18
Sep
2021
ஒரு நாள் அவசரச் செய்திக்காக என் அலைபேசியைத் தேடினேன். ஆனால் அந்த அலைபேசியை என் மகன் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது வந்த அழைப்பைக் கூடத் தடை செய்து விட்டு அவன் ஆர்வமாக விளையாடிக்கொண்டிருந்தான். திடீரென எனக்குக் கோபம் மின்னலைப் போல்வந்து உடனே மறைந்து விட்டது காரணம் என் நினைவுகள் நாற்பது வருடம் பின்னே நகர்ந்தது.
அப்போது சிறுபிள்ளையாகிய நான் ஓடிப்பிடித்து விளையாடிய விளையாட்டுக்கள். தொட்டுப்பிடித்து விளையாடிய கண்ணாம்பூச்சி ஆட்டம் எல்லாம் என் கண்முன்னே வந்து சென்றது. கில்லி விளையாடினோம். சடுகுடு ஆடினோம். ஆணென்றும் பெண்ணென்றும் பாராமல் தாயம் விளையாடினோம். தாவி விளையாடினோம். தரையில் மட்டுமல்ல தண்ணீர் நிறைந்த இடங்களிலும் பல்வேறு வித்தைகளைக் காட்டி விளையாடினோம். குளம், கிணறுகள் எல்லாம் நாங்கள் களமாடும் இடமாகும்.
பல்லாங்குழி யாடினோம். அதில்தான் நாம் பகிர்ந்து கொள்வதையேப் பழகிக் கொண்டோம். என்ன என்ன விளையாடடுக்கள்! எப்படி எப்படியெல்லாம் விளையாடிக் களித்தோம்! இப்போது உள்ள தலைமுறைக்கு இதனை நினைத்துப் பார்க்க முடியுமா? வீதியில் சாமியாடி வருவார்கள் அவர்களோடு ஜாலியாகச் சுற்றித்திரிந்தோம். கரகாட்டம், காவடி ஆட்டம் ஓயிலாட்டம் ஆடுவார்கள் நண்பர்கள் கூட்டமாக விசிலடித்தும், கைதட்டியும் படுஜோராக ரசித்து மகிழ்ந்தோம். விரும்பிய பாடல்களைப் பாடச் சொல்லி விசிலடித்து மகிழ்ந்தோம் இதுவெல்லாம் இன்றையத் தலைமுறைக்கு எட்டாக் கனியாகிவிட்டது! என்ன செய்வார்கள்? பாவம் அவர்கள்!
இலங்கை வானொலியில் பாடல்களை இரசித்தோம். எந்தப்பாடல்களைக் கேட்டாலும் பாடுவோம், ஆடுவோம், தாளமிடுவோம் இது பொழுதுபோக்கு மட்டுமல்ல அப்போது வந்த பாடல்கள் எங்களை இரசிக்க வைத்தது நேசிக்க வைத்தது கவிதை எழுதத் தூண்டியது கவிஞனாக மாற்றியது. நாம் கேட்ட பாடல்களில் எல்லாம் இசையின் உருக்கம் இருந்தது. இப்போது சத்தங்களில் பெருக்கம் தானே மிகுந்து காணப்படுகிறது. இதில் கற்றுக் கொள்வதற்கும் கேட்டு இரசிப்பதற்கும் என்ன இருக்கிறது?.
எனக்குள் திரைப்படப்பாடல்களின் சங்கமம் நடத்திய சங்கீதம் இன்றும் அசைபோட்டுப் பார்க்கும்போது மனதிற்குள் மழைத்துளி வந்து விழும் நான் படிக்கிற காலத்தில் அதிகமாக அசைபோட்டது. அந்தப் போதி மரத்திலிருந்து “வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்” பாடலை இன்றும் இரசித்துப் பாருங்கள் இன்றும் புத்தர்கள் புறப்பட்டு வருவார்கள். அடுத்த பாடலைக் கேட்டீர்கள் என்றால் அந்தக் கவிஞைனையே இரசிக்க வேண்டிய நிலை வரும். உணர்ச்சிக்குள் ஊடுருவி சமூகத்தின் சங்கமத்தை மந்தையில் விரசமில்லாமல் விவரித்து விட்டுப் போன விவரம் புரியும் அந்த பாடல். “பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்” அதாவது பூக்களில் வண்டுகள் தேனெடுக்க வரும்போது பூவானது இதழ்களை மூடும் எனச் சொல்லியிருப்பார். கணவன் மனைவியானாலும், காதலன் காதலியானாலும் கட்டியணைக்கும்போது மன்னிக்கவும் கொஞ்சம் விரசமாகச் சொல்லி விட்டதுபோல் தோன்றுகிறது. இலக்கியம் வழியே பேசுகிறேன் தலைவன் தலைவியை இடையைப்பிடித்து இழுக்கும்போது தலைவி நழுவுவது போல நடித்துக் கொண்டு கைகளை குவித்துக் கொண்டு அவன் மார்பிலே குத்துவாள். தலைவனோ முத்தமிடுவது போல முகத்தைக் கொண்டுவரும் போது தலைவி தன்னையறியாமலேயே கண்களை மூடிவிடுவாள் நான் படித்த அகநானூறு பாடல்களில் பல பாடல்களை இந்தப்பாடல் நினைவூட்டிச் சென்றது.
தட்டான் பிடித்து விளையாண்டோம், பட்டம் பறக்க விட்டு இரசித்தோம். வண்ணத்துப் பூச்சியை வட்டமாய் இருந்து இரசித்தோம் காரணம் நாம் சுதந்திரப் பறவையாய் சுற்றித் திரிந்தோம் என் குழந்தை கூண்டுக் கிளியாக அல்லவா வளர்க்கப்படுகிறான். அப்போது பொருள் இல்லை போத்திக் கொள்ள துணியில்லை காலில் போடச் செருப்பு இல்லை குழம்பு வைக்க பருப்பு இல்லை இருந்தாலும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! இப்போது என்ன இல்லை? ஏன் சந்தோசம் மட்டும் இல்லவே இல்லை? இந்தக் குழந்தைகளுக்கு!.
அப்போது கேட்ட பாடல்கள் எல்லாம் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. கரங்களில் கவிதை தந்தது என்னையும் 20 வயதில் கவிஞனாக்கியது. சொல்லிக் கொள்ளுமளவிற்கு நாட்டில் கவிஞர்கள் இருந்தார்கள் ஒருமுறை என் இளமைப் பருவத்தில் தெய்வீகத் தென்றல் என்ற ஒலி நாடாவிற்குப் பாடல் எழுதச் சென்றிருந்தேன். அது பக்திப்பாடல் ஆனால் வியாபார நோக்கம் கருதி அதன் தயாரிப்பாளர் சகோ. நீங்கள் எழுதும் சரணத்தில் கண்ணை மூடினால் கடவுள் தெரிய வேண்டும், கண்ணைத் திறந்தால் காதலி தெரிய வேண்டும் அப்படி மெட்டமையுங்கள் என்று கட்டளை இட்டார். நான் உடனே “காலை நேரப் பனியும் நீயே!, கடலின் அலையில் ஜதியும் நீயே!, மாலைநேர மதியும் நீயே! மனதைக் கவரும் மலரும் நீயே!” இப்போது நீங்களே கண்ணை மூடிப் பாருங்கள் கடவுள் தெரிவார் கண்ணைத் திறந்து பாருங்கள் காதலி தெரிவாள். ஆனால் இப்போது 20 வயதில் தமிழைத் தடையின்றிப் பேசினால் போதும் ஆங்கிலம் அளவாடு பேசினால் போதும் அதுவே தடுமாற்றமாக இருக்கிறதே!
எனவே குழந்தைகளைக் கூண்டுக்கிளியாக்காதீர்கள் விருப்பம் போல் விளையாட விடுங்கள் வெளியில் போகும் போதெல்லாம் அழைத்துச் செல்லுங்கள் உங்கள் உறவுகளை முழுவதும் அறிமுகப்படுத்துங்கள் உங்களுக்கு உறவுகள் இருக்கிறது என்று தெரிந்தால் குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை நீங்கும் தன்னம்பிக்கை ஓங்கும் பகிர்ந்து உண்ணக் கற்றுக் கொடுங்கள். உதவி செய்ய ஊக்கப் படுத்துங்கள். உறவுகளோடு கலந்து வாழச் சொல்லுங்கள் பெரியோர்களின் பெருமையை விளக்கிச் சொல்லுங்கள். உங்களோடு அமர்ந்து உண்ணச் சொல்லுங்கள் கொடை விழாக்களுக்கு அழைத்துச் செல்லுங்கள் கடைத் தெருக்களில் விளையாடச் சொல்லுங்கள். பழங்கதைகள் பேசுங்கள் குழந்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள் அது நம் குழந்தை நல்லதே செய்வான் நம்புங்கள் நல்லதே நடக்கும்.
“ஒரு உயிரை நேசிப்பது….
நிஜமென்றால், அதனைச்
சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள் – அது
உங்களை நேசிப்பது
நிஜமென்றால் நிச்சயம்
உங்களிடம் திரும்பி வரும்”