16

Oct

2011

மனசில பட்டது

திரும்பும் திசையெல்லாம் சொன்னவுடன் புரிந்து கொள்ளும் அளவிற்கு நான் சாதனையாளனல்ல. கலைத்துறையில் தனது திறமையால் பலரைக் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டாரோ, சுப்ரீம் ஸ்டாரோ அல்ல. ஆனால் தெரிந்த இடத்திலும், தெரிந்த மனிதர்கள் மத்தியிலும் பெயரைச் சொன்னால் மறுபடி சொல்லுவதற்கு முன் மனதிற்குள் வந்துவிடும் அளவுக்கு அறிமுகமானவன்.

ஏதாவது ஒரு துறையில் பிறர் எட்ட முடியாத ஒரு சாதனைக் கல்லை நான் சந்தித்து விட வேண்டுமென்றோ! எனக்குள் ஒரு சாதனையை உருவாக்கி அதனை அடைந்து விட்டேனென்றோ! இந்த எழுத்து உலகை நான் எண்ணிக் கொண்டவனல்ல.

எந்தத் துறையில் எவர் தன்னை ஈடுபடுத்திப் பார்த்தாலும் சந்தைக்கு வந்த சரக்கை தனது படிக்கல்லால் எடைபோட்டுப் பார்க்கும் ஒரு கடைக்காரனைப் போல் விமர்சனம் என்ற பெயரில் அதனை அலசிப் பார்க்கும் ஒரு பார்வையையும் இதுவரை நான் பகிர்ந்து கொண்டதில்லை. ஆனால் அதே துறையையோ, அல்லது கலையையோ இன்னொரு முறையில் நாம் இனம் காட்டலாமே என்று அவ்வப்போது நான் எடுக்கும் அவதாரத்தில் ஒன்றே இந்த எழுத்துப் பிரவாகம்.

யாருக்கும் தெரியாத ஒன்றை இந்தப் பூமிக்கு கொண்டு வரும் அறிய முயற்சியாக ஒரு அறிவியல் அறிஞன் போல அல்ல நான். ஆனால், நீங்கள் சொல்ல மறந்த, சொல்லத் தயங்கிய, சின்னக்குழந்தை தனக்குக் கிடைத்த பொருளை அவ்வப்போது தொட்டு இரசித்ததைப் போல உங்களுக்குள், உள்ளுக்குள் அவ்வப்போது அசைபோட்டுப் பார்த்த விசயங்கள் சிலவற்றை நான் அம்பலத்திற்குக் கொஞ்சம் கொண்டு வந்த புதிய முயற்சி இது.

நிலா முற்றத்தில் பாட்டியின் மடியில் படுத்திருக்கும் போது தூங்காமல் இருந்தால்… அந்தக் கதையை இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கலாம்? என்ற ஆதங்கத்தை…

திண்ணை ஓரத்தில் இருந்த அந்தத் தாத்தா சொன்ன விசயத்தை அம்மா அவசரமாகக் கூப்பிடாமல் இருந்தால் இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கலாம்… என்பதனை…

குளத்திற்குக் குளிக்கப் போகும்போது நண்பர்கள் சொல்லிக் கொண்டிருந்த விசயம் முடியுமுன்னே… குளிக்குமிடம் வந்ததால் முடியாமல் போன அந்தச் செய்தியை…

களையெடுக்கும்போது காவேரியக்கா சொன்ன கருத்தை அவள் குழந்தை அழுததால், அதனால் அவள் அவசரமாகப் போய் விட்டதால்…

வில்லுப்பாட்டுக்காரி விக்னேஸ்வரி கதையைச் சொல்ல வருமுன் மழை வந்து கெடுத்ததால்…

விடுமுறை முடிந்ததால் கிராமத்தில் இருக்க முடியாமல் போனதால் அல்லது பணியின் நிமித்தம் கிராமத்தை விட்டு வெளியேறியதால் கேட்க முடியாமல் போன மண்ணின் மறுபக்கங்களை இன்னும் எத்தனையோ செய்திகளை…

அதாவது களையெடுக்கும்போது பாடும் பாட்டில், காலாற நடக்கும்போது சொல்லும் கதையில், இறந்தவர்களுக்கு மாரடிக்கும்போது எழும்பும் சோகத்தில், திருமணத் தம்பதிகளை வாழ்த்தும் வாழ்த்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமத்து மணங்களை நாம் கேட்காமலேயே போய்விடக் கூடாதே… என்று எனக்குள் லேசாகக் கிளறிப் பார்த்த விசயங்களில் ஒன்றை எனது எழுத்துக்கள் சுமந்து வரும் என்ற நம்பிக்கையில் தான் உங்களை சந்திக்க வருகிறேன்.

எனது “நான் பேச நினைப்பதெல்லாம்” என்ற புத்தகத்தில் நடைபோடும் போது உங்களுக்கு நன்றாகப் புரியும். இப்படி எனது ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு எழுத்தும் உங்கள் செல்வம் எனது பாக்கெட்டில்… என்பது போல் உங்கள் உணர்வுகள் என்னுள் ஒட்டியிருக்கும். உங்கள் குழந்தைகளை எனது சந்தோசத்திற்காக சிறிது நேரம் எனது தோளில் வைத்துப் பயணிக்கின்ற ஒரு சுகமான அனுபவம்.

எனது ஒவ்வொரு புத்தகமும் ஒரு கன்னிப்பெண்ணின் பிரசவ வேதனையிலிருந்து வெளிவரும் ஒரு குழந்தையைப் போல எனது கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. இதனை (சு)வாசிக்கின்ற ஒவ்வொருவரும் உங்கள் கதையாக உங்கள் இதயத்தோடு உரசிப் பார்க்கும் போது இவற்றை வடிப்பதில் உங்கள் பங்கும் இருப்பதாக உணர்ந்து உங்களை இதன் இணையாசிரியராகவே எண்ணி மதிக்கின்றேன். இதனை வாசிக்கும் போது என்னை அல்ல. உங்கள் பாதையின் உங்களின் பசுமையான நினைவுகளை நீங்களே ஒருமுறை உற்றுப் பார்ப்பதாக எண்ணிக் கொள்வீர்கள். அந்த நம்பிக்கையோடு உங்கள் பார்வைக்கு இதனைப் பரிமாறியதோடு நம்பிக்கையோடு எனது பயணத்தை தொடர்கிறேன்.
காலமெல்லாம் உங்களோடு.

ARCHIVES