10

Jan

2026

பிள்ளையும் கிள்ளிவிட்டு….

புத்தாண்டு பிறந்து விட்டது. எல்லோர் மனதிலும் “பழையன கழிதலும் புதியன புகுதலும்” எனும் கொள்கையோடு நம்மிடம் உள்ள குறைகளைக் களையவும், நல்ல செயல்களை வளர்க்கவும் சபதம் எடுப்பார்கள். எனவே அனைவரும் தன்னைவிடப் பெரியவர்களிடமும் தனக்கு வாழ்வு கொடுப்பவர்களையும், தன்னை உயர்த்திவிட்டவர்களையும் உள்ளார நினைத்து பெரியோர்களின் ஆசியைப் பெற்று இந்த ஆண்டை இனிதே தொடங்குவோம்.

ஆனால் கல்வித்துறை மட்டும் கொஞ்சம் கதிகலங்கி நிற்கும் காரணம் ஆண்டு முடியும்போது அரையாண்டு முடிந்திருக்கும் பள்ளி திறந்தவுடன் பரிட்சைப் பேப்பர்கள் கையில் வரும் இதுதான் அவர்கள் வாழ்வை நிர்ணயிப்பது போல அவர்கள் மீது வசவு மொழிகள் தூவப்படும். குற்றப்பத்திரிக்கைகள் குறைவில்லாமல் வாசிக்கப்படும். கோர்ட்டில் கூண்டில் நிற்க வைத்து குற்றம் சுமத்துவதுபோல பெற்றோர்கள், ஆசிரியரிடமும், ஆசிரியர் தலைமையாசிரியரிடமும், தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளிடம் வாதத்தை வைப்பார்கள். மாணவர்கள் மட்டும்தான் அறுக்கப்போகிற ஆட்டைப்போல் கழுத்தில் மாலை இல்லாமல் கைகட்டி நிற்பான்.

பேப்பர் எல்லாம் கொடுத்து முடிந்தவுடன் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெறும் இதிலும் பலியாடு பள்ளி மாணவன்தான். ஆசிரியர் அப்படியே மகனை மகானாக்கி நம் மடியில் கொடுப்பார் என்று நம்பி தன் குழந்தைகளையே குறைகளாகச் சொல்லி பள்ளியின் பெருமையையும் சொல்லிக் கொடுப்பவர் பெருமையையும் சொல்லிச் சொல்லித் தீர்ப்பார்கள்.

பிள்ளைகள் மட்டுமே பிழை செய்துவிட்டார்கள். பிள்ளைகள் பிழைகள் செய்வது உண்மைதான். ஆனால் இவ்வளவு பெரிய பிழைகளா? எனப் பூதக் கண்ணாடி போட்டுப் பார்க்கக் காரணம் நாம் வாழ்ந்த சூழலை வைத்து எடைபோடுகிறோம். அந்தக் காலம் வேறு! இந்தக் காலம் வேறு! நம்மைப்போல இவர்களை நடத்தினால் பொருத்தமில்லாத சட்டையை அணிந்து கொண்டு அழகாய் இருக்கிறேனா? எனக் கண்ணாடி முன்னால் பார்ப்பதற்குச் சமம். ஆகவே பெற்றோர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொள்ளுங்கள்.

பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் சென்று தன் பையன் என் பேச்சைக் கேட்பதே இல்லை, எங்களை மதிப்பதே இல்லை எதிர்த்துப் பேசுகிறான். செல்போனையே பார்த்துக் கொண்டு இருக்கிறான். தேவையில்லாத நண்பர்களோடு சுற்றிக் கொண்டு திரிகிறான். போதைப் பொருள் வைத்திருக்கிறான். நேரம் கழித்து எழுந்திருக்கிறான் என்று குற்றப்பத்திரிக்கை வாசிப்பார்கள் உடனே ஆசிரியரும் சேர்ந்து ஆமோதிப்பார் இதனைக் கேட்டுக் கொண்டிருக்கிற குழந்தையின் ஆழ்மன அழுகுரலை உங்களால் கேட்க முடிகிறதா?

மாணவர்கள் அடித்துக் கொள்வதும் ஆசிரியர்களுக்கு தீங்கு செய்வதும் ஆதிக்காலத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது ஊடகங்கள் பெரிதுபடுத்திக் காட்டுகிறது. எப்படிப் பார்த்தாலும் இன்று வகுப்பறையில் நடக்கும் வன்முறைகள் பெருகிவிட்டதுதான் மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்குக் குழந்தைகள் மட்டுமே காரணம் என்று குற்றம் சொல்லாமல் இருந்தீர்கள் என்றால்! தீர்வு காண்பது எளிதாக இருக்கும்.

குழந்தைகள் சின்ன வயதில் தனக்கென்று என்ன உணவு என்பதனை குழந்தைகள் தீர்மானிப்பதில்லை. தாய்ப்பாலுக்குப் பிறகு தன் குடும்ப உணவுகளை ஊட்டி ஊட்டி வளர்க்கும் தாய்க்கு இது பிரச்சனையில்லை. ஆனால் பெரும்பாலான தாய்கள் அடுத்த குழந்தையின் கையில் இருப்பது போல் தன் குழந்தையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசைதான் குழந்தையை குற்றவாளியாக்கி தான் விரும்பியதை அடைய குறுக்கு வழியைத் தேட ஆரம்பித்துவிடுகிறது. குற்றவாளியாய் வந்து நிற்கிறது.

என் குழந்தை எப்போதும் செல்லிலே தான் பேசிக் கொண்டிருக்கிறது என்பவர்கள் கவனியுங்கள். குழந்தை கையில் செல்லைக் கொடுத்தது யார்? அது விளையாடும்போது எது குழந்தை கண்ணில் படக்கூடாது என்று சில பொருட்களை மறைத்து வைப்போமே? ஏன் செல்லை குழந்தைகள் கண்ணில் படவோ, அது பார்க்கும்போது பேசிக்கொண்டோ அல்லது உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று அதன் கவனத்தைத் திருப்ப குழந்தைகள் இடத்தில் செல்லைக் கெடுத்தது யார்? அது உங்கள் குற்றம் தானே!

நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தால் குழந்தைகள் வரும்போது சந்தோசமான சூழ்நிலை இருந்தால், நீங்கள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருந்தால் அக்குழந்தை ஏன் ஆளில்லாத இடத்திற்கு அலைபேசியில் அழைத்து ஆறுதல் தேட வேண்டும். செல்கள் கோலோச்சக் காரணம் கூட்டுக் குடும்பத்தைத் தொலைத்ததால்தான்! இந்தத் துன்பமே தவிர வேறில்லை.

குழந்தைகள் பேச்சு வரும்வரை அது நினைத்ததை பேச முடியாது. பின்பு தாங்கள் கற்றதை வெளிப்படுத்தத் தெரியாமல் தாங்கள் மனதில் மறைத்ததை தாங்கள் வெளியில் கண்ட கேட்ட வார்த்தைகளில் செய்கைகளில் வெளிப்படுத்தும்போது நாம் அதிர்ச்சி அடைகிறோம். காரணம் தெருவெளியிலும் அரசியல் கூட்டங்களிலும் ஊடகங்களிலும், முகஞ்சுளிக்கும் வார்த்தைகள் தானே முன்மொழியப்படுகிறது? அதைத்தானே அது பயன்படுத்தும். அதனைக் கேட்கும்போது நாம் அதிர்ச்சியடைகிறோம்.

குழந்தைகள் பேச்சைக் கேட்பதில்லை எதிர்த்துப் பேசுகிறார்கள் என்கிறோம். நமக்குப் பிடிப்பதை அவர்கள் செய்தால் சரியாகவும் அவர்களுக்குப் பிடித்ததைக் கேட்டால் தவறாகவும் எண்ணுகிறோம்.

இன்றையக் குழந்தைகளுக்கு மனதைக் கெடுக்கும் மலிவுப் பொருட்கள் ஊடகங்களில் ஊறிக்கிடக்கிறது. அது அதனை யாரும் இல்லாத தனிமையில் செய்யத் துடிக்கிறது. இதனால்தான் பாதித் தவறுகளில் பிள்ளைகள் படுகுழியில் விழுந்து விடுகிறது. பிள்ளைகள் பாசத்தோடு நம்மை நெருங்கும் போது நமது தேவையைக் காரணம் காட்டி அவர்களுக்கு ஏதாவது பொருளையோ, அலைபேசியோ கொடுத்துத் தனிமைப் படுத்திய அத்தனை பெற்றோர்களுக்கும் நிச்சயம் இந்தத் தண்டனை உண்டு.

குழந்தைகள் சிறுபிள்ளையாக இருக்கும்போதே நமது தேவை என்ன என்பதனைப் புரிய வைக்க வேண்டும். அதனில் எதனை நமது குடும்பச் சூழலில் நிறைவேற்ற முடியும் என்பதனைக் கண்டுணர வைக்க வேண்டும். எதிர்காலத்தில் எதைச் செய்தால் நமக்கு நமது குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு நல்லது என்பதனை அவனுக்குப் புரிய வைக்க வேண்டும்.

ஒரு குழந்தை வளர்ப்பு என்பது சிறிய குஞ்சுகளை வளர்க்கும் கோழி போன்றது. எப்போது நமது இறகுகள் அடைகாத்து வைத்திருக்க வேண்டும். நமது அன்பின் பிடியில் இருக்க வேண்டும் கொஞ்சம் அறுத்து வெளியே விட்டு விட்டால் ஊடகம், நட்பு, திரைப்படம், அரசியல், சமூகம், காதல் என்ற வல்லூறுகள், பருந்துகள் காட்டுத் தனமாகத் திரிந்து கொண்டு இருக்கிறது. அது கவர்ந்து சென்று விடும். பிள்ளைகளை அதன் பிடியில் தின்னக் கொடுத்துவிட்டு அழுவதைத்தவிர வேறு வழி நமக்கு இல்லை. ஆகவே நம் அன்புதான் குழந்தைகளைத் திருத்தும் குற்றம் செய்வதை தடுக்கும். நம் அன்பு மட்டுமே பிள்ளைகளை வழிநடத்தும் நம்புங்கள் நல்லதே நடக்கும்.

“பிள்ளைகளின்…
குரு, தெய்வம், வழிகாட்டி
பெற்றோர்களே… இதைப்
பிறரிடம் கொடுக்காதீர்கள்!”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES