03
May
2024
இப்போது சமீபகாலமாக நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது. நீதிபதிகள் மக்களைக் காக்க மறு அவதாரம் எடுத்து வந்த கடவுளாகவே காட்சி தருகிறார்கள். அரசனின் அதட்டலுக்கும், மிரட்டலுக்கும் அச்சப்படாமல், அள்ளிக் கொடுக்கின்ற காசுகளுக்கு விலைபோகாமல், எதிர்காலத்தில் நாமும் இந்தியாவை ஆளலாம் என ஆள்பவர்களிடம் நீதியை அடமானம் வைக்காமல், நெஞ்சை நிமிர்த்தி நேர்மை தவறாமல் ஆள்பவர்களையே அரட்டுகின்ற, தேடித்தேடி கொட்டு வைக்கிற நேர்மையான நீதிபதிகளை நிதமும் பார்க்கிறோம் செய்திகளில் கேட்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம்.
இதுவரை சினிமாக்களில் மட்டுமே நீதிகள் செயித்துக் கொண்டிருந்தது. நடைமுறையில் நீதி என்பது நேர்மையானவர்களை நடை பிணமாக்கியிருந்தது ஆனால் எல்லோரும் வக்கில்கள் நீதிமன்றத்தில் வாதாடுவதை நேரில் பார்க்க ஆசைப்படுவார்கள். காரணம் சினிமாவில் அவர்கள் பயங்கரமாக வாதாடுவதை எல்லோரும் நேரிலும் பார்க்க வேண்டும் என நினைப்பார்கள். நானும் வாய்ப்புக் கிடைத்தால் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். ஒருநாள் ஒரு பள்ளியின் ஆண்டு விழாவைக் காண நேர்ந்தது ஒரு நாடகமும் நீதிமன்றக் காட்சிகளும் அங்கு நடைபெற்றது. நான் உற்சாகமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
காட்சி -1
நீதிபதி விசாரிக்க ஆரம்பித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவர் அடுத்தவர் மனைவியைக் கடத்தித் தனதாக்கிக் கொண்டது குற்றம் என்று நீதிபதி சொன்னார். ஒருவர் ஒரு பெண்ணைத்தேடித் திருமணம் செய்து அனைவர் முன்னிலையிலும் வாக்குறுதி கொடுத்து கரம்பிடித்து தாலிகட்டிய மனைவியைத் தூக்கிக் கொண்டு செல்வது மன்னிக்க முடியாத குற்றம் என்றார் நீதிபதி.
உடனே குற்றவாளி ஐயா ஒரு கட்சியில் பல ஆண்டுகள் இருந்து அனைவர் முன்னிலையிலும் தேர்தலில் நின்று சின்னம் பெற்று தேர்தலிலும் வெற்றியடைந்த ஒரு வேட்பாளரை இன்னொரு கட்சிக்காரர்கள் தூக்கிக் கொண்டு சென்று தன் கட்சியில் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்களோ? அதே தண்டனையை எனக்கும் கொடுத்துவிடுங்கள் என்றான்.
காட்சி – 2
ஓரு பிக்பாக்கெட் திருடன் பல இடங்களில் இருந்து பணம் வைத்திருந்தவர்களிடம் பணம் திருடி விட்டான். எனவே அடுத்தவர்கள் பணத்தை அவர்களுக்குத் தெரியாமல் உன்னுடைய தேவைக்கு எடுத்துக் கொண்டதற்காக உன்மேல் குற்றம் சுமத்துகிறேன் என்றார் நீதிபதி.
உடனே குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய தேவைக்கு நான் பணம் திருடிவிட்டேன். ஆனால் தன்னை நம்பி வந்து பணத்தை ஒப்படைத்தவர்களிடம் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் பணத்தை கொள்ளையடித்த அதுவும், குறிப்பிட்டத் தொகைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தார்கள் என்று அவர்களுக்குத் தெரியாமலேயே பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிற வங்கிகளுக்கு நீங்கள் என்ன தண்டனை கொடுப்பீர்களோ அதில் பாதியை எனக்குக் கொடுங்கள் ஏனென்றால் நான் செய்தது குற்றம். அவர்கள் செய்தது நம்பிக்கைத் துரோகம்.
காட்சி – 3
ஒரு பைனான்ஸ் கம்பெனி மேலாளர் பலவழிகளில் பணத்தைப் பெருக்கித் தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டான். ஆகவே அவன் குற்றவாளி என்று நீதிபதி கூறினார்.
சொன்னதுபோல் நடந்து கொள்ளவில்லை சொன்னதெல்லாம் பொய் என்று எனக்குத் தண்டனை கொடுக்குமுன் இன்று தொலைக்காட்சியைப் பாருங்கள். அதில் வருகின்ற விளம்பரங்களையெல்லாம் உற்றுக் கவனியுங்கள் அவை அனைத்தும் சொன்னது போல் இருக்கிறதா? இல்லையென்றால் அதனை எடுத்தவர்கள், கம்பெனிகள், நடித்தவர்கள் அத்தனைபேரையும் பொய் சொன்னதற்காக என்ன தண்டனை கொடுப்பீர்களோ? அதனை எனக்குக் கொடுங்கள் என்றார்.
காட்சி – 4
இவன் போதைப்பொருள் வைத்து இருந்தான். இதனால் நாட்டுக்குப் பெரிய அழிவு, இதனை இவனுக்கு கொடுத்தவர்களைக் கண்டறிந்து வேரோடு புடுங்காவிட்டால் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியாது தண்டனையையும் கடுமையாக்க வேண்டும் என்று வக்கீல் வாதாடினார்.
உடனே குற்றவாளி ஆமாய்யா போதைப் பொருள் பெருகி நாடு தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் அதிகமாகப் புழங்குகின்ற போதைப் பொருள் குடிதான்யா, இதனை விற்பது டாஸ்மாக், இதனைக் கொடுப்பது அரசாங்கம்யா நான் அரசுச் சாட்சியாக மாறி விடுகிறேன் ஐயா. இதற்கு வேராக இருப்பது அரசாங்கம்தான் விட்டுவிடாதீர்கள். தண்டனை கொடுங்கள். இல்லை என்றால் நீங்கள் சொன்னது போல நம் மக்களுக்கு விடிவு கிடைக்காதய்யா – என்றான்.
காட்சி – 5
குற்றவாளிக் கூண்டில் நிற்பவனைப் பார்த்து நீ உன்னுடைய அப்பா சொத்து என்று பக்கத்தில் இருப்பவன் வீட்டை இடித்தாயாமே? இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இப்படி வலுத்தவர்கள் எளியவர்களை அடக்கினால் நாடு சுடுகாடாகிவிடாதா? இது மன்னிக்க முடியாத குற்றம் என்றார் நீதிபதி.
ஐயா எங்கப்பா அந்த முன் வரிசையில் இருக்கிறார். அவர்தான் இது என் சொத்து என்றார். எங்குமே இல்லாத, யாருமே பார்க்காத, எந்தச் சாட்சியங்களும் இல்லாமல் இங்குதான் என் கடவுள் இருந்தார்னு சொல்லி அடுத்தவன் கோயிலை இடித்த அயோக்கியர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்களோ? அதை அப்படியே எனக்கும் கொடுங்கள் என்றான்.
காட்சி – 6
கூண்டில் நிற்கின்ற இந்த அதிகாரி தன்னுடைய கடமையைச் செய்வதற்கு இலஞ்சம் வாங்கியவர். இலஞ்சம் வாங்குவது சட்ட விரோதச் செயல் இவரை சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று வாதாடினார் வக்கீல்.
ஐயா, ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கடமை இருக்கிறது. அவர்கள் கடமைகளில் ஒன்று வாக்களிப்பது. அந்தக் கடமையைச் செய்வதற்கு பணம் பெறுவதும் அவர்களைத் தனது கட்சிக்கு ஓட்டுப்போட வைக்க பணம் கொடுப்பதும் இலஞ்சத்திலேயே பெரிய இலஞ்சம். எனவே அத்தனை பேரையும் சிறையில் அடைப்பீர்களா? ஏனென்றால் அத்தனை பேரையும் அடைத்து வைக்க நம் நாட்டில் சிறைச்சாலை இருக்கிறதா? ஆகவே என்னையும் நீங்கள் அடைக்க முடியாது. நான் அவர்கள் வரிசையில் நிரபராதி என்றான். எனக்கு தலை சுற்றியது. எது நாடகம்? மேடையிலா? வாழ்க்கையிலா? புரியாமல் அங்கிருந்து எழுந்து வந்து விட்டேன்.
“இல்லாத மேடையில்
எழுதாத காட்சியில்
எல்லோரும் நடித்துக் கொண்டே
இருக்கின்றோம்”