருகில் அல்லது அடியில் அமர்ந்திருக்கும். ஆலமரம், அரசமரம், வேப்பமரம், மகிளமரம், மருதுமரம் என அத்தனை மரங்களும் எங்களுக்கு ஆன்மீகத்தைத் தரும். ஊரின் மகிழ்ச்சியே எங்களுக்கு கோவிலின் எழுச்சிதான். தவறு செய்தாலும் அங்கேயே வைத்து தண்டிக்கப்படுவார்கள். எங்களுக்கு இன்பமோ! துன்பமோ எல்லாம் எல்லைச்சாமியின் முன்னால் தான் நடக்கும்.
எங்கள் ஊரைச் சுற்றியுள்ள தெய்வங்கள் எல்லாம் வானத்தில் இருந்து உதித்தது அல்ல. அவர்கள் கொள்கையை விதைக்கவும் இங்கு வரவில்லை. எந்த கூட்டத்தைத் திருத்தவும் வரவில்லை. ஆனால் எங்கள் முன்னோர்கள் இந்தப் பூமியில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள். அவர்களின் இரத்தத்தில் வந்த ஒரு எச்சம்தான் நாங்கள். ஆனால் வாழும்போது பிறர் வாழ்வுக்காக வாழ்ந்தவர்கள் இரத்தமும் சதையுமாக இந்தப் பூமியில் உலவி வந்தவர்கள். இவர்களில் சிலர் உண்மைக்காகக் கொல்லப்பட்டவர்கள் சிலர் உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் கொல்லப்பட்டவர்கள். சிலர் சத்தியத்திற்காகச் செத்தவர்கள். சிலர் சாதிகளுக்காகச் செத்தவர்கள். மொத்தத்தில் இந்த பூமிக்கு வந்து யாருக்காகவோ தன் உயிரை எடுத்துக் கொடுத்தவர்கள் ஆனாலும் மாண்டுவிடாமல் மண்ணுக்குள் கண்மூடியே கிடந்துவிடாமல் ஏதோ ஒரு உருவத்தில் மீண்டும் இந்தப் பூமிக்கு வந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
காலம் மாறிப்போச்சு, வசதியான மதங்கள் வர ஆரம்பித்தது அம்மதங்களைப் பரப்ப ஆட்கள் வந்தார்கள். மக்களுக்கு அவர்களின் வழிபாடுகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வடிகாலாக அமைந்ததால் மக்களும் வந்த மதத்தின் மீது சொந்தம் கொண்டாட ஆரம்பித்தார்கள்.
இந்தியாவின் தொடக்கம் மனிதர்களை, மாமனிதர்களைத் தெய்வமாக வணங்குவது. அவர்கள் இறந்த பிறகும் ஆவி உருவில் நம்மோடு பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதனால் அவர்கள் இறந்த பிறகும், அவர்களுக்கு என்னென்ன பிடிக்குமோ அதனை அவர்கள் புகைப்படத்திற்கு முன் படையலாக வைப்பார்கள். அவர்களே சாமியாக பிறர்மீது வந்து அவர்கள் பேசுவதுபோல பேசுவார்கள். இது அவர்களின் நம்பிக்கை அவர்கள் மழை வரும் பூமி செழிக்கும் என்பார்கள் அதனை நம்புவார்கள்.
சிலர் வாக்கு சொல்வார்கள் அது பலிக்கும் நடக்கும் என்று நம்புவார்கள். நமக்கு துன்பம் வந்தால் அதனைச் சொல்வார்கள். அதற்குப் பரிகாரம் தேடச் சொல்வார்கள். அது செய்தால் துன்பம் வராது பாவம் தொடராது என நம்பினார்கள். அனைத்திற்கும் மேலாக தர்மம் செய்வதைத் தலையாய கடமையாகக் கொண்டார்கள்.
பிறகு ஆர்யர்கள் மூலமாக இங்கு புத்தனின் கொள்கைகள் மனிதனை மாண்புடன் நடத்தியது. புத்தமதம் பரவியது மக்களிடமிருந்து மன்னர்கள் வரை புத்தரைத் தலைவராகக் கொண்டு வணங்கினார்கள். குல தெய்வங்களும் கொடிகட்டிப் பறந்தது. இறந்தவர்களின் இழப்பை ஈடுகட்ட அவர்கள் நம்மோடு இருப்பதாகவே ஒரு வாழ்வியலை உருவாக்கினார்கள்.
இந்தச் சமயத்தில் இந்து மதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதில் ஒரு மனிதக் கடவுள் அவதாரம் எடுத்து மனிதர்களோடு வாழ்ந்ததாக புராணம் போதிக்கப்படுகிறது. இதில் சாதிக் கொடுமைகள் தாண்டவமாடியதால் கோயிலுக்குள் நுழைய முடியாதவர்கள் புதிய கோவிலை உருவாக்க நினைக்கிறார்கள். அப்போது கிறஸ்தவ, முஸ்லீம் மதங்கள் அவர்கள் முன் வைக்கப்படுகிறது. அதிலும் கடவுள் மனிதனாக வந்த கதைகளாகக் கூறப்படுகிறது. மக்கள் அவர்களுக்குப் பிடித்த மதங்களில் மனதைப் பரவ விடுகிறார்கள்.
பெரிய மால்கள் திறக்கப்படும்போது சின்னச் சின்னப் பெட்டிக் கடைகள், சாலையோர வியாபாரிகள் காணாமல் போவது போல் இந்தக் கார்பரேட் தெய்வங்கள் வந்தபிறகு எங்கள் காவல் தெங்வங்கள் களவாடப்பட்டது. காணாமல் போனது கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. ஏனென்றால் இதற்கு வழி வழிக்கதைகள் உண்டே தவிர இதற்கு என்று வரலாறு கிடையாது.
மதம் என்பது சுதந்திரம் அதனை யாரும் தடுக்க முடியாது. ஆனால் எங்கள் குலதெய்வங்கள் அதனால் கொலை செய்யப்பட்டுவிட்டன. மதங்களின் விழாக்களுக்குக் கவர்ச்சிகளைப் புகுத்தி எங்கள் தெய்வங்களைக் காணாமல் செய்துவிட்டார்கள். இதனால் ஊருக்கு அருகிலிருந்த சிறு தெய்வங்கள் காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு அது காணாமல் போய்விட்டது. ஒவ்வொரு ஊரும் தன்னை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் அருகிலுள்ள குட்டித் தெய்வங்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு வீடுகளைக் கட்டிவிட்டார்கள். சிலவற்றை விற்பனைக்கு விட்டுவிட்டார்கள். கோயில் மரமாக இருந்ததெல்லாம் வெட்டப்பட்டு அப்புறப் படுத்தப்பட்டு விட்டது.
இன்று பொது மதங்கள் இந்து, கிறிஸதவன், மூஸ்லீம் என்று இனம் காட்டுவதிலே குறியாய் இருக்கிறார்கள். குட்டித் தெய்வங்கள் மூடநம்பிக்கை என்று மூடச் சொல்லி விட்டார்கள். எங்களோடு இருந்த எங்கள் மூதாதையர்கள் எங்கே? அவர்களுடைய வரலாறு எங்கே? அந்த விழாக்களில் படிப்பது! நடிப்பது இருந்தது அது எங்கே? இப்போது உள்ள தலைமுறைக்கு இது ஏன் மறைக்கப்பட்டு விட்டது? என்று பல கேள்விகள் எனக்குள் எழுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் பல தெய்வங்கள் இருந்தது அதற்கு வரலாறும் இருந்தது. இவையெல்லாம் இப்போது திட்டமிட்டு நம் நினைவுகளிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது. பாவநாசம் ஊருக்கு வரலாறு உண்டு அது எத்தனை பேருக்குத் தெரியும்? அம்பையிலுள்ள வண்டிமறிச்சான் கோவில் வரலாறு தெரியுமா? இசக்கியம்மன் வரலாறு தெரியுமா? ஐயா வைகுண்டர் வரலாறு தெரியுமா? இப்படி எத்தனை வரலாறுகளைத் தொலைத்துவிட்டு கம்யூட்டரைக் கட்டி அழப்போகிறீர்கள்.
இனியாவது கிராமத்திற்குப் போங்கள் அங்கு வாழ்ந்த பல தெய்வங்களைப் பற்றி அறியுங்கள். தொலைந்துபோன சாமிகளையெல்லாம் தூசி தட்டி எழுப்புங்கள். அதை இப்போது இருக்கும் தலைமுறைக்கு எடுத்துச்சொல்லுங்கள். அது நம்மவர் நம்மைப் போல் வாழ்ந்தவர் அவர்போல் வாழ முயற்சியெடுங்கள். அவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். நம்மைச் சுற்றி உருவமில்லாமல் இருக்கிறார்கள். ஆகவே எப்போதும் கண்ணியமாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இதனைப் படிக்கின்ற ஒவ்வொருவரும் உங்கள் ஊரிலுள்ள குட்டித் தெய்வங்களுக்கு உயிர் கொடுங்கள், உலவவிடுங்கள். அதனைப் போல் உத்தமதத்தை வளர்ப்போம். அவர்களின் உண்மையான வாரிசாக நாம் வாழ்வோம். வாழ்க வளமுடன் நம் வழித்தோன்றலாக..பிறருக்கு வழிகாட்டியாக…
“நினைவும் ஒரு கல்லறைதான்
இங்கேயும் பலரைப்
புதைத்து விட்டோம்”