11
Oct
2016
இந்தக் கலியுகம் நம்மோடு ஒரு கண்ணாமூச்சி ஆடிக்கொண்டு இருக்கிறது. ஆனால் யாரும் அதனைக் கண்டு பிடிக்காமல் நாம் தாம் காணமல் போய்க்கொண்டு இருக்கிறோம். அது என்ன? ஆழமாகச் சிந்தித்தால் தலைமையும், தலைவர்களும் தான். அப்படி என்றால் தலைவர்களே இப்புவியில் இல்லையா? என்று கேட்டுவிடாதீர்கள் தலைவர்களும் இருக்கிறார்கள், தலைமைப்பதவியும் இருக்கிறது ஆனால் பல இடங்களில் இது இடமாறியே கிடக்கிறது.
மனிதன் காட்டுமிராண்டியாக அதாவது நாடோடியாக வாழ்ந்த போது குறிஞ்சியைக் கடந்து, முல்லையில் வளர்ந்து, மருதத்தில் மலர்ந்த போதுதான் நகரம் அமைத்தான், நாகரீகத்தைச் சுவைத்தான் அங்குதான் ஆட்சியமைப்பு ஆரம்பமானது. தலைவர்கள் தோற்றம் உருவானது. அந்தத்தலைமை தம்மை நம்பிய அனைவருக்கும் பாதுகாப்பை வழங்குவது, அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது. ஓற்றுமை உணர்வை வளர்ப்பது மானிட இனத்தை வளர்த்தெடுப்பது அவரவர் திறமையைக் கண்டறிந்து வாய்ப்பளித்து வளர்ச்சிப்பாதையில் முன்னேறுவது. இதில் சுயநலம் இருக்காது. பாகுபாடு தெரியாது. தான் என்ற அகந்தை தலைவனுக்குக் கடுகளவு கூட இருக்காது. இதனை அப்படியே இந்தக்காலத்தில் எண்ணிப்பாருங்கள் தலைமையும், தலைமைத்துவமும் பல இடங்களில் காணாமல் போனது உங்கள் கண்முன் வரும்.
அதே வேளையில் நமது ஆதங்கங்களும், புலம்பல்களும் ஆங்காங்கே கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது. அரசியல்வாதிகள் சரியில்லை. ஆட்சியாளர்கள் சரியில்லை, அரசு அதிகாரிகள் சரியில்லை என்றுதானே பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள்? தம்மிடம் இருந்துதானே? நல்ல தலைவர்கள் உருவாக நாம் என்ன செய்தோம்? தலைமைத்துவம் இல்லாமல் தலைவர் பதவிக்கு வந்து சமூதாயத்தைச் சாக்கடையாக்கும் புல்லுருவிகளை ஏன் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம்.
உலத்தில் தோன்றிய ஒப்பற்ற தலைவர்கள் இயேசு, புத்தன், காந்தி, ஒரு இடத்தில் கூட தன்னை அவர்கள் தலைவர்களாக எண்ணிக்கொண்டதில்லை ஆனால் இன்று தலைமைக்குத் தகுதியில்லாத, தலைமைத்துவம் இன்று தலைமை இடத்தில் இருப்பதால் இன்று உலகம் தறிகெட்டுத் திரிகிறது.
தலைமைப்பொறுப்பிற்கு வரவிரும்புபவர்கள் நன்றியையோ, பிரதிபலனையோ எதிர்பார்க்கக்கூடாது தொடர்ந்து பலனை எதிர்பாராமல் பணியைத் தொடரவேண்டும். பணியில் நேர்மை தொடரும்போது எதிர்ப்பு அதிகமாகும், வெறுப்பு அருகில் நிற்கும் தண்டனைகள் தலையைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஆயினும் புனிதப்பணியை போற்றிக்கொண்டே இருப்போம். போய்க்கொண்டே இருப்போம்.
பல்வேறு தலைவர்களைப் பார்க்கிறோம். அவர்களுடைய புகழ், வசதி, பிரபலம் இவற்றை மட்டுமே மனதில் வைத்து தாமும் தலைவராக ஆசைப்படுவார்கள்;. அவர்கள்பட்ட வலி, அடி, அவமானம், உயிர்ப்பணயம் உங்களுக்குத் தெரியுமா? அதற்குத் தயரானவர்கள் தலைமையைத் தேடமாட்டார்கள். ஏனென்றால் தலைமைப் பதவி தேடி வருவதல்ல தானாய்வந்து நம்மை அமர்த்துவது. இன்று அது புரியமால் பலர் பணத்தைக்கொண்டு பட்டம், பதவி, செல்வாக்கு, சாதி, மதம் இவற்றைப் பயன்படுத்தி தலைமைப் பதவியைப் பிடிக்கிறார்கள். தனக்கு இலாபம் என்று தலைவராகிறவர்களால் சமுதாயம் சாகடிக்கப்படுகிதே!
எல்லோரும் ஓட்டுபோடுவது மட்டும் நம் கடமை, உடனே நல்ல தலைவர்கள் கிடைத்துவிடுவார்கள் என்று நினைப்பது கானலுக்குள் மீன் பிடித்த கதையாகிவிடும். நாட்டுக்கும், நிறுவனங்களுக்கும் மட்டும் தலைவரல்ல ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தலைவர் இருக்கிறார். ஓவ்வொரு வீட்டுக்குள் இருந்துதான் தலைவர்கள் உருவாகிறார்கள் என்பதனை ஏன் மறந்துவிட்டோம்;. இன்று வீட்டுத்தலைவர்கள் பலர் தடுமாறிக்கொண்டிருப்பதால் தடமாறிக்கொண்டே இருப்பதால் இன்று நாடே தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதனை விவாதத்திற்குக்கூட இன்னும் எடுக்கவில்லையே. ஒருநாடு உருப்படவேண்டும் என்றால் ஒரு நல்ல தலைவனை உருவாக்கினால் போதும் அவன் பல தலைவர்களை உருவாக்கிவிடுவான்.
நிலைமைக்கு ஏற்ப முடிவெடுப்பதே நல்ல தலைமைக்கு அழகு. காலத்தின் தேவையை உணர்ந்து நெப்போலியன், செங்கிஸ்கான், சந்திரகுப்தர், அக்பர், வின்சென்ட் சர்ச்சில் என்று தலைமைப் பதவியை ஏற்றவர்கள் யாரும் சோரம் போனதில்லையே சாதித்துக்காட்டியவர்கள் தானே!
நல்ல தலைவனாக உருவாகுவதற்குப் பல தகுதிகள் இருக்கவேண்டும் என்று எதனை முன்வைத்து இருக்கிறோம்! பொதுவாகத் தலைவன் என்பவன்.
தன்னையே செதுக்கிக் கொள்பவன்தான் தலைவன. ஓ மானிடமே விழித்தெழு! பள்ளிகளிலும், படைகளிலும் மட்டும் பயிற்சி கொடுத்துத் தலைவர்களை உருவாக்குவதல்ல. ஒவ்வொரு வீடுதான் அதன் உலைக்கூடம், அங்கு உருவாக்கவோம், உருக்கொடுப்போம, உலகம்; தளைக்கட்டும் மானிடம் செழிக்கட்டும்!.