06

Mar

2024

மாதா, மனைவி, மகள் – (மகளீர் தினம்)

ஒவ்வொருவருக்கும் ஒரு தினத்தை வைத்துவிட்டு ஒரு வாழ்த்தையோ, பரிசையோ கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறோமே! இது உதடு ஒட்டாத நன்றியல்லவா மகளிர் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் உயிரில் கலந்த உறவு அல்லவா! என்னைப் பொறுத்தமட்டில் ஆணாய் பிறந்ததற்கு அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் பெண்கள் கொடுக்கும் அன்பை முழுமையாக அனுபவிக்க முடிகிறது. சொர்க்கத்தைப் பூமியிலேயே சுவைக்க முடிகிறது.

உலகில் இருக்கும் ஒவ்வொரு பெண்களையும் ஓடி ஓடி உச்சிமுகர்ந்து உதவி செய்ய முடியாது. வாழ்த்துக் கூறவும் இயலாது. ஆனால் உடனிருப்பவர்கள் உடன் பயணிப்பவர்களுக்கு நாம் கண்டிப்பாக நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் எனக்குத் தெரிந்த அளவு ஆண்களுக்கு அன்பைப் பெறத் தெரிகிறது. ஆனால் கொடுக்கத் தெரியவில்லை, ஆணவம், திமிர், அதிகாரம், ஆணாதிக்கம் இதன் மூலம் பெண்களை அடக்கியாண்டு வன்முறையாலும் வற்புறுத்தலினாலும் பெறத்துடிக்கிறார்களே தவிர சுதந்திரமாய் பறக்க விட்டு இரசிப்பதில்லை. அதன் இறகுகளை ஒடித்து பக்கத்திலே போட்டு பாசத்தைப் புடுங்க நினைக்கிறார்கள். இதுதான் உலகில் உயர்ந்த பாவம்!

பெண்களுக்காக உயிரைக் கொடுப்பேன் என்பார்கள். தன்னைவிட ஒரு அடி வளர விடாமல் தடுப்பார்கள். எனக்கு எல்லாம் என் மனைவிதான் என்பார்கள். மனைவிக்கு எல்லாமே நாம் தான் இருக்க வேண்டும் என்று மற்ற எல்லா வழிகளையும் அடைப்பார்கள். இங்கு கணவன் மனைவி என்பதி இராமன்-சீதை உறவல்ல…! இராவணன்-சீதை உறவு. பல பெண்களைக் கல்யாணம் என்ற பெயரில் சிறையெடுத்து வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். மகள் என்றால் அரக்கனாய் மாறி விடுகிறார்கள். அவர்கள்தான் அவளுக்கு அனைத்தையும் முடிவுசெய்வார்கள், சிவன் தன் மனைவிக்கு உடம்பில் பாதியைக் கொடுத்தான் என்று உரக்கக் கத்துகிறவர்களே. இன்னும் பெண்களுக்கு உயிலில் (சொத்தில்) பாதியைக் கொடுக்க மறுக்கிறார்கள்.

நான் ஆண்மகன் அலுவலகத்தில் ஆயிரம் பெண்களோடு தினமும் அரட்டையடிக்கிறேன். ஆனால் வீட்டில் மனைவியிடம் எங்கே போனே? நான் அலைபேசியில் அழைக்கும்போது நீ யாருடன் பேசிக் கொண்டிருந்தாய்? எதற்கு இவ்வளவு அலங்காரம்? வீட்டுக்கு வருவதற்கு இவ்வளவு நேரமா? எல்லாம் நீயே முடிவு எடுத்துக் கொண்டால் நான் எதற்கு? என்றுதானே என் மனைவியிடம் பேசுகிறேன்? ஊரிலுள்ள பிள்ளைகளையெல்லாம் ஓடி ஓடிக் காதலிக்கிறேன். ஆனால் என் உடன்பிறப்பை யாராவது காதலித்தால் உடனே ஆளை வைத்து மிரட்டுகிறேன். என் மகள் நான் பார்க்கின்ற பையனைத்தான் திருமணம் முடிக்க வேண்டும்! அவள் ஏதாவது முடிவெடுத்தால் நான் ஆணவக் கொலை கூடச் செய்வேன்! எங்கம்மாவிற்கு நான் செல்லப்பிள்ளை ஆனால் என் அம்மா சொல்கின்ற எதுவும் நான் கேட்க மாட்டேன்! இப்போது சொல்லுங்கள்! எனக்கு என்ன தகுதி இருக்கிறது? மகளீருக்கு வாழ்த்துச் சொல்ல!

மூன்று கடவுளைச் சொல்வார்கள் படைத்தவன், காத்தவன், அழித்தவன். என்னைப் பொறுத்த மட்டில் படைத்தவள் தாய், காத்தவள் மனைவி, அடங்கும் வரை வந்தவள் இறுதிச் சடங்குகள் செய்தவள் மகள்! இவர்கள் தானே என் முப்பெரும் தேவியர்! இவர்களைத் தவிர எனக்கு வேறு தெய்வங்கள் இல்லை. ஆனாலும் இவர்களைத் தொழாவிட்டாலும் அழாமல் பார்த்துக் கொள்வதுதானே ஒரு ஆண்மகனின் கடமை! அதற்காகவது அவர்களை நான் வாழ்த்த வேண்டும். வணங்க வேண்டும்!

படிக்கிற காலத்தில் எல்லாம் என்னோடு பழகிற மாணவர்களின் வீட்டிற்குச் செல்லும் போது அவர்கள் அம்மாவெல்லாம் எனக்கும் அம்மாவானார்கள், ஆறுதல் சொன்னார்கள் அள்ளி அணைத்தார்கள் அவர்களையெல்லாம் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் சகோதரி எல்லாம் அவர்களை விட என்மீது காட்டிய பாசம்தான் இன்னும் என் இதயத்தில் ஈரமாய் இருக்கிறது. அவர்களுக்கு உண்ணக் கொடுத்த திண்பண்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து எனக்குத் தின்னக் கொடுத்தார்கள். அவர்களை எப்படி மறப்பது?

என்னோடு படித்த தோழிகள் இன்றுவரை எங்கு பார்த்தாலும் ஓடி வந்து உரிமையோடு ஒருமையில் அழைக்கின்ற அன்பும் உடனே என் குடும்பத்தை விசாரிக்கின்ற அக்கரையும் ஏழு தலைமுறையும் தொடர வேண்டும் என்று எண்ணிப் பார்ப்பேன். பருவ காலத்தில் உருவங்களை இரசிக்கின்ற போதும் அதனை வைத்து காதல் என்று கதை கட்டிய போதும் இதனால் வீடுகளில் திட்டுவாங்கிய போதும் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசுவதும் விட்டுவிலாகமல் இருந்ததும் எப்படி என் தோழிகளுக்கு நான் நன்றி கடன் செலுத்தப்போகிறேன்?

போட்டி பொறாமையால் என் நண்பர்களே எட்டப்பர்களாக மாறி என்னோடு பழகிய சிலரைப் போட்டுக் கொடுத்தாலும் அதனால் சிலருக்கு வலி ஏற்பட்ட போதும் அன்பின் வலிமையை அவர்கள் உணர்த்தியதும் அடிமேல் அடிவிழுந்து அவர்கள் அழுத போதும் எனக்கு மனசு வலித்துவிடக் கூடாது என்று உள்ளே அழுது வெளியே சிரித்து இதயம் வருடினார்களே அவர்களை எப்படி மறப்பது?

உறவுகளைக் கடந்து நாம் சந்திக்கும் ஒவ்வொரு பெண்களுமே நமக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். சிறுவயதில் வழி தெரியாது அழுது கொண்டிருக்கும் போது என்னை விசாரித்து உரியவர்களிடம் ஒப்படைத்தவர்கள், தடுக்கி விழும்போது ஓடிவந்து தாங்கிப் பிடித்தவர்கள், சின்னவயதில் என்னை குளிப்பாட்டியவர்கள், நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றால் உணவு, தின்பண்டங்கள் கொடுத்தவர்கள், முந்தானையால் மூடியவர்கள், மடியில் தூங்க வைத்தவர்கள் மார்பில் அணைத்து கண்ணீர் துடைத்தவர்கள் இவர்களையெல்லாம் எப்படி மறக்க முடியும்?

பணிவாழ்வுக்கு நான் வந்தபோது என்னோடு பயணிப்பவர்கள் எப்படியெல்லாம் என் மீது பாசமழை பொழிகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். உணவுகொண்டு வரும்போது எனக்கு பிடிக்குமென்று உடன் எடுத்து வந்து கொடுத்து மகிழ்கிறார்கள். வீட்டில் செய்தது என்று தன் வீட்டாரோடு நமக்கும் ஒரு பங்கு கொடுத்து மகிழ்கிறார்கள். நல்லது கெட்டதிற்கு நமக்கு உடையெடுத்துக் கொடுத்து அதை அணியும் போதெல்லாம் ரசிப்பார்கள். கவலைப் படும்போது கலகலப்பாய் சிரிக்க வைக்கிறார்கள். பிறர் நம்மைக் குறைசொன்னால் நமக்காக வாதாடுகிறார்கள். நம்மோடு சேர்த்து வைத்து நஞ்சைக் கக்கும்போதும் உள்ளுக்குள் அழுதுகொண்டு நம்மை உடைந்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். வீடு, உறவு, சமுதாயம் அவர்களுக்குப் பல விலங்குகளைப் பூட்டி விமர்சனம் செய்யும்போதும் நமக்காக உழைக்க நாசூக்காகக் கற்றுக் கொள்கிறார்கள். இறைவா இவர்களை இழக்கு முன்னே நான் இறந்து விட வேண்டும். இதைத்தவிர எனக்கு வேறு எந்த வரமும் இப்பிறவியில் வேண்டாம். நான் இதுவரை யாரையும் நான் பெண்களாகப் பார்க்கவில்லை அம்மாவாக, அக்காவாக, ஆசிரியையாக, மகளாக, மருத்துவராக, மனைவியாக, மதினியாக, துணைவியாக, தோழியாக, மகளாக, மருமகளாக, மாணவியாகப் பார்க்கின்றேன். இவர்களையெல்லாம் மகளீர் என்பதால் அவர்களுக்கு என் மகளீர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மனதாரக் கூற வேண்டுமென்றால் பெண்களைப் பொறுத்தமட்டில் பிறருக்காகத் தியாகம் செய்பவர்கள். அந்த அவசரத்தில் தன் கனவுகளைக் கூட காணாமல் செய்து விடுவார்கள். சிலர் அதையும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள் இதுதான் வாழ்க்கை என்று தன்னை குறுக்கிக் கொள்வார்கள். ஆகவே அவர்கள் கனவுகளை நாம் கண்டு அது நனவாக நாம் உடன் இருக்க வேண்டும்.

அக்கனவிற்குக் கணவன் என்ன கடவுளே குறுக்கே நின்றாலும் அப்பன் என்ன ஆண்டவனே வந்து தடுத்தாலும் அவர்கள் உடனிருக்க வேண்டும். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் வெற்றியாகவே நாம் இருக்க வேண்டும் உடல் என் தாய் கொடுத்தது. பழக்கம் என் சகோதிரி கொடுத்தது. என் பக்குவம் என் குடும்பம் கொடுத்தது. ஆனால் நான் அடைந்த வெற்றிகள் நான் வாங்கிய பரிசுகள், பதக்கங்கள், மகிழ்ச்சிகள் என் உடன் இருக்கும் உறவுகள் கொடுத்தது. வாங்கி வாங்கியே ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறேன். இனி நான் கொடுக்க வேண்டும். என் வெற்றியில் ஒளிந்திருக்கிற என் உடன் பிறந்தவர்களுக்கும் உடன்பயணிப்பவர்களுக்கும் மகளீர் தினத்தில் மட்டுமல்ல எப்போது நான் உங்களை மறந்தாலும் உற்றுப் பாருங்கள் என் உடல் மட்டும் உறங்கிக் கொண்டிருக்கும்! உயிர்?

எல்லோருடைய கனவினையும் என்னால் நிறைவேற்ற முடியா விட்டாலும் என்னை நம்புகிறவர்களின் கனவினை நனவாக்கி விட்டே கண்ணை மூட வரம் கொடு கடவுளே!

“தெய்வம் தேவதையெல்லாம்
கோயிலில் இருப்பவர்களல்ல – எனக்குக்
கூட இருப்பவர்கள்”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES