செடிகள் சிதைகின்றன…

Posted on : 17-May-2024

இந்தக் கடிதத்தை நான் எழுதத் தொடங்கும்போது செடிகள் அழுகுகின்றன என எழுத நினைத்தேன். ஆனால் அது எத்தனை பேருக்குத் புரியும்? என்ற சந்தேகம் வந்ததால் செடிகள் சிதைகின்றன என எழுதிவிட்டேன்.

செடிகள் தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கி செத்து விடும். ஆனால் அதே செடிக்கு வளர்க்கிறோம் என நினைத்து அளவிற்கு அதிகமாகத் தண்ணீர் ஊற்றினால் அது அழுகி நாற்றமடித்துச் செத்து சாக்கடையாகிவிடும்.

அதே போல் தான் இப்போது பெற்றோர்களும்! குழந்தைகளும்! பாசம் இல்லாத குழந்தைகள் தான் மூடர்களாக மாறிவிடுவார்கள். அவர்களைக்கூட திருத்தி விடலாம். ஆனால் இன்று பாசம் அதிகமாகி பெற்றோர்களே பிள்ளைகளை மூடர்களாகவும், முடமானவர்களாகவும் மாற்றிவிடுகிறார்கள். மூடர்களுக்குத் தான் என்ன செய்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியாது. முடவர்களுக்குத் தன்னால் எதுவும் செய்ய முடியாது. இப்படி எதிர்காலத்தைச் சிதைத்து வைத்திருக்கிற பெற்றோர்களை எப்படித் திருத்துவது? இங்கு தவறு செய்யாதபடி பிள்ளைகளை அடக்கவா? தவறுக்குக் காரணமான பெற்றோர்களைத் தடுக்கவா? விடைதெரியாமல் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது!

இன்று எல்லோருமே அலைபேசி வைத்திருக்கிறோம். வெளியில் இருந்து பேப்பர் பையன் பேப்பர் போடுவது போல பலரும் நமது அலைபேசியில் குறுஞ்சயெ;திகளைப் போடுகிறார்கள். உலகச் செய்திகளும் வந்து விழுகின்றன. உள்ளூர் குப்பைகளும் வந்து விழுகின்றன. பிறரை அழிக்கும் நச்சுக்களும், இச்சைத் தீர்க்கும் வக்கிரங்களும் வந்து விழாமல் இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் பிறர் பற்ற வைக்கும் நெருப்புகளும் நம் கைக்குள் புகைந்து கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் கண்ட ஒரு குறுஞ்செய்தி சொத்தை எழுதித் தராத பெற்ற தகப்பனை கண்டபடி கன்னத்தில் ஒரு மகன் அறைகின்ற காட்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. எந்த வேலையும் செய்யாமல் இருக்கின்ற ஒரு மகன் 2,00,000 ரூபாயில் செல்போன் வாங்கித் தரச் சொல்லி அடம்பிடித்து அதனை வாங்கியிருக்கிறான். தன் சுதந்திரத்திற்குத் தடையாய் இருந்த கணவனை கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டிவிடுகிறாள் மனைவி.

இப்படிப் பல செய்திகள் பல காட்சிகள் நாளும் இங்கு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன? நமக்குக் காதலிக்கத் தெரிகிறது. கணவன் மனைவியாக முடிகிறது. பொறுப்புள்ள பெற்றோர்களாக இங்கு நாம் இல்லை. நாம் பொறுப்புகளை பிறரது வெறுப்புகளாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விதைத்து விட்டு ஓடிவிடும் விவசாயியாக இருந்தால் எப்படிப் பயனை எதிர்பார்க்க முடியும்? பயிர்கள் பாழாகத் தானே செய்யும்!

எல்லா மனிதர்களும் அளவிற்கு அதிகமாக ஆசைப்படுகிறோம். இதனால் அதிகமாகப் பொருளை ஈட்டுவதற்காக கிடைக்கிற நேரத்தில் மனைவி மக்களோடு செலவழிப்பதை விட பணம், பணம் என்று அலைகிறோம். அதன்பிறகு கிடைக்கும் சிறது நேரத்திலும் மனைவி, மக்கள், அன்பை அனுபவிக்கத் துடிக்கிறோம். இதனால் அவர்களுக்குப் பொருள் வாங்கிக் கொடுப்பது அவர்கள் நினைத்தது போல் நடப்பது என நம்மை அறியாமலேயே அவர்களது வாழ்க்கைக்குக் குழிபறிக்கிறோம். இந்த போதைக்கு இப்போது அடிமையாகக் கிடக்கிறோம்.

நம் அன்பை முழுவதும் குறுகிய நேரத்தில் பறிக்கத் துடிக்கின்ற பெற்றோர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு தனக்கு பிடித்ததை குழந்தைகள் மிரட்டி அடம்பிடித்து பெற்றோர்களிடமிருந்து பறித்துக் கொள்கின்றன. பிள்ளைகளுக்கு தன் நிலைமை, வருமானம், குடும்பக் கௌரவம் இவற்றைக் கற்றுக் கொடுக்க பெற்றோர்கள் மறந்து, அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்றும் இப்படிக் கொடுப்பதால் தன்னை அறியாமலேயே குழந்தைகளை தற்கொலை செய்யத் தூண்டுகிறார்கள். தன்னம்பிக்கையை இழக்க வைக்கிறார்கள்.

கற்றுக் கொடுக்க வேண்டிய பெற்றோர்களே பிள்ளைகளுக்குத் தவறான பாதைகளைக் காட்டிவிடுவதால் குழந்தைகள் தறுதலையாக மாறுகின்றது. கேட்டது கிடைக்கும் என்றால் தகுதியில்லாமல் கேட்டது கிடைத்தால் அது கீழ் தரமானது தானே! குழந்தைகள் மன நிலையும் கேட்டது கிடைக்க வேண்டும் இல்லையென்றால் அது என்ன வேண்டுமென்றாலும் செய்யும்;! என்பதும் இழிநிலை தானே! இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?

ஒரு குழந்தை எதைக் கேட்டாலும்; கொடுத்துவிட்டால் அதற்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்? கேட்டபோது நீங்கள் கொடுத்துப் பழக்கிவிட்டால்! நீங்கள் கொடுக்காவிட்டால் அது உங்கள் பேச்சைக் கேட்பதில்லை என்ற முடிவுக்கு வரும். உங்களை உதாசினப் படுத்திவிடும் அது உங்களிடம் இருந்தால் எடுத்துவிடும் தடுத்தால் உங்கள் உயிரையும் பறித்துவிடும்.

ஒரு பெண் குழந்தை நினைத்ததை எல்லாம் கொடுத்து வளர்த்தீர்கள் என்றால்? கணவன் வீட்டில் அதைத் தடுக்கும்போது கணவனைப் பிரியும்! அல்லது கணவன் உயிர் பிரியும்! உங்கள் தேவையை மறந்து மறைத்து உங்கள் குழந்தை தேவையை மட்டுமே நிறைவேற்றினால் அது உங்களுக்கு என்ன தேவை? என்பதே தெரியாமல் போகும்! நீங்களும் அதற்குத் தேவையில்லாமல் போகும்!

நீங்கள் உங்கள் குழந்தைகள் சந்தோசத்திற்காக அவர்கள் தவறுகளை மன்னிக்கிறீர்கள் அதனைத் திருத்தாமல் விட்டுவிடுகிறீர்கள்! ஆனால் உங்கள் குழந்தைக்கு வளர்ச்சியை ஊட்டாமல் அதன் களைகளைக் களையாமல் பயிர்களை எப்படிப் பயனுள்ள விதத்தில் வளர்க்க முடியும்? இதனால் அவனது தவறுகளைத் திருத்த நினைக்கிற ஆசிரியர்கள்! காவலர்கள்! சமுதாயம் எல்லோருமே அவனுக்கு நீங்கள் எதிரியாய் உருவாக்கி வைத்து இருக்கிறீர்கள்?

குழந்தையைப் பெற்றுக்கொள்ள வாடகைத்தாய்? வளர்க்க ஆயாக்கள், உருவாக்க ஆசிரியர்கள், கண்டிக்கக் காவல்துறை, வேலை கிடைக்க அவன் அதிக மார்க் வாங்க வேண்டும் இதற்கு அவன் டியுசன் போக வேண்டும். சரி! நீங்க என்ன செய்யப் போகிறீர்கள்? பிள்ளை பெற்கத் தகுதியில்லாதவன் அல்ல! பிள்ளையை வளர்க்கத் தவறியவனே இங்கு ஆண்மையற்றவன். இதை எதுவுமே செய்யாமல் கல்யாணம் மட்டும்; பண்ண வேண்டும் என நினைத்தால்? அது உங்கள் இச்சையைத் தீர்க்கவா? இதற்கு எதற்கு மனைவி வேண்டும்? ஒரு தாசி போதுமே!

அன்பு மிக்கவர்களே பிள்ளையை பெற்றதால் நீங்கள் பெற்றோர்கள் அல்ல! அப்படியென்றால் கன்னித் தெரசாள் எப்படி அன்னைத் தெரசாள் ஆனாள்? இன்று குழந்தை இல்லாத பல தம்பதிகள் பல குழந்தைகள் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டிருக்கிறார்களே அவர்கள் பெற்றோர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட! ஆனால் அளவோடு பிள்ளை பெற்று அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுத்து குடும்பத்தையும், சமுதாயத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருக்கிற கொடியவர்களால் நமது வாழ்க்கை மெல்ல மெல்ல நரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

பெற்றோர்களே ஆசைகளைத் குறையுங்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுங்கள். அன்பை ஒரு அடையாளமாகக் கொடுக்காதீர்கள், அரவணைப்பாய் கொடுங்கள், உடனிருங்கள், உள்ளதைச் சொல்லுங்கள், உண்மையாய் வாழுங்கள், பாசமாய் வளர்ப்பதை விட பக்குவமாய், வளருங்கள் அது சாகும்வரை உங்கள் பக்கத்திலேயே இருக்கும்!

“குழந்தைகளைப் பெற்றதால்
பெற்றோர்கள் அல்ல – நல்ல
குணத்தோடு வளர்க்காவிடில்
நீங்கள் குட்டிச் சுவர்களே!”