15

May

2026

அரசுப்பணியாளர்கள்

ஒரு அரசுப் பணியாளர் என்று மார்தட்டிக் கொள்கிற நான் அதற்காக முட்டி, மோதி தட்டித் தூக்கிய வெற்றிக் களிப்பை நான் வேலை கிடைத்த நாள் அன்று எண்ணிப் பார்த்தேன்.

அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வருடம் ஒருமுறை எந்த அரசும் அறிவித்து விடுகிறது. இந்த அரசும் அறிவித்து விட்டது. அரசுப் பணியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன்களைப் பெற, நடுரோட்டில் தயங்காமல் போராடுவோம், அதனைத் தரவில்லை என்றால் அந்த அரசை நடுரோட்டில் நிறுத்துவோம் என்று மார்தட்டிக் கொள்கிறோம். அரசியல் மாற்றங்களைக் கூட நாங்கள் நடத்திய அறப்போர்தான் என்று அறிவிக்கிறோம்.

எனக்கென்று மாதந்தோறும் கிடைக்கின்ற வருமானம், வருடம்தோறும் பெறுகின்ற உயர்வு, விழா நாட்களில் எல்லாம் பணபலன் என்று நன்றாய் போய்க்கொண்டிருக்கும். இதில் எது குறைந்தாலும் நாடே நடுங்கும் அளவிற்கு நடுரோட்டில் போராடுவோம்!

எங்களுக்கு என்று ஒரு நடை, உடை, பணிசெய்ய அலுவலகம், பயணிக்க வாகனங்கள் என்று ஒரு குட்டி ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டு இந்த நாடே எங்களுக்கு மரியாதை, சலுகை தர வேண்டும் என்று எண்ணுகிறேன். இது எல்லாம் கூட சரிதான். ஆனால் வாழ்வாதாரத்திற்கும் நிரந்தரமில்லாமல் நம்மைச் சுற்றி வாழ்பவர்களைப் பற்றி நாம் ஒருநாள் கூட நினைத்துப் பார்த்தது இல்லையே! என்று நினைக்கும்போது பல நேரங்களில் மனசு வலிக்கிறது. தூக்கம் தொலைகிறது.

விவசாயி நமக்கு வாழ்வாதாரத்தை வழங்குபவர். ஆனால் வாழ்வாதாரம் அவருக்கு நிலையற்றதாக இருக்கிறது. இயற்கையின் தவறுகளில் அவர் இறப்பைத் தழுவ வேண்டிய நிலை வந்து விடுகிறது. சில காலத்திற்கு முன்னால் சென்னை மாநகரில் துப்புரவுத் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லையே? அன்றாடப் பசி என்பது அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் தானா?

இதயத்தில் இடியென இறங்கிய செய்தியைச் சொல்கிறேன். பட்டாசுத் தொழில் வரக் காரணம் வெற்றிக் கொண்டாட்டம். பட்டாசுகள் வெடிக்கலாம், அதனைச் செய்கிறவர்கள் சிதறுகிறார்கள் என்ற செய்திகளால் நிலைகுலைந்து போகிறோமே நினைவில்லையா?

விருதுநகர் மாவட்டத்திற்கு விளைபொருள். ஆனால் அது மற்றவர்களுக்கு விளையாட்டுப் பொருள். விளையாட்டு வினையாகும் என்பது போல ஊதியத்திற்காக வருபவர்கள் உடல் கருகிச் சாவார்கள். சம்பளம் தேடிவந்தவர்கள் சமாதியாகிக் கிடப்பார்கள். உடனே செய்தித்தாளில், ஊடகங்களின் ஊடுருவல் பின்பு குற்றம் நடந்தது என்ன? என்று குரைப்பார்கள். பிறகு காப்பீடு, இழப்பு, பாதுகாப்பு, என்று பாசாங்கு செய்வார்கள். சிறிது காலம் அமைதி. மறுபடியும் தீப்பிடித்தல் என்ற மரண விளையாட்டு அவ்வப்போது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

இன்று ஏறக்குறைய 8இலட்சம் பேர் இந்தத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதில் 3,00,000 பேர் நேரடிக் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1200 பட்டாசு ஆலைத் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, மாநில அரசின் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தும், ஏன் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் தவிக்கிறோம்? இல்லை இந்த அக்கிரமம் அரங்கேற அதிகாரிகள் இலஞ்சத்தை வாங்கிக் கொண்டு உயிர்களைப் பழிவாங்கும் ஊழல் பெருச்சாளிகளாக உலவி வருகிறார்கள். தற்போதுகூட கட்டனார்பள்ளி என்ற ஊரில் 25 உயிர்கள் பலியானதை உலகம் மறக்கவும் இல்லை. நல்ல உள்ளங்கள் இன்னும் உறங்கவும் இல்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் வெடிவிபத்தில் வெளியே தெரியாத அந்த கோரமுகங்கள் இன்னும் அடுத்த வேட்டைக்கு அலைந்து கொண்டுதான் இருக்கிறது.

வெடிகள் தயாரிக்கப் பொட்டாசியம் நைட்ரேட்(வெடி உப்பு) கந்தகம்(சல்பர்) அடிப்படைத் தேவையாகும். இதோடு அலுமினியம் பவுடர், பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு), ஸ்ரோன்ஷியம் நைட்ரேட் (சிவப்பு உப்பு) போன்றவை சேர்க்கப்படுகிறது.

சல்பர் விவசாயப் பயன்பாட்டிற்கு உரமாகப் பயன்படுவதால் அது எளிதாகக் கிடைத்து விடுகிறது. சல்பரும், தனியாக இருக்கும்போது அதிகமான ஆபத்தை விளைவிப்பது இல்லை.

வெடிமருந்து தயாரிக்கப் பயன்படும் சல்பர் ஆவணங்களில் விவசாயத்திற்குப் பயன்படுத்துவதாக வாங்கப்படுகிறது. இதனால் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து லாரி லாரியாக இங்கு வந்து இறங்குகிறது.

கடந்த 04/12/2025 அன்று அனுமதி பெறாமல் ஒரு தனியார் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 14,475 கிலோ பொட்டாசியம் குளோரைடு தனி வட்டாச்சியர் திருப்பதி என்னும் நேர்மையான அதிகாரியால் பிடிபட்டது. நடவடிக்கை எடுக்க அவர் முனைந்த போது அவர் மாறுதல் செய்யப்பட்டார்.

அதன்பின் வந்த வட்டாச்சியர் வாங்க வேண்டியதை வாங்கி, தடுக்க வேண்டியதைத் தடுக்காமல் விட்டதால் 25 உயிர்களை நாம் எரித்து இருக்கிறோம். ஒருவரை இழந்த பிறகுதான் காப்பீடு, இழப்பீடு, பாதுகாப்பு என ஓநாய் போல் ஊளையிடுவோம். அந்த வட்டாச்சியர் இதுபோன்று தொழிற்சாலைகளில் மாமுல் வாங்குவதற்கு என்று மூன்று தரகர்களை நியமித்து இருக்கிறார் என்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் நான் அரசுப்பணியாளர் என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இருக்கின்ற அப்பாவி மக்கள்கூட உழைத்து உயரத்தான் நினைக்கிறார்கள். ஆனால் நகரங்களின் முகம் என்று வாழும் அரசுப் பணியாளர்கள் மட்டும் ஏன் அசுத்தச் சேற்றை அள்ளிப் பூசிக்கொள்கிறோம்?

பள்ளிக்கு வருகின்ற பிள்ளைகளை நாம் பார்த்துக்கொள்வோம் என்றுதானே அவர்கள் இன்று வெயிலில் வெந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் உணவு சமையலறையில் தயாராவதை மட்டுமே பார்க்கிறீர்களே! அது எங்கிருந்து வருகிறது? என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இப்போது சிலிண்டர் விலை உயர்ந்து விட்டது எனத் தவிக்கிறோம். காரணம் அடுப்பு எரியாது! அதுதானே உங்கள் கவலை? அருகே மனிதர்கள் எரிந்து கொண்டிருக்கிறார்களே! என்ன செய்யப் போகிறீர்கள்! சிந்திப்போம்!

இனிமேல் நான் அரசு ஊழியன் அல்ல. மக்கள் பணியாளன். மக்களைத் தேடிச்சென்று பணி செய்ய வேண்டும். ஒருவேளை மக்கள் தேடிவரும் இடத்தில் இருக்கும்போது அவர்களை மாண்புடன் நடத்த வேண்டும். என்னுடைய அதிகாரத்தால், அலட்சியத்தால் வறட்டுக் கௌரவத்தால் எவரது வாழ்க்கையும் வறண்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை மாத வருமானம் இல்லாதவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். இல்லாத கடவுளுக்கு அள்ளிக் கொடுத்து கல்லில் நன்கொடையாளர் என்று பெயர் வாங்குவதைவிட இல்லாத மனிதனுக்கு இருப்பதைக் கொடுத்து மண்ணில் தெய்வம் என்று பிறர் மனதில் வாழ்வோமே! இது உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் தொடங்குங்களேன்!

“உதவி தேவைப்பட்டால்
உதவி செய்வோம்!
உறவு தேவைப்பட்டால்
உறவாய் இருப்போம்!”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES