28

Mar

2024

தூண்டில்காரன்…

எப்பொழுதும் விழிப்பாய் இருங்கள் என்பது மானிடச் சமுதாயத்தில் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிற தாரகமந்திரம் கடுகளவும் கண்ணயர்ந்து விடக் கூடாது என்பதற்காக கடவுள், மீனுக்கு இமையே இல்லாமல் படைத்தார். ஆனால் அவற்றைப் பிடிக்கத்தான் அதிகமாக தூண்டில்களும், வலைகளும் பின்னப்படுகின்றன. இரண்டும் பிறருக்கு ஆசைகாட்டி மோசம் செய்வது என்பார்கள். ஆசையைத் தூண்டும்போது அதனை நாம் தாண்டிவிட்டால் மோசத்தில் நாம் மூழ்கிவிட வேண்டியது இருக்காது.

எல்லாக் காலத்திலும் எல்லோரையும் சுற்றி தூண்டில் போடப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அதில் பலரும் பல சூழ்நிலைகளில் மாட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். காரணம் என்ன? ஆசைதான் காரணம். விழிப்புணர்வு இன்மை, உழைக்காமல் ஆதாயம் தேடுவது, ஆடம்பரத்தை அனுபவிக்கத் துடிப்பது, அறியாமை போன்ற காரணங்களினால் தான் தூண்டிலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம். விழிப்புணர்வோடு இருந்தாலும் சில சமயங்களில் ஏற்படுகின்ற சபலப் புத்தியால் நாம் சங்கடத்தில் மாட்டிக் கொள்கிறோம்.

இன்று சிறுகுழந்தைகள் சிக்கித் தவிப்பது தூண்டிலில் அல்ல, வலையில். காரணம் அலைபேசி வந்து அவர்களை ஆக்கிரமித்திருக்கிறது. இனிமேல் அவர்கள் எழுந்திருப்பது கடினம். ஆனால் இந்த வலைகளை விரித்தது அவர்களது பெற்றோர்கள் தான். இளம்பெண்கள் என்றால் கேட்க வேண்டாம். அவர்களை அனுபவிக்கத் துடிக்கிற அத்தனை ஆண்களும், தூண்டிலும், வலையும் தூக்கிக் கொண்டுதான் திரிகிறார்கள். காதல் தூண்டிகள், வேலைத் தூண்டில்கள் சினிமாவில் நடிக்க வைக்கிறேன். சிம்மாசனத்தில் அமர வைக்கிறேன். அரசியலில் அதிகாரம் தருகிறேன். அதிகாரியாய் நியமிக்கப் போகிறேன். என்றவுடன் பெண்ணின் மனதிற்கு சிறகு முளைக்கும் ஆசை அவளை மூடனாக்கும், முடமாக்கும். பிறகு அவள் சக்கையாய் பிழியப்பட்டு வீதியில் கொட்டப்படும் போதுதான். அத்தனையும் தூண்டில்கள் அகப்பட்டு முழிக்கிறேன் என்பது புரிய வரும்.

திடிரென்று உங்கள் அலைபேசியில் ஒரு செய்தி வரும் நீங்கள் வெற்றியாளர். உங்களுக்கு ஒரு பரிசு கிடைக்கப்போகிறது. அதற்கு முதலில் கொஞ்சம் பணம் கட்டுங்கள் என்றவுடன் ஆகா… எவ்வளவு பெரிய தொகை வரப்போகிறது நினைத்து கடைசியில் தானே மாட்டிக் கொண்டு வெளியே வரமுடியாமல் விரக்தி அடைந்தவர்கள் எத்தனைபேர்?

கண்ணிலே தெரியாத ஒருவன் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டு வருவான். இவன் யாரு? இவன் எதற்கு நம்மைக் கும்பிடுகிறான். என்று சிந்திப்பதற்கு முன்னால், பையில் பணத்தை வைத்துவிட்டு அண்ணன் செயித்தபிறகு அத்தனைக்கும் நீதான் அதிபதி என்று கூறிவிட்டு அவன் வெற்றியடைந்த பிறகு வேட்டியைக் கூட உருவிக்கொண்டு போயிருப்பான். அப்போதுதான் நமக்குப் புரியும். அவன் ஓட்டுக்குக் கொடுத்த நோட்டுத்தான் நம் வாழ்க்கைக்கு வைத்து வேட்டு…

கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கண்கவர் கட்டிடங்கள் கலர் கலரான வண்ண உடைகளுடன் ஆங்கிலம் கற்றுவிட்டால் அகில உலகத்தையும் நீங்கள் தான் ஆளப்போகிறீர்கள்! என்ற எண்ணத்தை விதைத்து அக்குழந்தைக்குத் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் புரியாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளிக்கூடமே பாகற்காயாய் கசந்து பள்ளியை விட்டு நின்று வருகிற நிலையும், வகுப்புகள் உயர உயர பள்ளிக் கட்டணம் கட்டக்கூட முடியாமல் விழிபிதுங்கி நிற்கும் பெற்றோர்கள் ஒருபுறம். ஆக மொத்தத்தில் ஒருவனின் கல்விக்காக ஒட்டுமொத்தக் குடும்பமே கடனின் மூழ்கி கரையேறாமல் தவிக்கும் காட்சிகளும் உண்டு.

படங்களில் எல்லாம் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஏற்றது மது என்று, அதனை குடித்து ஆட்டம் போடுவதை இரசிக்க வைத்து நடிகன் குடிப்பதை இரசிகனைக் குடிக்க வைத்து காட்டில் பரவிய தீயைப் போல இன்று நாட்டில் சாலைகளில் எல்லாம் சீமைச் சாராயக் கடைகளைத் திறந்து வைத்து குடிமகன்கள் எல்லாம் போதையில் தடுமாறி நிலை மறந்து தன் நினைவிழந்து நடைபிணமாய் நடமாடுவதை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.

போதை அரக்கனின் பிடியிலிருந்து விடுபடுவதற்குள் போதை அசூரன் புறப்பட்டு வந்து, பள்ளி, கல்லூரி என்றெல்லாம் பார்க்காமல் அவன் பாசறை அமைத்து இளைய சமுதாயத்தை திருடி தன் இறக்கைக்குள் அடைத்து வைத்திருக்கிறான். இதனால் இளைய சமுதாயம் போதை இல்லாமல் பொழுதைக் கழிக்க முடியவில்லை. கிடைக்காவிட்டால் திருடுகிறான். வழிப்பறி, குழந்தை கடத்தல் என்று அலைபவன் கிடைத்து விட்டால் ஆண் என்றால் அத்தனைபேரையும் நாசப்படுத்துகிறான். பூ, பிஞ்சு, காய் என்று கண்ணியம் இல்லாமல் கண்டதையும் காலி செய்து விடுகிறான். பெண் என்றால் இருப்பதை மறந்து இருந்ததைத் துறந்து இழக்கக் கூடாததை எல்லாம் இழந்து விடுகிறாள். இப்படி எத்தனை கொடுமைகள்!

இரம்மி விளையாட்டு வாழ்க்கையை விளையாடி விடுகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் நம்மை தொலைந்து போக வைத்து விடுகிறது. கவர்ச்சி விளம்பரங்கள் கலாச்சாரத்தைச் சீரழிக்கிறது. வெளிநாட்டு வேலைகள் பல விபச்சாரிகளை உருவாக்குகிறது. சினிமாக் கவர்ச்சிகள் பல சீரழிவுகளைத் தருகிறது. சாதிப் பற்றுகள் நம்மை சகதியிலும் சாக்கடையில் தள்ளி விடுகிறது. மதப்பிடிப்புகள் பலரை அடிமையாக்கி கடவுள் பெயரால் பல கயமைத்தனங்களை அரங்கேற்றுகிறது. ஏழைகளை அடக்கி எளியவர்களை ஒடுக்கி அநீதிகளை இழைத்து அப்பாவிகளை அழித்து ஆடுகின்ற நாடகங்களைப் பார்க்கும்போது இயேசுவே சாட்டையோடு மீண்டும் கோவிலுக்கு வா! இராமா வில்லோடு வா! முருகா ஈட்டியோடு வா! கண்ணா சங்கு சக்கரத்தோடு வா! சாமியார்கள் ஆடுகின்ற சதுரங்க ஆட்டத்தை சங்கை நெறிக்க வா! மதவாதிகள் செய்கின்ற அயோக்கியத்தனத்தை அப்புறப்டுத்த வா! உனக்குக் கோயில் கட்டுவதாகக் கொள்ளையடிப்பவர்களுக்கு கல்லறை கட்ட வா! என்று கத்தவும், கதறவும் தோன்றுகிறது.

ஏமாளிகள் இருக்கிற வரையும் ஏமாற்றுக் காரர்கள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். உழைப்பில் கிடைக்காத எதுவும் நம்மை உயர்த்திவிடாது. ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் அதுதான் தூண்டியின் தோரணம், புழுக்கள் அங்கே நெளிந்து கொண்டு தான் இருக்கும். சிலரது பேச்சுகள், சிலரது இரக்கங்கள், சிலரது பாசாங்கு, சிலரது பசப்பு வார்த்தைகள் கண்ணுக்குத் தெரியாத தூண்டில்களாக நம்மை நோக்கிவரும் கண்டுகொள்ளுங்கள். அதிகமான பெண்கள் அன்பினால் தான் வீழ்த்தப்பட்டார்கள், வீழ்த்தப்படுகிறார்கள் ஜாக்கிரதை.

“சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்பார்கள் காரணம் இல்லாமல் காரியம் நடப்பது எதற்கு? என்று யோசியுங்கள். அதே வேளையில் எதையும் சந்தேகத்திற்கு உட்படுத்தினால் சீதையைப் போல தினமும் நாம் தீக்குளித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். கவர்ச்சிகள் கண்முன் வந்து கொண்டே தான் இருக்கும். கவனம் தேவை. மதத்தில் மயங்காதீர்கள் சாதியில் சங்கமிக்காதீர்கள். ஆடம்பரத்திற்கு ஆசைப்படாதீர்கள். தகுதிக்கு மீறி வாழத்துடிக்காதீர்கள். அதிர்ஷ்டம், நன்கொடை, நல்ல நேரத்தில் நம்பிக்கை வைக்காதீர்கள். நம் உழைப்பு நமக்குப் போதும் அதற்குமேல் எதுவும் வேண்டாம். தேவைக்கு அதிகமாக யாருடைய அன்பையும் திருட வேண்டாம் ஆனாலும் நமது அன்பால் நம்மை ஏமாற்றுபவர்களையும் நம்புங்கள்! அவர்கள் தமக்குத் தாமே…. சவக்குழி வெட்டிக்கொள்வார்கள். அன்பு அடிமையாக்கலாம். ஆனால் நம்மை அழித்து விடாது! நம்புங்கள் அன்பு செய்யுங்கள்.

“எனக்குப் பிடித்தது
என்னுடையது
மட்டும் தான்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES