17
Oct
2011
பெரிய தம்பி : என்ன தம்பி ஆழ்ந்த யோசனையில் இருக்கிறீர்கள்!
சின்னத் தம்பி : என்ன சொல்லச் சொல்றீங்க. நாடுபோகிற போக்கையும், மனிதர்களுடைய மனப்போக்கையும் நினைக்கும் போது நெஞ்சம் பதறுதண்ணே,
பெரிய தம்பி : என்ன செய்ய மனித வளர்ச்சியில் முழுக்க முழுக்க சுயநலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது அதனால் அவன் தனது மகிழ்விற்கு எதனையும் அழிக்கவும் எதையும் இழக்கவும் தயராக இருக்கிறான்.
சின்னத் தம்பி : அண்ணே ஒரு காலத்தில் காட்டுமிராண்டியாக வாழ்ந்தோம் அதனால் நமது வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்வுகளுக்கு கல்வியறிவு இல்லாதது காரணம்னு சொன்னாங்க ஆனா இன்றைக்கு எல்லோரும் கல்விகற்க ஆரம்பித்து விட்டோம், ஆனால் முன்னைய நிலையை விட பின்னைய நிலை மிக மோசமாகிவிட்டதே!
பெரிய தம்பி : பணம் அதிகமாக இருக்கிற நாட்டில் தற்கொலை அதிகமாக இருக்கு, கல்வி அதிகமாக இருக்கிற இடத்தில் வன்முறைகள் அதிகமாக இருக்கு, கட்டுப்பாடு அதிகமாக அதிகமாக புரட்சிகள் வெடித்துக் கொண்ட இருக்கிறது ஆக அடிப்படையில் எங்கேயோ பிரச்சனை இருக்கிறது.
சின்னத் தம்பி : ஒருவேளை கற்றுக் கொடுக்கிற ஆசிரியர்கள் நினைச்சா மாற்ற முடியுமா?
பெரிய தம்பி : ஒரு வேளை பிரச்சனைகளே அங்கே இருந்துச்சின்னா என்ன பண்றது.
ஏண்ணா? ஆசிரியர்கள் அவ்வப்போது தனது பாணியை மாத்தினா பரவாயில்லை தனது பணியையே மாற்றிவிட்டார்களே? நான் என்ன சொல்ல வர்றேன் என்றால் கல்வி, ஒழுக்கக் கல்வி, ஏட்டுக்கல்வி, உடற்கல்வி என பல வகை உண்டு இதில் இப்போது, தான் பட்டாபிசேகம் ஏற்க, உடனிருந்த அத்தனை கல்விகளையும் கொன்றுவிட்டு பதவிப்பிரமாணம் செய்து கொண்டது, பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களைச் சக்கையாகப் பிழிந்து மார்க்கைப்பெறமுயன்ற மானங்கெட்டபிழைப்பிற்கு வந்தவுடனே மாணவர்கள் நம்மை விட்டு விலக ஆரம்பித்து விட்டார்கள் அந்த இடை வெளியை இனி எதை வைத்து சரி செய்வது என்று எவருக்கும் தெரியாமல் சுனாமி வரும் போது சும்மா இருந்தோமே அது மாதிரி இப்போது நடக்கின்ற அத்தனையும் கையைக் கட்டி வேடிக்கை பார்க்கிறோம் என்ன செய்ய?
அவர் சொல்வது தான் சரி? என்று கூறிக் கொண்டே ஞானக்கிறுக்கன் வந்தான். அவன் வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்க்க ஞானக்கிறுக்கன் பேச ஆரம்பித்தான் ஒரு காலத்தில் தகப்பன் – மகன் உறவைவிட, தாய் மகள் உறவைவிட, அண்ணன் தம்பி, அக்காள் – தங்கை, கணவன் – மனைவி உறவை விட குரு – சீடன் உறவு பெரிதாக மதிக்கப்பட்டது. இராமனுக்குப் பெருமை தேடித் தந்ததே அவன் ஆயிரம் மனைவிகளையுடைய தன்னுடைய தகப்பன் தசரதனால் அல்ல, அவன் விசுவாமித்திரனின் மாணவன் என்பதால் மட்டுமே அவனுக்கு ஜனகச் சக்கரவர்த்தி தன் மகளைக் கொடுக்க முன்வந்தான். தூரத்திலிருந்து ஏகப்பட்ட வித்தைகளைக் கற்றுக் கொண்ட ஏகலைவன் தன்னுடைய குருநாதர் கட்டை விரலை காணிக்கையாகக் கேட்டபோது கூட தயங்காமல் தாரை வார்த்துக் கொடுத்தான். அர்ஜுனனும் சரி, துரியோதனனும் சரி, கர்ணனாக இருந்தாலும் சரி பீமனாக இருந்தாலும் சரி, வீரத்தால் இன்னும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அவர்களின் குருநாதர் கற்றுக் கொடுத்த வித்தையால் மட்டுமே வித்தகர்கள் ஆனார்கள். குருநாதர் என்றவுடன் வீரத்தைக் கற்றுக் கொடுத்து போரில் காலம் தள்ளச் சொன்னவர்கள் என்று எண்ணிவிடவேண்டாம் இந்தியாவை ஏதோ பிச்சைக்காரர்கள் நாடாகவும் இந்தியர்களைப் பரதேசிகளாகவும் பார்த்துப் பழக்கப்பட்ட அமெரிக்கர்களைக் கூட அவர்கள் தேசத்தில் அதாவது சிகாகோ மாநாட்டில் தன்னுடைய இனிய பேச்சினால் மிரட்டிவிட்டு வந்த விவேகானந்தன் தன்னுடைய புகழை விட, அவர் இராமகிருஷ்ணரின் சீடர் என்பதிலே தான் இன்று வரை பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.
இங்குமட்டுமல்ல உலகில் எங்கு நோக்கினாலும் இதே கதை தான் தொடரும் அதுவும் கிரேக்க இலக்கியத்தைப் புரட்டிப் பார்த்தால் உலகப் புகழ் வாய்ந்த வரலாற்று நாயகன் சாக்ரடீஸ் சாக்கரடீசின் மாணவர் பிளேட்டோ, பிளோட்டோவின் மாணவர் அரிஸ்டாட்டில், அவரின் மாணவன் மகா அலெக்ஸாண்டர் இந்த வரலாற்றில் எதுவும் சோடை போனதில்லையே!.
இந்த வரலாற்றை கொஞ்சம் உற்றுப்பாருங்கள், இதில் வீரம் இருக்கும், நெஞ்சில் ஈரம் இருக்கும், புரட்சி இருக்கும் வறட்சியைக் கண்டு கலங்காத உள்ளம் இருக்கும். நீதி இருக்கும் நேர்மையின் துணிவு இருக்கும் சத்தியத்தை நிலைநாட்ட சாவைத் துணிவுடன் சந்தித்த வரலாறுகளும் தெரியும்.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் அலெக்ஸாண்டர் எப்போதும் தன்னுடன் சிறியபெட்டி வைத்திருந்தார். அதனை அவ்வவ்போது திறந்து பார்த்து விட்டு ஒரு பொக்கிசமாகவே பாதுகாத்து வந்தாராம். உடனிருந்தவர்களுக்கு அது கடைசிவரை என்னவென்றே தெரியவில்லை ஆனால் அவர் இறந்த பிறகு அவரது படைவீரர்கள் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதில் அவரது ஆசிரியர் அரிஸ்டாட்டில் கையெழுத்திட்டுக் கொடுத்த ஒரு புத்தகம் இருந்தது அந்தப் புத்தகம் தான் அவருக்கு ஆக்கம், ஊக்கம், ஆறுதல், தேறுதலைத் தந்திருக்கிறது இவையெல்லாம் இன்று ஏட்டளவில்தானே இருக்கிறது.
நடைமுறையில் நாளேடுகளும், ஊடகங்களும் ஆசிரியர் மாணவர்களை எதிரும், புதிருமாக எரிய விட்டுதானே குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறது.
தன் மகன் கல்வி கற்று பெரிய மனிதராக மாற வேண்டும் என்று ஆசைப்பட்ட பெற்றோர்கள் எல்லாம் அவனை ஆசிரியரிடம் கொண்டு சென்று ஒப்படைத்து அடித்து மிரட்டி கண்டித்து, கண்டித்து அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்களே, இன்று அதே பெற்றோர்கள் இன்று ஆசிரியர் மேல் வழக்குப் போடுமளவிற்கு அவல நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோமே இதற்கு யார் காரணம்?
அன்று ஆசிரியருக்குப் பணி செய்வதும் கல்வி நிலையத்திற்கு உழைப்பதும் மாணவனுக்குக் கிடைத்த வரமாக எண்ணினானே? இன்றைய நாளில் அதே நிலை சாபமாக மாறி எல்லோரையும் சங்கடப்படுத்துகிறதே இதற்கு என்ன காரணம்?
என்ன செய்தாலும் எனக்கு எல்லாமே ஆசிரியர் தான் என்று எண்ணி முன் வந்த மாணவர்கள் இன்று எடுத்ததற்கெல்லாம் பொய் வழங்குப் போட்டு போவீஸிடம் ஒப்படைக்கத் துவங்கி விட்டார்களே இந்தப் பொல்லாத உலகிற்கு யார் காரணம்?
ஒட்டு மொத்தமாக உட்கார்ந்து யோசித்துப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குருகுலக் கல்வி மாடல் கல்வியாக மாறி இருக்கிறது குடிசைகள் எல்லாம் இன்று கண்ணாடிகள் பதிக்கப்பட்ட கல்வி நிலையங்களாக மாறியிருக்கிறது கற்பலகையில் படித்த மாணவர்கள் இன்று கணினியில் முகம் பார்க்கிறார்கள் இவ்வளவு அறிவியல் உலகில் முன்னேறிய நாம் உறவுச் சிக்கலை உருவாக்கி தினசரி வாழ்வில் திண்டாடிக் கொண்டு இருக்கிறோமே இந்தப் பயணத்தில் எங்கே தொலைத்தோம் நம் இதயத்தை? என்று ஆய்வு செய்து பார்ப்போம்!
மார்க்குகளை அள்ளிக் கொண்டு வருகிற மாணவர்கள் குணத்தில் குப்பையையல்லவா வைத்திருக்கிறார்கள்.
ஒரு கல்வி நிலையம் திறந்தால் ஆயிரம் சிறைச்சாலைகள் மூடும் என்றார்கள் ஆனால் இன்று கல்வி நிலையங்கள் இல்லாத இடமே இல்லை. ஆனால் குற்றங்கள் பெருகி குற்றவாளிகள் அல்லவா பெருகிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆசிரியர்களே! ஆய்வு செய்வோம் நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ போலி மனிதர்களைப் பார்த்துச் சகித்துக் கொள்கிறவன் நடைமுறையில் சிறிய பிரச்சனைகளைக் கூட சந்திக்கத் தயங்கி தற்கொலை செய்து கொள்கிறான் என்றால் அவனுக்கு நாம் எதனைக் கற்றுக் கொடுத்திருக்கிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்து விட்டுச் சென்றவர் தன் பள்ளியில் ஆசிரியர்களுடன் எடுத்த போட்டோக்களை பொக்கிசமாகப் பாதுகாத்துக் கொண்டு இருக்கும் போது நேற்று நம்மை விட்டு நீங்கிய மாணவர்கள் ரோட்டில் பார்த்த பிறகும் கண்டும், காணாமல் போகக் காரணம் என்ன?
எதனையோ கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக எதையோ கற்றுக் கொடுத்து அவர்களையும் நம்மையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்! அதாவது வந்த வேலையை விட்டு விட்டு பந்தங்காலைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற கதையாகிப் போனதோ!
நாலுபேரு நாலுவிதமாய் சொல்லிவிடக் கூடாது என்று சொல்வோமே? அதனை நடைமுறையில் கொண்டு வந்துவிட்டோம்.
அதாவது பள்ளி என்ன நினைக்கும்? தலைமையாசிரியர், பெற்றோர்கள், சமுதாயம் இந்த நாலுபேருக்காக, நொண்டிக் குதிரை பந்தயத்தில் ஓடினாலும் அதுவும் முதலிடத்தில் வர வேண்டும் என்று சாட்டை அடித்துத் துன்புறுத்தும் கதையாக நம் அண்டி வருகின்ற மாணவனைப் புரிந்து கொள்ளாமல் அவன் மார்க் எடுக்க வேண்டுமென்று மானத்தை வாங்குகிறோமே. இதுவா ஆசிரியர் என்பதன் அடையாளம்? இதில் கேவலமான ஒரு விசயம் என்னவென்றால் பெற்றோர்களின் பெரிய எதிர்பார்ப்பே மாணவனின் மாண்பையல்ல! மார்க்கைத்தான், கற்றுக் கொடுக்கிற ஆசிரியர் கைதேர்ந்தவராக இருந்தாலும் அவனைத் தனிப்படிப்பில் தள்ளி விடுகிறார்களே! இதற்கு என்ன தண்டனை கொடுப்பது?
தன் மகன் தனிப் படிப்பிற்குச் செல்லாமல் இருந்தால், அதற்குரிய காரணத்தைச் சொன்னாலும் அவனை நம்பாமல் அலைபேசியில் ஆசிரியரிடம் கேட்ட பிறகே திருப்தி அடைகிறோமே. இந்த அவல நிலைக்கு யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். ஆனால் மாணவனுக்கு எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை ஆசிரியர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் இடிப்பதைப் பார்க்கும் போது பாபர் மசூதியை இடித்ததை விட இது பாவப்பட்ட செயலல்லவா? இன்றும் ஒரு சில கல்வி நிலையங்கள் இருக்கிறது. அது அதிக மார்க் எடுத்தவர்களுக்கும், அதிக பணம் கொடுத்தவர்களுக்குமே வாசல் கதவினைத் திறந்து வைத்தால் இன்றைய மாணவர்களுக்கு அத்தகைய கல்வி நிலையங்களை பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிடத்தோன்றுமா? அல்லது கல் எடுத்து எறியத் தோன்றுமா?
பாடத்தை கற்றுக் கொடுத்தோம், பக்குவத்தை கற்றுக் கொடுத்தோமா? அறிவைக் கற்றுக் கொடுத்தோம் இதயத்தைப் பக்குவப்படுத்தினோமா வெற்றியை மட்டுமே ஊட்டி, உற்சாகப்படுத்தி மேடை வைத்து பரிசு வழங்கி பாராட்டி வந்தோமே? தோல்வியில் துவண்டு விடாதபடி முயன்று முன்னேறி வர என்றாவது வாய்ப்புக் கொடுத்தோமா? படிப்புக்கு கொடுக்கிற நேரத்தில் பத்தில் ஒரு பங்காவது ஒழுக்கத்திற்கு கொடுத்தோமோ?
தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய உலகம் என்று கற்றுக் கொடுத்து விட்டு தவறுகள் செய்தவனை திருந்தவே விடாமல் தண்டித்து விட்டால் உலகம் நம்மை தாங்கிக்கொள்ளுமா?
எந்திரன் என்ற திரைப்படத்தில் ஒரு விஞ்ஞானி தன்னைப் போலவே ரோபோவை படைத்து அறிவுள்ளதாக ஆக்கி இதயத்தை பக்குவப் படுத்தாமல் அவரையே அழிக்கத் துணிந்து விடுகிறது என்னைப் பொறுத்த மட்டில் இன்று இதனைத் தான் நாம் கல்வி நிலையத்தில் செய்கிறோம்.
அறிவை வளர்த்து விடுகிறோம் அது ஆக்கத்திற்கு பயன்படும் என்று எண்ணுகிறோம். அது எளிதில் புரண்டு அனைத்தையும் அழிக்கத் துணிந்து விடுகிறது. உங்கள் வெற்றிக்காக மாணவனைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவதை விட்டு விட்டு அவனுடைய தோல்வியில் எப்போது பக்கத்திலிருக்கப் போகிறீர்கள்? ஆயிரம் அறிஞர்களுக்கு ஆசிரியராய் இருப்பதைவிட ஒரு பின் தங்கியவனுக்கு எப்போது தகப்பனாயிருக்கப் போகிறோம். நீங்கள் எத்தனையோ மாணவர்களுக்கு ஆசிரியராயிருக்க ஆசைப்படும் ஆசிரியர்களே! எல்லோரையும் விட்டு விட்டு உங்களையே கதி என்று வந்து நிற்கின்ற மாணவர்களுக்கு எப்போது நல்ல வழிகாட்டியாய் இருந்து உங்கள் குழந்தைகளாகப் பார்க்கப் போகிறீர்கள். பள்ளி கோயிலாகவும் ஆசிரியராகவும் தெய்வமாகவும் மாணவர்கள் பார்க்க மறந்து விட்டார்களே என்று பரிதாபப்படும் ஆசிரியர்களே! நீங்கள் எப்போது கல்வி நிலையத்தை கோயிலாகவும், ஆசிரியரை தெய்வமாகவும் காட்டினீர்கள்? நீங்கள் காட்டுங்கள். அவர்கள் கற்றுக் கொள்வார்கள். வரவிருக்கின்ற தலைமுறைகளிடத்தில் மார்க்குகளைக் கூட்டப் பாடுபடும். ஆசிரியச் சமுதாயமே அவர்களிடம் எப்போது மாண்புகளைக் கூட்டப் போகிறீர்கள் என கையெடுத்துக் கும்பிட்டு விட்டு ஞானக்கிறுக்கன் தன் வழியே சென்றான்.