13
Sep
2024
ஆடைகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் ஒரளவு அறிந்து இருக்கிறோம். மனிதன் பாவத்தில் விழுந்ததால் அவன் ஆடை உடுத்தும் அவசியம் ஏற்பட்டதாக விவிலியம் கூறுகிறது. ஆடை தொடக்கத்தில் மரவுரிகளிலும், விலங்குத் தோல்களிலும் தயாரிக்கப்பட்டதை மனிதன் அணிந்து கொண்டு இருந்தான்.
மனிதன் தன் தேவைக்காகப் பல்வேறு ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறான். ஆடைகளைப் பொறுத்தமட்டில் அத்தியாவசியத் தேவையான ஆடைகள், அலங்கார ஆடைகள், சீருடைகள், திருமண உடைகள், விழாக்கால உடைகள், கலைநிகழ்வு, திரைப்படத்திற்கு என்று பல்வேறு நிலைகளில் பல்வேறு உடைகளை அணிகிறோம். சில உடைகளை நம்மிடம் இருந்து எளிதில் பிரிக்க முடியாது. ஆனால் அதுவே காலப்போக்கில் காணாமலும் போய் விடுகிறது. அப்படி ஓன்று காணாமல் போய்விட்டதோ? இப்போது உள்ள தலைமுறைக்கு அது தெரியாமல் போய்விடுமோ? என நான் பயப்படுவது துண்டு என்று வழக்கத்தில் கூறப்பட்ட ஒரு துணியாகும்.
இந்தத் துண்டு தலைவர்களுக்குத் தலையில் கட்டும்போது அது அவர்களுக்குத் தனிக் கௌரவத்தை ஏற்படுத்துகிறது. கோயில் திருவிழாக்களில் அது முக்கியமானவர்களுக்குத் தலையில் கட்டும்போது அது பரிவட்டம் ஆகிறது. அப்படிக் கட்டப்பட்டால் அவர் முக்கியமானவர் அந்தக் குடும்பம் அந்த விழாவில், ஊரில் சிறப்பிக்க வேண்டிய குடும்பம் என அந்தத் துண்டு கட்டுவதால் அடையாளம் காட்டப்படுகிறது.
அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டால் அவர்கள் தானே அடிமை என்று பொருள். ஆகவே கோவில்களில் அனைவரும் இறைவனுக்கு அடிமை என்பதன் அடையாளமாக அதனை இடுப்பில் கட்டிக் கொள்வார்கள். அதேபோல் தனது எஜமானர்களுக்கு பணிவிடை செய்யும்போது அவர்களுக்கு மரியாதை செலுத்தவும் தான் உங்களைவிடத் தாழ்ந்தவன் என அறிவிக்கவும், அவர்கள் அந்தத் துண்டை இடுப்பில் கட்டிக்கொள்வார்கள்.
தம்மோடு இருப்பவர்கள் சிறப்பான செயல்களை செய்யும்போது மதிப்புக்குறியவர்களாகப் பிறர் முன்னிலையில் சிறப்பிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் இந்தத் துண்டை அவர்களுக்குப் பொன்னாடையாக அணிந்து சிறப்புச் செய்வார்கள்.
மனிதன் தன்னைச் சுத்தம் செய்து கொள்வதற்காக அன்று ஆறுகளில், ஏரிகளில் பொது வெளியில் குளிக்கும் போது அதனை இடையில் கட்டிக் குளிப்பார்கள். குளிக்கும்போது அந்தத் துண்டினை முறுக்கித் தன் உடம்பில் உள்ள அழுக்குகளைத் தேய்ப்பார்கள். பிறகு குளித்து முடித்த பிறகு அந்தத் துண்டினை வைத்து தன்னைத் துவட்டித் துடைத்துக் கொள்வார்கள். பின்பு கட்டியிருக்கிற வேட்டியைத் துவைக்க வேண்டுமென்றால் அதனைக் கட்டிக்கொண்டு வேட்டியைத் துவைத்துக் காயப்போட்டு அதனை இடுப்பில் கட்டும் வரை இந்தத் துண்டே அவர்களுக்கு மாற்றுடையாக இருக்கும்.
மனிதன் வேலை செய்யும்போது வெயில் அடித்தாலும், மழையடித்தாலும் தன்னைக் காத்துக் கொள்ள தலையைக் கட்டிக்கொள்வார்கள். அவ்வாறு தலையைக் கட்டிக்கொள்ளவோ, மூடிக்கொள்ளவோ, செய்யும்போது குடையாக இருந்து இந்தத் துண்டு காத்துக்கொள்ளும்.
ஆண்கள் தலையில் சுமைகளைத் தூக்கும் போதும் பெண்கள் தலையில் வைத்து தண்ணீர் எடுத்து வரும்போதும் தலையில் சிம்மாடாக இருந்து சுமையின் அழுத்தம் தலையைத் தாக்காதபடி இந்தத் துண்டு காத்து நிற்கும். கண்ணில் தூசி விழுந்தால் துண்டை நனைத்துக் கண்ணை ஒற்றி எடுப்பார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாகிவிட்டால் துண்டை தண்ணீரில் நனைத்து தலையில் கட்டிக் கொள்வார்கள் அது குளிர்சாதன(AC) வசதியை இருப்பது போல் இருக்கும்.
சிறுபிள்ளைகள் விளையாடும் போது துண்டைக் கண்ணில் கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி ஆடுவார்கள். பொங்கல் விழாக்களில் பானை உடைத்துப் பரிசு பெறும் இளைஞர்கள் துண்டால் கண்ணைக் கட்டிக் கொண்டு பானையை உடைப்பார்கள்.
தற்காப்புக் கலைக்காகத் துண்டை முறுக்கி வைத்து கொண்டு அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வார்கள். உயிருக்கு ஆபத்து என்றால் துண்டால் பிறர் கழுத்தை நெறித்துவிடுவார்கள்.
மென்மையான பழங்களை மரத்தில் இருந்து பறிக்கும் போது கீழே துண்டைப் பிடித்து அதில் போடச் சொல்வார்கள். ஆற்றில், குளத்தில் மீன்பிடிக்க இருவர் இருமுனையில் பிடித்துக் கொண்டு மீன் பிடிப்பார்கள். திரவப் பொருட்களில் தூசிகள் அகற்ற வடிகட்ட வேண்டும் என்றால் உடனே துண்டைப் பயன்படுத்துவார்கள்.
வயல்வெளியில் வேலை செய்யும்போது சிறிதுநேரம் கண்ணுறங்க துண்டைப் பாயாக விரித்துக் கொள்வார்கள். குழந்தை தூங்குவதற்குத் துண்டை விரித்துப் படுக்க வைப்பார்கள். காட்டில் ஏதாவது தானியங்கள், பழங்கள் கிடைத்தால் துண்டை விரித்து அதனைக் கட்டிக் கொண்டு வீட்டுக்கு வருவார்கள்.
தமது வீட்டுக்கு யாராவது திடிரென்று வருகை தரும்போது திண்ணையையோ, அல்லது அவர்கள் இருக்கையையோ சுத்தம் செய்வதற்குத் துண்டைத்தான் பயன்படுத்துவார்கள். சந்தைகளில் ஆடு, மாடுகளை விற்பனை செய்யும்போது அதன் விலைகளைப் பற்றிப் பேரம் பேச துண்டை மூடிக்கொண்டு தரகு பேசுவார்கள். விரல்களைப் பிடித்து அதன் விலைகளைப் பற்றிப் பேசுவார்கள். அது அடுத்தவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக துண்டுகளை வைத்து மூடிக்கொள்வார்கள்.
தொடக்கக் காலத்தில் காடுமேடு, கழனிப் பகுதிகளில் வேலை செய்யும்போது சில பெண்களுக்கு திடிரென்று பிரசவம் ஏற்படும் போது உடனே அங்கு இருக்கும் ஆண்கள் இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு வேட்டியை அவிழ்த்துக் கொடுப்பார்கள். அந்த வேட்டியை மறைவாக வைத்துக் கொண்டு பெண்களுக்கு பிரசவம் பார்ப்பார்கள்.
விலங்குகளையோ, கூட்டங்களையோ, விரட்டுவதற்குச் சில நேரங்களில் துண்டை ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். மனைவி இறந்தபோது இறுதி யாத்திரையில் கணவன் துண்டால் முக்காடிட்டுக் கொண்டு வருவார்.
கொடுத்த பொருளையோ, கடனையோ திரும்பக் கொடுக்காத போது, அவனை அவமானப்படுத்த கழுத்தில் துண்டைப் போட்டு இழுப்பார்கள். கருவறை விட்டு வெளிவந்து கல்லறை போகும்வரை தொட்டிலில், கட்டிலில் நம்மைத் தொடர்ந்து வருவது இந்தத் துண்டுதான் ஆனால் அது இந்தத் தலைமுறைக்குத் தெரியாமல் போய்விடக்கூடாது என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இது!
“உனது ஆடை
உன்னை யார் என்று
உலகிற்குச் சொல்லும்!”