17
Apr
2026

நாடெங்கும் சூடாகி நாமெல்லாம் வியர்க்க விறுவிறுக்க வீதியில் வேட்பாளரோடும் பொதுக் கூட்டத்தில் வாக்காளராகவும் இருவேறு அவதாரங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறோம் நான் தான் இங்கு எல்லாம். நான் சொல்வதே சட்டம்! என்று ஆட்சி செய்கிற சர்வதிகார ஆட்சி இல்லாமல் மக்கள் தாங்களுக்குத் தேவையான தலைவரை தாங்களே தேர்ந்தெடுப்பது தான் மக்களாட்சி ஆகும்.
மக்கள் தாங்களுக்குக் கொடுக்கிற ஓட்டு உரிமையை மதித்து முறையாகப் பயன்படுத்தி காலத்தின் தேவைக்கு ஏற்ப அந்தச் சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் கூறுவேன். சுற்றி நான்கு சுவருக்குள் சுகபோகமாக வாழ ஆசைப்படுகிறார்களே தவிர வீதியில் அனைவரும் கலந்து யாரும் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் ஒருவர் வளர்ச்சிக்கு ஒருவர் உதவும் வகையில் ஒரு உன்னதச் சமுதாயத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற பொதுநலம் நமக்கு இல்லாமல் போய்விட்டது.

காமராஜரைப் போல் ஒரு தலைவன் இல்லையே! என ஏங்கும் இச்சமுதாயம் காமராஜர் வாழ்ந்த காலத்தில் இருந்த வாக்காளர்கள்போல இப்போது இல்லையே? என்று யாராவது வருத்தப்பட்டது உண்டா? அடிப்படையே இங்கு தவறாகிப் போய்விட்டதே! அதனை சரிசெய்ய வேண்டும் என்று எங்காவது யாராவது கேள்வி எழுப்பியது உண்டா?
எத்தனையோ நாடுகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இல்லாமல் அடக்குமுறைகளில் அடிமையாய் வாழும்போது இந்தியத் திருநாட்டிற்குக் கிடைத்த இறைவனின் வரம் இந்த வாக்கு உரிமை. இதனைச் சரியாய் மனச்சாட்சியோடு வாக்களித்து மனச்சாட்சிக்குப் பயந்து நல்ல தலைவனைத் தேர்ந்தெடுக்க நாம் நமது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் நமக்குக் கொடுத்த இந்த வாக்குரிமை என்ற வரப்பிரசாதத்தை நாம் ஏன் தவறவிடுகிறோம்? என்று யோசித்துப் பாருங்கள் எந்தெந்த இடங்களில் நாம் தவறு செய்கிறோம்? என்பதனைக் கண்டுபிடியுங்கள் சரிசெய்து விடலாம்.
முதலில் நாம் செய்கிற மிகப்பெரிய தவறு கட்சி மனப்பான்மை. கட்சி என்பது ஒரு தலைவரை மையப்படுத்தி வருவது. அந்தத் தலைவர் மீது நாம் கொள்கிற வெறித்தனமான அன்பினால் அவர் ஏதாவது வேட்பாளர் என்று ஒரு குப்பையைக் கொண்டு வந்து நம் மடியில் கொட்டினாலும் அதனை நாம் கோபுரத்தில் கொண்டு வைத்து கும்பாபிசேகம் நடத்துகிறோம்.

ஆகவே தலைவர் மீது உள்ள அன்பைக் குறைத்துக் கொள்ள வேண்டாம். அது இருக்கட்டும் அதற்காக அவர் மனைவி, குழந்தை, சின்னவீடு, பெரியவீடு, எடுப்பு, தொடுப்புகளுக்கெல்லாம் எடுபுடியாய் இருக்க வேண்டுமா?. அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்! என்று தலைவரைத் தாங்கிப் பிடிக்காமல் எனது தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதனைத் துணிந்து சொல். அதில் கடுகளவும் தவறினால் என் கால் தூசியை விடக் கேவலமாக மதிப்பேன் என்பதை உரக்கச் சொல். அப்படி நடந்தால் பொது வாழ்க்கையில் ஒவ்வொருவனும் புனிதத்தைக் கடைபிடிப்பான்.
சாதியைப் பிடித்துக் கொண்டு திரிகிற இம்மக்களை விட்டு சற்றுத் தொலைவில் நில். முட்டாள்களை மடக்குவதற்கு ஒரே வழி நீயும், நானும் ஒரே சாதிதான் என்ற ஒற்றை வார்த்தையில் அவனை உருட்டிவிடலாம். சிந்திக்கத் தெரியாத முட்டாள்களைச் சற்று உற்றுப்பாருங்கள். அவர்கள் சாதி என்றுச் சாக்கடையில் குடியிருப்பார்கள். வேட்பாளர் எங்க ஆளுங்கதான் என்று குறுகிய மனதோடு சமுதாயத்தை கெடுத்துக் கொண்டிருப்பார்கள். சாதி ஒட்டு, சாதி வேட்பாளர், சாதி ஒதுக்கீடு எனும் சாக்கடையில் நீங்களும், நானும் இருக்கிறவரையில் தலைநிமிர்ந்துப் பார்க்கத் தெரியாமல் சாக்கடைகளே சொர்க்கம் என்று நினைக்கும் பன்றிகளுக்குச் சமம்.

மதம் என்பது சமீப காலமாக நமக்குள் முளைத்து வந்த சமுதாயக் கொல்லி. இது படிப்பறிவு இல்லாத மக்களிடத்தில் பக்தி என்ற பெயரில் பற்ற வைக்கும் நெருப்பு. இது எளிதில் பற்றிக் கொண்டு எல்லோரையும் எரித்து வருகிறது. அரசியல் என்பது முட்டாள்களின் சதுரங்கம் என்பதால் அது எளிதில் அரசியலில் பற்றிக் கொள்கிறது. மதவெறி உருவாகி மக்களுக்குள் பிரிவு வந்தால் இரத்தம் குடிக்கும் ஒநாய்களாக அரசியல்வாதியும் மதவாதியும் அலைவதால் முட்டாள்களால் எளிதில் ஆட்சியைப் பிடிக்க முடிகிறது.
கொடுக்கிற காசினைவிட அதிகமாகக் கூவுகிற சமுதாயமாக நம் தமிழ் சமூகம் மாறிவிட்டது. இதனால் ஒட்டுக்குக் காசு என்றவுடன் நல்லவன், கெட்டவன் தெரியாமல் வாங்கிய காசுக்கு உண்மையாய் இருக்கிறேன் என்று அயோக்கியர்களை அரியணை ஏற்றும் அசிங்கத்தைச் செய்கிறோம்.

அரசியல் நம் நாட்டைப் பொறுத்தமட்டில் சுதந்திரத்திற்குப் போராடிய தியாகிகள், வீரர்கள் வழியில் வந்தது. காமராஜர் ஐயாவிற்குப் பிறகு அது காணாமல் போய்விட்டது. இருப்பினும் வெள்ளை உடையில் வருவார்கள் பெரியோர்கள் வந்து ஓட்டுக் கேட்பார்கள் என்று இருந்த சமூகம் இப்போது விடலைப் பயல்களும், விசிலடித்தான் குஞ்சுகளும், தலைவனுக்காய் ஊளையிடுகின்ற தறிகெட்ட தறுக்கர் கூட்டமாய் மாறிப்போனது. இந்தக் காட்சியெல்லாம் பார்க்கும்போது நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்களும் நானும் இந்தத் தலைமுறையை சரியாய் நாம் வளர்க்கவில்லை என்ற குற்றப்பழி உணர்வு நம்மைக் குத்துமல்லவா?
நமக்குத் தேவையான தலைவர்களை திரையரங்கில் தேடக்கூடாது. அவர்கள் நடிகர்கள் பிரமாதமாக நடிப்பார்கள். காட்சி முடிந்த பிறகுதான் தெரியும் நம்ப காசுதான் காணாமல் போயிருக்கும். எல்லோரும் சொல்வார்கள் நடிகர்களை நம்பி ஏமாறாதீர்கள் என்பார்கள். ஆனால் ஏமாறுவது மக்களல்ல நடிகர்கள்தான். ஏனென்றால் எல்லோரும் தன்னையும் எம்.ஜி.ஆர் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் அரசியலுக்கு இந்த இரசிகர்களை நம்பி வந்து தெருவிற்கு வந்து திரைப்படமும் இல்லாமல் இன்று அட்ரஸ் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் பல கதாநாயகர்கள். பட்டும் புத்திவராதவர்கள் படங்களின் கதாநாயகர்கள் மட்டுமே!

ஆகவே உங்கள் விரல்களில் ஓட்டுப்போடும்போது தடவுகின்ற மை விரலை மட்டுமே கரைபடுத்தட்டும் கரையில்லாத மனிதர்களை உங்கள் விரல்கள் அடையாளம் காட்டட்டும் கட்சி, சாதி, மதம், நடிகர் என்ற அடையாளமும் இல்லாத நீங்கள் வாழும் பகுதிகள் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க எவர் உகந்தவரோ, ஏற்றவரோ, நல்லவரோ அவரைத் தேர்ந்தெடுங்கள். நல்லவர்கள் அரசியலில் காணாமல் போகிறார்கள் அல்லது கண்டு கொள்ளாமல் ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களை நீங்கள் அடையாளம் காட்டுங்கள். பணம் உள்ளவர்களுக்கே கட்சியில் சீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் சீட்டைக் கிழியுங்கள்.
இந்தத் தேர்தலில் நாம் பரதனைப் போல் புனிதத்தைத் தேடுவோம். இராமனில் செருப்பைக் கூட நாற்காலியில் அமர்த்தும் நல்லதைச் செய்வோம். ஆனால் சாதியை, மதத்தை, கட்சியைப் பற்றி அதன் செல்வாக்கில் குளிர் காய்பவனாகப் பணத்தை வீசி பதவியைப் பிடிக்கலாம் என்று நினைப்பவனையும் மண்ணைக் கவ்வச் செய்வோம் என்பதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் ஒரு விரல் புரட்சி இந்த உலகிற்கு வெளிச்சத்தைக் கொண்டு வரட்டும்!
“கைரேகை வைத்து
திருடர்களைக் கண்டோம்
கையில் மைவைத்தா
திருடர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்!”