10
Dec
2016
கடவுள் பிறக்கப் போகிறார்? ஆலயங்களும், கிறிஸ்தவர்களும் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். டிசம்பர் மாதம் பிறந்தாலே வருடம் முடியப்போகிறது என்ற எண்ணத்தை விட கிறிஸ்து பிறக்கப்போகிறார் என்பதுதான் பரபரப்புச் செய்தி.
வருடா வருடம் பிறக்கிறார். வருடா வருடம் கொண்டாடப்படுகிறார். ஆனால் உண்மையிலே அது இறைவன் பிறப்புத்தானா? எத்தனை அலங்காரங்கள், எத்தனை ஆடம்பரங்கள், எத்தனை வாழ்த்துக்கள், எத்தனை விழாக்கள், இதுதான் இறைவன் பிறப்பின் அடையாளங்கள்? எத்தனை பாடல்கள், எத்தனை தேடல்கள், எத்தனை மறையுரைகள், எத்தனை பரிசுப்பொருட்கள், இதுதான் இறைவன் விரும்பியதா? இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுப்பாருங்கள் நாமே கிரங்கிப்போவோம்.
கொஞ்சம் அழுத்தமாகவும், ஆழமாகவும் நமக்கு நாமே கேட்டுப்பாருங்கள் கண்டிப்பாக நமக்கு உள்ளுக்குள் ஒரு உதறல் எடுக்கும் ஏனென்றால் நாம் கொண்டாடியது, கொண்டாடப்போவது எல்லாமே கொண்டாட்டம்தான். அது நம்மை நாமே மகிழ்ச்சிப்படுத்தவும் திருப்திபடுத்தவுமே உண்டாக்கப்பட்ட உருவாக்கப்பட்ட கொண்டாட்டங்கள். இது இறைவன் விரும்பியதா? இறைவனுக்கு ஏற்புடையதா கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்.
கடவுள் இப்போது பிறக்கவேண்டும் எதற்கு? கருப்புப்பணத்தை ஒழிக்கவா? இல்லை அதையே காணிக்கையாக வாங்கவா? விவசாயிகளைக் காக்கவா? அரசியல்வாதியை அடக்கவா? தீவிரவாத்தத்தை குறைக்கவா? பயங்கரவாதத்தை ஒழிக்கவா? லஞ்சம் ஊழலைத் தடுக்கவா? அதிகார வர்க்கத்தை ஒடுக்கவா? இல்லாதவர்களோடு பகிரவா, எல்லோரோடும் மகிழவா! ஏதாவது ஒன்றுக்காக இப்பூமிக்கு வரப்போகிறார் என்று நாம் எண்ணுவோம். எதற்காகவும் அவர் வரட்டும் என்ன வேண்டுமென்றாலும் செய்யட்டும் ஆனால் நீங்கள் ஒன்றைமட்டும் உறுதியாக எண்ணிக்கொள்ளுங்கள், உங்களுக்கு அவர் எப்படி வரவேண்டுமோ! அப்படியே அவரை எதிர்கொள்ளுங்கள்.
அடுத்த கேள்வி! அவர் எங்கே பிறக்கவேண்டும்? ஆலயத்தில்? குடிலில்? குடிசையில்? மாட்டுத்தொழுவத்தில்? கருணை இல்லத்தில்? குழந்தைகள் காப்பகத்தில் ? குழந்தைகளே இல்லாத இல்லங்களில் ? எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கட்டும்! ஆனால் உங்களுக்கு எங்கு பிறக்கவேண்டும்மென்று எண்ணுகிறீர்களோ? அங்கு இந்த ஆண்டு பிறக்கட்டும்.
ஒருமுறை பாரதி தன்னுடைய பாடலில் சொல்லுவான் பாரதி ஒரு துறவியைத் துரத்திக் கொண்டே ஓடுவான். ஓடிப்போய் அவன் கைகளைப் பற்றிப்பிடித்துக்கொள்வான். அந்தப் பிடியின் பொருள் இறைவன் எங்கிருக்கிறான்? அவனை எனக்குக்காட்டு என்பதுதான். உடனே அந்தத் துறவி மேலே சூரியனை ஏற்றுப்பார்ப்பார்! பின்பு அருகிலுள்ள கிணற்றை எட்டிப்பார்ப்பார் பாரதியைப் பார்த்துச் சிரிப்பார். பாரதியும் சூரியனைப் பார்ப்பார். அருகிலுள்ள கிணற்றை எட்டிப்பார்ப்பார். சிரிப்பார். உடனே துறவியின் கையை விட்டுவிடுவார் ஏனென்றால் பாரதியின் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.
மெய்ப்பொருளை புரிய வைக்க வார்த்தைகள் தேவையில்லை. உண்மையை வரவேற்க கொண்டாட்டங்கள் தேவையில்லை. இறைவனைக் கண்டடைய பயணங்கள் தேவையில்லை. அன்பினைத் தெரிவிக்க அன்பளிப்புகள் தேவையில்லை. இவையெல்லாம் வெளி அடையாளங்கள் உள்ளுக்குள் நடக்கின்ற உருமாற்றங்களுக்கு வெளியடையாளங்களில் விடை சொல்ல நினைத்தால் நாம் வெளி வேடக்காரர்களே…
பாரதிகண்ட உண்மை என்ன? வானில் உள்ள சூரியன் கிணற்று நீரில் பிரதிபலிக்கின்றான். அதன்பொருள் வானில் உள்ள இறைவன் உன் உள்ளத்தில் பிரதிபலிக்க வேண்டும். அதுவே இறைவனின் பிறப்பு. அதனைத்தான் மாணிக்கவாசகர் சொல்வார் ‘நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தமன்பே: என்பார். உள்ளமே கோயில் அதனை எப்படி உலகிற்குக் காட்டமுடியும்?
எனவே இந்த ஆண்டு இறைவன்பிறப்பு உங்கள் உள்ளத்தில் பிரதிபலிப்பதாக இருக்கட்டும். உங்கள் உள்ளம் குடிலாகட்டும். உங்கள் குணங்கள் எல்லாம் சாதுவான ஆடுமாடுகளாக இருக்கட்டும். உங்கள் வாழ்க்கை முறை பிறருக்கு இடம் கொடுக்கும் இடையர்களாக இருக்கட்டும். உங்கள், உடல், உள்ளம், ஆன்மா மூன்றும் இறைவனைத் தேடி அலையும் மூன்று இராஜாக்களாக இருக்கட்டும். உங்கள் இல்லம் அனைவரும் அணுகிவரும் மாட்டுத்தொழுவமாக மாறட்டும். மூத்தோர் சொற்கள் விடிவெள்ளியாக இருக்கட்டும், வழிகாட்டட்டும். ஏரோது மன்னனைப் போல் இந்த உலகம் எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் உண்மை உங்கள் வீட்டில்தான் பிறக்கும் என்று உலகம் தெரியட்டும்.
உலகம் எத்தனை அவமானங்களைத் தந்தாலும் உலக நன்மைக்காய் என்னைக் கொடுப்பேன் என்ற மரியாளின் மனநிலை நமதாகட்டும். நான், எனது, என்ற அகந்தையும் ஆணவமும் அற்ற ஒரு மனிதராக தன்னலம் கடந்து பிறர் நலத்திற்குக் கையளித்த சூசையப்பரைப் போல நம் செயல்பாடுகள் அமையட்டும். இந்த ஆண்டு கிறிஸ்மஸ் இவ்வாறாக அமையட்டுமே!
வீடுதோறும் குடில்கள் அமைப்பதை விட்டுவிட்டு ஊர்கள் தோறும் இல்லாத ஏழைகளுக்குக் குடிசை அமைப்போமே! ஆடம்பரத்திற்காக உடைகள் எடுப்பதை விட்டுவிட்டு பூமியில் நடமாடும் சில நிர்வாணங்களை மறைப்போமே, கோவில்களையும், கோபுரங்களையும் அலங்கார விளக்கினால் ஒளிரவிடுவதை விட்டுவிட்டு சில குடிசைகளில் ஒளியை ஏற்றுவோமே! பிரியமானவர்களுடன் உணவினை பகிர்வதை விட்டுவிட்டு பரிதாபமான வாழ்க்கையில் இருப்பவர்களோடு உணவினை உண்டு மகிழ்வோமே!
குருந்தகவல்களை அனுப்பி அனுப்பி கொண்டாடுவதை விட்டு விட்டு குழந்தை (இயேசு) தொழிலாளர்களைக் கொண்டாடுவோமே. குடிலில் அசைவற்றுக்கிடக்கும் பாலனைத் தொடத்துடிக்கின்ற உள்ளங்களின் கரங்கள், குப்பையில் கிடக்கும் இயேசுவை தொடவும் இல்லை, தூக்கவும் இல்லை. நமக்கு என்ன விரல்கள் கட்டையா? இல்லையே! ஏனென்றால் விரல்கள் கட்டை என்றால் வியாதி என்று பொருள்.
எப்படி எப்படியோ! இதுவரை கிறிஸ்மஸ் கொண்டாடியிருக்கிறோம். இருக்கட்டும் எப்போதாவது இறைவன் விரும்பும் கிறிஸ்மஸ் கொண்டாடி இருக்கிறோமா? இந்த ஆண்டு கொண்டாடுவோமே அந்தக் கிறிஸ்மஸ் மலரட்டும். அனைவருக்கும் எமது கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.