12
Dec
2025

கருவறைத் தொடங்கி கல்லறை வரை நமது பயணத்தில் மரணபயம் மனதில் ஒடிக்கொண்டேயிருக்கும். இதனை வெல்வதற்கு மனிதன் கண்ட ஆயுதமே கடவுள்! இறைவனைக் காண நாம் தேடாத இடமே இல்லை! இங்கே இருக்கிறார்! இப்படி இருக்கிறார்! என்று எவர் சொன்னாலும் நாமும் ஓடாத நாளும் இல்லை. ஆனால் நாம தேடாமலேயே நம்மைத் தேடி வருவது மரணம் ஒன்றுதான். கடவுள் என்று நாம் வணங்கும் அத்தனை பேர் கதையையும் முடித்து வைத்தது இந்த மரணம்தான். மரணம் என்பது மறுபடியும் அவர்களைப் பூமியில் பார்க்க முடியாது என்பதுதான்.
கடவுள் என்பவர் எங்கும் இருக்கிறார்! என்கிறார்கள். எங்கும் இருப்பவன் கடவுளாக இருக்க முடியாது! இந்தக் கருத்தைக் கூறினால் நீ கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவனா? என்பீர்கள். ஆனால் நான் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவனா? இல்லையா? என்பதைவிட நீங்கள் மனித மறுப்புக் கொள்கையுடையவர்கள். இதையும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். தொடர்ந்து பயணியுங்கள் ஒரளவு புரியும்.

நீங்கள் சொன்ன, கேட்ட கதைகளில்கூட கடவுள் தன்னை அடையாளம் காட்ட மனித அவதாரம் எடுத்து வருகிறார். அவர் மனித அவதாரம் எடுத்து வந்தாலும் மனிதர்களோடு போராடி கடைசியில் ஒரு வழியாகத் தன் கதையை முடிக்கிறார். கடவுள் மனிதர்களோடு கடுமையாகப் போராடி இறுதியில் வெற்றியடைவதுபோல (சினிமாக் கதைபோல்) கடவுள் வென்றாலும் இடையில் பலமுறை கடவுள் மனிதனிடம் தோற்றுப் படாதபாடுபடுகிறார். இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டு இருப்பவர்களால் எப்படிக் கடவுள் பெரியவன் என்று நிருபிக்க முடியும்?
ஆனால் கடவுளைப் பற்றிய கதையில் அவர்கள் சொல்ல வந்த கருத்து, கடவுள் மனித உருவில் இருக்கிறார். அவர் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார். மற்றவர்களுக்காகதன் உயிரையும் கொடுக்கிறார் என்பதுதான். இவற்றின் மூலம் நான் உணர்ந்தது. எல்லா இடங்களிலும் கடவுள் இருக்க முடியாது. அப்படி இருப்பவன் கடவுள் அல்ல. எல்லா இடங்களிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் நல்லது செய்யும்போதும் நாலுபேரை வாழவைக்க உதவும் போதும் தெய்வமாகிறார்கள். எனவே கடவுள் மனித உருவில் இருக்கிறார் கண்டு கொள்ளுங்கள் என்பதுதான்.

கடவுள் மனித உருவில் இருப்பவர்கள்தான் அவர்களை நம்புங்கள். அவர்கள்தான் நம்மை வளர்ப்பவர்கள், உடனிருப்பார்கள், தவறு செய்தால் தட்டிக்கேட்பார்கள். நல்லது செய்தால் தட்டிக்கொடுப்பார்கள். நம் உடனிருப்பவர்களே நமக்குக் குலதெய்வங்கள். ஆனால் மனிதனுக்குத் தவறுசெய்யும்போது, தட்டிக்கேட்பது பிடிக்கவில்லை. அதற்காக ஊமையாகச், செவிடாக, ஒருபோதும் நேரில் வராத ஒரு கற்பனைத் தெய்வங்களை வடித்து அதற்கு ஒரு கதையைச் சொல்லி அதற்குக் கோவில் எழுப்பி விழா என்ற பெயரில் அனைத்தையும் விரயமாக்கும் வேடிக்கை மனிதர்களாய் மாறிவிட்டதுதான் வருத்தமாக இருக்கிறது.
இறைவன் என்பவன் வரம் தருவான் என்றீர்கள்! யாருக்கு என்ன வரம் கிடைத்தது?, ஆனால் உங்களுக்குக் கிடைத்த அத்தனை வளங்களும் மனிதனால் கொடுக்கப்பட்டது. கொடும் நோயான கொரோனாக் காலத்தில் கூட அத்தனை தெய்வங்களும், தாங்கள் கதவுகளை அடைத்துக் கொண்டு பார்க்க மறுத்தபோது உயிரைப் பணயம் வைத்து ஒடி ஒடி உழைத்து உயிர்க் கொடுத்த மருத்துவர்களும் செவிலியர்களும் தானே கடவுள்! இறை வழிகள் எல்லாம் இல்லாது போனபிறகு. இல்லம்தேடி ஒடிவந்து உணவுப்பொருட்கள் கொடுத்தார்களே அவர்கள் தானே கடவுள்! உணர முடியவில்லை அப்படித்தானே!
கடவுள் என்பவன் உணரத்தான் முடியும்! உருவமில்லை! என்பதனை மறந்து விடாதீர்கள்! இதனைத் தப்பாகப் புரிந்து கொள்ளக்கூடாது உருவம் இல்லை என்றவுடன் அவரைப் பார்க்கவே முடியாது. அவர் மேலே இருக்கிறார் உருவமற்று இருக்கிறார் என்று கதைவிடுவதும் அவர் தன்னிடம் மட்டும்தான் பேசுவார் நான்தான் தரகர் என்று அவரைச் சொல்லிப் பிழைக்கும் அயோக்கியர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்!
கடவுள் எல்லாவிடத்திலும் இருக்கிறார். அவர் எல்லா உருவங்களிலும் இருக்கிறார். பால் கொடுக்கின்ற பசு! பாதுகாக்கின்ற நாய், உயிர் தருகின்ற ஆடு, கோழிகள், உதவி செய்கின்ற காளைகள் எனவும் நம்மைப் பாதுகாக்கின்ற செடி, கொடி, மரங்கள் கூட இறைவனின் படைப்புகளே! எப்போதெல்லாம் நமக்கு யார் யார் வந்து உதவுகிறார்களோ! உற்சாகப் படுத்துகிறார்களோ! கவலை நீக்கி, கண்ணீர் துடைக்கின்ற அத்தனைபேரும் கடவுள்களே! நாம் அவற்றில் அவரைக் காண மறுத்துவிட்டோம்! மறந்து விட்டோம்!.
கடவுள் என்பவர் கண்ணுக்கு எட்டாத உயரத்தில் இருந்து கொண்டு நமக்கு வரங்களை வாரி வாரி வழங்குவார் எனக் கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்து விட வேண்டாம்! தேவையில் இருந்து எனக்கு அதனைத் தீர்த்து வையுங்கள் என்று நம்மைத் தேடியும் வருவார் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். புத்தரைக் கடவுளாக வணங்குகிறார்கள். ஆனால் அந்தப் புத்தனே காட்டுவழி சென்று சுயநினைவு இழந்து கிடக்கும்போது ஒரு ஆடு மேய்க்கிற சிறுவன் அவருக்கு ஆட்டின் பாலைப் பருகக் கொடுத்து மீண்டும் உயிர் தந்து உதவுகிறான்.

இன்று பலரால் பின்பற்றப்படுகின்ற கிறிஸ்தவ சமயத்தில் கிறிஸ்துவின் இறுதிச் சிலுவைப் பயணத்தில் சீமோன் என்பவர் வந்து இயேசுவின் சிலுவையை வாங்கி சிறிது தூரம் சுமக்கிறார். வெரோணிக்காள் என்ற பெண் ஆணாதிக்கத்தை வேரறுத்து கூட்டத்தின் நடுவில் வந்து இயேசுவை இரத்தம் சொட்டச் சொட்ட நடந்து செல்லும் இயேசுவின் முகத்தைத் துடைத்து அனுப்புகிறார். இராமாயணத்தில் இராமன் சீதைப் பிரிந்தபின் சீதையை மீட்டெடுக்கக் குகன், சடாயு, அனுமன், சுக்கீரிவன், வீடனன் என அனைவரின் உதவியையும் கேட்டுப் பெறுகிறான். எனவே தேவைக்குக் கொடுப்பவர் மட்டுமல்ல அந்தத் தேவையில் இருப்பவர்களும் கடவுள்கள்தான். அவர்களை நாம் தேடித்தான் போக வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் இறைவன் விரும்பும் அர்ச்சனை. இறைவனுக்குச் செய்யும் வழிபாடுகள்!
இனிமேல் ஊமைத் தெய்வங்களுக்காய் உறங்கிக் கிடக்கும் கோயில்களைத் திறக்காதீர்கள். உங்கள், பாடல்கள், பஜனைகளால் இறைவனின் பெருமைகளைச் சொல்லும்போது உருகும் தற்புகழ்ச்சி விரும்பி எனக் கடவுளை நினைத்துத் தப்பாட்டம் ஆடாதீர்கள். இறைவன் ஒருவன்தான் என்று கூறிக்கொண்ட நீங்கள் அடித்துக் கொள்வதற்காக ஆண்டவனைப் பிரித்து வைத்து பித்தலாட்டம் ஆடும் பிழையைச் செய்யாதீர்கள்.

கடவுள் கூட நாம் காணும் இடத்தில் தனது தேவைக்காக தேடி வருவார். நாம் தேடிச் சென்று உதவி செய்ய வேண்டும். உங்களை நன்மை செய்யவிடாமல் இறைவன் கோயிலில் இருக்கிறான். ஆகவே ஆண்டவனுக்குக் கொடுப்பதை எனக்குக் கொடுத்துவிடுங்கள் என்று கேட்டுப் புடுங்கும் பூசாரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். இறைப்பணி என்பது இல்லாதவர்களுக்குச் செய்வது! ஒன்றும் இல்லாததற்குச் செய்வதல்ல, கல்லிலும், மண்ணிலும் சிலை செய்து அதற்குக் கடவுள் என்று பெயர் வைத்து உண்ணாத தெய்வத்திற்கு உண்ணக் கொடுப்பதும், நனையாத தெய்வத்திற்குக் குடை பிடிப்பதும், பார்க்காத தெய்வத்திற்குப் பட்டுச்சேலை கட்டுவதும் இல்லாத தெய்வத்திற்கு எட்டடுக்கு மாளிகைகள் அமைப்பதும் எவ்வளவு முட்டாள்தனம் என்று எப்போதுதான் புரிந்து கொள்வது?
ஒன்று தெரியுமா? கோவிலில் குவிந்து கிடக்கும் செல்வங்களும்! விழாக்களுக்குச் செலவு செய்கின்ற பணங்களையும் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டால் இந்தியாவில் ஏழைகள் என்பதே ஏழுதலைமுறைக்கும் இல்லாமல் போய்விடுவார்கள். மூடநம்பிக்கைகளை ஒரேநாள் இரவிலே அறுத்து எறிய முடியாதுதான். ஆனால் பகுத்தறிவைப் புரிந்து பாதி மனிதர்கள் திருந்தினால் கூட இறைவன் என்பவன் மனித உருவில் நடமாடுகிறான் என்பதும், இதனைப் புரிய விடாமல் பூசாரிகள் நாடகமாடுகிறார்கள் என்பதும் புரிந்துவிடும்! இறைப்பணி என்பது மக்களுக்குச் செய்வதுதான் கல்வியைக் கொடுங்கள். நல்ல மருத்துவம் கொடுங்கள் இதுதான் இன்றைக்கு இலவசமாய் இறைவனிடம் கேட்பது. உழைக்காமல் உண்ணுகின்ற பூசாரிகள் கோவிலில் அமர்ந்து கொண்டு கடைசிவரை நாங்கள்தான் கடவுளின் தூதர்கள் என்பவர்களை நம்பாதீர்கள்! அனைவரும் அன்னைத்தெரசா போன்றவர்களைத் தேடுங்கள். மனிதனுக்குத் தொண்டு செய்வதே இறைப்பணி என்று எண்ணுங்கள். மதங்களை விட்டு ஓடுங்கள். அது மனிதர்களைப் பிரிக்கும், தேவைப்படும்போது பிறர் கோவில்களையும் இடிக்கும். இல்லாததைச் சொல்லி பலரின் உயிரை எடுக்கும் எனவே மதங்களைத் தவிர்ப்போம்! மனிதர்களைக் காப்போம்!
“தொழுகின்ற கரங்களைவிட
தொண்டு செய்கின்ற
கரங்களே புனிதமானது!”