27

Mar

2026

கடவுள் இருக்கிறானா?…

தேவதைகளைப் பெற்றெடுத்து தெரு நாய்களிடம் கடிக்கக் கொடுத்துவிட்டு, போராடுகிறோம், பெண் குழந்தைகளை கயவர்களின் கையில் கசக்கக் கொடுத்துவிட்டு கண்ணீரோடு நிற்கிறோம். நீதி கேட்கிறோம் பின்பு வழக்கம்போல் எங்கள் வேலையைத் தொடர்கிறோம். பிறர் வீட்டில் நடக்கின்ற துயரங்கள் எல்லாம் வேடிக்கை பார்க்கும் வாடிக்கை மனிதர்கள் நாமாகிப் போனோம். இதில் பெண்குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு மட்டுமே நெருப்பை அள்ளி நெஞ்சில் போட்டது போல் இருக்கும். மற்றவர்களுக்கு இது ஒரு செய்தி அவ்வளவே!

தூத்துக்குடி அருகே வேடநத்தம் ஊரில் 12ஆம் வகுப்பு மாணவி பிரதீபா மாலைக் கருக்கலில் இயற்கை உபாதையைக் கழிக்க ஒதுங்கும்போது பதுங்கி இருந்த ஒரு மனித மிருகம் அவளைப் பாழ்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விட்டுப் போய்விட்டது. இது நமக்கு ஒரு செய்தி அவ்வளவுதான்.

ஊர் பரபரப்பாகிறது பெற்றோர்களும் மற்றவர்களும் கூடுகிறார்கள். போராட்டங்கள், பின்பு சமரசங்கள், அதிரடிக் கைதுகள் அதோடு அந்தக் கதை முடிந்துவிடும். பிறகு அடுத்த நாடகங்கள் அரங்கேறும், குற்றவாளி வெளியே வருவான். மீண்டும் வேட்டைக்குக் கிளம்புவான். அடுத்து யார் வீட்டில் இழவு விழப்போகிறது? நம்ம வீட்டில் விழாதவரை நமக்கெதுக்கு வம்பு? என்று ஒதுங்கிக் கொள்ளத்தானே உலகம் நம்மைப் பழக்கிக் கொண்டிருக்கிறது.

எத்தனையோ கற்பழிப்புகள்? எத்தனையோ சிதைவுகள் இவையெல்லாம் நம் காதுகளில் விழும்போது கடுகளவும் இதயம் துடிக்காத கல்நெஞ்சராய் மாறிப்போய் விட்டோம் ச்சே… வெட்கமாயில்லை? நீங்கள் எல்லாம் அக்காள் தங்கச்சியோடு பிறந்தவர்கள்தானா? என்று உங்கள் கண்ணாடி முன் நின்று உங்களையே நீங்கள் கேள்வி கேட்டுப்பாருங்கள்?

இதற்கு யார் காரணம்? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். பெண்குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு என்று கட்டிப்போட்டோம். அவள் மனத்திடத்தை குடும்பமானம் என்று சொல்லி சிதைத்து வைத்தோம். பெற்றோர்களே இந்தப் பெரும் பிழை செய்தவர்கள். கரப்பான், பல்லிக்குக்கூட பயப்பட வைத்துப் பழக்கி இருக்கிறீர்களே! நீங்கள் எல்லாம் அப்பன்களா? மானங்கெட்டவர்களே! என்று என் மனசு கேட்கிறது.

ஆண்குழந்தைகளை வளர்க்கத் தெரியாமல் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அவர்களை அவிழ்த்து விட்டு விட்டு பெண்குழந்தைகளைக் கட்டிப் போட்டு அவர்கள் மீது கட்டவிழ்த்து விடும் வன்முறைகளை தடுக்க வழியில்லாமல் தவிக்க விட்டிருக்கிறோம்! ஆம்பளைங்க உசத்தி என்று அராஜகம் பண்ணும் அப்பாக்களும் எதிர்த்துப் பேசினால் குடும்பம் என்னாவது? என்று பொறுத்துப்போகும் பெண்களும் வாழும் வீட்டில் பிள்ளைகள் கற்றுக்கொள்ளும் பாடம்தான் இந்த அத்துமீறலுக்குக் காரணம்.

இப்போது எல்லாக் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டோம். பெண்கள் காட்டுவேலைக்குச் செல்லும்போது தனிமை, இருட்டைக் கண்டு அவர்கள் பயந்ததில்லை மழை, இடியைக் கண்டு மிரண்டதில்லை, பாம்பு, பல்லிகளைக் கண்டு ஒடியதில்லை, ஜல்லிக் கட்டுக் காளையைக் கூட கையில் பிடித்து வந்தாள் நமது தமிழச்சி. ஆனால் இப்போது பள்ளிக்கு அனுப்பும்போது பாதுகாப்பாய் அனுப்புகிறோம் என்ற நிலையில் வாகனத்திலே அழைத்துச் சென்று பள்ளியின் வாசலில் விட்டு வாழ்நாள் முழுவதும் எவரையாவது நீ சார்ந்தே இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குகிறோம். அத்துமீறும் ஆண்களை எல்லாம் செருப்பைக் கழற்றி அடித்த பெண்களை கேள்விபட்டது உண்டா? இப்போது அவர்கள் எங்கே?

இந்தப் பிரதீபாவைச் சிதைத்தவன் தர்ம மூனீஸ்வரன் என்ற குற்றவாளி, இவன் ஏற்கனவே எட்டையாபுரம் அருகில் ஒரு கிழவியை பாலியல் வன்கொடுமை செய்தவன். சிறையிலுள்ளவனை திறந்து விட்டவன் எவன்? இந்தத் தெருப்பொறுக்கியை கண்காணிக்க ஏன் மறந்தோம்? ஜாமினில் வெளிவந்ததாகச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்? ஜாமினில் வெளிவந்தவன் எல்லாம் இன்னொரு தவறு செய்ய வெளிவருகிறான். இதைவிடக் கொடுமை கோயம்புத்தூரில் ஒரு பச்சைக் குழந்தையைக் கசக்கி எறிந்த அந்த பொறுக்கிப் பயலும் இப்போது வெளியே சுற்றிக் கொண்டு இருக்கிறானாம். இதுதான் நமது சட்டம், நமது அரசு! தகுந்த சாட்சியங்கள் இல்லாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் என்று பேனா எழுதப் பழகிய அரசர்களால் குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகிறார்கள்! உயர் அதிகாரிகளே உங்களை ஒன்று கேட்கிறேன். உங்கள் வீட்டில் பெண்குழந்தைகள் இல்லையா? இல்லை இது நமக்கு நடக்காது என்று நம்புகிறீர்களா?

நம் நாட்டில் சட்டங்களில் உள்ள ஓட்டைகள் எங்கள் பெண் குழந்தைகளை நிர்வாணப்படுத்தி பல நிர்பயாக்களை உருவாக்கிவிடுகிறது. ஒரு பெண்ணைக் களங்கப்படுத்தினால் சீனாவில் கொன்றுவிடுவார்கள். ஆப்கானிஸ்தானில் தூக்கிலிடுவார்கள். வடகொரியாவில் துப்பாக்கியால் சுடுவார்கள், சவுதி அரேபியாவில் அனைவர் மத்தியிலும் வைத்து தலையை வெட்டுவார்கள், இந்தியாவில் மட்டும் என்ன சொல்வார்கள் தெரியுமா? அவள் ஏன் இந்த நேரத்தில் அங்கு போனா? அவ உடையைப் பார்த்தாலே எவனும் கையை வைப்பான்! என நாகூசாமல் பேசுவார்கள். உங்களைக் கேட்கிறேன் உங்களுக்குப் பெண்கள் என்றால் கிள்ளுக்கீரையா?

கடமையாற்ற வேண்டிய இரண்டு துறைகள் உண்டு ஒன்று ஆசிரியர் மற்றொன்று காவல்துறை. ஆசிரியர்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தேர்ச்சி அடைய மட்டும் இப்போது கற்றுக் கொடுக்கிறார்கள். காவல்துறை ஹெல்மெட்டு, லைசன்ஸ் இல்லாதவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்கள் அறத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். காவல்துறை அதனைக் கடைபிடிக்க வற்புறுத்த வேண்டும். இவர்களே இப்போது தனக்கேன் வம்பு? என்று தற்காப்பு ஆட்டம் ஆடுவதால் நாடு சுடுகாடாகி நாசக்காரர்கள்; கையில் சிக்கியுள்ளது. அதனால் வீட்டில் வெறிநாய்களும் ரோட்டில் சொறி நாய்களும் பெருகி நம்மைக் கடித்துக் கொண்டிருக்கிறது.

கடைசியாகக் கடவுள்? இதுவரை கடவுளுக்கு கண் உண்டா? என்றார்கள். இப்போ நடக்கிற கொடுமையைப் பார்க்கும்போது கடவுளே உண்டா? அவன் இருந்தால் இவ்வளவு கொடுமைகள் நடக்குமா? எனக் கேட்கத் தோன்றுகிறது.

பல்வேறு கற்பழிப்புகளில் பெண்களும் பிஞ்சுகளும் கதறும்போது ஆபத்துக்களில், விபத்துக்களில் ஆஸ்பத்திரியில் கதறி அழும்போது காதுகேட்காத கடவுள் அப்போது பூமிக்கு வராத கடவுள், சாமியார்களும், பூசாரிகளும் காசுக்காகப் பூசை செய்தவுடன் கடவுள் வருகிறான்! என்றால் நீங்கள் நம்புகிறீர்களா? காதுல பூ சுத்துர வேலைதானே! காசு கொடுத்தால் மட்டும் பூமிக்கு வருகிற அந்தக் கடவுள் வந்தா என்ன? செத்தா என்ன? மேளம் அடிக்கும்போது மனிதர்கள் மீது வருகிற கடவுள் வந்தா என்ன? வராமப் போனா என்ன? வெள்ளத்திலும், தீயிலும் நாம் வீழ்ந்து கொண்டு இருக்கும்போது கோயில் கொடையின்போது மட்டும் கூட வருகிற கடவுள் நமக்குத் தேவையா?

நாம் எல்லோரையும் பார்த்து சிந்திக்க சிலகேள்விகளை வைக்கிறேன். எத்தனை பெண்குழந்தைகள் பிஞ்சுக் குழந்தைகள் கசக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். ஏன் நாம் இன்னும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறோம்?

1.உங்களுக்குப் பெண்குழந்தை இருந்தால்! உங்கள் வீட்டுப் பெண்ணுக்குக் கொடுமைகள் நடந்தால் மட்டும்தான் போராடுவீர்களா?
2.ஆசிரியர்களே! பெற்றோர்களே! ஆண்-பெண் உறவினை ஆழமான நட்பில் வளர்த்தெடுப்பதற்காக, கல்வியில் தேர்ச்சிக்கு உழைப்பதைவிட அவர்கள் வாழ்வியலை எப்போது கற்றுத் தரப் போகிறீர்கள்? நல்லது எது? கெட்டது எது? என்று எப்போது கற்றுக் கொடுக்கப்போகிறீர்கள்?
3.காவல் அதிகாரிகளே! கயவர்களை எல்லாம் கண்முன்னே நடமாட விட்டு விட்டு சாதாரண மனிதனிடம் உங்கள் அதிகாரத்தைக் காட்டுவதை விட்டு விட்டு தவறு செய்பவர்களை கண்டவுடன் சுட்டுத்தள்ள உங்கள் காக்கிச் சட்டைக்கு எப்போது கற்றுத்தரப் போகிறீர்கள்?
4.நீதியரசர்களே தகுந்த சாட்சிகளோ போதுமான ஆதாரங்களோ இல்லையென்று கைவிரிக்கிறீர்களே! கற்பழிக்கும்போதே உங்களைக் கூட்டிக் கொண்டு காட்டச் சொல்லுகிறீர்களா?
5.ஆபத்து நேரத்தில் வராத கடவுளை வந்து காப்பாற்றுவான் என நம்பும் மூடநம்பிக்கைகளை இனியும் வளர்க்கப் போகிறீர்களா? பூசாரிகள் வாழ்வதற்கும் நாம் முட்டாளாக்குவதற்கும் செய்யப்படும் பூசைகளை இன்னும் நம்புகறீர்களா?

எல்லோருக்கும் மனசாட்சி ஒன்று உண்டு மௌனமாக அதனைக் கொஞ்சம் கேளுங்கள் என்னைப் போன்று பெண்குழந்தை வைத்திருப்பவனின் கண்கள் சிவப்பதும், கண்களில் இரத்தம் கசிவதும் அப்போது உங்களுக்குப் புரியும்!

“கருணைக் கொலைக்கு
அனுமதி உண்டோ இல்லையே!
கயவர்களை கொல்லுவதற்கு
அனுமதி கொடுத்தால்
பெண்கள் காப்பாற்றப் படுவார்கள்!”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES