சோளக் காட்டுப்பொம்மை…

Posted on : 11-May-2024

விடுமுறைக் காலம் எப்போதும் என் சொந்த ஊருக்குச் செல்வது எனக்குப் பிடிக்கும். ஊருக்குச் சென்றால் குழந்தைகள் அனைவரும் தோட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் நானும் ஒரு நாள் குழந்தைகளோடு தோட்டத்திற்குச் சென்றேன். அங்கு மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. நான் மாமரத்தடியில் நின்று கொண்டிருக்க குழந்தைகள் தோட்டத்திற்குள் விளையாடுவதற்காக ஓடியது. அங்கு பழமரங்கள் இருந்தன. எலுமிச்சைத் தோப்பு இருந்தது. நெல் வயல்கள் இருந்தது.

திடிரென்று என் பையன் எதையோ ஒன்றைக் கண்டு மிரண்டு ஓடிவந்தான். உடனே எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. எதைக் கண்டு இப்படி பயப்படுகிறான்? பாம்போ? எதோ பயமுறுத்தும் விலங்கோ? பயப்படும் அளவுக்கு எதுவும் ஒரு பறவையோ? என நினைத்து என்னப்பா ஆச்சு? என்று கேட்டேன். அவன் எதுவும் பேசாமல் மிரண்டு அந்தத் திசையைப் பார்த்துக் கையை நீட்டினான். அவன் காட்டிய திசையை நோக்கிச் சென்றேன் அங்கே ஒரு சோளக்காட்டுப் பொம்மை நின்று கொண்டிருந்தது அதனைக் கண்டுதான் பயந்திருக்கிறான்.

இது பொம்மைடா, சோளக்காட்டுப் பொம்மை! உள்ளே ஒண்ணுமே இல்லை வெறும் வைக்கோல் இதுக்கா இவ்வளவு பயப்பட்டே? என்றேன். ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன் பொம்மைதான் சிரித்தது. பின்பு அது பேச ஆரம்பித்தது. எனக்குள் ஓன்றுமே இல்லைதான். ஆனாலும் நான் பலரைப் பயமுறுத்துகிறேன். பறவைகள் எல்லாம் என்னைக் கண்டு பயந்து ஓடுகிறது. அது ஒரு வகையில் மகிழ்ச்சியாகவும், கெத்தாகவும் இருக்கிறது. நான் சொன்னேன் இதெல்லாம் ஒரு பிழைப்பா? உள்ளே ஒண்ணுமே இல்லை ஆனால் பெரிய அலட்டல்! இது உனக்கே நல்லாயிருக்கா? என்றேன் அங்கு மட்டும் என்ன வாழுதாம்! என்று அலட்சியமாகப் பேசியது.

எனக்கு சுரீர் என்று மனசு சுட்டது. மறுபடியும் பொம்மை பேசியது இதேபோல் தான் ஆசிரியர்கள் கண்டு சிலர் பயப்படுகிறார்கள்;. மாணவர்கள் ஆசிரியர்களைக் கண்டு பயந்து ஓடும்போது அவருடைய மதிப்பு உயர்கிறது. ஆனால் அவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது? என்று யோசிக்க வேண்டும். மாணவர்களுடைய அமைதி, பயம், ஒழுக்கம் இவற்றின் மூலம் அறியலாம். இன்றைய மாணவர்களுக்குத் தெரிந்த அளவு ஆசிரியர்களுக்கு தெரியுமா? ஏட்டுச் சுரைக்காய் மட்டும் கறிக்கு உதவாது என்று அவர்களுக்குப் புரியுமா? அவர்களை வழிநடத்தும் அளவிற்கு நடைமுறை அறிவு உள்ளதா? அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் அளவிற்குத் தொடர்ந்து கற்றுக்கொண்டு இருக்கிறார்களா? எத்தனை புத்தகம் படித்திருப்பார்கள்? எத்தனை கருத்தரங்குகள், கருத்துக்கள் கேட்டிருப்பார்கள். எந்தெந்தத் திறன்களை வளர்த்திருப்பார்கள்? என கேள்வி கேட்டுப் பாருங்கள்.

ஆடத்தெரியாது! பாடத்தெரியாது! இசை தெரியாது! எழுதத் தெரியாது, கணினி தெரியாது என்று தொடர்ச்சியாகத் தெரியாது என வைத்துக் கொண்டு ஆசிரியராகி விட்டேன் அதனால் உன்னை மிரட்டுகிறேன் எனச் சொன்னால் இன்றைய மாணவர்கள் மத்தியில் நீ ஒன்றும் இல்லாத சோளக்காட்டுப் பொம்மை தானே? அறிவைத் திரட்ட வேண்டும் ஆணவத்தால் மிரட்டக் கூடாது.

பயணிகளின் தன்மை தெரியாமல் பாதையில் காண்கின்றவர்களையெல்லாம் காக்கிச் சட்டை போட்டிருக்கிறேன் என்ற ஓரே காரணத்திற்காக மிரட்டிக் கொண்டிருக்கிற காவலரும் உள்ளுக்குள் ஒன்றுமில்லாத ஒரு சோளக்காட்டுப் பொம்மைதானே! உங்கள் கடமை உணர்வைக் கொண்டு உங்களை வணங்கலாம், காக்கிச் சட்டைக்காகப் பயப்படக்கூடாது.

தன்னை எப்படியும் காப்பாற்றி விடுவார் என்று நம்பி வருகின்ற நோயாளியை நோயின் தன்மை தெரியாமலும், நோய்க்கு ஏற்ற மருந்தும் புரியாமலும் ஏதோ பரிசோதிக்கிறேன் என்று சொல்லிச்சொல்லி, குணமாக்கி விடுகிறேன் என்று நம்பிக்கை கொடுத்து பிணமாகத் தூக்கிக் கொடுக்கிற மருத்துவனும் ஒரு சோளக்காட்டுப் பொம்மை தானே? நம்பிக்கைக் கொடுங்கள். பிணத்தைக் கொடுக்காதீர்கள்.

திரையில் பறந்து பறந்து அடிக்கிற கதாநாயகன் நீதி நேர்மைக்காகக் குரல் கொடுக்கிற கதாநாயகன், அரசுக்கு வரிசெலுத்தாமல் ஏய்த்துக் கொண்டிருக்கிறவன். தாய்க்காக உருகுவதுபோல் நடித்துவிட்டுத் தாரத்தை விவாகரத்து செய்கின்ற கனவுக் கதாநாயகர்கள் எல்லாம் மனதிற்குள் உண்மையில்லாத சோளக்காட்டுப் பொம்மைகள் தானே! உங்கள் போலிப் பிம்பத்தால் பிறரைக் காலி செய்து விடாதீர்கள்.

வீடு வீடாகத் தேடி மக்களை எல்லாம் வணங்கி உங்கள் உரிமைகளை மீட்டெடுப்பேன் உரிமைகளுக்குக் குரல் கெடுப்பேன் உங்கள் வீட்டுப்பிள்ளையாக உழைப்பேன் என்று உதட்டில் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டு உள்ளத்தில் தொகுதி மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாமல் பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் படுத்துறங்கும் மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் ஒரு சோளக்காட்டுப் பொம்மைகள் தானே! பொய்யான வாழ்வைவிட போய்ச் சேருவது நலம்.

உடையில் துறவறமும் நடையில் போலித்தனமும் வாயில் வேதம் பேசுவதும், வாழ்க்கையில் சாத்தான் போலும், இறைவனைக் காக்க வந்த அவதாரமாகச் சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகின்ற அத்தனை அயோக்கியச் சாமியார்களும் உள்ளுக்குள் ஒன்றுமே இல்லாத சோளக்காட்டுப் பொம்மைகள் தானே! சாத்தானை வேதம் சொல்லலாம். சாத்தானே வேதம் சொல்லலாமா?

பொம்மைகள் பேசப்பேச நான் மிரண்டு போனேன். என் பிள்ளைகள் அதனைச் சரியாகப் புரியாமல் அதை ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தது. நான் பேயறைந்தது போல் நின்றேன் பொம்மை இப்போதும் என்னைப் பார்த்துப் பேசியது. நான் அணிந்து இருப்பது உன்னுடைய பழைய பேண்ட், சட்டை, அதை அணிந்து கொண்டு போனால் உன்னை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று நீ தூக்கி எறிந்ததை அணிந்து கொண்டு நான் பறவைகளை மிரட்டிக் கொண்டிருக்கிறேன். உனக்கு மதிப்பைக் கொடுக்காத ஆடையை அணிந்து கொண்டு நான் மிரட்டலோடு வாழ்கிறேன் என்றால் நான் உன்னைவிட உயர்ந்தவன் தானே? என்றவுடன் நான் உடைந்து போனேன்…

எல்லோருக்குமே காலம் சில பதவிகளையும், பொறுப்புகளையும் கொடுக்கிறது உங்கள் தகுதிக்குத் தகுந்தாற்போல்! என்று சொல்வார்கள் அதோடு நமது பயிற்சியையும், முயற்சியையும் விட்டுவிட்டால் நாம் சுடுகாட்டில் அடக்கம் பண்ணப்பட்டுவிட்டோம் என்று அர்த்தம். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சுடுகாட்டு எலும்புகளாகக் காட்சியளிப்பார்கள். ஒவ்வொருவரும் பொறுப்பான பதவியில் இருக்கும்போது தனக்குரிய தகுதியை தினம்தினம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவரைப் பணமும், பக்கபலமும் பதவியும் மட்டுமே தீர்மானித்தால் அது பக்கவாதம் போல் செயலிழந்து போகும். அறிவும், உழைப்பும் உங்கள் உயரத்தைத் தீர்மானித்தால்தான் அது உங்கள் ஆயுளையும் கடந்து நிற்கும் உழையுங்கள்! உயருங்கள்!

“பதவி இல்லாத தகுதி
பாழுங்கிணறு
தகுதி இல்லாத பதவி
வாழும் பிணம்”