13
Jan
2026

தமிழர் திருநாள் என்று தைமாதம் முதல் நாளைப் பொங்கல் திருநாளாகப் போற்றி மகிழ்கிறோம். பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட மீண்டும் புத்துணர்வுடன் நடைபோட பொங்கலுக்கு முன் போகிப் பண்டிகை என்று ஒன்றைக் கொண்டாடுகிறோம். போகிப் பண்டிகை என்பது தேவையற்ற பொருட்களை எரித்து விடுவது. எனவே நாம் பயன்படுத்தியது எதுவும் தேவையில்லாத குப்பைகள் எனக் கருதுவதை எடுத்து விடுவதுதான் போகிப் பண்டிகை ஆகும்.
போகிப் பண்டிகை என்பது குப்பைகளை எரித்து விடுவது என்பது வெளியில் கிடக்கின்ற குப்பைகளைப் பொறுக்கி எரித்தால் இடம்தான் சுத்தமாகும். ஆனால் மனிதனின் மனங்களில் புதைந்து கிடக்கின்ற குப்பைகளைச் சுத்தம் செய்தால்தான் மனிதம் சுத்தமாகும். மனிதன் சுத்தமாகி விட்டால் அனைத்தும் சுத்தமாகிவிடும். அது இறைவனுக்கும் சித்தமாகிவிடும்.

விலங்குகள் பறவைகளின் அசுத்தங்கள் கூட உரமாகிவிடும். ஆனால் மனிதன் செய்கின்ற சில செயல்கள் கூட இங்கு அசுத்தமாகத்தான் இருக்கிறது. மனிதன் புற அழுக்கை மட்டும் நீரால் சுத்தம் செய்துவிட்டு அக அழுக்கை அப்புறப்படுத்தாமல் புத்தாடையில் ஒப்பனைகளோடு சுற்றிவருவது செத்த எலியின் நாற்றம் வெளியே தெரிந்துவிடாமல் சென்ட் அடித்தது போல! இன்று வெள்ளை உடையில் சிலர் வெளியே வரும்போது அப்படித் தோன்றுகிறது.
உள்ளம் முழுவதும் ஒரு கழிவு நீர்த்தொட்டியாகக் காட்சி தருகிறது. வெளியே நமது ஆடைகள் அதற்கு வேசம் போடுகிறது. பதவியும், பணமும், செல்வாக்கும், சிபாரிசும் சில நேரங்களில் நம்மைக் காப்பாற்றி விடுகிறது. இந்தக் காப்பாற்றுதல்தான் நம்மை மீண்டும், மீண்டும் தப்பு செய்யத் தூண்டுகிறது. தவறுகளுக்குத் தண்டனை இருக்கிறது. சட்டம் என்ற ஏவிவிடும் நாய் ஏழைகளையும், இல்லாதவர்களையும் மட்டுமே கடித்துக் குதறி விடுகிறது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இப்போது அசுத்தக் குப்பைகள் அதிகமாகச் சேர்ந்து விட்டன. போட்டிகள், பொறாமைகள், வஞ்சகம், பழிவாங்கும் குணம் இவைகள் தான் எதிரியை உருவாக்கி நம்மையும் அழித்துவிடுகிறது. ஆசை என்பது காரணமில்லாமல் நம்மை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்திவிடும். சூழ்ச்சியும், துரோகமும் மற்றவர்களால் நாம் ஒதுக்கப்பட்டு, ஒரங்கட்டப்பட்டு நாம் தனிமைப்படுத்தப்பட்டு தற்கொலைக்குக் கொண்டு போய் விட்டு விடும். இத்தனை குப்பைகள்தான் நம்மை எரித்துவிடும்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாகக் கிடக்கும் குப்பைகள் திடிரென்று ஏதாவது தீப்பொறி பட்டால் அது நெருப்பாகிப் புகைந்து ஊரையே திக்கு முக்காடச் செய்து விடும். ஊரே புகையில் மூழ்கி உள்ளவர்கள் எல்லாம் மூச்சுத் திணரல் ஆகி உயிரே போகும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அதுபோல்தான் உள்ளத்திலுள்ள, காமம், கோபம், போட்டி, பொறாமையில் உணர்ச்சி என்ற நெருப்பு விழுந்து விட்டால்? சுற்றி உள்ளவர்களையெல்லாம் அது எரித்துவிட்டு தன்னையும் அழித்துவிடும். ஆகவே குப்பைகளை அப்புறப்படுத்தி நம்மைச் சுத்தப்படுத்திக் கொள்வோம்.

பிளாஸ்டிக் வந்தபிறகு பூமிக்கு அதிகம் அழிவு வந்துவிட்டது. அதனை எரித்தாலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அவைதான் பல்வேறு நீர்நிலைகளை அடைத்து வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி எதிர்பாராத அழிவுகளை ஏற்படுத்தி விடுகிறது. அதுபோல் தான் பேராசை எனும் குப்பை வந்தபிறகு மானிடன் ஏகப்பட்ட அழிவுகளைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டான்.
அடுத்தவர்கள் நிலங்களை வளைத்துப்போட்டு தன்னைப் பணக்காரன் என்று காண்பிக்க விரும்புகிறான். பொறாமை என்ற குப்பையால் அடுத்தவர் வளர்ச்சியைத் தடுக்க அவர்களைக் குறை கூறுவது, விலாசம் இல்லாத கடிதத்தால் விமர்சனம் செய்வது, வசதிகளைப் பெருக்க, வரதட்சணை, லஞ்சம் என்ற குப்பைகளை அள்ளுகிறோம். இதனால் நாம் வாழும் தகுதியை இழந்துவிட்டு திக்கற்றவர்களாய் திணறிக்கொண்டிருக்கிறோம்.

குப்பைகள் தேங்கி சாக்கடையானது போல் போதைப் பொருட்கள் நாற்றமடிக்கும் குப்பைகளாய் நம்மை நாரடித்துக் கொண்டிருக்கிறது. குப்பைகள் சாக்கடையாகி கிருமிகள் தொற்று நோயை உருவாக்குவதுபோல போதைப் பொருட்களால் கிரிமினல்கள் ஆகி இங்கு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமைகளால் உலகமே மனித குப்பைகளை மலிவு விலையில் தருகின்றன.
பார்க்கின்ற பொருட்களும், காட்சிகளும் மனதை எவ்வளவு குப்பையாக்கியிருக்கிறது என்று யோசியுங்கள். உடையைச் சுத்தம் செய்து முடியை அலங்கரித்து உடலெல்லாம் நறுமணம் பூச வைத்து அழகு பார்த்த இந்த உலகம் கலாச்சாரச் சீரழிவுகளால் மனசை மட்டும் குப்பையாக்கி விட்டது. வெளிப்புறக் குப்பைகளைச் சுத்தம் செய்ய பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்த மனிதர்கள் மனசைச் சுத்தம் செய்ய என்ன வைத்திருக்கிறார்கள்?

குப்பைத் தொட்டிகளை வண்ண ஆடைகளால் மூடி வைப்பார்களா? ஆனால் கெட்டைதை நினைக்கும் மனசை மூடிய ஆடைகள் அனைத்தும் அப்படித்தானே! வெளிக்குப்பைகளைக் கூட சுத்தம் செய்வதற்கு வேலையாட்கள் இருக்கிறார்கள்! ஆனால் நமது மனம் என்னும் குப்பைகளை அகற்ற நம்மால் மட்டுமே முடியும்! செய்வோமா? போகிப் பண்டிகையைப் புனிதப் படுத்த, போகிப் பண்டிகையோடு நாமும் புனிதமாக மாற நம் மனதிலுள்ள குப்பைகளை மனதார அப்புறப்படுத்துவோம்.
நாமே நமக்குள் கிடக்கும் தேவையற்ற குப்பைகளைக் கிளறுவோம். பாதாளச் சாக்கடையாக அடிமனதில் அழுகிக் கிடக்கும் துர்நாற்றக் குப்பைகளை எப்படி அள்ளப் போகிறோம்? வயிற்றுக்குள்(அல்சர்) புண் இருந்தால் வாய் துர்நாற்றம் அடிக்கும். மனசுக்குள் குப்பை இருந்தால் செயல் எல்லாமே அசிங்கமாக இருக்கும். ஆகவே நாமே பிறருக்கு நறுமணமாகிட நம்மை நமக்குள் இருக்கும் குப்பைகளை நாமே அகற்றிடுவோம்.

கண்ணைக் கவரும் வண்ணத் தோட்டங்களாக பார்க்கிறவர்களுக்கும், பழகுகிறவர்களுக்கும் அன்பை விதைப்போம். இனிமையான சொற்களால் பிறர் இதயங்களில் இனிப்பாய் சுவைப்போம். கொடுக்கும் கரங்களால், தாங்கும் அடுத்தவர் நிலை புரியும் கண்களால் துயர்கேட்கும் காதுகளால், துணைக்கு வரும் கால்களால், இல்லம் என்னும் பானையில் இனிய பொங்கல் சமைப்போம்.
போகியே போய் விடு, எங்களைப் பிடித்திருக்கும் போதைகளும் போய் விடு, அதிகாரப் போதை, பிறரை ஆட்டி வைக்கும் அகங்காரப் போதை, பேராசையால் பிறர் பொருள் கவரும் பித்துப் போதை மனித நேயம் மறந்த மதப்போதை, சமத்துவம் கொடுக்கும் சாதியப் போதை, அரக்கத்தனமான ஆணவக் கொலை காமம், போதை என அத்தனையும் குப்பைகளாக கருதி அப்புறப்படுத்தி எரித்திடுவோம். சமத்துவம் பெருகட்டும் சகோதரத்துவம் வளரட்டும் வாருங்கள் கொண்டாடுவோம் நம்மை வாழ வைக்கும் பொங்கலோ பொங்கல்.
“உடலைச் சுத்தம் செய்ய
பொருட்களை அறிமுகப்படுத்த
விளம்பரத்தில் வந்த பெண்ணால்
மனசு குப்பையாச்சு…!”