24
Dec
2025

கடும்குளிர், நடுங்குது என் உயிர். கொட்டும் பணியும், குளிர்காற்றும் பட்டுத்தெரிக்கும் என் மேனியை படபடவென அடிக்கச் செய்தது. இருப்பினும் என் சமயக் கடமையைச் சரியாய் செய்வதற்கென கோவிலை நோக்கி நடுச் சாமத்தில் நகர்ந்து கொண்டிருந்தேன்.
போகும் பாதையில் கோவிலின் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். இவர் பிறமதத்தைச் சார்ந்தவராய் இருப்பாரோ? அதனால்தான் கோவிலுக்குச் செல்லாமல் அமர்ந்திருக்கிறாரோ என எண்ணினேன். சலனமற்றுத் தெரிந்த அவரது முகம், தீர்க்கமான பார்வை, தெளிவான சிந்தனை, எளிமையான ஆடை. எதற்கும் கலங்காத அவரது அமைதி பரபரப்பு இல்லாத பொறுமை, பணத்திமிரில்லாத அவரது அழகு அவர் அருகில் என்னை இழுத்துச் சென்றது.
அவரருகில் சென்று என்ன இங்கே இருக்கிறீர்கள்? என்றேன்! அவரோ அடுத்த நொடியே சொன்னார். நான் அமர வேண்டிய இடத்தை நானே முடிவு செய்து அமர்ந்திருக்கிறேன் என்று சொன்னார். அதாவது பட்டமோ, பணமோ, பதவியோ, அந்தஸ்தோ, அமர்த்தவில்லை என்று அசால்டா சொன்னார். அந்தப் பார்வை என் கர்வத்தைக் காலி செய்தது.

இங்கு அமர்ந்திருக்கிறீர்களே! குளிர் நடுங்க வைக்குமே! ஏதாவது போர்த்திக் கொள்ள ஆடை வேண்டாமா? என்று கேட்டதற்கு நான் மட்டுமா நடுங்குகிறேன்! இங்கு நடுங்குபவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னை சிந்திக்கச் சொல்வதே இந்தக் குளிர்தானே! என்று அவர் சொன்னவுடன் என்னை நான் பார்த்தேன். எனக்கும் என் குடும்பத்திற்கு மட்டும் எடுத்துக் கொண்ட என் புத்தாடை என்னைச் சுட்டது.
இங்கு உட்கார்ந்து இருக்கிறீர்கள்! பார்க்கும்போதே ஒரு தெய்வீக மனிதராகத் தெரிகிறீர்கள்! உங்களைப் பார்க்காமலா இவர்கள் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்? என்றேன். ஆச்சர்யத்தோடு….
அடுத்தவர்களை நாம் அக்கறையுடன் கவனிக்க ஆரம்பித்தால் இங்கு வறுமையும், தனிமையும் இல்லாமல் போகும் அதுவுமில்லாமல் இங்கு அடுத்தவர்களைப் பார்ப்பதே அவர்கள் குறைகளைக் கண்டு, குழிபறித்து விமர்சித்து, வேரறுத்து வீழ்த்தி விடத்தானே! வேரெதற்குப் பார்க்கப் போகிறோம்? என்றார் விரக்தியாக… சிறிய மௌனத்திற்குப் பின் எதுக்குக் கோயிலுக்குப் போகிறீர்கள்? என்று என்னிடம் கேட்டார்…

நானோ கடவுளைப் பார்க்க… வணங்க, கோவிலுக்குப் போகிறேன் என்றேன்.
அடப்பாவிகளா! நீங்க வணங்கிற எந்தத் தெய்வமாவது அவங்க வாழும்போது கோவிலில் இருந்திருக்காங்களா? கோவிலில் இல்லாத தெய்வத்தைக் கோவிலுக்குள் பார்க்கப் போகிறோம்! என்று சொல்வது பொய்யில்லையா? என்றார்.
இவர் தீர்க்கமாகவும், தெளிவாகவும் பேசுகிறார் இவரைக் கவனிக்காமலேயே எல்லோரும் போயிருக்காங்களே! அது சரி எல்லோரும் புத்தாடை அணிந்து சென்றிருப்பார்கள். இவர் சாதரண ஆடை அணிந்திருந்ததால் இவரை யாரும் பெரிதாகக் கவனித்து இருக்கமாட்டார்கள். இங்கு யாரும் ஆண்டவனைக் காண வரவில்லை! ஆடையையும் அலங்காரத்தையும் தானே காண வருகிறார்கள்.

அவர் மெதுவாகக் கேட்டார் அங்கே பெரிய கோவில் இருக்கிறது! பிறகு ஏன் கோவிலுக்குள் குடிசை ஒன்று போடப் போகிறீர்கள்? அது கோவிலா? அல்லது காட்சிக்குத் தகுந்தால்போல் நடிக்கும் நாடகக் கொட்டாயா? பலிபூடம் மேடை இல்லையே!
நான் மிரண்டு போனேன் இவர் கடவுள் மறுப்புக் கொள்கையாளராகத்தான் இருப்பார்!…. ஆனால் கச்சிதமாகப் பேசுகிறார்.
சரி? நீங்கள் சரியாகத்தான் சொல்லுகிறீர்கள்! உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. கோவிலுக்குப் போவனுமே!
பேச்சைக் கேட்டு அப்படியே விட்டுவிட்டு போகத்தானே கோவிலுக்குப் போகிறீர்கள்? கடவுளைப் பற்றிப் பேசுபவர்களையெல்லாம் கொஞ்சம் உற்றுப்பாருங்கள் தன்னைப்பற்றி பெருமையாகப் பிறர் பேச வேண்டும் என்று பேசுகிறீர்களே தவிர கடவுள் மேல் உள்ள அக்கறையில்லை! அவர்கள் பேசுவது எல்லாம் அடுத்தவர்களின் பாராட்டுக்காக…
சரி இருக்கட்டும் கோயிலுக்குப்போவோம் என்றேன் அவரோ நான் கோவிலுக்குப் போவதற்காக வரவில்லை. வீதியில் இருப்பவர்களைச் சந்திக்க! விலக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க! விரக்தியிலிருப்பவர்களுக்கு புத்துயிர் ஊட்ட! அதிகாரம் செய்பவர்களை அடக்கிவைக்க! அடிமையாய் இருப்பவர்களைத் தலைவர்களாக்க என்று அடுக்கிக் கொண்டே சென்றார்.
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவர் பேசுவதைப் பார்த்தால் பெரிய புரட்சியாளராய் இருப்பாரோ! என நினைத்தான். ஆனால் கோவிலை வெறுப்பதாலும், கோவிலில் தெய்வங்கள் இல்லை. மனித உருவில்தான் வாழ்கிறான் என்று அவர் சொல்வதைப் பார்த்தால் இவர் பெரிய கம்யூனிஸ்டாக இருப்பாரே? என்று நினைத்துக் கொண்டேன்.
கொள்ளையடிப்பவன் கோவிலில் பணத்தை அள்ளிக் கொட்டுகிறான். பின்பு கோவிலில் இருந்து கொள்ளையடித்துக் கொள்கிறான். அப்படியென்றால் பணக்காரன் பதுக்கி வைக்கும் இடந்தான் கோவில் உண்டியல். ஒரு காலத்தில் நானும் கோவிலுக்குள் சென்று அத்தனைபேரையும் அடித்து நொறுக்கினவன்தான் என்றார்.
இவரைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே!. ஆனால் அவருடைய கோபம் நியாயமானதுதான்… ஆனால் இவர் சொல்வது யாருக்கும் பிடிக்காது. ஏனென்றால் கோவில்தான் எங்கள் ஆடம்பரத்தை வெளிப்படுத்த முடியும்! ஏற்றத்தாழ்வுகள், ஏழை, பணக்காரன் என்பதைப் புரிய வைக்க முடியும். முதலிட இருக்கை நாங்கள் முக்கியமானவர்கள் என்ற அறிக்கை அங்கு பல்வேறு இயக்கங்கள், அதற்குப் பட்டாபிசேகம் செய்யாத தலைவர்கள்! அடுத்தவர்களை அடிமை போல நடத்துகிற அற்பப் புத்திகள், ஏழைகளை இருட்டாக்கிக் கோவிலுக்கு வெளிச்சம் போடுகிற பூசாரிகள், பகல்வேசம் போடும் பக்கவாத்தியங்கள் ஆகிய கடவுள் வெறுக்கின்ற அத்தனையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமென்றால் அது கோவிலாகத்தானே இருக்கும் என்று கூறினார்.
அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே உங்கள் பெயரென்ன என்று கேட்டேன். இவரோ எதுவும் சொல்லாமலேயே கடந்துபோனவர் தொலைவில் சென்று திரும்பிப் பார்த்தார். சிரித்துக் கொண்டே சொன்னார் இயேசு… என்று
சரி என்று சொல்லிவிட்டு இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று நினைத்தபோது ஆம் படத்திலும் சிலையிலும் பார்த்த அதே இயேசு இவர்தான். திரும்பிப்பார்த்த போது இரண்டு மூன்று ஏழைச் சிறுவர்களின் விரல்களளைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே போய்க் கொண்டே இருந்தார்.

இவர்தான் அந்த இயேசுவா? இவரைத்தான் நான் கோவிலில் தேடிக் கொண்டிருந்தேனா? அவர் வீதியில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறாரா? மனிதரோடு இருக்கிறாரா? மனித உருவில் இருக்கிறாரா? ஏழையோடும், ஏழையாக! ஏழையின் சிரிப்பில் இருக்கிறாரா? ஆடை இல்லாதவனைக் கண்டு போர்த்தாமல் மேடையில் பேசியவன் பேச்சைக்கேட்டு சாமியைச் சரியாய்ப் புரியலையே… நான் தேடியவர் வீதியில் நிற்கும்போது நான் ஏன் கோவிலில் போய் ஒழியனும்… திரும்பினேன். கண்டிப்பாக அவரைக் கண்டுபிடித்து விடுவேன் ஒரு ஏழையின் சிரிப்பில்… அவர்களுக்கு என்ன கொடுக்கிறேனோ அதுதான் ஆண்டவனுக்குச் செய்யும் அர்ச்சனை கடவுளுக்குக் கொடுக்கும் காணிக்கை! வாங்க சாமியைத் தேடிப் போவோம்!.
“கோவிலை அலங்கரித்தால்
கோபம் வருகிறது….
ஏழைகளுக்கு உதவிசெய்தால்
பக்தி வளர்கிறது”