11
Apr
2024
எனக்கு இன்று தேர்தல் பணி. என் கையில் வாக்குச்சாவடிக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு நான் வாக்குச்சாவடியை நோக்கிச் சென்றேன். மாலை நேரமாகியது. மறுநாள் வாக்கெடுப்பு நடப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். என்னோடு பிற பணிகளைச் செய்ய இன்னும் சில ஆசிரியர்களும் வந்து சேர்ந்தார்கள். இரவு உணவு முடித்தபின் தூங்குவதற்கு முன் ஒருமுறை அனைத்தும் சரியாக இருக்கிறதா.? என பார்த்து விடுவோம் என்று சுற்றிப்பார்த்தேன். இறுதியாக வேட்பாளர்கள் பெயர்களை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது எல்லோருக்கும் டீ கொடுத்துக் கொண்டு ஒரு விடலைப் பையன் வந்தான். அவன் அப்போது என்னைப் பார்த்து “என்ன சார் பார்க்கிறீங்க.? எவனெல்லாம் பள்ளிக்கூடத்தில் தப்பு பண்ணுனான்னு நீங்க தூக்கிப் போட்டீங்களோ அவனெல்லாம் இப்போ தேர்தல்ல நிற்பானே” என்று சொல்லிக் கொண்டே சிரித்தான்.
எனக்குப் பயங்கர அதிர்ச்சியாயிருந்தது.! அவன் தமாசாச் சொன்னானா? சீரியஸாச் சொன்னானா? தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு உண்மையைச் சொல்லிவிட்டுப் போனதுபோல் இருந்தது. எவனெல்லாம் கற்றுக் கொள்வதற்குத் தகுதியற்றவன் என வருகைப்பதிவேட்டிலிருந்து நீக்கினேனோ! அவனெல்லாம் என்னையும் என் நாட்டையும் ஆட்சி செய்ய வேட்பாளர் பட்டியலில் வந்து நின்று கொண்டு இருக்கிறான். இந்த அரசியல் அவனுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறது.? நீ வேட்பாளராக வேண்டுமென்றால் பணம் அதிகமாகச் செலவு செய்ய வேண்டும். செலவு செய்ய வேண்டுமென்றால் பணம் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். பணம் அதிகம் வேண்டுமென்றால் நேர்மையான வழியில் சம்பாதிக்க முடியாது. நேர்மையை விட்டுவிட வேண்டும்.
குறுக்கு வழியில் அதிகமாகச் சம்பாதித்து பணம் வைத்திருப்பவன் கொள்கைவாதிகளைத் தூக்கி எறிந்து விட்டு வேட்பாளராகிவிடுகிறான். வேட்பாளராகியவுடன் பிரச்சாரத்திற்கு வருபவர்களுக்குத் தினசரிக் கூலியும், எல்லோரையும் குடிகாரனாக்க ஒரு குவாட்டரும் கொடுத்து அரசியலுக்கு அவன் அறிமுகமாகிறான்.
பள்ளியில் அனைவரும் சமமாக இருக்க வேண்டுமென்றுதான் பள்ளிச்சீருடை கொடுத்தோம். இன்று அவனுக்கென்று ஒரு கூட்டம் ஒரு சீருடை அணிந்து கொண்டு இன்று அதுதான் எங்கள் சாதியின் அடையாளம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். பள்ளியில் மாமன் மச்சான் என்று பழகியவர்கள்கூட இன்று தாங்கள் ஆளுக்கொரு சாதியென்றும், சிறுத்தைகள், புலிகள் என்று சீறிக்கொண்டு திரிகிறார்கள். இதுவா நாகரீக அரசியல்.?
வேட்பாளராக அவன் வரும்போது அவனது வாகனத்தைச் சோதனை செய்ததற்காக காவல்துறையை கண்டபடி திட்டுகிறான். உன்னை உண்டு இல்லை என்று பார்ப்பேன் என உளறுகிறான். பள்ளியில் முறையாக N.C.C. விளையாட்டுப் போட்டிகளில் பரிசும், பாராட்டும் பெற்று பல்வேறு பயிற்சியாலும், முயற்சியாலும் பதவி பெற்று காவல்துறையாக நிற்பவரிடம் பள்ளியில் கஞ்சாப் பயன்படுத்தியதற்காக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டவன் நடுரோட்டில் நின்று திட்டிக்கொண்டிருக்கிறான். இது என்ன கேவலமான அரசியல்!
பார்க்கும் தூரத்தில் ஒரு கட்டவுட் அதில் ஒரு மாபெரும் தலைவர். அவரை பரமபிதா, பாரதத்தை மீட்க வந்தவர் என்றெல்லாம் எழுதியிருந்தது. ஆனால் அவன்தான் பாலியல் சீண்டல்களில் பலமுறை பல இடங்களில் அடிவாங்கியிருக்கிறான். இவன் பெண்கள் கழிப்பறையை எட்டிப் பார்த்தற்காக பாதியிலேயே பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டவன். இன்று புனிதமான வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறான்.
இன்னொருவன் விளையாட்டுத்துறையில் பெரிய பொறுப்பில் இருப்பவன். இவனுக்கு விளையாடத் தெரியுமா? என்று கேட்டுவிடாதீர்கள். விளையாட்டு வீராங்கனைகளிடம் நல்லா விளையாடியிருக்கிறான். பதக்கங்களைக் கொடுத்துவிட்டு மானத்தைக் கேட்கிறவன் மானம் போகுது.! இந்த மானங்கெட்ட அரசியலால்…
இதோ ஒரு சாமியார் நள்ளிரவுப் பூஜையில் நடிகைகளோடு ஆட்டம் போடக் கூடியவர். அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் இவர்தான் ஆசானாய் இருப்பவர். இவர் போடும் ஆன்மீக ஆட்டத்தை இரசித்த அரசியல்வாதிகள் அரசியல் ஆட்டத்திற்கும் இவரை அழைத்து வந்திருக்கிறார்போலும் அரசியலில் ஆன்மீகமும், ஆன்மீக அரசியலும் ஆபத்தானதுதான். எதிரும், புதிருமாக இருந்தால் எடுபடுமா அரசியலில்.
ஊர் முழுவதும் பட்டினியால் செத்துக்கொண்டு இருந்தபோது, உள்ளுரில் கோவில்கட்டி கும்பாபிஷேகம் நடத்தி இவனே கடவுளைப் காப்பாத்துவது போலவும் இவன் இல்லையென்றால் கடவுளே தெருவில் நிற்பதாகக் கூறிக் கொண்டு மக்களைத் தெருவில் விட்டவன். கோவிலைக் கட்டுவதற்கு மக்களை அழித்துக்கொண்டு இருக்கிறான். சமயத்தை வளர்ப்பதற்காக சவங்களை அடுக்கிக் கொண்டு இருக்கிறான் என்ன சாபக்கேடான அரசியல்..?
புறம்போக்குகளை எல்லாம் வளைத்துப்போட்டுக் கொண்ட இவன் ஒரு புறம்போக்கு, பெண்களை வைத்து செல்வத்தைப் பெருக்கியவன் கட்டப் பஞ்சாயத்தில்தான் அவன் காலம் தள்ளுவான். ஏமாளிகளிடம் இருப்பதைப் பிடிங்கிவிட்டு இருப்பவனிடம் மிரட்டிப் பறித்துவிட்டு வாழ்கிறவன் இவன் நம்மை ஆளப்போறானா..?
பள்ளியில் படிக்கும்போது இருக்கிறவர்களிடம் எல்லாம் காசை வாங்கிவிட்டு ஏமாற்றிவிடுவான். இதற்காகவே பள்ளியிலிருந்து துரத்தப்பட்டான். இன்றைக்கு கந்துவட்டியில் சம்பாதித்துக் கருப்புப் பணத்தோடு கவலை இல்லாமல் வாழ்கிறான். காசைத் தண்ணீராய் அள்ளி இறைத்து வெற்றியடையப் போகிறான். இதுதானா அரசியல்.? பள்ளியில் வைத்து பல்லுக்குள் பொடி வைத்ததற்காக நிறுத்தப்பட்டவன் என்று பார் வைத்து பலருக்கும் தண்ணிர் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இதுதான் இந்த பாழாய் போன அரசியல்.
பணம் அதிகமாக இருப்பவன் அதனைப் பிறரைப் பறிக்க விடாமல் காப்பற்றவும் இல்லாதவன் எல்லோரிடமும் மிரட்டிப் புடுங்கவும் M.L.A., M.P. யாகத் துடிப்பதுதான் நம் நாட்டு அரசியலா.?
என்னிடம் நல்லா படிச்சவன் இந்த வாக்குச்சாவடியில் அதிகாரியாய் உட்கார்ந்திருக்கிறான். கொஞ்சம் சுமாராப் படித்தவன் கிளார்க்கா இருக்கிறான். படிப்பு வரவில்லை நல்லா விளையாடி வெற்றி பெற்றவன் வாசலில் போலீசா நிற்கிறான். ஆனால் பள்ளிக்கே தகுதியில்லாதவன் இன்றைக்கு வேட்பாளராக நிற்கிறான். அவனுக்காக நாங்கள் எல்லோரும் வாக்குச்சாவடியில் கொசுகடிக்கு மத்தியில் படுத்துக்கிடக்கிறோம்.
அன்றைக்கு அவன் செய்த தவறினால் துரத்தியடிக்கப்பட்டு நடுரோட்டில் சுற்றினான். நாளை இவனே வெற்றி பெற்று வந்து எங்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்காமால் நடுரோட்டில் நிறுத்திவிடுவான். அன்றைக்குப் பெற்றோர்களைக் கூட்டிவந்து எனக்காகக் காத்துக்கிடந்தவன் நாளைக்கு எங்களைப் பேச்சுவார்த்தைக்குச் கூப்பிட காக்க வைத்துவிடுவான். என்னிடம் படித்தவர்கள் என்னை வந்து பார்த்துவிட்டுச் செல்லும்போது, என்னிடம் படிக்கத் தகுதியற்றவன் என்னை அவனது அலுவலகத்திற்கு வந்து பார்க்கச் சொல்லுவான்.
இதற்கு எல்லாமே அரசியல்வாதியின் குற்றமல்ல. ஏனென்றால் அவர்கள் நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உங்கள் உத்தமத் தனத்திற்குத்தான் ஓட்டுரிமை ஓட்டுக்காக வேட்பாளர்களிடத்தில் கையேந்திப் பிச்சையெடுத்துவிட்டால் பிச்சைகாரர்களுக்கு ஏதுப் பேச்சுரிமை.? உங்கள் கையில் மைக் கிடைத்துவிட்டால் அரசியல்வாதிக்கு போட்டியிடுவதற்கு என்ன தகுதியிருக்கிறது.? என்று அறிவுப்பூர்வமாகக் கேள்வி கேட்பதுபோல கேட்கிற அறிவு கெட்டவர்களே காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுகிற கழுதைகளுக்கு எதற்கு கத்துகிற உரிமை.? அவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு, காலில் விழுந்து, எல்லாக் கோவில்களுக்கும் வந்து வேசம்போட்டு இருக்கிறவருகெல்லாம் தண்ணி வாங்கிக் கொடுத்து அங்க, இங்க என் அத்தனை பயல்களுக்கு அள்ளிக்கொடுத்து வெற்றி பெற்று வரும்போது அவன் மட்டும் அறநெறியில் ஆட்சி செலுத்தணுமா.? இது உங்களுக்கே நல்லாயிருக்கா.? மக்கள் சுத்தமானவர்களாய் இருந்தால் மாண்புமிகுக்கள் மகத்தானவர்களாய் இருப்பார்கள். மக்கள் மானங்கெட்டவர்களாய் இருந்தால் உங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நிச்சயமாக மனத்தால் ஊனமுற்றவர்களாய்தான் இருப்பார்கள். இவர்களில் நாம் யாரைத் திருத்துவது.? யாரைத் தேர்ந்தெடுப்பது.? நினைப்பதற்கே நெஞ்சில் பயமாக இருந்தது இதனால் தூக்கம் வரவில்லை. வாக்குச்சாவடியில் தூங்காத இரவாய்… ஆனால் என் நாடு மட்டும் தூங்கிவிட்டது.
“ஆசிரியர்கள் ஏணிகள்தான்
எல்லோரும் அவர்களை
மிதித்து மிதித்தே…
மேலேறுகிறார்கள்”