07

Nov

2025

உலகக் கோப்பை – 2025…

சத்தமில்லாமல் ஒரு சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒரு வெற்றி அரங்கேறியுள்ளது. தனது தகுதிக்கும் மீறி சவால்களை எதிர்கொண்டு ஒரு புரட்சியே செய்து முடித்த புதுமைப் பெண்களின் புல்லரிக்க வைக்கும் வெற்றிதான் மகளீர் உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டில் இந்தியப் பெண்களின் வெற்றி. வாழ்த்துக்கள் சகோதரிகளே!

கபில்தேவ், கவாஸ்கர் காலத்திற்குப் பிறகு பலரின் கவனத்தை ஈர்த்த இந்த கிரிக்கெட் விளையாட்டு சச்சின் வந்த பிறகு புதிய சரித்திரம் எழுத ஆரம்பித்தது. அதன்பிறகு வந்த ஒவ்வொரு வீரர்களும் பலரின் கதாநாயகர்கள் ஆனார்கள். ஒவ்வொருவருக்கும் எண்ணற்ற இரசிகர்கள் உருவாகினார்கள். அவர் சாதனையை இவர் முறியடிப்பாரா? இவர் சாதனையை அவர் தகர்த்தெரிவாரா? என்று ஆடுகளமே ரணகளமானது. சில காலக்கட்டத்தில் சில நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் இவையெல்லாம் ஆண்கள் விளையாடுகிற கிரிக்கெட் விளையாட்டுக்கள்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த கிரிக்கெட் விளையாட்டை விளையாடிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அது பாலைவனத்தில் யாரோ பயிர் செய்வது போன்று பாராமுகமாக இருந்தது. காரணம் இதில் 4,6 ஒட்டங்கள் என்பது புகழப்படும். அதற்கு வலுவான ஆட்டம் வேண்டும். 300, 400 ஒட்டம் எடுப்பது என்பது வீரமாகும். அதற்கு நிலைத்து நின்று ஆடவேண்டும். அந்த வீரமும், அந்தத் திடமும் பெண்களிடமும் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் மிக மிகக் குறைவு. அதனால் வீராங்கனைகளின் விளையாட்டுக்களை யாரும் இரசிக்காமல் ஏளனமாய்ப் பார்த்தார்கள்.

பொதுவாகக் கேளிக்கைகளை இரசிப்பவர்கள் ஆண்களாகத்தான் இருப்பார்கள். ஆண்களைப் பொறுத்தமட்டில் இப்படி ஆடை முழுக்க உடுத்தி ஆடும் ஆட்டத்தை இரசிக்கமாட்டார்கள் ஆடை குறைத்து ஆடும் கரகாட்டம், ரிக்கார்டு டான்ஸ் போன்றவைக்கு கூட்டம் அள்ளும். இதனை ஒரு வகையில் எண்ணிப்பாருங்கள். இவர்கள் எல்லாம் என்ன ஆடப்போகிறார்கள் என்று ஏளனமாக எண்ணி பெண்களைப் புறக்கணிப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! இதுதான் ஆண் ஆதிக்கத்தின் திமிர்த்தனம்.

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவில் பெண்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக ஆண்களை அனுசரித்துத்துத்தான் போக வேண்டுமென இந்தச் சமூகம் அவர்களைப் பழக்கப்படுத்தியிருக்கிறது. ஆண்களின் அவசரத்தேவையை நிறைவேற்றவே பெண்களை பயன்படுத்துவது இங்கு ஆண்களின் சாதனைகளாக அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் சாதிக்க வந்தால் அவர்களை அச்சுறுத்துவதும் அதற்கு இந்தச் சமூகம் ஆமாம் சாமியும் போடுவதும் வழக்கமாகிறது.

ஆகவே பெண்களின் சாதனைகள் இந்திய தேசத்தில் மட்டும் எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில்தான் இந்திய வீராங்கனைகள் தாங்கள் வெற்றியால் உலகை உலுக்கி இருக்கிறார்கள். இந்தச் சமூகத்திற்கு ஒரு சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள். ஆயினும் இந்தப் பாழாய்ப்போன சமூகம் அதனை கொண்டாட மறுக்கிறது. அதுவும் சமீபகாலமாக நமது ஆண்கள் அணி இங்கிலாந்திடமும், ஆஸ்திரேலியாவுடனும் மண்ணைக் கவ்வியதால் கிரிக்கெட் இரசிகர்கள் வாய்மூடிக் கிடக்கிறார்கள். அதற்கு பழித்தீர்ப்பது போல் இந்த வெற்றி நமது மடியில் விழுந்தும் மடையர்களுக்குக் கொண்டாட மனமில்லை.

அதே ஆஸ்திரேலியாவை இந்தியச் சிங்கப் பெண்கள் அரையிறுதியில் மண்ணைக் கவ்வ வைத்துள்ளார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவி ஹர்மன் பிரீத் தொடக்கத்திலிருந்தே திட்டமிட்டு அணியினை செம்மையாக வழி நடத்தினார்கள். திட்டமிட்ட இலக்கு, தெளிவான பயணம், தோல்வியைக் கண்டு துவளாமை, விமர்சனத்தைக் கண்டு பின் வாங்காமை, வெற்றியில் மமதை கொள்ளாமை, வெற்றிக்குக் காரணம் தேடுதல், தோல்விக்கு காரணம் சொல்லாமை, இவையே நம் பெண்களின் வெற்றிக்குக் காரணம்.

தொடர்ச்சியாக இந்த உலகக்கோப்பைப் போட்டி துவங்கியதிலிருந்து வெற்றியைக் குவித்து வந்தார்கள். இருப்பினும் ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது போல மீண்டும் தொடர்ச்சியாகத் தோல்வியை அனுபவித்தார்கள். இருப்பினும் அவர்கள் துவண்டு விடவில்லை மீண்டு எழுந்தார்கள் உலகை மிரட்டினார்கள்.அடுத்தடுத்த வெற்றியில் அட்டகாசமாக ஆடினார்கள்.

உங்களுக்குத் தெரியும் இயற்கையே அவர்களைப் பலவீனப்படுத்தி வைத்துள்ளது. குடும்பச் சுமையும் குழந்தைச் சுமையும் அவர்கள் மீது திணிக்கப்பட்டதால் வெளியிடங்களில் வெற்றியில் வாசல் பலமுறைகள் அவர்களுக்கு அடைபட்டே கிடக்கும். இருப்பினும் சில பெண்கள் தாங்கள் இருப்பினைக் காட்ட ஏதாவது ஒன்றை சாதித்துக் கொண்டே இருப்பார்கள்.

நமது அணியில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்களில் ஒருவர் ஸ்ருதி மந்தனா அவர்கள் இளம்வயதிலேயே எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டவர்கள். இவர்களது தொடக்க ஆட்டம்தான் வெற்றியைத் தொடக்கி வைக்கும். இவர்கள் களத்தில் நிற்கும் வரை வெற்றி மாலை நமது தோளில் நிற்கும். இவர்கள் களமாடும் போது எதிர்நாடு கலக்கத்தோடு ஆடும். இதனால் எதிரணி வெற்றியின்போது களங்கத்தோடு வாடும்.

ஒரு வழியாக அரையிறுதியில் ஆஸ்திரேலியாவோடு மோதும்போது நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்கிறார்கள். ஆட்டம் தோல்வியின் தோளுக்குப் போய்விடுகிறது. இனிமேல் இந்தியாவிற்கு வாய்ப்பில்லை என்று எண்ணும்போது ஒரு நம்பிக்கை நட்சத்திரம் நகர்ந்து வந்தது. திடலுக்கு நடந்து வந்தது. அதன் பெயர் ஜெமிமா. இவர்கள் வந்தவுடன் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தார்கள் பந்து வீச்சாளர்களையும் பதம் பார்த்தார்கள்.

புள்ளப் பூச்சிகளுக்கெல்லாம் கொடுக்கு முளைத்த கதையாக சின்ன உருவம் சிறகு விரித்தது. பந்தைத் தூக்கியடிக்கக் கூட பலம் இல்லாமல் காட்சியளித்த ஜெமிமா என்ற வீராங்களை தனது மட்டையால் பந்தைத் தொட்ட போதெல்லாம் பந்து எல்லைக் கோட்டைத் தொட்டு விட்டுத்தான் திரும்பியது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிரடி வேட்கையால் 126 ஒட்டங்கள் எடுத்து அரையிறுதிக்கு நமது அணியை அழைத்து வந்தார். இதே செயலை விராத்கோலியோ, ரோகித்சர்மாவோ செய்திருந்தால் இந்த இந்திய தேசம் குலுங்கி இருக்கும். ஆனால் சத்தமில்லாமல் சாதனை செய்த என் இந்திய மகள் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் இந்தச் செவிட்டுச் சமூகத்திற்கு காதுகளுக்கு கேட்காமலேயே போய்விட்டது.

இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணித்தலைவி லாரா தொடக்கத்தில் இருந்தே தூள்பரத்தி வந்தார்கள். இந்தத் தொடரில் அதிகபட்சம் 571 ஒட்டங்களைப் பெற்று முதல் இடத்தில் இருப்பவர் இவர்கள்தான். இறுதிப்போட்டியிலும் 100 ஒட்டங்களை எடுத்தவர். அந்த நேரத்தில் இவர் கொடுத்த கேட்சை இராதாயாதவ் என்ற வீராங்கனை கடும்போராட்டத்தில் அந்தப் பந்தைப் பிடித்து தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்குச் சாவு மணியடித்தாள். இவளை ஏன் நாம் கொண்டாட மறுத்தோம்! மறந்தோம்! எண்ணிப்பாருங்கள். நமது எண்ணங்களும், சமுதாயமும் கற்றுக் கொடுத்தது பாகுபாடு பார்க்கும் சாக்கடைகளைத்தானா?

இதற்கு முன் பல ஆண்டுகளாக நமது அணிக்கு விளையாடியவர் மித்திலிராஜ் இவரது ஆசையெல்லாம் பெண்கள் ஆடும் விளையாட்டை யாரும் காண வருவதில்லை. ஆகவே ஒரு கவனம் பெறும் வெற்றியை கையில் பிடிக்க வேண்டுமென்று கண்துஞ்சாது போராடியும் கடைசிவரை அவர்கள் கைக்கு அது எட்டவில்லை. அவர்களும் இந்த அரங்கில் இருந்து இந்த விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே நமது சிங்கப்பெண்கள் அவர்களை அழைத்து வந்து இந்த வெற்றிக் கோப்பையைக் அவர்கள் கையில் கொடுத்து மகிழ்ந்தார்கள். அதுதான் பெண்குலத்தின் பெருந்தன்மை. அதனைப் பேணிக்காப்போம்.

இந்த வெற்றியின் நடுவே பிரித்தி என்ற வீராங்கனையை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்தார்கள். அவர்கள் காயம் காரணமாக இந்த விளையாட்டிலிருந்து வெளியே இருந்தாலும் வெற்றிக்கு அவர்களும் காரணம் என்று விராங்கனைகள் அனைவரும் அவரையும் அழைத்து வந்து கொண்டாடித்தீர்த்தார்கள். இந்த வெற்றி விழாவில் நமது விளையாட்டு விரர் ரோகித் சர்மா மட்டுமே வந்து வீராங்கனைகளைப் பாராட்டினார்.

ஆகவே வெற்றி என்பது வரட்டும் அல்லது வராமல் போகட்டும். பாராட்டுவதில் எதற்குப் பாராபட்சம்? போராடும் குணம் புலிக்கு மட்டும்தான் என்று சொன்னால் புத்திகெட்டவர்கள் நீங்கள்! முரசு கொண்டு புலியை விரட்டிய மகளீர் வாழ்ந்த சமூகம் இது. இதனை மறந்து விடாதீர்கள். இப்போது படிப்பில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் பெண்களின் முன்னேற்றமும் முத்திரையும் மறுக்க முடியாத தடுக்க முடியாத ஒன்று. ஆகவே தாராள உள்ளமும் தகப்பன் என்ற எண்ணமும் சகோதர ஒத்துழைப்பும் கொண்டு பெண்குழந்தைகளின் வெற்றியில் பெருமை கொள்வோம்! சிங்கப் பெண்களுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லுகிறேன்.

“ஆணும் பெண்ணும்
ஓண்ணு – இதனை
அறியாதவன் வாயில
மண்ணு.”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES