26
Oct
2025

கருணையும், அன்பும், கடவுளின் வடிவங்கள் என்று வேதங்கள் கூறுகிறது. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் மனப்பான்மையே மனிதாபிமானம் என்று வாழ்வியல் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் அனுதாபங்கள் மானிடச் சமூகத்தை நாசமாக்குகிறது.
சமுதாயத்தில் ஒரு காலத்தில் யார் வீட்டுக் குழந்தை கீழே விழுந்தாலும் ஊரே ஒடிவந்து உதவிசெய்யும். யார் வீட்டில் இறப்பு இருந்தாலும் ஊரே நின்று அழுது நல்லடக்கம் செய்யும். யார் விபத்தில் சிக்கினாலும் உடனே உறவுக்குத் தகவல் கொடுப்பதும், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதும் இன்றும் நடைமுறையில் இருந்தாலும் அது அங்கு, இங்கு, எங்கோ ஒரு மூலையில் எப்போதோ நடந்து கொண்டிருக்கிறது. அனுதின வாழ்க்கையில் அனுதாபங்கள் மக்கள் மனங்களில் மறந்து போனது. மக்கள் மனங்களும் மறத்துப் போனது.
இது ஏதோ இப்போது நடைபெறும் கலாச்சாரச் சீரழிவுகளால் வந்தது அல்ல. நமது கட்டமைப்புகளே நமது மனிதாபிமானத்தை மண்ணில் புதைத்து விட்டது. ஆனால் இன்றும் திரைப்படத்திலும் தொலைக் காட்சியிலும் வருகின்ற சோகக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் வடிக்கிற கூட்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல், நடுரோட்டில் ஒருவனை ஒரு கும்பலே விரட்டி விரட்டி வெட்டிக் கொண்டிருந்தாலும் வீட்டுக் கதவை அடைத்துக் கொண்டு தன்னை மட்டும் பாதுகாத்துக் கொள்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

காரணம் என்ன? மனிதாபிமானம் என்பது என்ன? அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்வதும் மதிப்பளிப்பதும்தானே! இங்கு எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம். இந்த அனுதாபங்கள்தானே இன்னும் மனிதச் சங்கிலியைத் துருப்பிடிக்காமல் வைத்திருக்கிறது. அது ஏன் காலப்போக்கில் நம்மிடமிருந்து காணாமல் போய் விட்டது? மனிதனின் சுயநலமும் சோம்பேறித்தனமும்தான் நம்மை இப்படி நாசமாக்கியிருக்கிறது.
எல்லோர் வீடும் சுத்தமாக இருக்க வேண்டும் என்றுதானே நினைப்போம்! ஏன் பலரும் குப்பைகைளை ரோட்டில் கொட்டுகிறோம்? பயன்படாத பொருட்களை எல்லாம் ரோட்டிலும், பொது வெளியிலும் குற்றப்பழிவுணர்வின்றி தூக்கி எறிகிறோமே! இதற்கு காரணம் என்ன? இதற்கு என்று மாநகராட்சியிலிருந்து ஒருவர் வேலை செய்வார் அவர்தான் இதனைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது. அதையே நாம் செய்தால் அவருக்கு வேலை மிச்சம்தானே! அதற்கு நமக்கு மனமில்லை.

நகரத்திலோ, தெருக்களிலோ, சாக்கடை நீர் ஒடிக் கொண்டிருந்தால் அதுவும் நமது வேலை இல்லை. அதற்கு என்று சிலர் இருக்கிறார்கள். அவர்கள்தான் இதனை வந்து பார்க்க வேண்டும் என்பதுதானே. அவர்களும் மனிதர்கள் தானே? அதனை நாம் புரியவில்லையா! இங்கு சாலைகளில் குண்டும் குழியுமாக இருந்தாலும் கண்டுகொள்ளாமல் செல்வதற்கு காரணம் என்ன? அவர்கள் மனதும் குழி விழுந்து போய்விட்டது. இவர்களையெல்லாம் குழிக்குள்தான் வைக்க வேண்டும்.
ஒரு உணவு விடுதிக்கு நாம் உணவு உண்ணச் செல்கிறோம் நாம் சாப்பிட்ட மேசை எப்படி இருக்கும் அதனை எவ்வளவு அசிங்கப் படுத்தி வைத்திருப்போம்! காரணம் அதனை சுத்தம் செய்வதற்கென ஆட்கள் இருப்பார்கள் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் அவர்களும் மனிதர்கள் தானே! நமக்கு உணவு பரிமாறுகிறவர்களை எத்தனை முறை அலைய வைப்போம் காரணம் அவர்கள் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது அவர்களது கடமை. நாம் டீ, காபி குடிப்போம். அந்தக் கிளாசை அவர்கள்தான் கழுவ வேண்டும். அதற்குத்தான் அவர்களை வேலைக்கு வைத்திருக்கிறோம்! அதற்கும் சேர்த்துத்தானே காசு கொடுக்கிறோம் இதன் பெயர்தான் மனிதநேயமா? மனிதாபிமானமா!
அழகாகப் படம் வரைந்த சுவர்களில் எத்தனைபேர் எச்சிலைத் துப்புகிறோம். இயற்கை உபாதைகளை எத்தனைபேர் கழிக்கிறோம். சுவரொட்டிகளை ஒட்டி சுத்தமான சுவர்களையெல்லாம் அசிங்கப்படுத்துகிறோமே! இதற்குப் பெயர்தான் என்ன? இதனை எத்தனைபேர் உழைத்து சுத்தம் செய்திருப்பார்கள்? எவ்வளவு பணம் செலவழித்திருப்பார்கள்? என்று எண்ணிப்பார்த்தோமா?

இது எங்கிருந்து உருவாகிறது? யோசித்துப் பாருங்கள் வீட்டிலிருந்து தானே உருவாகிறது! எந்தப் பொருள் எங்கு கிடந்தாலும் அதனையெல்லாம் சுத்தம் செய்து அந்தந்த இடத்தில் அடுக்கி வைப்பதற்கு அம்மா இருக்கிறாள் என்ற எண்ணத்தை யார் கொண்டு வந்தது? வீடு பெருக்க வேண்டுமென்றால்? சுத்தம் செய்ய வேண்டுமென்றால் விளக்குமாற்றை எடுத்து பெண் குழந்தைகளிடம் கொடுத்தது யார் செய்த அயோக்கியத்தனம்? ஆண்பிள்ளைகளை செய்யப் பயிற்சி கொடுக்காமல் விட்டது யார் குற்றம்? நான் சமைக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனக்கு சமைக்க எவளோ ஒருத்தி வருவாள்! என்று ஒவ்வொரு ஆண்குழந்தைகளுக்கு விசத்தை விதைத்தது யார்?
ஒரு நெருக்கடியான இடத்தில் வாகனத்தில் போகும் போது யாரைப் பற்றியும் கவலைப்படாமல் முந்திக் கொண்டு ஒட நினைக்கிறோமே இது என்ன குணம்? பேருந்து வந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு ஓடி முதல் இடத்தைப் பிடிக்க நினைக்கிறோமே! அப்போது எவன் நின்று கொண்டு வந்தாலும் எனக்கு என்ன? என்று நினைக்கின்ற குணம், மழைக்காலத்தில் வாகனத்தில் போகும்போது வாகனத்தில் யார் மீது தண்ணீர் தெரித்தாலும் எனக்குக் கவலை இல்லை என்று நினைத்தால் இதெல்லாம் பிற மனிதர்கள் மீது அக்கரை இல்லை என்பதன் அடையாளம்தானே! நம்மிடம் இருக்கின்ற வாகனங்களை விற்பனை செய்ய எத்தனை தில்லாலங்கடி வேலைகளைச் செய்து அடுத்தவர்கள் தலையில் கட்டுகிறோம். அவர்களே புதிய வாகனம் வாங்க இயலாமல் கஷ்டப்பட்டு இதனை வாங்குவார்கள் என்பது நமக்குப் புரியவில்லையா?.
ஒரு வழிப்பாதை என்று போட்டிருக்கும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்ற போர்டு இருக்கும். இருப்பினும் எத்தனை விபத்துக்கள்! எத்தனை உயிரிழப்புகள்! காரணம் எவர்மீதும் எனக்கு அக்கறையில்லை. எத்தனை ரெயில்வே கேட் மரணங்கள்! எத்தனை வெடிமருந்து தொழிற்சாலை வெடி விபத்துகள்! எத்தனை குடிசைத்தீ, சுரங்கச் சரிவுகள் பாதுகாப்பில்லாத பணிகளில் பணியாளர்களை அமர்த்தி பலி கொடுக்கிறோமே இதெல்லாம் நமக்குத் தெரியாமலா நடக்கிறது?
எல்லாமே நமக்குத் தெரிந்துதான் நடக்கிறது. நம் நாட்டில் மட்டும் நாம் உயர் சாதியாய் இருந்தால், பணம் பதவி இருந்தால் நமது வேலையை நாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நம் வாயில்கூட உணவு ஊட்டுவதற்கு ஆட்கள் தயாராக இருப்பார்கள். அதுவும் ஆணாகப் பிறந்து விpட்டால் சமையல் அறைப்பக்கமே போக வேண்டியதில்லை என்று புரிய வைத்து விடுகிறோம். இது யார் தவறு? வளர்ந்ததா? வளர்த்ததா?

பிள்ளைகளைப் பிள்ளைகளாகப் பாருங்கள் பாகுபாடு காட்டாதீர்கள். பெண்குழந்தைகளுக்கு மதிப்புக் கொடுங்கள். அவர்களை மதிக்க ஆண்குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். பெண் குழந்தைகளுக்கு சொத்தில் உரிமையைக் கொடுங்கள். தண்ணீர் எடுப்பது, பாத்திரம் கழுவுவது, படுக்கை விரிப்பது, வீட்டை சுத்தம் செய்வது என்று அனைவரும் தவணைமுறையில் வேலை செய்யச் சொல்லுங்கள்.
மீண்டும் ஒருமுறை இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். சமுதாயத்தில் அக்கறை இல்லாதவர் செய்கின்ற செயலாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் அவற்றில் என்னென்ன செய்கிறீர்கள்? செய்யத் தவறி இருக்கிறீர்கள்? ஆகவே நாம் சமுதாய அக்கறை உள்ளவர்களாக முயற்சி எடுப்போம். நமது குழந்தைகளையும் வளர்த்து எடுப்போம். தன் தேவையை தானே செய்ய முடியாதவர்கள் ஊனமுற்றவர்களே! ஊனமுற்ற குழந்தைகளை நாம் வளர்த்தெடுப்பதால்தான் இன்று மக்கள் தொகை உயர்ந்து இருந்தாலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் நாம் குட்டி நாடுகளுடன் கூட குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருக்கிறோம்.
சாதனைகளில் நாம் சறுக்கி விழுகிறோம். கண்டுபிடிப்புகளில் நாம் தொலைந்து போகிறோம் புரட்சிகளில் வறட்சிகளைக் காண்கிறோம். ஆகவே நம் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக அமைய குழந்தைகளுக்குச் சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொடுங்கள். சமூகப் பொறுப்புள்ளவர்களாகக் கடமையாற்றச் சொல்லுங்கள். எந்தப் பணியையும் பிறரிடம் திணிக்காமல் நாமே செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை உருவாக்குங்கள் வீடு விழித்தால் நாடு செழிக்கும்.
“இரக்கம் என்பது
நல்ல குணம்
இல்லையென்றால் – அது
வாழும் பிணம்…”