08
Feb
2024
ஒரு கவிஞனின் வார்த்தைகளைப் படித்தேன் என்னை மிகவும் கவர்ந்தது. அது எனக்குள் எப்படிப் புகுந்தது? எப்படி வளர்ந்தது? என்று தெரியவில்லை? இன்று எனது வாழ்க்கை ஒட்டம் என்பது அதன் பாதிப்பாகவும் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் பாதிப்பை உணர்ந்துவிட்டால் பிறரைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்வார்கள். தன்னைப் பாதித்தாலும் எளிதில் அவர்கள் கடந்து செல்வார்கள்.
அந்தக் கவிஞன் சொன்னது “இந்தச் செடியினை வளர விடுங்கள்”. அதை ஆடு, மாடுகள் தின்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அது வளர்ந்து விட்டால் பல ஆடுமாடுகளுக்கு நிழல் தரும் மரமாக இருக்கும்’. பறவைகள் தங்கக் கூடுகள் கொடுக்கும் பழங்கள், இலைகள் எனப் பல உயிர்கள் உண்பதற்கு உணவு கொடுக்கும். ஒரு மரமானது எத்தனை உயிர்களுக்கு இரையாகவும், இருப்பிடமாகவும் அமைகிறது என்று பாருங்கள்.
ஆனால் அது வளர வேண்டும், வளர விட வேண்டும். ஒவ்வொரு வளர்ச்சியும் ஒரு போராட்டமாகவே அமையும். தன்னோடும் தன்னைச் சுற்றியுள்ளவர்களோடும், சமுதாயத்தோடும், சாதி, மதங்களோடும், எதிரிகளோடும் போராடித்தான் முன்னேற வேண்டியுள்ளது. இதில் அதிகமாக ஆடு, மாடுகளாக பல ப(உ)யிரை மேய்ந்து ஒருவரை அழிப்பது விமர்சனங்கள் விமர்சனங்கள் மட்டுமே!.
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? ஏன் முன்னேற முடியவில்லை இந்நாட்டில்? வெளிநாட்டில் முத்திரை பதிப்பவர்கள் எல்லாம் நம் நாட்டுக்காரர்கள் தானே? ஏன் நம் நாட்டில் முன்னேற முடியவில்லை? ஆஸ்கார் விருது வாங்க முடியவில்லை? நோபல் பரிசு வாங்க முடியவில்லை? நமது அப்துல் கலாம் ஐயாவைப் போல் ஒருவரைப் பார்க்க முடியாது. இளையராஜாவின் இசைக்கு ஈடு இணையில்லை விவேகானந்தனுக்கு வேறு விளக்கம் தேவையில்லை. அம்பேத்காருக்கு நிகர் ஏதுமில்லை. அந்நிய நாட்டில் பிறந்தாலும் அன்னைத் தெரசாவை வணங்காத நம் கரங்கள் இல்லை இருப்பினும் ஏன் ஒன்று இரண்டைச் சொல்கிறோம்? இங்கு வளரத் துடிப்பவர்கள் பலர் இருந்தாலும் வளரவிடாமல் தடுப்பவர்களும் பலர் இருக்கிறார்கள்.
தடுப்பவர்கள் தந்திரக்காரர்கள்! அவர்கள் தடுப்பதைத் தடுக்க முடியாத அளவிற்கு, மதச்சடங்குகள், சாதிக் கட்டுப்பாடுகள், சமுதாயக் கலாச்சார விதிமுறைகளை வைத்து, பேசவும் விடமாட்டார்கள் பிழைக்கவும் விடமாட்டார்கள். இதில் பெண்ணடிமைத் தனம் வேறு. பெண்கள் என்றால் நமது கலாச்சாரத்தில் நாம் முன்னேறுவதற்கு அவர்கள் படிக்கற்களாக இருக்க வேண்டும். அவர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு நாம்; தடைக்கற்களாக இருக்க வேண்டும் இதுதானே இங்கு எழுதப்படாத சட்டம்.
ஒரு பெண் குழந்தை கருவில் கண்டுபிடிக்கப்பட்டால்? கருக்கலைப்பு, குழந்தையாய்ப் பிறந்து விட்டால்? கள்ளிப்பால்! பெண்ணைப் பெத்துவிட்டு என்ன பேச? வயசுக்கு வந்த நேரம் சரியில்லை! வயசு வந்த பிள்ளையை வைத்திருப்பதால் மனசு சரியில்லை. பெண் குழந்தை படித்து விட்டால் மாப்பிள்ளை எங்கே தேடுவது? கல்லூரியில் யாரையாவது காதலித்து விட்டால்? ஆட்டோக் காரனிடம் பேசாதே! நைட்டியைப் போட்டுக் கொண்டு வெளியே வராதே? ஏன் இவ்வளவு லேட்? கண்டவனோடு என்ன பேச்சு? எப்பப் பாத்தாலும் தெருவில்தான் நிற்கிற! படிச்ச திமிர்ல பேசுற! ஆபிஸ் மேனஜர் அயோக்கிய பய அவனோடு பேசாதே! உன்னால குடும்ப மானமே போகுது? பொம்பளப் புள்ளை மாதிரியே பேச மாட்டேங்கிற! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனை கற்(விமர்சனம்)களை இந்தப் பெண்கள் மீது எறிந்து கொண்டிருக்கிறோம்! இத்தனை விமர்சனங்களைத் தாண்டி, போராடி, ஒரு பெண் எப்படி வெளிவர முடியும்? யோசித்துப் பாருங்கள்!
இதைத்தான் அந்தக் கவிஞன் சொன்னான். “அந்தச் செடியை வளரவிடுங்கள்”. அது பலரை வாழ வைக்கும். அதனை ஆடு, மாடு கடிக்காமல் பாhத்துக் கொள்ளுங்கள். அது பலரைக் காப்பாற்றும். குடிக்கிற இடத்தில் ஒருவன் நம் மனைவி பற்றி குண்டைத் தூக்கிப் போடுவான். ஓசிப் பீடி வாங்கிக் குடிக்கிற, ஓசி டீ வாங்கிக் குடிக்கிற ஒரு கிறுக்கன் நம் மகளைப் பற்றி தவறான ஒரு செய்தியைச் சொல்லுவான். உற்ற நண்பன் என்று சொல்லி நம்மைப் பெற்ற தாயை குறை சொல்லுவான். அங்கெல்லாம் அமைதியாய் இருந்து விட்டு வீட்டுக்குள் வந்து அவங்க சொல்றளவுக்கு நடந்து கொண்டாயே! தெருவில் மானம் போகுது என்று பெண்ணைத் திட்டுவார்கள் ஏனென்றால் இவர்களும் ஆணாதிக்கத்தின் அசிங்கங்கள்தானே! மனிதன் தெய்வத்தைச் சந்தேகப்படலாம்! தெய்வங்கள், நம்பியவர்களைச் சந்தேகப்படலாமா? ஏனென்றால் பெண்கள் நம்மைக் காக்கும் தெய்வங்களாகத்தான் பார்க்கிறார்கள். இது நல்ல கணவர்களுக்குத் தெரியும்.
எங்க வீட்டுப்பெண் எப்படி இருக்கணும்னு யாருடா நாயே! நீ சொல்றது? என்று ஒரு கேள்வியைக் கேட்டுப்பாருங்கள் உலகமே அவளைப் பழித்தாலும் அவள் ஓடிவந்து அழுவது நம் மடியாகத்தானே இருக்கும். அதுவே மயானக் குழி ஆகிவிடக் கூடாதல்லவா? ஏற்கனவே நமக்காக தன் ஆசைகள், கனவுகள், எண்ணங்கள், உணர்வுகளை அடக்கம் செய்தவள்! நாம் உடனிருக்கும் போதாவது அவள் உயிர்த்தெழ வேண்டுமல்லவா? உறவு வீடுகளில் கூட தன் காமத்திற்கு இரையைத் தேடுகின்ற ஆண்களுக்கு மத்தியில் தன் இச்சைக்கு இணங்காத பெண்களை கொச்சையாகப் பேசுகின்ற கொடியவர்களின் நாக்கை அறுக்காமல் நாம் விடுவது கோழைத்தனமல்லவா?
கற்பைக் காப்பாற்ற வேண்டியது பெண்கள்! கற்பை நிருபிக்க வேண்டியது பெண்கள்! கற்போடு வாழ வேண்டியது பெண்கள்! அப்படியென்றால் ஆண்கள் என்ன அரைவேக்காடுகளா? இல்லை அற்பப் பதறுகளா? சீதையே ஆனாலும் தீக்குளிக்க வேண்டும் என்ற சீழ்படிந்த தத்துவத்தை இன்னும் சொல்லாதீர்கள். ஒரு மனைவியை நன்றாக புரிந்து கொள்வதில்தான் ஆண்களின் ஆண்மை மிளிரும்! ஒளிரும்!
ஒரு பெண்ணை விமர்சனம் கடந்து வளர்த்தெடுப்பதற்கு உடன் பிறந்த ஆண்கள்தான் வேண்டும் என்பதல்ல உடனிருக்கும் ஆண்களும் போதும்! நாம் பார்த்த, பழகிய எத்தனையோ பெண்கள் சிறகு இருந்தும் பறக்காமல் தவிப்பவர்கள்! உறவுகள் இருந்தும் ஊமையாய்த் திரிபவர்கள் சத்தியம் தெரிந்தும் சவப்பெட்டியாய் இருப்பவர்கள் எதையாவது இழந்துவிடுவோமோ என்று தன்னையே இழந்தவர்கள்! யாராவது? எதையாவது? சொல்லிவிடுவார்களோ என எதையும் சொல்லாமல் இருப்பவர்கள். மற்றவர்கள் விமர்சனங்களைக் கண்டு மனதிற்குள் அழுபவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உடனிருப்பவர்கள் உற்சாகமூட்டுங்கள்.
எதையும் எதிர்பாராமல் ஒரு பெண்ணிடம் பழகும்போது எதையாவது எதிர்பார்த்துப் பிழைப்பவர்கள் அவனை பகைப்பார்கள், நம்மையும் பெண்ணாசை பிடித்தவர்கள் எனப் பிதற்றுவார்கள். நம் கண் மறைந்த பிறகு நம்மைப்பற்றி கதைபேசுவார்கள். அந்தக் கயவர்களை விட்டுவிடுங்கள். நம்மையும் பெண்பித்தர்கள் என்று பெயரைக் கெடுக்க நினைப்பார்கள் பல பெண்களைக் கெடுக்க நினைத்த பித்தர்கள்தான் அவர்கள் கலங்காதீர்கள்! கண்ணீர் விடாதீர்கள்! பின் வாங்கிவிடாதீர்கள்! உங்கள் இலட்சியத்தில் பின்வாங்கி விடாதீர்கள்.
உடம்பை மையமாக வைத்துப் பேசுகின்ற இந்த உலகில் உண்மையான அன்பைப் பேசுங்கள் அதனை நிருபிக்க முயலாதீர்கள் நிர்கதிக்கு ஆளாகுவீர்கள். விமர்சனத்தால் விழுந்து கிடக்கின்ற பெண்மையைத் தூக்கி விடுங்கள் அது உங்கள் தாய்மைக்குச் செய்கிற தொண்டாக இருக்கட்டும். விமர்சனத்திற்குப் பயந்து எதையும் செய்யாமல் ஓடி ஒளிகின்ற பெண்ணை எதையும் செய்யத் துணிவை ஏற்படுத்துங்கள். பெண்கள் நம்மை எளிதில் நம்புவார்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து விடுங்கள். அன்புக்கு மயங்குபவர்கள் எதற்கும் பயப்படாத வீரத்தைச் சொல்லிக் கொடுங்கள்; இரக்கமனம் உள்ளவர்கள் எதையும் இழக்கக் கற்றுக் கொடுங்கள். வரம்புக்குப் பயந்தவர்களின் நரம்புகளில் முறுக்கேற்றுங்கள். எதையும் செய்யத் துணிவைச் சொல்லிக் கொடுங்கள். எதையும் தூக்கி எறியக் கற்றுக் கொடுங்கள். தனிமையைக் கண்டு பயப்படுவதை நிறுத்தச் சொல்லுங்கள்.
இப்போது எண்ணிப் பாருங்கள் எத்தனை செடிகளை ஆடு, மாடுகள் தின்றுவிடாமல் காத்திருக்கிறீர்கள்? அவை இப்போது எப்படி இருக்கிறது? இன்னும் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்களுக்காக… சொல்லில் அல்ல செயலில்…
“வாளால் வீழ்ந்தவர்களை விட
வார்த்தையால் வீழ்ந்தவர்களே
இங்கு அதிகம்!”