27
Jan
2024
எல்லா வெற்றிகளும் கொண்டாடப்பட்டாலும் எல்லா வெற்றிகளும் மகிழ்ச்சியைத் தருவதில்லை. வெற்றி என்பது வீரத்தில் மட்டும் முளைத்ததில்லை. அது முயற்சி, உழைப்பு, கட்டுப்பாடு, ஆற்றல், போட்டி, குழு ஒத்துழைப்பு எனப் பல காரணங்களோடு கூடிய ஆவலே வெற்றியைத் தருகிறது. இதில் வீரத்தில் விளைகின்ற வெற்றிகளும் போட்டிகளில் கிடைக்கின்ற வெற்றிகளும் பிறரைத் தோற்கடித்து அடைகின்ற வெற்றியாகும். ஆனால் கல்வியில் கிடைக்கின்ற வெற்றி யாரையும் தோற்கடிக்காமல் தன்னுடைய முழு உழைப்பிற்குக் கிடைக்கின்ற வெற்றியாகும்.
ஆதிக்காலத்தில் மனிதன் விலங்குகளோடு போராடுவது அல்லது மனிதர்களோடு போரிடுவது அவற்றில் கிடைக்கின்ற வெற்றியைப் பெரு வெற்றியாகக் கொண்டாடினான் பிறகு இரத்தம் சிந்தாமல் வெற்றியைச் சுவைக்க நினைத்த மனிதன்; தனக்குள் விளையாட்டுப் போட்டிகள் வைத்து முதல்வனைக் கண்டடைந்து வெற்றியை முத்தமிட்டான். பிறகு குழுப்போட்டிகளில் தனிமனிதனின் ஆதிக்கம் தலையெடுக்க ஆரம்பித்தது போட்டிகளின் முடிவுகளை மனிதனின் விருப்பு வெறுப்புகள் தீர்மானம் செய்தன. வெற்றிகளை முடிவு செய்து கொண்டு களங்களும் வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டன இதனால் இங்கு வெற்றிகள் விமர்சிக்கப்படுகின்றன.
தொடக்கக்காலத்தில் அசோகன் கலிங்க நாட்டின் வெற்றியைக் கண்டு மார்தட்டிச் சிரித்தான். ஆனால் அதனைக் கண்ட புத்த பிட்சு ஆயிரம் பேர்களைக் கொன்று குவித்து, எத்தனையோ மக்களை அனாதையாக்கி, அவர்களை இறப்பின் விளிம்பில் தள்ளிய இரும்புக் கரம் கொண்ட அரக்கனின் செயலல்லவா! இது. இதுவா வெற்றி? இதுவா மகிழ்ச்சி? என்றவுடன் உணர்ந்த அசோகன் உடனே சொன்னான். இது அவமானம் என்றான் உடை கிழித்தான் உணர்வினைக் கொன்றான் அரியணை இறங்கினான் அறியாமை நீங்கினான் அவனது வெற்றி தோல்வியில் துவண்டது! துயரத்தில் வடிந்தது!
உலகையெல்லாம் வென்றுவிட்டேன். இனி பிடிப்பதற்கு நாடுகளே இல்லை என்று கொக்கரித்த அலெக்ஸாண்டர் இறுதி நாளில் எண்ணிப் பார்த்தது! தான் அடைந்தது வெற்றி அல்ல! வாழ்வின் தோல்வி. நான் நடத்தியது போர் அல்ல! மனித வேட்டை. தான் மாவீரன் அல்ல மனித உருவில் நடமாடிய இரத்த வெறி பிடித்த ஓநாய்! வேட்டையிலும் போரிலும் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போவதற்கு ஏதாவது இருக்குமல்லவா? ஆனால் வெற்றியின் விளிம்பில் விரக்தியாய் சிரித்தான். நான் இந்த உலகை விட்டுப் போகும்போது என் இரு கைகளையும் வெளியே எடுத்துப் போடுங்கள் எதுவுமே எடுத்துச் செல்ல முடியாத உலகில் அனைத்தையும் அடைவதற்காக அலைந்த என் ஆன்மா! சாந்தி அடையாமல் சமாதிக்குச் செல்கிறது என்று சொல்லுங்கள் என்றான். நான் அடைந்தது வெற்றிகள் அல்ல அவமானத்தின் சின்னங்கள் என்று சொல்லிக் கொண்டே அடங்கிப்போனான்.
யூதாஸ் தான் நினைத்த அரசை அமைக்கத் தவறிய அவனது தலைவன் இயேசு கிறிஸ்துவை. தான் நினைத்தது சிறிதளவாவது நிறைவேற வேண்டும் என நினைத்து 30 வெள்ளிக் காசுக்கு இயேசுவை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்தான். எதிரிகள் அவரைக் கைது செய்தபோது! இயேசு யூதாசைப் பார்த்து அன்பு செய்தா என்னைக் காட்டிக் கொடுக்கிறாய்? என்றார். யூதாஸோ முப்பது வெள்ளிக் காசைப் பெறுவதற்கு அன்பை விலைபேசி விட்டோமே! எனப் பயந்தான். அவனுக்குக் கிடைத்த வெகுமதி கடைசியில் அவனுக்குத் தூக்குக் கயிறு வாங்கவே பயன்பட்டது.
இப்படிப் பல வரலாறுகளைக் கூறிக் கொண்டே போகலாம். இப்போது எல்லா வெற்றிகளும் இங்கு குறுக்கு வழியில் கூட்டி வரப்படுகிறது. பல்வேறு விளையாட்டுகளிலும் வீரர்களை விலைபேசி முடிவுகளை முடிவுசெய்து பார்வையாளர்களைப் பைத்தியமாக்கி இங்கு அறிவிக்கப்படும் வெற்றிகள் அவமானத்தின் சின்னங்கள் இதனால் இழிந்தோர்கள் இங்கு பெருகி விட்டார்கள் என்பதன் அடையாளமாகும்.
எப்போதுமே சில கட்சிகள் தான் செயித்துக் கொண்டே இருக்கும். எப்போதும் சிலர்தான் தேர்தல்களில் செயித்துக் கொண்டு இருப்பார்கள் வாக்காளர்கள். அளித்த வாக்குகளை விடக் கதவை அடைத்துக் கொண்டு அவர்கள் போட்ட கள்ள ஓட்டில் பெற்ற வெற்றிகள் இங்கு பலரைக் கரை சேர்த்திருக்கிறது. பல தலைவர்களுக்குப் பட்டாபிசேகம் செய்து வைத்திருக்கிறது. இதனை வெற்றி என்று அவர்கள் கொண்டாடினாலும் இவர்கள் தான் திருடிய சொத்தில் அல்லவா தேர் இழுக்கிறார்கள்? மானம் போகும் மறுபடிச் சொல்லாதீர்கள்.!
கல்வி கலப்படம் இல்லை என்பார்கள் ஆனால் இன்று கலைமகளுக்கும் இப்போது விலை வைத்துவிட்டார்கள். தேர்வுக்கு ஒருவிலை! தேர்வுத்தாளைத் திருடுவதற்கு ஒரு விலை! திருத்துவதற்கு ஒரு விலை! தேர்வின் முடிவுகளுக்கு ஒரு விலை! இவ்வளவு கொடுத்து நீங்கள் பெறும் வெற்றியைக் கொண்டாடினால் அதற்குப் பெயர் என்ன? ஆண்மையற்றவனுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அறிவித்தது போலல்லவா?
பட்டம், பதவி, வேலைக்கு… இலஞ்சம் என்ற பெயரிலும், நன்கொடை என்ற பெயரிலும் கொடுத்து தனக்காகப் பலரை நேர்முகத்தேர்வுக்கு நேர்மையற்ற முறையில் அழைத்து, அதில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து உனக்குத் தான் இந்தப் பதவி எனச் சந்தில் சிந்து பாடி உங்களை அழைக்கும்போது உங்கள் திறமைக்குக் கிடைத்ததாகத் திமிராகச் சொல்வீர்களே! இது மானமில்லாதவர்களின் மடத்தனம் தானே! இதுவா வெற்றி? இது மனநலம் குன்றியவருக்கு மகுடம் சூட்டுவது போலாகும்.
அன்புமிக்கவர்களே வெற்றி வாழ்க்கையை ரசனையாக்கும், ரசிக்க வைக்கும் பல ரசிகர்களையும் கொடுத்து வைக்கும் வெற்றி புகழைத்தரும். பொருளைத்தரும் பொருத்தமான இடத்தையும் தரும். வெற்றி வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் அவசியமானதாக்கும் எப்போது வேண்டுமானாலும் வெற்றி அடையலாம்? ஆனால் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்பது தவறு!
அன்பினால் நண்பனைக்கூட வெல்லுங்கள். ஆனால் துரோகத்தால் பகைவனைக் கூட வெல்லாதீர்கள் இராமன் வாலியைக் கொன்றதும், கண்ணன் கர்ணனைக் கொன்றதும் இன்னும் வெற்றியின் வரலாற்றில் பதிவுசெய்யப் படவில்லை விமர்சனத்திற்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறது. வெற்றி முக்கியமல்ல அதனை அடையும் பாதைத்தான் முக்கியம்.
இந்தத் தலைமுறை கொண்டாட ஆசைப்படுகிறது. அதற்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதனை குறுக்கு வழியில் கூட அடையத் துடிக்கிறது. வாழ்க்கையில் வாய்ப்புக் கிடைக்கும் போது வெற்றி அடையுங்கள். வெற்றி என்பது உங்கள் அடையாளங்கள் அல்ல. அதற்காக உங்கள் நல்ல அடையாளங்களை அசிங்கப்படுத்த வேண்டாம்.
வெற்றி ஆணவத்தைக் கொடுக்கும் ஆனால் தோல்வி அனுபவத்தைக் கொடுக்கும். ஆனால் இன்றைய வெற்றிகள் தகுதியற்றவர்களின் கையில் சிக்கித் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அசிங்கமான வெற்றிகள் ஆட்சி செய்கின்றன. தரமான தோல்விகள் போராடும் குணத்தைத் தரும் தகுதியில்லாத் தோல்விகள் நம்மை வேரோடு சாய்த்துவிடும் வெற்றியோ? தோல்வியோ? வீரத்தில் கிடைத்ததாக இருக்கட்டும்!
“வெட்கம் கெட்ட வெற்றியை விட
தூய தோல்வி மேலானது”