24
Mar
2018
விஞ்ஞானத்தில் வளர்ந்து விட்டோம், விண்ணுலகைத் தொட்டுவிட்டோம், நாளை ஏழு உலகத்தையும் ஆளப்போகிறோம் என மார்தட்டிக்கொண்டிருக்கும்போது இருக்கின்ற இடங்களையும் இழந்துவிட்டு இடம்பெயர்ந்து அலையப் போகிறோம் என்பதற்கு ஆங்காங்கு அறிகுறிகள் தென்பட்டபிறகும் உணராத மரக்கட்டைகளை உலவிவருவது ஆச்சரியமாக இருக்கிறது.
சந்திரனில் மனிதன் குடியேற சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருக்கிறான் என்ற செய்திகள் பலமுறை நம்மை முட்டி மோதிச்சென்றது. ஆனால் அங்கு போதுமான காற்றும் நீரும் இல்லாததால் தனது இலட்சியங்களைத் தள்ளி வைத்திருக்கிறான் என்று கூறினார்கள். ஆனால் இருக்கிற பூமியில் அதனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கிறோம். என்பதனை இந்த சமூகம் எப்போது உணரப்போகிறது.
டே சிரோ (Day Zero) என்ற வார்த்தை இப்போது சிறகு கட்டிப் பறக்கிறது. அதன் பொருள் என்ன? தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுண் நகரம் ஏப்ரல் (2018) 12 ஆம் நாள் தன்னுடைய நகரின் கடைசிச் சொட்டு நீரை பருக உள்ளது. முதன் முதலாக ஒரு பெரிய நகர் தன்னுடைய நிலையை இழந்து மக்களை வெளியே தள்ளுகிறது. இருக்கின்ற மக்கள் இனிமேல் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலையப்போகிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை இருப்பினும் அந்த மக்களோ அதனை அறிந்த பிறமக்களோ அந்த நிலையை எண்ணி சிறிதும் கலக்கமில்லாமல் வாழ்வதுதான் நெஞ்சை உருத்துகிறது.
இப்போது சமூகத் தளங்களில் பலமுறை பல எச்சரிப்புக்கள் வந்தும் மக்கள் இன்னும் பாராமுகமாகத்தான் இருக்கிறார்கள். காரணம் “வருமுன் காப்போம்” என்று நம் முன்னோர்கள் முன் மதியோடு செயல்பட்டதால் தான் நமது தலைமுறை இப்போது வாழ்கிறது இல்லையென்றால் நாடு எப்போதோ சுடுகாடாக மாறிஇருக்கும். கரிகாலன் தொடங்கி காமராஜர் வரை எதிர்காலத்தைக்கண்முன் கொண்டு அவர்கள் கட்டிவைத்த அணையே இன்று தமக்குத் தண்ணீரைத் தாயப்பாலாகக் கொடுக்கிறது. இல்லையென்றால் அன்னையில்லாத குழந்தைகளாய் நாமும் அனாதைகளாக மாறியிருப்போம்.
கேப்டவுண் நகரில் 4 மல்லியன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் பசுமையாக இருந்த நகரம் இது. பின்பு வெப்பமயமாகுதல், மழையின்மை, அரசின் மெத்தனப்போக்கு, மக்களின் அலட்சியம் இவையெல்லாம் சேர்ந்து இன்றைய மக்களைத் தண்ணீருக்காய் பிச்சையயெடுக்க வைத்துள்ளது.
கேப்டவுணுக்கு நீர் ஆதாரமாக இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (The Waters Loof) அணையின் கொள்ளளவில் 2016 ஆம் ஆண்டில் 13ம% இருந்து தற்போது 10% மாறிவிட்டது. இதற்குத் தண்ணீர் வழங்கும் அணைகள் பல தன் நிலையை இழந்துவிட்டன. இதனைப்பற்றிய விழிப்புணர்வை சமூக ஆர்வலர்கள் அறிந்து எச்சரிக்கை மணி அடித்த போதும் 2007 ஆம் ஆண்டிலிருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்த போதும் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக செயலிழந்து போனது. இவ்வளவு இக்கட்டான நிலை இருந்த போது சமீபத்தில்கூட அங்கு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஏனென்றால் வறுமையிலிருப்பவர்களையும் தேவையில் இருப்பவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் பொழுது போக்கிற்காக மனிதன் செலவழிக்கும் நேரங்களும் பொருட்களும் ஒருவகையான அழிவுகளை ஊக்கப்படுத்துவது போல் உள்ளது.
என்றோ நடக்கப்போகிறது இப்போது நாம் ஏன் வருத்தப்படவேண்டும், என்று கேப்டவுண் மக்கள் எண்ணினார்கள் ஆனால் அது இன்று நடந்துவிட்டது. எங்கோ நடப்பதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம் அது இங்கு நடப்பதற்கு இன்னும் வெகுகாலம் இல்லை. இப்போதே சில பகுதிகளை கிழக்குக் கடற்கரை ஓரமாக. தூத்துக்குடிக்கு வடக்கு சிவகங்கைகக்கு தெற்குபகுதிகள் சில வருடங்களாக குறைந்த மழையே பெற்றுவருகிறது. இந்த நிலையே நீடித்தால் இன்னும் பத்து வருடங்களில் இந்தப்பகுதிகள் மக்கள் வாழத் தகுதியற்ற இடமாகிவிடும். அவ்விடம் பாலைவனமாக மாறும். மக்கள் இடம்பெயர்ந்து உள்நாட்டிலேயே அகதிகளாக உலவவேண்டிவரும். இது அங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல இடங்களில் நிலத்தடி நீர்கள் வற்ற ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் நாம் காணலாம் மரங்கள் பட்டுபோய்விட்டது. தென்னை மரங்கள் செத்துவிட்டது. பனை மரங்கள் அழிந்து வருகிறது. சாலைகளை விரிவுபடுத்துகிறோம் என்று எண்ணற்ற மரங்களை அழித்து விட்டார்கள். நீர் நிலைகளை எல்லாம் அழித்துவிட்டார்கள். நம் முன்னோர்கள் எல்லோரும் ஆறு, ஏரி, குளங்களில் முழ்கி குளித்தவர்கள். ஏரிகள், குளங்கள் மூலமாக எண்ணற்ற இடங்கள் விவசாயமாக நிலங்களாகப் பயன்பட்டுவந்தன. அவை எல்லாம் எங்கே? எங்கே தொலைத்தோம் எப்போது தொலைத்தோம் என்பதனை அறியாமலேயே தொலைத்துவிட்டோம். இனியும் இதனை தேடாது விட்டுவிட்டால் இன்னும்சில காலங்களில் மனிதர்களை இப்பூமியில் தேடவேண்டியது வரும்காலம் வெகுதொலைவில் இல்லை….
.