13
Jul
2024
காலம் கடந்து நான் கண்டுபிடித்த ஞானம். என் வாழ்க்கையில் பாதியை என் அப்பாவிடம் பறிகொடுத்துவிட்டு என்னுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் பாதியை நான் பறித்து கொண்டதுதான் என் வாழ்வு. முதல் பாதி அப்பா சொல் தட்டாத பிள்ளையாக நான் வளர, பிற்பாதி அப்பா சொல் மீறாத பிள்ளையாக என் பிள்ளைகளை வளர்க்க இந்தத் தப்பாட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறேன்.
குழந்தை என்பது வரம், தவம் என்றெல்லாம் சொல்வார்கள் என்னைப் பொறுத்த வரையில் நமக்குள் எழும் மனக்கிளர்ச்சியைச் சமுதாயம் அங்கீகரித்த உறவுகளோடு நமது ஜீன்கள் சரியாகப் பொருந்தி விட்டால் குழந்தை உருவாகிவிடும். இதில் நாம் கேட்டும் மகன் வரவில்லை. அவன் கேட்டும் நான் பெறவில்லை. ஆனால் நாம் நினைத்துக்கொள்கிறோம். நாம் தவமிருந்து பெற்றதுபோல்! அதனை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க வேண்டும். அதனைப் பாழாக்கிவிடக் கூடாது என்று பக்தியோடும், பயத்தோடும் அதனை வளர்த்து வருகிறோம்.
சிறுகுழந்தை அதற்குப் பேசத் தெரியாது. அதற்காக நாம் புரிந்து கொண்டு அதற்குரியதை நாமே செய்தோம். அதற்கு நடக்கத் தெரியாது அதற்காக நாம் நடந்தோம். அது தப்பே இல்லை. குழந்தை பேசிவிட்டது நடக்கத் தெரிந்து விட்டது. பள்ளிக்கும் கிளம்பிவிட்டது. இனி உலகத்தில் அது கற்றுக் கொள்ளும் நாம் உடனிருந்தால் மட்டும் போதும் என்ற எண்ணம்; எனக்கு வரவில்லை.
என் பிள்ளைக்கு என்ன பிடிக்கும்? என்று எண்ணாமலேயே ஆங்கிலக் கல்விதான் அவனுக்கு நல்லது என்று ஆக்கிரமித்தேன். இல்லை இல்லை அக்கிரமத்தைச் செய்தேன். என் குழந்தைக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்காமலேயே இந்தக் கலர்தான் அவனுக்குப் பிடிக்கும் என்று நானே சட்டைகளைத் தயார் செய்தேன். எப்படித் தைக்க வேண்டும் என்று கேட்காமல் இப்படித்தான் போட வேண்டும் என்று ஹிட்லரானேன். அவனுக்கென்று சில நிகழ்வுகளுக்கு அவன் ஆசைப்படும்போது எனது பாரம்பரியம், கலாச்சாரம் என்ற கதைகளைச் சொல்லி அவனை ஊமையாக்கிவிட்டேன்.
ஒரு நாள் அவன் பயிலும் பள்ளிக்கு என்னை அழைத்தார்கள் என் பையன் ஒரு பெண்குழந்தையிடம் பேசிவிட்டான் என்று என்னை அழைத்து ஏளனமாகப் பேசினார்கள். எனக்கு மானமே போய்விட்டதாக மனைவியிடமும் பிள்ளையிடமும் மடத்தனமாகப் பேசினேன். பின்பு உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் தெரிந்தது. என் மகனின் நோக்கம் காதலிப்பது அல்ல. கதாநாயகன் ஆவது. கதாநாயகன் எல்லாம் காதலிப்பதாக ஊடகங்கள் ஊளையிடுவதுதான். அவன் அவ்வாறு செய்துவிட்டான் என்று அப்புறம் புரிந்து கொண்டேன்.
குழந்தைகள் என் எண்ணத்தை நிறைவேற்ற வந்தது அல்ல. தன்னை யார் என்று இந்தப் பூமிக்கு காட்ட வந்த அவதாரம். ஆனால் நான் நினைத்ததைப் படிக்க வேண்டும். நான் நினைத்ததை உடுத்த வேண்டும். நான் நினைத்த வேலைக்குப் போக வேண்டும். நான் நினைத்தப் பெண்ணை நான் நினைத்தபடி மணமுடிக்க வேண்டும். ஆக என் மகனில் உருவில் வாழந்தது நான். அவனை அழித்ததை அவனை உருவாக்கியதாக நானே அறிவித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு உயிர் பூமிக்கு வருகிறது என்றால் அதன் விருப்பப்படி வாழ்ந்து மறைவதற்காகத்தான். அதனைப் பூமியில் வாழ விடாதபடி, வளரவிடாதபடி உறவுகள் என்ற சங்கிலியால் பிணைத்துக் கலாச்சாரம் என்பதை வைத்து கல்லறை கட்டி மானம் மரியாதை என்ற பெயரில் மரணித்துப் போக வைத்து ஒரளவு நிமிர்ந்து நிற்கும் போது நமது உயிர் பிரிந்து விடுகிறது. ஒரு பெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள் கணவன் இருக்கும் வரை அவளால் முடிவெடுக்க முடியாது. முடிவெடுக்கக் கூடாது. கணவன் இல்லையென்றால் விதவையாகி வீட்டுக்குள் இருக்க வேண்டும். ஒரு பெண்ணை விதவையாக்கி அதற்கு சடங்கு வைத்து சங்கு ஊதுகிற உலகிற்கு அவளுக்கு விடுதலை கொடுக்கத் துப்பில்லை தூ….
சில பெற்றோர்கள் முதிர் வயதில் புலம்புகிறார்கள் என் பிள்ளையை அப்படி வளர்த்தேன். இப்படி வளர்த்தேன் கடைசிலே எனக்கு கஞ்சி ஊத்தல! அப்படியென்றால் உங்கள் நோக்கமே பிள்ளையை வளர்க்கவில்லை. பின்னாளில் தன்னைக் காப்பாற்ற ஒரு பிண்டத்தை வளர்த்திருக்கிறீர்கள். உரிய காலத்தில் அவனுக்கு உள்ளதைக் கற்றுக் கொடுத்து உருப்பட விடாமல் உனக்குச் சொத்துச் சேர்க்கிறேன் என்று ஊனமாக்கிவிட்டு இன்று என்னைக் கவனிக்க வேண்டும் என்று எப்படிச் சொல்வது? உங்களையே கவனத்துக் கொண்டிருந்தால் அவன் எப்போதுதான் தன்னைக் கவனிப்பது? அதிலும் பெண் குழந்தையாய் இருந்தால் சொத்தும் கொடுக்கமாட்டீர்கள்! அப்படித்தானே? பெண் குழந்தை, ஆண் குழந்தை எல்லாம் ஆணிடம் இருக்கும் ஜீன்களின் வித்தியாசம் தானே! அது தெரியாத முட்டாள்களா?
எல்லோருமே ஆண்குழந்தைக்கு ஆசைப்படுகிறோம். பெண்குழந்தையே பிறக்கவில்லை என்றால் நம் வாழ்வு என்னாகும்? எண்ணிப்பாருங்கள்! ஆகவே இது பூமிப் பிரபந்தத்தின் புண்ணிய நிகழ்வு. இங்கு யாரும் யாரையும் நம்பி வரவில்லை. யாரும் யாரையும் அடிமையாக்கவோ, அலட்சியப்படுத்தவோ அவசியமில்லை காலவோட்டத்தில் நமது செயலைச் செய்து விட்டு பயனை எதிர்பாராமல் பயணிப்பதுதான் நமது கடமை என்பதனை நினைத்துக் கொள்கிறேன்.
அன்புக் குழந்தைகளே! என்னை மன்னித்துவிடுங்கள். எனது ஆசைகளை உங்களிடம் திணித்ததை நினைத்து வெட்கப் படுகிறேன். உங்களைப் பாதுகாக்கிறேன் என்று உங்கள் சிறகுகளை வெட்டியதற்கு வருந்துகிறேன். வேலை தேடுவதற்காக உங்கள் ஆசைகளைப் புதைத்ததை நினைத்துக் கலங்குகிறேன். நமது நிலையை உங்களுக்கு விளக்கி இருந்தால். நீங்கள் அளவோடு கேட்டிருப்பீர்கள் அதனைச் செய்யாமல் கட்டுப்பாடு என்ற பெயரில் உங்கள் ஆசைகளைக்கூட தெரிவிக்க விடாமல் பயத்தைக் காட்டி உங்கள் பாதையை அடைத்துவிட்டேன்.
என் பெண் குழந்தையின் கற்பைக் காப்பாற்ற நான் எடுத்த முயற்சியில் என் பிள்ளையைக் காப்பாற்றத் தவறிவிட்டேன். என் பிள்ளைக்கு எப்படித் திருமணம் முடித்து வைப்பது? என்று கவலைப் பட்டேனே தவிர! அவனுக்குச் சொந்தக் காலில் நிற்கச் சொல்லித்தரவில்லை. அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்குக் கூட எனக்கு அது வசதியாக இருக்கிறதா? என்று தானே பார்த்தேன். வரதட்சனை என்றால் என்னவென்று தெரியாத என் பிள்ளைக்காக வரதட்சனை வேண்டும் என்று வாதாடியவன் நான். பெண் பிள்ளையை கரை சேர்க்கிறேன் என்று கண்டவர்களிடமும் லஞ்சத்திற்காக கையேந்தி என் கையை கறை படுத்திக் கொண்டவன். இதனால் என் பிள்ளைகள் கழுவ முடியாதபடி பாவக்கறைகளால் பறிதவித்துக் கொண்டிருக்கிறது.
என் பிள்ளையை சாதி என்ற சங்கிலி மதம் என்ற தடைக்கற்கள் இதனால் அவனைப் பரந்த உலகில் பறக்க விடாமல் அடக்கி விட்டேன். எனக்குப் பயந்து பயந்து அவன் எவ்வளவோ நல்ல காரியத்தை செய்யாமல் நழுவி விட்டான். எங்க அப்பாவுக்கு பிடிக்காது எங்க அப்பா சத்தம் போடுவார்கள் என்று சொல்லி சொல்லியே சிறையில் இருந்தான். என் வெள்ளை வேட்டி அழுக்காகி விடும் என்பதற்காக அவனைப் புழுதியில் விளையாடாமல் தடுத்து விட்டேன். யாரும் என்னைப் பார்த்துச் சிரித்துவிடக் கூடாது என்பதற்காக என் மனைவி, மகளை சிரிக்க விடாமலே தடுத்துவிட்டேன்.
என் மரியாதை என் கௌரவம் இது மட்டுமே கடைசிவரை காப்பாற்றிவிட்டு கடைசிவரை என் மனைவி மக்களை காப்பாற்றாமல் விட்டுவிட்டேன். நான் அழகிய வீட்டை அவர்களுக்காக கட்டியிருக்கிறேன் என நினைத்தேன் ஆனால் அவர்களுக்கு அது சிறையாகத்தான் இருந்திருக்கும். சிந்தித்துப் பார்க்கிறேன்.
புத்தா உனைப் போற்றுகிறேன். கொஞ்ச நாளாவது அவர்கள் சந்தோசமாக இருக்கட்டும் என்று நீ புறப்பட்டுப் போய் விட்டாய் எனக்குப் புத்தி வரவில்லையே! என் குழந்தைகளே… நீங்கள் என்னிடம் உங்கள் ஆசைகளைச் சொல்லவில்லை, தேவைகளைக் கேட்கவில்லை. உங்கள் கருத்துக்களைச் சொன்னால் கூட எதிர்த்தா பேசுகிறாய்! என எட்டி உதைத்திருப்பேன் ஆனாலும் அப்பா என்று சொன்னீர்களே! எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. அழுகிறேன்.
அன்புக் குழந்தைகளே நான் அடுத்த பிறவியாவது அப்பாவாக வேண்டும். குழந்தையைக் கொடுத்தவன் அல்ல அப்பா. அவர்கள் கொண்டாடும் படி வாழ்பவனே அப்பாவாகும். தனது கட்டுப்பாட்டுக்குள் குழந்தையை வைத்திருப்பதைவிட குழந்தைகளின் வானமாக அப்பா இருக்க வேண்டும். அப்பாக்களே! உங்கள் குழந்தைகளை சட்டைப் பையுக்குள் வைத்து தேவைக்கு மட்டும் வெளியில் எடுக்காதீர்கள். உங்கள் தோள்களின் மீது வைத்து நீங்கள் பார்க்காத உலகத்தையும் அவர்களைப் பார்க்க வையுங்கள். தோற்றுவிடுவான் என்று எதையும் தடுக்காதீர்கள். இரண்டில் ஒன்று பார்த்து விடுவான் என்று நம்புங்கள், நீங்கள் அப்பா… ஆனால் நானில்லை.
“வரங்களே…
சாபங்களானால்…!
தவங்கள்
எதற்காக…?”