22

Mar

2024

அன்புள்ள எழுத்தாளனுக்கு….

காலம் காலமாக கதை சொல்வார்கள் ஒழுக்கம் உள்ளவன் கண்ணை மூடிக் கடவுளை வேண்டுவான். கடவுள் அவன் கண்முன் ஒருவரம் தருவான். அந்த வரத்தினால் தான் உயர்ந்து பிறரை உயர்த்திப் பிடிப்பான். மணிமேகலை கையில் கிடைத்த அட்சய பாத்திரம் கூட இறைவன் ஏழைகளுக்காகக் கொடுத்தது. கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள் கல்வி என்பது கண்ணை மூடிப் பெறுவதல்ல கண்ணைத் திறந்து பெறுவது பிறர் கண்களைத் திறக்கப் பெறுவது.

இந்தக் கல்வி போதனை மூலம் பகிரப்பட்டது, பரவப்பட்டது. ஆதிக்காலத்தில் போதனை என்பது அருகிலிருப்பவர்களுக்கும் அப்போது வாழ்பவர்களுக்கு மட்டுமே பயன்பட்டது எப்போதும் வாழ்பவர்கள் எப்போதும் பயன்படுவதற்காக எழுந்து வந்தது தான் எழுத்து. எழுத்து என்பது எண்ணங்களைத் தெரிவிப்பதற்காக எழுதப்பட்டது. உங்களைப் பாராட்ட வேண்டுமா? உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமா? புதியவற்றைப் புகுத்த வேண்டுமா? பழையவற்றை விளக்க வேண்டுமா? வரலாறு வடிக்க வேண்டுமா? வனப்புகளைச் சொல்ல வேண்டுமா? இலக்கணம் தெரிய வேண்டுமா? இலக்கியம் புரிய வேண்டுமா? அனைத்திற்குமே எழுத்தாக எழுந்து வந்த இறைவன் தான் இது.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்பார்கள் என்னைப் பொறுத்த மட்டில் எண்ணமும் எழுத்தும் தான் பூமிக்குப் புதுவடிவம் கொடுத்துக் கொண்டு வருகிறது. புத்தன் இயேசுவின் போதனைகள் பூமியைப் புரட்டிப் போட்டன அதனை எழுதி வைத்ததால் தான் அவை இன்னும் உச்சரிக்கப்படுகின்றன. தவறுகிறவர்களுக்கு எச்சரிக்கப்படுகின்றன. சாக்ரடீஸ் வார்த்தைகள் இன்னும் சாகாமல் இருக்கிறது என்றால் யாரோ அதனை எழுதி வைத்ததால் தானே! திருவள்ளுவரை நாம் தேடுவது கூட அவர் எழுதி வைத்த இரண்டு வரிகள் தானே! இன்று தமிழனின் வாழ்விற்கு வழியைக் காட்டிக் கொண்டு நிற்பது அதுதானே!

எழுத்து என்பது உயிரெழுத்தையும், மெய் எழுத்தையும் ஒன்றாய்ச் சேர்ப்பதல்ல. ஒவ்வொரு உயிரிலும் உள்ள மெய்தான் இந்த உலகில் உலவிக் கொண்டிருக்கிறது. இதனால்தான் பாரதியும், செல்லியும், சேக்ஸ்பியரும் இன்னும் உலகில் பவனி வருகிறார்கள். ஏனென்றால் அவர்களுடைய வரிகள் தானே நம்மை வசியம் செய்தது. அண்ணா கொண்டு வந்த ஆட்சி மாற்றம், கலைஞரின் கேள்விகள்! தமிழனை உறக்கத்திலிருந்து உசிப்பிவிட்டன அல்லாவா? முத்தமிழையும் மூவுலகிற்கும் கொண்டு சென்றது எழுத்துக்கள் தானே!

நாட்டு அரசர்களை நல்ல விதமாக ஆட்சி செய்ய வைத்தது பாட்டு அரசர்கள் தானே! அவர்கள் கொண்டு சென்ற தூது ஓலைகள் தானே பல்வேறு அழிவுகளை அப்புறப்படுத்தியது. பல்வேறு நேரங்களில் அரியணை ஏற்றியதே பாட்டுத் தலைவனின் வரிகள் தானே “அச்சம் என்பது மடமையடா” என்ற வரிகள் இளைஞனின் எழுச்சிக் கீதமானது “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்? என்ற வரிகள் அவரை நாடாள வைத்தது’ “ஒருவன் ஒருவன் முதலாளி” என்பது சமத்துவத்தை எப்படிச் சரியாய் சொல்கிறது.

எழுத்து என்பது பாட்டுமட்டுமல்ல நக்கீரன் சிவனைக்கேள்வி கேட்டது போல இப்போது நாடாளுகிறவர்களைப் பல பத்திரிக்கைகள் கேள்வி கேட்டுக் கொண்டு தானே இருக்கிறது! பல செய்திகள் பத்திரிக்கை வழியாகப் பாமரர்களுக்குப் பகிரப்படுவதால் இன்று சில கேஸ்கள் தூசி தட்டப்படுகிறது. பல்வேறு பெரியவர்களின் இருட்டுப் பக்கங்களை வெளிச்சத்திற்குச் கொண்டு வருவதும் கருப்புப் பணங்களை வெளியே கொண்டு வருவதும் எழுத்துக்கள் தானே!

அநீதிக்கு எதிராக, ஆட்சியாளர்களுக்கு எதிராக தன்னுடைய எழுத்துக்கு உயிர் கொடுத்தவர்கள் தன் உயிரை இழந்திருக்கிறார்கள். உயிரைப் பணயம் வைத்து எழுதிக் கொண்டு இருப்பவர்களும் சாவை தன் சட்டப்பைக்குள் வைத்து விட்டுதான் பையிலிருந்து பேனாவை எடுத்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் கருப்பு மையால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் அதனை முடிக்கு முன்னே அவர்கள் எழுதுகின்ற பேப்பரில் சிவப்பு மை சிந்தப்படலாம் அது அவர்கள் இரத்தமாகக் கூட இருக்கலாம்.

இன்றைய சமுதாயமும் சரி, இளைய சமுதாயமும் சரி பாதை தெரியாமல் பாதாளச் சாக்கடையில் கிடக்கிறது சந்தானம் என்று சாக்கடையைப் பூசிக் கொண்டு திரிகிறது அறிவுப் பசியின் இரப்பையை அப்புறப்படுத்திவிட்டு காமத்திற்குக் கால் முளைத்து கண்டபடி போய் கொண்டிருக்கிறது. நல்ல புத்தகங்கள் எல்லாம் நூலகத்தில் செல்லரிக்கப்பட்டுவிட்டது காரணம் எங்கள் குழந்தைகளை ஊநடட அரித்துவிட்டது. அது புற்று நோயை விட பெரிய பற்று நோயாக மாறி எங்கள் குழந்தைகளை குணப்படுத்த முடியாத படி மூளைச்சாவு செய்து எங்கள் முன்னால் நடைபிணமாக நடந்து கொண்டிருக்கிறது.

எங்கள் குழந்தைகளை நாங்களே இளம் வயதிலேயே ஆங்கில ஓநாயிடம் அடகு வைத்துவிட்டோம்! ஒரு தமிழனுக்குப் பிறந்த எங்கள் தவப்புதல்வனை ஆங்கிலேயினின் புதல்வனாக அடையாளப்படுத்தத் துடிக்கிறோம். இதனால் இந்தத் தலைமுறைக்கு எழுத்தும் புரியப் போவதில்லை எழுத்தாளனும் தெரியப் போவதில்லை எழுத்துக்கூட்டிப் படிக்கும் இவன் எங்கே கருத்தைக் கூட்டிக் கவனிக்கப் போகிறான்? இவனிடம் கம்பன், இளங்கோ என்றால் கண்டதே இல்லை! என்று கை விரிக்கப் போகிறான்.

கல்வி கடைச்சரக்காகிவிட்டது இப்போது பணம் வைத்திருப்பாவர்களின் பக்கத்திலே கலைமகள் கண்ணயர்ந்து கொண்டு இருக்கிறாள். இதனால் எழுதுபவர்களும் தன்னுடைய வயிற்றை நிரப்பிக் கொள்ள, வசதியைப் பெருக்கிக் கொள்ள கொடியவனைக் கொடை வள்ளல் என்றும், பொறுக்கியை பொக்கிசம் என்றும் அயோக்கியனை அவதாரம் என்றும் பேனாவைப் பிழையாக எழுதப் பழக்கப்படுத்துகிறார்கள் இந்தப் பிதற்றல்காரர்கள். கேட்டால் பிழைக்கத் தெரிந்தவர்கள் என்பார்கள்.

இன்னும் உண்மையை உரைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்; தொடர்ந்து உங்கள் தொண்டு தொடரட்டும் இன்னும் எழுத்தாளராய் உருவாகுங்கள், சமுதாயத்தைச் சரியாய் கணிப்பவனும், சமுதாயத்தின் மீது சமயம் வரும் போதெல்லாம் கோபத்தைக் கொப்பளிப்பவனும் எழுதுகோலை ஏந்தட்டும்! வார்த்தையை ஒடித்துப்போட்டு கவிதை எழுதுவது அல்ல எழுத்தாளன் வேலை? வாழ்க்கையை ஒடித்துப்போட்டவர்களின் முகமாய் முறையிடுவது ஆகும். பெண்களை வேலைக்காரிகளாய் வைத்திருப்பவனின் பேனாக்களின் முனைகளை முறித்துவிடுங்கள். தனக்குத் தேவையானதைத் தேடிக்கொள்ள தேவைப்பட்டால் வேட்டையாடும் விரல்களை ஒடித்துவிடுங்கள் அடுத்தவர்களை வசியம் செய்து தனது இருட்டுக்குள் வைத்துக்கொள்ளத் துடிக்கும் பொறுக்கிகளின் பேனாவை அல்ல, அவன் பெயரே இல்லாதபடி அழித்துவிடுங்கள்.

நீங்களும் எழுத்தாளராகலாம் சமுதாயத்தை சரியாகக் கவனியுங்கள் அநீதியை அப்புறப்படுத்துங்கள் கோபப்படுங்கள் அதனைத் துணிவோடு எதிர்க்கத் திடம் கொள்ளுங்கள். அப்போது உங்கள் பேனாவை எடுங்கள் நீங்கள் எடுக்கின்ற அந்தப்போனா. இந்த சமுதாயத்திற்கு விடிவு கொண்டு வரும் அநீதிக்கு ஒரு முடிவு கொண்டுவரும.; என்று நம்புங்கள். ஒரு ஆசிரியரின் பேனாவிலும், ஒரு நீதிபதியின் பேனாவிலும், ஒரு எழுத்தாளனின் பேனாவிலும் இந்த சமுதாயத்தை சரிசெய்கின்ற எழுத்தும் வித்தைகள் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தினால் இங்கு கையெழுத்தல்ல பலரின் தலையெழுத்துக்களே இங்கு மாறும்.

பிறரைத் திருத்துவதற்காகச் சிவப்பு மை எடுத்தவர்களே இந்தச் சமுதாயத்தைத் திருத்த சிவக்கட்டும் உங்கள் கரங்கள்! கண்கள்! எழுத்துக்கள்.

“என் பேனாவே … உன்
மை தீர்ந்துவிடலாம் – நீ
நேர்மையை மட்டும்
நிறுத்திவிடாதே? …”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES