31
Aug
2024
கரடிக்கும் நண்பனுக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்தக் கதை இப்படித் தொடங்குகிறது? என்று எண்ணத் தோன்றும் எனக்குச் சின்ன வயதில் இரண்டாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் படத்துடன் கூடிய ஒரு கதை உண்டு இரு நண்பர்கள் ஒரு நாள் காட்டிற்குள் சென்று கொண்டு இருப்பார்கள். அப்போது கரடி ஒன்று வரும். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஒரு நண்பன் மற்றவனைத் தவிக்க விட்டுவிட்டு ஓடிப்போய் ஒரு மரத்தில் ஏறிக் கொள்வான். மற்றவன் இறந்தவன் போல் படுத்துக் கொண்டால் கரடி போய் விடும் எனப் படுத்துக் கொள்வான். கரடி அவனை முகர்ந்து பார்த்து விட்டுச் சென்றுவிடும். இப்படிக் கதை முடியும்.
இதுதான் கதை இது அப்போது எனக்குப் புரியவில்லை பின்பு நட்பு உலகத்திற்குள் வரும்போதுதான். நட்பு எவ்வளவு நயவஞ்சகமானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருமுறைக் காதலில் தோல்வியுற்றால் உலகமே அறியும் படியாக நாம் வெளிப்படுத்தி விடுகிறோம். காரணம் பெண்கள் நம்மை ஏமாற்றுபவர்களாகக் காட்டுவதற்காக! ஆனால் நட்பில் நாம் நாளெல்லாம் தோல்வியடைகிறோம். ஆனாலும் உள்ளுக்குள் அழுது உடைந்து போகிறோமே தவிர ஊருக்குச் சொல்வதில்லை.
நல்ல நட்போடு நாம் பழகிக் கொண்டிருப்போம். ஆனால் நமது தேவைக்காக, குழந்தைகள் படிப்பிற்காக, மருத்துவத் தேவைக்காக என்று தேவைகள் என்ற கரடி நம்மைத் தேடி வரும்போது நண்பர்களிடம் நாம் உதவி கேட்டு விடுவோமோ? எனப் பயந்து நம்மை விட்டு ஓடி நாம் எட்ட முடியாத மரத்தில் ஏறுவார்கள். சில நேரங்களில் போட்டிகளால், சில நேரங்களில் பொறாமைகளால், சில நேரங்களில் பயத்தால், சில நேரங்களில் சுயநலத்தால், சில நேரங்களில் பணத்திற்காகப், பதவிக்காகப், பட்டத்திற்காக நம்மை விட்டு ஓடி மரத்தில் ஏறிக் கொள்வார்கள். சில நேரங்களில் காதலுக்காக, சில நேரங்களில் மோதலுக்காக, சாதிக்காக, மதத்திற்காக, சொத்துக்காக, தனிப்பட்ட ஆதாயத்திற்காக, நம்மை விட்டு ஓடி பிற மரத்திpல் ஏறிக் கொள்வார்கள். நம்மைத் தனியே தவிக்க விட்டுச் சென்றுவிடுவார்கள்.
நட்பு என்பது! இதயத்தில் பிறக்கும்! அறிவு வளர்க்கும்! உடல் வெளிப்படுத்தும்! இதயம் தன் கண்களால் பார்க்கும் போது யாரைப் பிடிக்கிறதோ, யாரோடு இருக்க நினைக்கிறதோ, யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறதோ, யார் பிரிவு நம்மை வருத்துகிறதோ எவருக்காக நம் கண்கள் கலங்குகிறதோ அவர்கள் நம் நண்பர்கள்!
அறிவு (மூளை) உடனே அவர்களோடு எப்படி உறவை ஏற்படுத்துவது! அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவது, நேரத்தை உருவாக்குவது, வழிதேடுவது எனக் காரியத்தில் இறங்கிவிடும். உடல் என்பது நட்பை வெளிப்படுத்துவது பார்த்தவுடன், சிரிப்பது, கைகுலுக்குவது தட்டிக் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது, தோள்களைத் தொற்றுவது கையைப் பிடித்துக் கொண்டு நடப்பது, முத்தமிடுவது, உச்சி முகர்வது எனப் பல்வேறு வழிகளில் தன்னை வெளிப்படுத்தும். இந்த மூன்று நிகழ்வுகளில் இதயமும், அறிவும் நமக்கு மட்டுமே புரியும். உடல்மொழி உலகிற்குத் தெரியும்.
நட்பு நம்மை விட்டு நகர்வது இந்த மூன்றின் செயல்பாடுகளால் தான். இதயம் அன்பை விரும்புவது! அந்த அன்பு அதிகமாக வேண்டும் என்று இதயம் ஆசைப்படும். நாம் எதிர்பார்த்த அன்பு நம்மைப் புறந்தள்ளும்போது! அது நம்மைவிட்டு இன்னொரு இதயத்திற்கு இடம் நகரும் போது! நமக்குக் கோபம் ஏற்படும். நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வலி ஏற்படும். நமக்கு அவர் போட்டியாக வந்துவிடுவாரோ? என்ற பயம் ஏற்படும் போது இதயம் தமது அன்பை நிறுத்தும் அவர் எதிர்பார்த்ததைச் சீர்குலைக்கும். மனசு புண்படும்படி பேசும் நமக்கு மேல் உள்ளவர்கள் நமக்கு என்னதான் உதவி செய்தாலும் நாம் அந்த இடத்தை அடையத் துடிக்கும். இதனால் துரோகம் செய்துவிட்டு நடிக்கும்! தூர விலகி நின்று சிரிக்கும்! இது இதயம் சார்ந்த அன்பு நமக்கு எதிராக மாறும்போது இத்தனை வலிகளும் நமக்கு ஏற்படும்.
அறிவு சார்ந்தவர்கள் அறிவாளிகளோடு இருக்க மட்டுமே ஆசைப்படுவார்கள். மற்றவர்களை அவர்கள் மட்டம் தட்டிப் பேசுவார்கள். அறிவாளிகள் புகழ்ச்சியை விரும்புவார்கள். நான் தான் எல்லாம் என்று தற்பெருமை பேசுவார்கள். இதனைத் தடுத்தாலோ, அவர்களைத் தலைவர்களாக ஏற்க மறுத்தாலோ நம்மைத் தட்டிவிடப் பார்ப்பார்கள். அவர்கள் தவறுகளைத் தட்டிக் கேட்டால் முட்டி மோதி நிற்பார்கள். இவர்கள் தங்களை எதிர்க்கிறார்கள் என்றால் நம்மைப் பற்றி வதந்தி பரப்புவார்கள். இழிவாகப் பேசுவார்கள் இவர்களது நட்பு நமக்கு எலிக்கும் பாம்புக்கும் உள்ள நட்பு. இதனை நாம் இனம் கண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
உடலை மூலதனப் படுத்துகிற நட்பு இது எதிர்பாலினரோடு ஏற்படுகின்ற நட்பு. இதற்கு நாம் என்னதான் உண்மையாக இருந்தாலும் சமுதாயம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இங்கு கணவன் மனைவி உடன்பிறப்பு பக்கத்துவீடு அலுவலகப் பணி என்று பழகிக் கொள்ளலாம் இதில் பலரும் உடன்பிறப்புகளுக்குக் காட்டாத உறவைக் கூட உடன் பயணிப்பவர்களுக்குச் செய்வார்கள்.
வெளி இடங்களில், ஊர்களில், நாடுகளில் உடன்பிறவா உள்ளங்களாக உறவாடி மகிழ்வார்கள். ஆனால் பெண்கள் பாவம் சந்தேகப்படுகின்ற ஆண்களோடு வாழ்ந்தால் (தந்தை, கணவன், சகோதரன்,) அவர்களால் உண்மையாக இருக்க முடியாது. அவர்களை அவர்களது குடும்பம் ஒரு சதைப்பிண்டமாகத்தான் பார்க்கும். அவர்களோடு நாம் பேசக்கூடாது. வேலை நேரத்தைத் தவிர அவர்கள் அங்கு இருக்கக்கூடாது. நல்லது கெட்டதற்கு அழைக்கக்கூடாது. அதையும் மீறி அவர்கள் மீது நீங்கள் இரக்கப்பட்டால் அவர்களுக்கு உதவி செய்தால், அவர்களுக்கு ஆதரவாகப் பேசப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அவர்கள் குடும்பத்தாரால் நீங்கள் அசிங்கப்படுவீர்கள். அவமானப்படுவீர்கள். அவர்கள் உடம்பிற்காகத்தான் நீங்கள் அவர்களை அன்பு செய்கிறீர்கள்! என்று உங்களைப் பேசுவார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த உடம்பிற்குத்தான் அவர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்போது நீங்கள் யாருக்காக இரக்கப்பட்டீர்களளோ? அவர்களே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தங்கள் குடும்பத்தை எதிர்த்துப் பேசாமல் தாங்களைப் பாலியல் சீண்டல் செய்ததாக அவர்களால் சொல்ல வைக்கப்படுவார்கள். ஏனென்றால் இங்கு ஆண்மையில்லாத ஆண்கள் அதிகம். அவர்களது சந்தோசமே அடுத்தவர்களைச் சந்தேகப்படுவதுதான். எச்சரிக்கையாய் இருங்கள். அப்படி இருந்தால் நீங்கள் அவர்களது நட்பு என்ற நயவஞ்சகத்திலிருந்து தப்பிக்கலாம்.
மீண்டும் கரடிக் கதைக்கு வருகிறேன். அக்கதையில் ஆபத்து என்றதும் நண்பனைக் கரடியிடம் விட்டுவிட்டு மரம் ஏறிவிடுவான். ஆனால் ஆதாயம் என்றாலே இப்போது மரம் ஏறுகின்ற நட்புகள் நம் கண்முன்னே நடக்கின்றது.
நன்றாகப் பழகுவார்கள் உயிருக்கு உயிராய் நினைப்பார்கள். ஆனால் தேர்தல் என்றால் கட்சி திருவிழா என்றால் மதம், பிரச்சனை என்று வந்தால் தனது சாதி என்ற மரங்களில் போய் ஏறிக்கொண்டு நம்மைத் தவிக்கவிடுவார்கள். பணிசெய்கிற இடத்தில் அந்த நேரம் முடிந்தவுடன் தன் குடும்பம், தன்வீடு என்ற மரத்தில் தானே போய் ஏறிக் கொண்டு நம்மைத் மறந்து விடுவார்கள். விரும்பியவர்களோடு திருமணம் முடிக்க எண்ணும்போது குடும்பத்தார்கள் அனைவரும் சாதி என்ற மரத்தில் ஏறி நிற்பார்கள். இன்பம், துன்ப நிகழ்வுகளில் நமக்கு எதையும் தெரிவிக்காமல் வசதி உள்ளவர்களை மட்டும் அழைப்பு விடுக்கும் நம் சொந்தங்கள் பணம், பதவி என்ற மரத்தில் ஏறிவிடுவார்கள். இதற்கெல்லாம் வருந்தாமல் உலகம் இப்படித்தான் என்று உணர்ந்து கொண்டு பயணியுங்கள். உள்ளத்திற்கு அமைதி கிடைக்கும்.
வாருங்கள் காட்டுக்குச் செல்வோம் பல்வேறு கரடிகள் வரட்டும். யார் யாரெல்லாம் நம்மை விட்டுவிட்டு ஓடிப்போய் மரங்களில் ஏறிக்கொள்வார்கள் என்பதனை புரிந்து கொள்வோம். யார் வேண்டுமென்றாலும் நம்மை விட்டுச் செல்லட்டும் அனுமதியுங்கள். யார் மீதும் சந்தேகப் படாதீர்கள். நாம் ஒருவருக்குப் பயன்பட்டால் நாம் அவருக்கு புத்தகம் அவரோடு பயணிப்போம். நம்மை அவர் பயன்படுத்திக் கொண்டால் நாம் அவருக்குக் குப்பைத் தொட்டி, விலகியே இருப்போம். நாம் யாரோடு எது நடந்தாலும் விட்டுவிடாமல் விலகிச் செல்லாமல் பயணிக்கிறோம்? உண்மையான நட்பை இந்த உலகிற்காக விடுவதைவிட உயிரை விடுவது பெரியது. உயிர் இருக்கும்வரை உண்மையான நட்புக்காக உழைத்துக்கொண்டே இருப்போம். எவர் தடுத்தாலும் நாள்தோறும் நட்பின் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்.
“எதிர் பார்ப்பைக்
குறையுங்கள்
ஏமாற்றங்கள்…
இருக்காது”