02
Apr
2026

மனித இருப்பை இடம் விட்டு இடம் நகர்த்திக் கொண்டு செல்வது மனிதனுடைய எண்ணங்களும் அவனுடைய பாதங்களும்தான். பாதங்கள் புனிதமாகிவிட்டால் பயணங்கள் புனிதமாகிவிடும். இதனைத்தான் இயேசு எனும் மகான் தன்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவுவதன் அடையாளம் ஆகும். உங்கள் பாதங்கள் பயணப்படட்டும். அது பயணிக்கின்ற இடங்களில் புனிதம் சேரட்டும் நல்லவை நடக்கட்டும் என்பதுதான் அந்தப் பாதம் கழுவும் பரிசுத்த சடங்காகும்.
மகான்கள் மக்களிடையே புகழ்பெறக் காரணம் அவர்களது மக்களை நோக்கிய பயணம்தான். அதுவும் மக்களுக்காக… மக்கள் நலனுக்காக… மக்களைப் பாவச் செயல்களில் இருந்து மீட்பதற்காக… மக்களுக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்வதற்காக… மக்களுக்கு நன்மைகள் செய்வதற்காகச் சென்ற பயணங்களால்தான் அவர்கள் மகானாகப் போற்றப்படுகிறார்கள்.

இயேசு எனும் மகான் இராயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்னும் மக்களை வழிநடத்தும் தலைவராகப் பூமியில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகிறார் என்றால் அவர் வாழ்நாளில் மக்களைத் தேடித் தேடி நன்மை செய்ததுதான். அவரது பயணங்கள் ஒவ்வொன்றும் இன்றும் மக்களுக்குப் பாட போதனையாக இருக்கிறது. அதனால் அவரது பாதங்கள் இன்றளவும் வணக்கத்திற்குரியது.
இராமாயணத்தில் இராமர் காட்டுக்குச் செல்கிறார். பரதன் ஆட்சிக்கு வருகிறார். ஆனால் பரதன் இராமன் செருப்பை வாங்கி வந்து அது அவரது பாதத்தின் அடையாளமாக அரியணையில் வைத்து இராமருடைய பயணம் எதுவோ! அதன்படியே ஆட்சி நடக்கும். எனக்கென்று எதுவும் கிடையாது என்பதுதான் பரதனின் ஆட்சி அமைப்பாகும்.

இராமனின் வரலாறு என்பது அவரது பாதம் கானகம் கடந்ததுதான். அதில்தான் மன்னரது அரண்மனையின் அகங்காரங்களை அறுத்து எறிந்துவிட்டு பலதரப்பட்ட மக்களோடு பயணிக்கச் செய்தது வேடன் குகனின் மனதில் குடி கொள்கிறார். சடாயு என்ற பறவையுடன் சகவாசம், சுக்ரீவனுக்கு மனைவியை மீட்டுத்தருகிறார், இராவணின் கொற்றத்தை அடக்குகிறார். அவரது பாதப் பயணங்கள் கடந்ததில் பலரது துயர் துடைத்த பயணங்களாக அவரது பாதச் சுவடுகள் இன்றளவும் வணங்கப்படுகிறது.
முகமது நபிகளின் வரலாற்றில் முக்கியப் பங்கு அவர் மெக்காவிலிருந்து மெதினாவிற்குச் சென்றதுதான். அது இன்றும் புனிதமாகப் பின்பற்றப்படுகிறது. அவரைப் போல புனிதமான பயணத்தை நம் வாழ்விலும் பின்பற்ற வேண்டும் என்பதுதான். ஓவ்வொரு மூஸ்லிமும் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள்.

புத்தன் அரண்மனையில் இருக்கும்வரை அவன் சித்தார்த்தன் அவன் அரண்மனையை விட்டுக் கிளம்பி ஒரு பயணம் மேற்கொள்கிறான் மக்களை அறியாமை, ஆசையிலிருந்து விடுபட அவன் மக்களைத் தேடிய பயணம்தான் சித்தார்த்தனை இன்று போதிமரத்து புத்தனாகப் போற்றப்பட வைக்கின்றது.
காந்தி மகாத்துமாவாக மாறக் காரணம்! அவர் எவ்வித ஆதாயமும் இல்லாமல் இந்திய மக்கள் விடுதலைக்காக இந்தியா முழுவதும் அவரது பாதங்கள் பயணித்ததால்தான் அவர் இன்றும் மகாத்துமாவாகப் போற்றப்படுகிறார்.

சவேரியார், அசீசி, வீரமாமுனிவரின் பயணங்கள் இந்தியாவில் இன்னொரு ஆன்மீகத்தை விதைத்துச் சென்றது. அலெக்சாண்டர், நெப்போலியன், செங்கிஸ்கான், இராசராச சோழன், சேர, சோழ, பாண்டியர்களின் பயணங்கள் வரலாறானது. கொலம்பஸ், வாஸ்கோடகாமா போன்ற மாலுமிகளின் பயணம் புது மறுமலர்ச்சியைத் தந்தது.
உங்கள் பாதம் உங்களை ஆலயத்திற்குச் சுமந்து வந்ததால் நீங்கள் நல்ல மனிதராக அடையாளம் காட்டப்படுகிறீர்கள். அதே பாதங்கள் உங்களை மதுபானக் கடைக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் சமுதாயத்தால் வெறுக்கப்படுகிறீர்கள்.

உங்களுக்காக உங்கள், பாதங்கள் உங்களைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றது. வேலைக்கு அழைத்துச் சென்றது உறவுக் காரர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றது. அவையெல்லாம் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் உட்கார வைக்க உங்கள் பாதம் உங்களுக்காக மட்டும் நடந்தது.
நம் பாதங்கள் பிறருக்காகப் பயணிக்கும் போது கடவுள் பாதங்களாகக் காட்சி தருகிறது. கடவுளுக்குப் பிடிக்காத ஒன்று கடவுள் வழி நடப்பதை பாதங்கள் மறந்து கடவுளைத் தொழுவதற்கு கைகளைப் பயன்படுத்துவது செயல் இல்லாமல் நடிக்கின்ற நாடகம் ஆகும். இயேசுவின் எண்ணங்கள் என்பது அவரைப் பின்பற்றுகிறவர்களை; மக்கள் பணிக்காக மக்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்பதுதான். நாம் இருக்கும் இடத்திற்கு மக்களை அழைக்கக் கூடாது நாம்தான் தேடிச்செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தொழுகைக் கூடங்களை இடித்துவிட்டு அழுகையோடு இருக்கிற மக்களின் துயர் துடைக்கச் சொல்லுங்கள் என்று அறைக்கூவல் விடுகிறார்.
தான் இருக்கும் வரை நல்ல வழி காட்டிவிட்டோம். நாம் இறந்த பிறகு தனது சீடர்களின் பயணம் கறைபடியாத, பாவமில்லாத பயணமாக இருக்க வேண்டும் என்பதற்காக இயேசு தன் இறப்பின் முதல் நாளில் சீடர்களின் பாதங்களைக் கழுவி புனித பயணத்திற்கு புறப்பட்டுச் செல்லுங்கள் என அனுப்பி வைக்கிறார்.

அக அழுக்கு, புற அழுக்கு என இரண்டு உண்டு. புற அழுக்குகள் தாக்காதபடி பாதத்தைப் பாதுகாக்க செருப்பு அணிகிறோம். அதிலிருக்கும் அழுக்குகள் வீட்டிலோ, கோவிலிலோ நுழைந்துவிடாதபடி செருப்பை வெளியிலேயே விட்டுவிடுகிறோம். ஏனென்றால் பாதம் புனிதமாக எங்கும் இருக்க வேண்டும் என்பதுதான்.
பிஞ்சுக் குழந்தைகளை யாராவது கையில் வைத்திருக்கும்போது அதன் காலைத் தொட்டு முத்தமிடுவதும், குழந்தை முதலில் தொட்டிலில் தூங்கும்போது காலை வெளியே நீட்டும்போதும் மதலேன் மரியாள் என்ற பெண்மணி தன் பாவத்தை நீக்க அவள் இயேசுவின் பாதத்தைக் கழுவி முத்தமிடும்போதும், வேலை, திருமணம், வெளியூர் செல்லுதல் போன்ற நிகழ்வில் புது வாழ்வைத் தொடங்குகின்ற ஒவ்வொருவரும் பெரியோர்களின் பாதங்களைத் தொட்டு வணங்குவதும் பாதங்கள் புனிதமானது புனிதப் பயணம் புறப்படட்டும் என்பதன் அடையாள<மாகும்.

தேடிவரும் பாதங்கள் எல்லாம் நம் தேவைகளை நிறைவேற்றாது. இப்போது தேர்தல் நேரம். நம்மைத் தேடிவருகிற பாதங்கள் தாங்கள் தேவைக்காக நம்மைத் தேடி வருகிறார்கள் புரிந்து கொள்வீர்கள்! எண்ணங்கள் எவ்வளவுதான் தீயதாக இருந்தாலும் பாதங்கள் அதனைச் செயல்படுத்தாவிட்டால் பாதிப்பாவங்கள் குறைந்துவிடும்.
நம் பாதங்கள் அதிகமாகப் பயணிக்கட்டும் பாதுகாத்துக் கொண்டு இருக்காதீர்கள். செருப்பு அதற்கு சிம்மாசனமாக இருக்கக்கூடாது. பாதுகாப்பு என்று வந்த செருப்பு அழகு சாதனமாக நம் பாதங்களை அடிமைப் படுத்திவிட்டது. நம் முன்னோர்களின் பாதங்கள் கல்லையும், முள்ளையும் கடந்து வந்தது. சுடுமணலிலும், கடும் குளிரிலும் சுகமாய்ப் பயணித்தது. ஆனால் இப்போது பலருக்குப் பாதங்களே இல்லை. செருப்புத்தான் அவர்களைச் சுமந்து செல்கிறது. சிறு குழந்தைகள் எப்போது வீட்டுக்குள்ளேயே முடங்கியதோ அப்போதே அவர்கள் சிறகுகள் முறிந்து ஊனமுற்றோர்கள் ஆகிவிட்டார்கள். அவர்களை மீண்டும் வீதியில் விளையாடச் சொல்லுங்கள். பல விலாசம் தெரியாதவர்களுக்கு வழிகாட்டட்டும்.

சரி உங்கள் பாதங்கள் இது வரை பயணித்ததை எண்ணிப் பாருங்கள். உங்களுக்காகவா? பிறருக்காகவா? ஆடம்பரத்திற்காகவா? அரசியலுக்காகவா? ஆன்மீகத்திற்காகவா? பொழுதுபோக்கிற்காகவா? உங்கள் பாதங்களை ஒருமுறை ஊற்றுப்பாருங்கள். உங்கள் பாதத்தில் இருக்கின்ற பாவத்தை இப்போதே கழுவுங்கள். இனி நீங்கள் செல்லும் பயணம் புனிதப் பயணமாக இருக்கட்டும். பிறர் நலம் பேணுபவராக இருந்தால்? அவர்கள் பாதத்தையும் சுத்தப்படுத்தி அவர்கள் நல்ல பாதையில் நடக்க வழிகாட்டுங்கள்! வாழ்ந்தும் காட்டுங்கள்.
“பாதங்கள்…
சேற்றில் இறங்காவிட்டால்?
கரங்களுக்கு…
சோறு கிடைக்காது”