19

Dec

2025

வேட்டை நாய்கள்…

வேட்டை நாய்கள் என்ற சொல் இப்போது நடைமுறையில் இல்லை. அதாவது ஊருக்கு அருகிலுள்ள காடுகளுக்கு நாய்களை அழைத்துச் சென்று காடுகளில் கிடைக்கின்ற முயல், எலி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடி உண்பதற்காக நாய்களை குட்டியிலிருந்தே எடுத்து அதற்குப் பயிற்சி கொடுத்து வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டு வாழந்தது ஒரு வேட்டைச் சமூகம். பின்பு காலப்போக்கில் காடுகளைப் பராமரிப்பதற்காகவும், வேட்டைத் தடைசெய்தல், வேட்டையாடுவதற்குத் தண்டனை, ஜெயில் என்று சட்டங்கள் உருவானதால் அது காலப்போக்கில் காணாமல் போய்விட்டது.

இந்த வேட்டை நாய்களை முன்னோடியாகக் கொண்டு, நாய்களின் பலனை நன்கு அறிந்தவர்கள் அவைகளைப் பயன்படுத்த எண்ணி வேட்டை நாய்களை மோப்ப நாய்களாக மாற்றி அதனைக் குற்றவாளிகளையும், குற்றச் செயல்களையும் கண்டுபிடிக்கவும், மக்களைக் குற்றவாளிகளிடம் இருந்து காத்து பயமின்றி வாழ வைக்கவும் காவல்துறை பயன்படுத்தும் உயிருள்ள ஆயுதமே மோப்ப நாய்கள் ஆகும்.

மோப்ப நாய்களும் சரி, வேட்டை நாய்களும் சரி கொடுத்த பணியை உயிரைக் கொடுத்து நிறைவேற்றும். தன்மீது கொண்ட நம்பிக்கையை நாளுக்கு நாள் மெருகேற்றும். தன்னை நம்பி அனுப்பும் தலைவனுக்குக் காலம் முழுவதும் நன்றியோடு நடந்து கொள்ளும். ஆனால் தனக்குத் தேவையான உணவை தானே தேடிக் கொள்ளத் தெரியாமல் எசமானின் கையை எதிர்பார்த்துக் காலம் முழுவதும் காத்துக் கிடக்கும்.

எந்தவிதமான பயிற்சியும், எடுக்காத தெருநாய்களும் வீட்டு நாய்களும் தனக்கான உணவை தானே தேடிக் கொள்ளும். ஆனால் பயிற்சிகள் எடுத்த மோப்ப நாய்கள் தனக்கான உணவை தானே தேடிக் கொள்ளத் தெரியாமல் அதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் கோவில் வாசலில் காத்துக் கிடக்கும், பிச்சைக்காரர்களைப்போல் எசமான் வருவார் தனக்கு உணவு கொடுப்பார் என அதுவரை எச்சிலை வடித்துக் கொண்டு பாத்துக் கிடக்கும், காத்துக் கிடக்கும். ஒருவேளை இந்தப் பயிற்சிகள்தான் நாயின் தன் திறனை மாற்றி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.

இதே மனநிலையோடு இன்றைய சமுதாயத்தை நோக்கிப் பாருங்கள் குறிப்பாக மாணவர்களை! எத்தனை பயிற்சிகள்? எத்தனை பாடங்கள்! எத்தனை கருவிகள்? எத்தனை செய்முறைகள்? எத்தனை தயாரிப்புகள்? எத்தனை வேலைச் சுமைகள்? இத்தனைக்கும் அத்தனைபேரும் அர்ப்பணிக்கப்படுகிறோம். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஆட்சியாளர்கள், தொண்டுள்ளம் கொண்டவர்கள், சமூக ஆர்வலர்கள் என அத்தனைபேரும் உழைத்து என்ன பலனைக் கண்டோம்?

நீங்களும் நானும் நினைத்தது போல சமுதாயம் நிமிர்ந்து இருக்கிறதா? நினைத்ததுபோல இளைய சமுதாயம் வளர்ந்திருக்கிறதா? இல்லையே! இத்தனை பயிற்சிகளும், நாம் எடுக்கின்ற முயற்சிகளும் சமுதாயம் உயர்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். சந்தனம் என நாம் கலக்கிக் கொண்டிருப்பதில் இப்போது சாக்கடைகளின் நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.

வாகன விபத்துக்கள் அதிகரித்துவிட்டது. வழிப்பறிக் கொள்ளைகள் பெருகிவிட்டது. பெண்மையின் மென்மை சரிந்து விட்டது. தாய்மையின் தரம் குறைந்துவிட்டது. கூட்டுக் குடும்பம் குலைந்துவிட்டது. விவாகரத்துக்கள் பெருகிவிட்டது. சந்தேகங்கள் சட்டையாகிவிட்டது. பொது அறிவில் மட்டையாகிவிட்டது. மதுபானத்தால் மதிமயங்கிவிட்டது. மரியாதை என்பது காற்றில் பறந்து விட்டது. ஆனாலும் கல்வி நிலையங்கள் பெருகிவிட்டது. பயிற்சிகள் பயங்கரமாக இருக்கிறது. திறமைகள் தீட்டப்படுகிறது. உரிமைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. எல்லாமே சமுதாயம் என்னும் சவத்திற்கு அலங்காரம் செய்யப்படுகிறதுபோல் இருக்கிறது.

பெற்றோர்கள் பிள்ளைகள் படித்தால்தான் பெரிய ஆளாக முடியும் என்று நம்புகிறார்கள். உயரதிகாரிகளும் தேர்வில் வெற்றியடைந்தால்தான் வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் என்று வற்புறுத்துகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் ஆசிரியர்கள் மாட்டிக் கொண்டு மோப்ப நாய்களுக்குப் பயிற்சி அளிப்பது போல் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தேர்வில் அடைகின்ற வெற்றிதான் நிறுவனத்தின் வெற்றி! அதுவே நிர்வாகத்திற்கு விளம்பரம்! தேர்வின் வெற்றியானது நிறுவனம் பலரால் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைகிறது நிறுவனம் வளர்கிறது. அனைத்தையும் பள்ளி என்னும் பகல் கொள்ளையர்களிடம் பணத்தை இழந்துவிட்டு பெற்றோர்கள் நிர்வாணமாக நிர்கதியாக்கிவிட்ட நிலையும் பெறுகிறது.

அத்தனை வசதிகளுடனும் அருமையான கல்வியைக் கொடுக்கின்ற அரசுப் பள்ளி ஏன் அலட்சியப் படுத்தப்படுகிறது? பயணம் புடுங்குகிறவன் கொண்டாடப்படுகிறான்! நம்மைத் தேடி வருகிறவன் திண்டாடப் படுகிறான். குருவை அலட்சியப் படுத்துகிற குருட்டுச் சமுதாயம் திருட்டுச் சமுதாயமாக மாறாமல் தெய்வீகச் சமுதாயமாக மாறும் என்றா கனவு காண்கிறீர்கள்? ஆடம்பரக் கட்டிடத்திற்குள் இருக்கின்ற அரைவேக்காடுகள் உயர்ந்தது என்றும் அரசுக் கட்டிடத்தில் படித்தால் இகழ்ந்தது என்றும் எவன் சொல்லிக் கொடுத்தது? தாய் மொழிக் கல்வி தரம்கெட்டதா? கொஞ்சம் யோசியுங்களேன்?

நம் பயிற்சிகள் எல்லாம் மோப்ப நாய்களை வளர்த்து முன்னேற்றம் காணத்துடிக்கிறோம். அவர்கள் பயிற்சி எடுப்பது எல்லாம் ஏதோ ஒரு எஜமானை வாழ வைக்க அடிமையாய் அலையப்போகிறது! அன்றாடம் துடிக்கப் போகிறது. தனக்கும், தன் வாழ்வியலுக்கும் எந்த படிப்பினையும் கற்றுக் கொள்ளாமல் தான் படிப்பதுதான் நிஜம் என்று நிழலைக் கட்டி அழுது கொண்டிருக்கிறது. இத்தலைமுறை சமுதாயத்தோடு தன்னைச் சரியாகப் பொருத்திக் கொள்ளத் தெரியாமல் தன்னையும் சங்கடப்படுத்தி தன்னை சந்திப்பவர்களையும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறது.

மோப்ப நாய்கள் தன் பணிகளைச் செய்ய முடியாதபோது ஒய்வுற்றபின் உணவுக்குத் துன்பப்படுகிறது. உடனிருப்பவர்களுக்குச் சுமையாகிறது. மொத்தத்தில் அதனை முடித்துவிட எண்ணுகிறார்கள். அதுபோல்தான் நாம் நம் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு நமக்கு நாமே சுமையாகிறோம்! நாட்களும் நமக்கு சுமையாகிறது. தற்பெருமை பேசித் திரிந்தவர்கள் தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். தன்னால்தான் எல்லாம் நடக்கிறது என நினைத்திருந்தோம். இனிமேல் தனக்காக தன்னுடைய கால்கள் கூட நடக்காது என ஊனமாகி உட்கார்ந்து விடுகிறோம்.

இங்கு எதுவும் மாறாது என்று நினைத்துதான் எதையும் மாற்ற எண்ணாமல் நடைபிணமாய் நம் பயணம் தொடர்கிறது. வாழ்வியல் தெரியாமல் நம் குழந்தைகள் தனக்குத் தேவையைக் கூட அறியாமல் திண்டாடும் மோப்ப நாய்களைப் போல் வளர்ந்துவிடப் போகிறோமா? சாதனையும், சரித்திரமும் நமக்கெதற்கு? நாம் சாய்ந்து கொள்ளத் தோள்கள் வேண்டுமே? பட்டங்களும், பதவிகளும் நமக்கெதற்கு? நம் பக்கத்தில் அவர்கள் இருக்க வேண்டாமா? பணங்கள் உணவாக முடியுமா? வசதிகள் வாழ்க்கையாக அமையுமா? உறவுகளைத் தேடிக் கொள்ளாத, அன்பினைக் கற்றுத்தராத, அடுத்தவர்களைப் பற்றிச் சிந்திக்காத, தியாகம் என்று தெரியாத, சமத்துவம் வளர்க்காத, பொறுமையைக் கற்றுத்தராத பிறர் வளர்ச்சிக்கு உதவாத பிறருக்காக வாழாத ஒரு கல்வி நமக்கும் நாட்டுக்கும் தேவையா? நன்கு யோசியுங்கள்!

“போதிமரங்கள்
புத்தனைத் தராது
புத்தன் இருந்தால் – அல்ல
போதனையே மரமாகும்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES