05

Jan

2024

வாழ்க்கைப் பயணம்…

எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்க்கையில் பல்வேறு பயணங்களை நாம் மேற்கொள்கிறோம். பல நேரங்களில் அவை பயனுள்ள பயணங்களும் உண்டு, பரிதவிக்கும் பயணங்களும் உண்டு, பரிகசிக்கும் பயணங்களும் உண்டு, சிறகடிக்கும் பயணங்களும் உண்டு, கிறங்கடிக்கும் பயணங்களும் உண்டு, தூரமான பயணங்களும் உண்டு, துயரமான பயணங்களும் உண்டு, மகிழ்ச்சியான பயணங்களும் உண்டு, நெகிழ்ச்சியான பயணங்களும் உண்டு, தடைபட்ட பயணங்களும் உண்டு, தாமதமான பயணங்களும் உண்டு, தவிக்க விட்ட பயணங்களும் உண்டு, தவறவிட்ட பயணங்களும் உண்டு. இப்படி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமான பயணத்தில்தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் பயணங்கள் முடிவதில்லை.

ஒரு ஊருக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்திற்குப் போகிறோம். போனவுடன் நாம் எதிர்ப்பார்ப்பது என்ன? போனவுடன் நாம் போகிற ஊருக்குப் பேருந்து வந்துவிட வேண்டும். ஏனென்றால் காத்திருக்க விருப்பமில்லை. யார் கண்ணில் படவும் விரும்பவில்லை. எங்க போறீங்க?, ஏன் போறீங்க? எனக் கேட்டு கழுத்தை அறுப்பார்கள். சிலர் நம்மால் செய்ய முடியாத உதவியைக் கேட்டு நச்சரிக்கலாம்!. சில நேரங்களில் நாம் யாரைப் பார்க்கக் கூடாது என எண்ணினோமோ அவர்களே வந்து விடலாம்! அல்லது கருத்து வேறுபாடுள்ளவர்கள் கண்ணில் பட்டு நம்முடன் வம்பு இழுக்கலாம்! கடன் கொடுத்தவர்கள் எதிரே வந்து கடனைத் திரும்பக் கேட்கலாம்! அல்லது நாலுபேருடன் சேர்ந்து நாம் மிரட்டிய ஒருவன் இப்போது நம்மைச் சந்திக்க கூட்டமாக வரலாம். ஆகவே இந்தப் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதைவிட எப்படா பேருந்து வரும் என்ற நினைப்பு வரும்? இது எதுவுமே இல்லையென்றாலும் வீட்டில் இருந்தால் வேறு ஏதாவது பொழுதைப் போக்கிக் கொண்டிருப்போம்! அல்லது வேறு வேலை செய்து கொண்டிருப்போம். ஆனால் பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு மணித்துளியும் இடிபோல் நம்மை இறக்கிக் கொண்டிருக்கும் மனதை இருக்கிக் கொண்டிருக்கும்.

இதனால் நம்பிக்கை தளரும். மனம் சலிப்படையும். நாம் போக வேண்டிய இடத்திற்குப் போக வேண்டிய நேரத்தில் போய்ச் சேருவோமா? என்ற பதட்டம் உருவாகும். எனவே ஏதாவது பஸ் வருகிறதா? என எதிர்பார்ப்போம். எப்படியும் பயணத்தைத் தொடங்கிவிட வேண்டும் என நினைத்து வருகின்ற பஸ்ஸில் ஏறிப் பயணத்தைத் தொடங்கி விடுவோம்!

சில நேரங்களில் மினி பஸ்ஸில் ஏறி அந்த இடத்தைக் கடந்து விட வேண்டும்! என எண்ணத் தோன்றும் சில நேரங்களில் வருகின்ற டவுண் பஸ்சுகளில் ஏறிப் பயணிக்க முற்படுவோம். காரணம் காத்துக் கொண்டு இருப்பதை விட பயணித்துக் கொண்டிருப்போமே! என யோசிப்போம். அப்போது வருகின்ற பேருந்தில் ஏறிப் பயணிப்போம்.

சில பேருந்துகள் நாம் நினைத்த வேகத்தில் செல்லாமல் மெதுவாகச் செல்லும் அது சலிப்படையும். சில பேருந்துகள் எல்லா இடங்களிலும் நின்று செல்லும் அதுவும் நமக்குப் பிடிக்காமல் வெறுப்படையச் செய்யும். சில பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்குள் எல்லாம் சென்று திரும்பும். இதுவும் நமது நேரத்தைத் தின்று விடும். சில பேருந்துகள் ஏதாவது ஒன்று பழுதாகி மெதுவாகச் சென்று கொண்டே இருக்கும். சில பேருந்துகள் பழுதாகி இடையில் நின்று விடும். சில பேருந்துகள் விபத்துக்குள்ளாகி நம்மையும் கொன்று விடும். சில நேரம் நாம் பயணிக்கும் போது நமது பேருந்தைக் கடந்து சில பேருந்துகள் வேகமாகச் செல்லும் இப்படிப் பல பயணங்களில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்!

இதுபோல்தான் நமது வாழ்க்கைப் பயணமும்! நாம் சரியான இலக்கை அடைய நமக்குப் பொருத்தமான பேருந்து கிடைக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருத்தமான கணவன் அமைய வேண்டும். கல்யாண வயது என்பது பேருந்திற்காகக் (கணவன்) காத்திருப்பதுபோல இந்தச் சமுதாயம் ஆக்கி விட்டது! இன்னும் கல்யாணம் ஆகவில்லையா? மாப்பிள்ளை கிடைக்கவில்லையா? பெண்ணுக்கு ஏதாவது நோய் உண்டா? இல்லை ஏதாவது கெட்டுப் போய் விட்டாளா? என்ற கேள்விக்கு ஓரே பதில் எப்படியாவது கல்யாணம் முடித்துக் கொடுத்து விடுவது! பெண்ணை வீட்டிலே வைத்திருந்தால் கெட்டுப்போய் விடுவாளோ எனப்பயந்து கல்யாணம் செய்து கொடுப்பது. கல்யாண வயது என்பது பேருந்து நிலையம் போல அதை அடைந்தவுடன் பேருந்து (கணவன்) கிடைத்துவிட வேண்டும்!

பெண் சொந்த வீட்டில் இருந்தாலும் அங்கே பார்க்காதே! இங்கே பார்க்காதே! அங்கே போகாதே! இங்கே போகாதே! என்று பிச்சு எடுப்பது பேருந்து நிலையத்தில் பேருந்து வராமல் துன்பப்படுவது போல ஒரு பெண் திருமண வயதில் துன்பப்படுகிறாள். எனவே தன் துயரத்திலிருந்து வெளிவரவும், பெற்றோரின் பயத்திலிருந்து தப்பிக்கவும் கட்டாயமாகப் பேருந்தை (திருமணத்தை) சந்திக்க வேண்டியுள்ளது.

இதனால் சிலர் அவசரத்திற்கு மினிப் பேருந்தில் ஏற வேண்டியுள்ளது நினைத்தால் நிற்கும் நினைத்தால் போகும். எந்த சட்டதிட்டத்திற்கும் கட்டுப்படாமல் நினைத்தால் அன்பு செய்யும் நினைத்தால் நிறுத்திக் கொள்ளும் பிடிமானம் இல்லாதவனோடு! வாழ்க்கை என்றால் என்னவென்று புரியாத மனிதர்களோடு வாழ்வது மினிப் பஸ்ஸில் பயணிப்பது போன்று அமையும்.

டவுண் பஸ்ஸில் பயணிப்பது இலக்கு உண்டு ஆனால் அதை அடைய எந்த முயற்சியும் இல்லாமல் சித்தம் போக்கு சிவன் போக்கு என்று சென்று கொண்டு இருக்கும். டவுன்பஸ் எப்போதும் பழையதாகவும், பழுதடைந்ததாகவும் இருக்கும். அதேபோல் சிலபேர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இல்லாமல் பொது இடங்களில் அவர்கள் நிற்கும் போது நமக்கே அவமானமாகத் தெரியும் அப்படி சில பேருந்து (கணவன்) களில் பயணிக்க வேண்டியது வரும்.

சில பேருந்துகள் நாம் நினைத்த ஊருக்கு வரும் ஆனால் நினைத்த வேகத்தில் செல்லாது. அதுபோல நல்லவர் என்று நினைத்து திருமணம் முடித்துவிட்டு அதன்பிறகு அவர் குடிப்பது, புகைப்பது, பிறர் மனை நாடுவது எனத் தெரிந்த பின் ஐய்யய்யோ என்று நினைத்து, இப்போது இறங்கவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் பயணிக்கின்ற அனுபவம்! எங்கு பயணிகளைப் பார்த்தாலும் உடனே நிற்கின்ற பேருந்துகளைப்போல பலகீனங்களில் படுத்துக் கிடக்கும் ஆணோடு எப்படிப் பயணிப்பது?. அதுவும் சிலரின் வாழ்க்கை.

சில பேருந்துகள் எல்லாக் கிராமங்களுக்குள்ளும் சென்று வரும் அதனால் நமது நேரத்தை அதிகமாகக் கொன்று விடும். அதே போல் சிலபேர் குடும்பம், சொந்தம், நட்பு, பொதுச்சேவை, பொழுதுபோக்கு, கேளிக்கை என நேரங்களைச் செலவிட்டு விட்டு குடும்பத்தைக் கண்டுகொள்ளாமல் திரிகின்ற பேருந்துகளிலும் இன்னும் சிலர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் எதையும் திட்டமிட்டுச் செய்ய முடியாது ஏதோ வாழ்க்கைப் பயணம் போய்க் கொண்டே இருக்கும். வாழ்க்கை முழுவதும் வெறுப்பாய் இருக்கும்.

சில பேருந்துகள் பழுதாகி விடும் ஆனால், ஏதோ போனால் போகும் நின்றால் நின்று விடும் சந்தேகம் தான். இதே போல் சந்தேகத்தோடு வாழ்கிறவன் உடன் பயணிக்கின்ற வாழ்க்கை, தன்னுடைய இலக்கை போய்ச் சேர்ந்தால்தான் உண்டு. இடையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் ஒருவிதப் பயத்தோடும் பிறரின் பழிச்சொல்லோடும் தான் பயணத்தைத் தொடர வேண்டியது இருக்கும்.

சில பேருந்துகள் பாதியிலே பழுதாகி அங்கேயே நம்மை அம்போவென்று நிறுத்திவிட்டுப் போய்விடும். இதில் சிலருடைய மரணம் மனைவியை தனி மரமாய் நிறுத்திவிட்டுத் தவிக்கவிட்டுச் சென்று விடும்.

சில பேருந்துகள் விபத்துக்குள்ளாகி நம்மையும் கொன்றுவிடும். சந்தேகத்தால் மனைவியைக் கொன்றுவிடுவது அவர்கள் செய்த பாவச்செயலால் மனைவியும் பழி தீர்க்கப்படுவது வறுமையின் காரணமாக குடும்பத்தோடு தற்கொலை செய்வது என நாம் பயணித்த பேருந்துகளின் வேகத்தால், பிரேக் பிடிக்காததால், அதாவது கோபத்தால், கட்டுப்பாடு இல்லாததால் பேருந்தும் நமது பயணமும் பாதியிலேயே முடிந்துவிடும்.

சில பேருந்துகளில் நாம் பயணிக்கும்போது நமது வேகத்திற்கு நாம் செல்லும் பேருந்து செல்லாமல் அருகில் இன்னொரு பேருந்து முந்திச் செல்லும் ச்சே… நாமும் கொஞ்சம் காத்திருந்தால் அந்தப் பேருந்தில் பயணிக்கலாம் என்று சில நேரங்களில் பலருக்குத் தோன்றலாம். சிலர் நமது பணம் வீணாகிப் போய் விடுமே என்று வேறு வழியில்லாமல் பயணிப்பவர்களும் உண்டு. சிலர் பணம் போனால் போகட்டும் என்று உடனே இலக்கை தான் நினைத்தபடி அடைய உடனே வேகமான பேருந்தில் ஏறிச் செல்பவர்களும் உண்டு. துணிந்தவர்கள் மட்டுமே இந்தத் துடிப்பான செயல்களை செய்வார்கள்.

சிலரது பயணம் நினைத்த ஊருக்கு நினைத்த பேருந்து அதுவும் சன்னலோர இருக்கையில்! கூட்டம், (பொருளாதார) நெருக்கடி இல்லாத பயணம். குறைவான (குடும்ப) சுமைகள். பொருத்தமான ஒட்டுநர், நடத்துனர் (மாமன், மாமியார்) சச்சரவு இல்லாத பயணிகள் (கணவர் குடும்பத்தார்) இந்தப் பயணம் எத்தனை பேருக்கு? உங்களுக்கென்றால் சந்தோசப்படுங்கள்! இவ்வளவு இருந்தும் தனியாகச் சிலர் பேருந்துக்கு முன்னும் பின்னும் இருசக்கர வாகத்தில் போய்க் கொண்டிருக்கிறார்களே! ஓ.. அவர்கள் துறவிகள்.

“எனது பயணம் சன்னலோரம்
அருகில் இருப்பவர் அன்புக்குரியவர்
இதுதான் பயணம் எனது சொர்க்கம்”.

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES