28
Nov
2024
என் வாழ்வில் ஒரு பெரிய அத்தியாயத்தை முடித்து விட்டு புதிய அத்தியாயத்திற்குள் நுழைகிறேன். நேற்று வரை உயரப் பறந்த விமானம் போல் எல்லோரும் அண்ணாந்து பார்க்கப் பறந்த நான், இன்று தளத்தில் இறக்கப்பட்ட விமானம் ஆனேன். ஆம் நேற்றோடு எனது பணியில் இருந்து ஒய்வு பெற்று விட்டேன். இன்று எனது சொந்த ஊருக்கு வந்து விட்டேன். சொந்த ஊர்தான், ஆனால் என்னை இன்று அந்நியனாய்ப் பார்க்கிறது. எனக்கு யாரையும் தெரியவில்லை யாருக்கும் என்னைத் தெரியவில்லை. இந்த ஊர் என்னைத் தொலைத்து வெகுகாலமாகி விட்டது. நானும் தொலைந்துதான் போனேன்.
பெரிய கம்பெனி அதில் நான்தான் முதல்வன், முக்கியமானவன். நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரிகள் ஆயிரக் கணக்கான பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் நான் வரும்போது எல்லோரும் எனக்கு வணக்கம் செலுத்த வேண்டும். வழியில் ஒதுங்கி நிற்க வேண்டும். இடும் கட்டளையை எப்போதும் எல்லோரும் முடிக்க வேண்டும். இதுதான் நேற்றுவரை என் வாழ்க்கை. அந்த மிதப்பில் இருந்த எனக்கு இன்று புதிய உலகம் புதிய வாழ்க்கை எனக்கு வேறு ஒரு கதவைத் திறந்து அழைக்கிறது.
இன்று என் சொந்த ஊருக்கு காரில் வந்து இறங்கினேன் யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. எந்த ஊரை நம்பி இந்த ஊருக்கு நான் வராமல் இருந்தேனோ! அந்த ஊரின் தூசிகூட எனைத் தொட மறுத்துவிட்டது. ஆயிரம் பேருடன் எப்போதும் நிற்கிற நான் இன்று சொந்த ஊரில் நான் ஒரு அனாதையாக நிற்கிறேன். உண்மையிலேயே நமக்கு பெரிய வலி எது தெரியுமா? சொந்த மண்ணில் அகதியாய் நிற்பது. உயிரோடு உலையில் வைத்து எரித்ததுபோல் உணர்ந்தேன்.
சின்ன வயதில் என்னைப் பார்த்தவர்கள்! இந்த வயதில் யாரும் என்னைப் பார்க்காததால்! என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. என்னுடைய பணியின் போதையில் இருந்ததால் என் சொந்த ஊர் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. இங்கு மின்சாரம் இல்லை, அலைபேசி டவர் இல்லை என்று காரணம் சொல்லி எனது ஊரைப் புறக்கணித்ததால். இன்று என் பிறந்த ஊர் என்னைப் புறம் தள்ளிவிட்டது.
படிச்ச திமிறா? பதவி வெறியா? பகட்டான வாழ்வில் விருப்பமா? சொத்துச் சேர்க்க அலைஞ்சேனா? தெரியவில்லை. சொந்த பந்தம் அனைத்தையும் இழந்தேன். சின்ன வயதிலே நான் கைப்பிடிச்சு நடந்த என் தாத்தாவை இழந்துட்டேன். என்னைத் தோளில் தூக்கி வைச்சு தேரோட்டம் பார்க்க வைத்த என் சித்தப்பாவை இனி நான் பார்க்கப் போறதில்லை. எனக்கு முள்ளுக்குத்தினவுடனே அந்தக் காலை மடியிலே தூக்கி வைச்சு மஞ்சளை அரைச்சுக்கட்டின என் பாட்டியை இனி நான் பார்க்கப் போவதில்லை. காசை விழுங்கிட்டேன் என்று தலைகீழேத் தொங்கவிட்டு எடுத்த தாத்தா எங்கே? தப்புப் பண்ணியவுடன் என் அப்பா அடிச்சதற்காக ஓடி ஒளிந்ததால் தேடி அலைந்த என் சொந்தங்கள் எங்கே? வீட்டில் தோசை சுடும்போது, கோழிக் குளம்பு வைத்தால் என்னைக் கூப்பிட்டுக் கொண்டு சாப்பாடு கொடுக்கும் என் சித்திகளை எப்படி மறந்தேன்? படித்தும் புத்திகெட்ட பரதேசி நானா? சின்ன வயசிலே என் கூட விளையாண்ட என் நண்பர்கள் இன்னும் இருக்காங்களா? இல்லையானு கூடத் தெரியலையே?
எந்த ஊருக்காக என் ஊரைத் தொலைத்தேனோ அந்த ஊரு என்னை வேலை முடிந்தவுடன் வெளியே துப்பிவிட்டது. ஒரே வீட்டிலே பிறந்து, ஒரு தட்டுல சாப்பிட்ட என் உடன்பிறப்புகள் கூட ஒன்னா வாழ முடியாம போயிட்டேனே!. இது சாபம்னு கூடத் தெரியாம நான் சந்தோசமாக வாழ்ந்ததா நினைச்சி வாழ்ந்திருக்கேன். என் புள்ளைகளுக்கு இந்த நிலைமை வந்திறக் கூடாதுனு அக்கா, தங்கச்சி, மாமன்-மச்சான், சித்தப்பா-பெரியப்பா எனச் சொல்லிக் கொடுக்கணும். ஊரில் உள்ள சொத்துக்களை குழந்தைகளுக்குக் காட்ட வேண்டாம். சொந்த-பந்தங்களைக் காட்டாமல் செத்திடக் கூடாது. ஏன்னா அவங்களும் என்னை மாதிரி தனிமரமா நிற்கக் கூடாது.
நமக்கு ஆயிரம் பிறப்பு இல்லை. நினைத்தபடி வாழ்ந்து பார்க்கிறதிற்கு. அண்ணந் தம்பியா பிறந்ததை அனுபவிச்சிட்டுச் சாவோம். சொர்க்கம் சொந்த ஊரில் தான் இருக்குங்கிறது பல முட்டாள்களுக்கு இது தெரியவே இல்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல எங்கப்பா எனக்கு என்று தேடிய சொத்தில் அவரே கட்டிவைத்த வீட்டிற்குள் நான் நுழையும் போது என் தம்பி பையன் ஓடிவந்து யாரோ ஒரு ஆளு நம்ம தாத்தா வீட்டுக்குள் நுழையுது என்றான். எனக்கு சுரீரென்று இருந்தது. பெரியப்பா ஏதோ ஒரு ஆளாகச் சொல்லிவிட்டான். செத்துப்போன என் அப்பா இன்னும் தாத்தாவாக அவன் மனதில் வாழ்கிறார். உயிரோடு இருக்கிற பெரியப்பா அவனைப் பொருத்தமட்டில் ஏதோ ஒன்றாகத்தான் தெரிகிறான். நேற்றுவரை நான் ஒப்பனையில் இருந்திருக்கிறேன். என் வேசம் நேற்றோடு கலைந்தது விட்டது. இன்று எனது ஊரிலேயே நான் பிணமாக நிற்கிறேன். இல்லை இல்லை பிணத்தைக் கூட இரண்டு பேர் புரட்டிப் பார்ப்பார்கள் நான் யாருமற்றவனாய் தனிமையில் நிற்கிறேன்.
திடிரென்று யாரோ வருவது தெரிந்தது ஐயோ நீ பூரணம் மவன்தானே! நல்லா இருக்கியா? நம்ம ஊரு மண்ணை மிதிக்கதுக்கு இவ்வளவு காலமாய்யா? இது ஊரு இல்லையா! நம்ம வேருயா! உன்னைத் தூக்கி வளர்த்த அப்பாமார் எல்லாம் அந்த மரத்துக்கு கீழே சாமியா உட்கார்ந்து இருக்காங்கய்யா! உங்க அண்ணன் ஐயா! மகராசன் இது சாவ வேண்டிய வயசாய்யா? எல்லாத்தையும் நான் பார்த்து தூக்கிப் போடுவேன்னு சொன்னான். கடைசியா நாங்க எல்லாரும் சேர்ந்து அவனைத் தூக்கிப் போட்டோம். நல்லது கெட்டதற்கு நீ ஊர் பக்கம் வராதனாலே நாலுபேருக்கு உன்னைத் தெரியாமலேயே போய் விட்டது. உங்க அம்மா சொல்லுவா! என் பையன் அங்க இருக்கான்! இங்க இருக்கான்னு சொல்லுவாள். அப்படிச் சொல்லிக் கொண்டே என் சித்தி கழுத்தோடு அணைத்துக் கொண்டு முத்தமிட்டாள். நான் சின்ன வயதில் என் அம்மாவின் மார்பில் தூங்கிய நிம்மதி, சந்தோசம், அந்த ஒரு கணத்தில் கிடைத்தது.
எதையோ சம்பாதிப்பதற்காக இந்த ஊரைவிட்டு போயிருக்கிறேன். ஆனால் நான் இழந்ததுதான் அதிகம்! படித்த முட்டாள்! நான் நம்ம பிள்ளைகளுக்குச் சொத்துக்களைச் சேர்த்தோமோ இல்லையோ! சொந்தங்களை சேர்த்து வைத்திருக்க வேண்டும். கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம் என்று சொல்வாங்களே அதுபோல இவ்வளவு சாபங்களுக்கு மத்தியிலும் வரம் என் பிள்ளைகள்! அவைகள் என்னைப் போல் இல்லை விடுமுறை என்றாலே ஊருக்குப் போவதுதான் உற்சாகம். அவர்களால் எனக்குக் கொஞ்சம் அடையாளம் கிடைத்தது. அவங்க அப்பாவா நீங்க? அப்படிச் சொல்லி கேட்கும்போது எனக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது.
நல்லது கெட்டதற்கு, என்னை ஊரில் அழைக்கும் போது! எனக்கு ஏது நேரம்? எனக்கு இருக்கிறதே எவ்வளவு வேலை! என்று நான் சொல்லும்போது நான் இறக்கை கட்டிப் பறப்பதாக நினைத்துக் கொண்டேன். அதனால் மனத்தால் ஊனமாக்கி மரணித்துப் போனேன். இதனால் என் மண்ணின் மைந்தர்களே என்னை அந்நியப்படுத்தி விட்டார்கள்.
எங்க தாத்தா வனம் தேடி அலைந்தாலும் இனம்தேடி அடையனும்னு அடிக்கடி சொல்லுவார். நான் வனம் தேடிப் பறந்தேன் ஆனால் இனம் தேட மறந்தேன். இதனால் என் மண் என்னை மறந்துவிட்டது! இனி என் ஊர் மக்கள் என்மீது அன்பு காட்டினால் அது அவர்கள் எனக்குப் போடுகிற பிச்சை. நகரத்தில் இருந்தால் முதியோர் இல்லம் மட்டுமே! ஆனால் கிராமத்தில் ஒவ்வொரு இல்லமும் நமது இல்லம் ஏதோ ஒரு உறவு நம்மைக் கட்டிப் போட்டிருக்கும்.
எந்த ஊரில் புகழின் உச்சியில் இருந்தாலும் நமது புதைகுழி நாம் பிறந்த ஊரில் தானே! நான் அந்த குழியைத்தேடி வந்துவிட்டேன். ஆனால் என்னை எடுத்துப் புதைக்க ஒரு நாலுபேரு நான் சம்பாதிக்கல! என் பிள்ளை அவ்வப்போது ஊருக்கு வருவதனால் அவனுக்கு அத்தனை உறவும் தெரியுது! ஊரும் தெரியுது.
நான் விளையாண்ட மண். நான் குளித்த கிணறு, ஏறிய மரங்கள், பூப்பறித்த பூந்தோட்டம்; மிட்டாய் வாங்கிய கடைகள், நீச்சல் பழகிய குளம், ஓடி ஒளிந்த மாட்டுத்தொழுவம், படித்த ஆரம்பப்பள்ளி, சண்டை போட்ட நண்பர்கள் அத்தனையும் மறந்து நன்றி கெட்ட மனிதனாய் நாற்பது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்! கண்ணாடியில் என்னைப் பார்த்து நானே துப்பிக்கொண்டேன்.
அப்போது வெளியில் என் மகனுடன் இருபதுபேர் சந்தோசமாக சிரித்து பேசிக் கொண்டு என்னையும் விசாரித்தார்கள். அவனுக்கு வேலையில்லை ஆனால் ஊரில் அவனைத் தேடி கொண்டே பலர் வந்தார்கள். என்னைச் சுற்றி நான்கு சித்திகள் இதுதான் வாழ்க்கை! என் மகனுக்காக என் மரணத்திற்கு நான்குபேர் வருவார்கள் என்று மனதைத் தேற்றிக் கொண்டு கண் மூடினேன். கண்ணீர் நிற்கவில்லை. செய்த தவறு என்னை செயலிழக்கச் செய்து விட்டது. உங்களுக்கு?
“சொந்தங்கள் தான்
நம் சொர்க்கங்கள்
மற்ற அனைத்தும்
ஒட்டி வைத்த மீசைகள்”