29

Nov

2023

மரண வாக்குமூலம்…

இப்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் கொசுக்கள் அதிகமாகவே இருக்கும். இவைகள் தனது வாழ்வுக்காக மனிதர்களைக் கடித்து இரத்தம் உறிஞ்சி உயிர் வாழும். ஆயினும் மனிதர்கள் “எனது இரத்தம் எனது உரிமை” என எண்ணுபவர்கள். வேண்டுமென்று கேட்டால் இரத்த தானமே செய்வார்கள். ஆனால் கேட்காமல் எடுத்தால் ஒரு துளி எடுக்கும் கொசுவைக் கூட ஒழிக்காமல் விடமாட்டார்கள்.

கொசுவைத் தடுப்பதற்காக முதலில் கிராமங்களில் சில பொருட்களைப்போட்டு எரித்துப் புகை போடுவார்கள். பிறகு சில பச்சிலைகளைத் தடவிக் கொண்டு படுப்பார்கள். பிறகு கொசுவலைகள் போட்டு அதற்குள் படுத்தார்கள். பிறகு ஆல் அவுட் போன்று மின்சாதனங்களின் உதவியோடு தூங்கினார்கள். இப்போது கொசு bat என்று ஒன்று வைத்து அதில் மின்சார உதவியுடன் கொசுக்களைக் கொன்று குவிக்கிறார்கள். இப்படி அந்தக் கொசுக்களை வேட்டையாடுவது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சிலருக்கு அது வெடிச்சத்தம் போல், சிலருக்கு அது பொரிப்பது போல், சிலருக்குத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவதுபோல் ஒரு எண்ணத்தைத் தரும்.

அதே போல் ஒரு கொசுப் பேட்டை வைத்து அடித்துக் கொண்டிருக்கும்போது இரண்டு கொசுக்கள் அதில் மாட்டியது அதில் பெண் கொசு அந்தப் பேட்டிலே எரிந்தது. ஆண் கொசு குற்றுயிரும் குலை உயிருமாய் போய் விழுந்தது. உயிருக்கு பயந்து ஒரு மூலையில் முனங்கிக் கொண்டிருந்தது. அப்போது அந்தப் பக்கமாக பறந்து வந்த ஈ ஒன்று பரிதாபமாகக் கிடக்கும் கொசுவைப் பார்த்து பக்கத்தில் பறந்து வந்தது ஏன் இந்த நிலைமை? என்று ஈ கேட்டவுடன் கொசு இறக்கும் தருவாயில் இவ்வாறு பேசியது நானும் என் மனைவியும் பறந்து செல்லும்போது ஒரு பாவி எங்களை இப்படி பண்ணிவிட்டான். மனைவி மடிந்து விட்டாள் நான் துடித்துக் கிடக்கிறேன். எப்போதுமே மனிதர்களுக்கு நாங்கள் இளக்காரம் தான். ஏனென்றால் அவர்கள் அடிக்கடிச் சொல்லுவது “நீயெல்லாம் எங்களுக்கு கொசு மாதிரி” என்பார்கள் ஏனென்றால் அடித்தால் கேட்க ஆளில்லாத அனாதைகள்! விலங்குகளைத் தொட்டால் கூட விரைந்து வருவார்கள். எங்களைத் தொட்டால் யார் கேட்பார்கள்? ஏனென்றால் நாங்கள் கொசு தானே! என்று தன் இயலாமையைச் சொல்லி சொல்லியே இறந்து கொண்டிருந்தது.

கிராமத்தில் சொல்லுவார்கள் “எண்ணெய் குடித்த நாய் திண்ணையில் கிடக்க எதிரே வந்த நாயைப் போட்டு அடித்தார்களாம்” என்பார்கள். ஒரு சொட்டு இரத்தம் உயிர் வாழ்வதற்குக் கடித்தால்? தட்டுகிறார்கள், தடவுகிறார்கள், அடிக்கிறார்கள். ஆல் அவுட் வைத்து மயக்குகிறார்கள், மின்சாரம் வைத்து எரிக்கிறார்கள் எத்தனை விதத்தில் எங்களை சாகடிக்கிறார்கள். ஆனால் இரத்தத்தைக் குடிப்பதல்ல இரத்தத்திலேயே குளிக்கிறார்கள். உங்களால் அவர்களின் அடியைக் கூட உங்களால் தொட முடியவில்லையே!

இயற்கை தந்த மழை நீரையும், நிலங்கள் சேர்த்த மழை நீரையும் உறிஞ்சி எடுத்து வெளிநாட்டுக்கு விற்றுக் கொண்டிருக்கிற பழிகாரர்களை என்ன செய்தீர்கள்?

ஆற்று நீரை மட்டுமல்ல அதன் அடியில் தேங்கி நிற்கும் மலையையும், மழலைக்குப் பால் கொடுக்கும் மார்பினையும் அறுத்துக் கொண்டு செல்லும் மாபாதகர்களைப்போல ஆற்று மணலையெல்லாம் அள்ளி விற்றுவருகின்ற அயோக்கியர்களை என்ன செய்தீர்கள்?

மலைகளையும், குன்றுகளையும் வெடிவைத்துத் தகர்த்து பக்கத்திலுள்ள குடிசைகளை எல்லாம் அழித்து விளைநிலங்களின் தரத்தைக் கெடுத்து உள்ளுர் மக்களையெல்லாம் அகதியாக்கி ஊரை விட்டே ஓட வைத்த மலட்டு மனம் உள்ளவர்களை என்ன செய்தீர்கள்?

சாலைகளை விரிவுபடுத்துகிறேன். அலுவலகங்களை அகலப்படுத்துகிறேன் என்று பூமித்தாயைப் போர்த்தியிருந்த பசுமைத் தாய்களை அதாவது மரங்களைப் படுகொலை செய்து விட்ட மாபாதகர்களை என்ன செய்தீர்கள்.?

ஆனைகட்டிப் போரடித்த விளைநிலங்களை எல்லாம், தரிசாக்கி, தரம் கெடுத்து கட்டிடம் கட்ட நம் நிலங்களைக் காவு கொடுத்த அந்தக் கயவர்களை என்ன செய்தீர்கள்.?

ஓட்டுப்போடக் காசு கொடுத்து விட்டு ஆட்சியைப் பிடித்தவுடன் அகப்பட்டதையெல்லாம் சுருட்டி விட்டு மக்களை அம்போவென நிறுத்தி விடுகிற அரசியல்வாதிகளை என்ன செய்தீர்கள்?

இலவசக் கல்வி என்று வாய்கிழியப் பேசிவிட்டு, ஆங்கிலக் கல்விக் கொண்டு வந்து மக்களை மயக்கி கிடைக்கும் வரை உறிஞ்சிவிட்டு, பையில் இருப்பதையெல்லாம் பறித்து விட்டு பணம் இல்லையென்றவுடன் பாதியிலே பள்ளியிலிருந்து துப்பிவிட்டு அவனைப் பறிதவிக்க விடுகின்ற பாவிகளை என்ன செய்தீர்கள்?

மனைவி என்பவள் மனிதன் செய்கின்ற தவம், இறைவன் தருகின்ற வரம் இதற்குக் கூட வரதட்சனை என்ற பெயரில் மணமகளின் வீட்டாரிடத்தில் முகமூடி போடாமல் கொள்ளையடிக்கிற மூடர்களை என்ன செய்தீர்கள்?

அப்பாவி மனிதர்களை அடிமையாய் வைத்துக் கொண்டு வயிற்றுப் பசிக்குக் கேட்கும்போது சல்லிக் காசினை விட்டு எறித்துவிட்டு உலகம் முடியுமட்டும் அவனையும் அவனது வம்சத்தையும் அடிமையாக வைத்துக் கொண்டு உழைப்பை உறிஞ்சி எடுக்கின்றவர்களை என்ன செய்தீர்கள்?

ஏழை எளியவர்கள் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி வங்கியில் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் பணக்காரர்கள் பையில் வைத்துவிட்டு எல்லாம் தள்ளுபடி என்று ஏமாற்றிவிட்ட எத்தர்களை என்ன செய்தீர்கள்?

கையில் லட்டைக் கொடுத்துவிட்டு கண்ணிரண்டையும் பிடுங்கிக் கொள்வது போல் வேலையைக் கொடுப்பது போல கொடுத்து விட்டு ஊதியத்தையெல்லாம் டாஸ்மார்க்கை வைத்து உறிஞ்சிவிட்டு ஏழைகளை நடுத்தெருவில் நிற்க வைத்த எத்தர்கள் என்ன செய்தீர்கள்?

ஒண்ணும் பண்ண முடியாது. இளைச்சவனையும், இளிச்சவாயனையும் அதட்டுவீர்கள்! முடிந்தால் அவர்களை முறைத்துப் பாருங்கள்! இப்போது மரணிக்கிறேன் மறுபடியும் வருவேன் மானரோசத்தோடு இருக்கிறீர்களா? எனப் பார்ப்பதற்கு!

“நீங்கள் கொசுவை
அடித்துவிட்டுத் தூங்குங்கள்
அவர்கள் கொள்ளை
அடித்துக் கொண்டே இருக்கட்டும்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES