14
Nov
2025

தலைநகரின் தலைவிதியை யார் தாறுமாறாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் இந்தக் கொலைவெறி? ஏதற்கு இத்தனை குண்டுவெடிப்புகள்? இன்னும் எத்தனை பேரை இந்த வன்முறையின் வாயில் கொடுக்கப் போகிறோம்? இப்படி எண்ணற்ற கேள்விகள் இன்று ஒவ்வொருவரிடமும் எழும்பிக் கொண்டே இருக்கிறது.

கடந்த நவம்பர் 10ந்தேதி தலைநகரில் வெடிகுண்டு ஒன்று காரில் வைத்து வெடிக்கப்பட்டு நகரே தீப்பிழம்பாகக் காட்சியளித்தது. காரணம் என்ன? காவல்துறை,தடவியல் துறை, உளவுத்துறை என அத்தனை துறைகளும் களத்தில் இறங்கி நடந்தது என்ன? குற்றம் செய்தது யார்? என்று ஒரளவு கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
பலருக்கு இங்கு அதிர்ச்சி! காரணம் இதனைச் செய்தவர்கள் மருத்துவர்கள், பொதுவாக இப்படி உயிர்களுக்குச் சேதம் விளைவித்து உணர்வுப் பிழம்புகளால் அழிவினை நடத்தி தாங்களுடைய இருப்பினையும், எதிர்ப்பினையும் தெரிவிப்பவர்கள் தீவிரவாதிகள் என்று கூறுவோம். அவர்கள் எல்லாம் நெஞ்சில் இரக்கம் இல்லாத கல்நெஞ்சக்காரர்களாக மக்கள் விரோதச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள். இங்கு மருத்துவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்பதுதான் மனம் பதைபதைக்கிறது.

உயிருக்காகப் போராடுபவர்களைக்கூட தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஒரு மாலை நேரத்தில் பயங்கரமாக வெடித்துச் சிதறியது. ஒரு சிக்னல் பகுதியில் வண்டி நிறுத்தப்பட்டபோது வெடித்துச் சிதறி இருக்கிறது. இதனால் அருகில் இருந்த 12 பேர் இறந்துவிட்டார்கள். 27 பேர் உயிருக்காகப் போராடிக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதனை காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது உமர் நபி (28) என்ற நபர்தான் இந்தக் காரை ஒட்டி வந்திருப்பார் என்று நம்பப் படுகிறது. இவருடன் காஷ்மீரைச் சேர்ந்த முசம்பில் அகமது, அதில் அகமது, ஷாஹின் சயித் ஆகிய மருத்துவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த கார் வெடிகுண்டு ஏறக்குறைய 2,900 கிலோ அளவில் இருந்த அமோனியம் நைட்ரேட் என்று அறியப்பட்டிருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் முசம்பில் தந்த தகவலின் அடிப்படையில் லக்னோவில் உள்ள ஒரு பெண் மருத்துவர் ஷாஹின் சயீத் பிடிபட்டுள்ளார். இவரைப் பற்றி அவரது அண்ணன் முகமது சோயில் எனது சகோதரி ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவள் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை அவள் அவ்வளவு அமைதியானவள் என்கிறார். அவரது முன்னாள் கணவர் டாக்டர் ஜாபர் ஹயாத் எங்களுக்கு 2003ல் திருமணம் நடந்து 2012-ல் பிரிந்துவிட்டோம். எங்கள் இரண்டு குழந்தைகளும் என்னுடன்தான் வளர்கிறது. ஆயினும் குடும்பப் பொறுப்பும் குடும்பத்தின் மீது மிகுந்த பற்றும் கொண்டவள். ஆகவே இந்த நாசச் செயலை அவள் செய்வாளா என்றால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என்கிறார்.

இந்தக் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாகக் கூறப்படுகிற முகமது உமர் நபி மற்றும் முசம்பில் இருவரும் அல்பாலா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரிராகப் பணிபுரிந்தவர் ஒருமுறை துருக்கி சென்று வந்த பிறகு இந்த செயலை செய்ய ஆரம்பித்தார்கள் என்கிறார்கள். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது முகாம்கள் அழிக்கப்பட்டதால் அதற்குப் பழிவாங்க இந்த கொடூரச் செயலைச் செய்யத் துணிந்தார்கள் என்றவுடன் மனம் கொதிக்கிறது.
எனக்குள் எழுகின்ற கேள்வியெல்லாம் மருத்துவர்கள் இந்தக் காரியத்தைச் செய்வார்களா? மனிதர்களைக் கொன்று எதனைக் காப்பாற்ற இந்தச் செயலைச் செய்கிறார்கள்? அறுவைச் சிகிச்சை செய்பவர்கள் எல்லாம் உயிரைக் காக்கத்தானே! உயிரைக் காவு வாங்குவார்களா? உயிரைக் காப்பாற்றியவுடன் கையெடுத்துக் கும்பிட்டு கடவுளாக நினைப்பவர்கள் எப்போது எமனாக மாறினார்கள்?

இது யார் செய்த குற்றம்? படித்தவன் குற்றமா? படிப்பித்தவன் குற்றமா? மதங்களுக்குப் பிரமாணிக்கமாய் இருக்கிறோம் என்று சொல்லி இங்கு மனிதர்களைக் கொல்லுவது நியாயமா? மனிதர்களைக் கொல்லுகின்ற மதங்கள் நமக்குத் தேவைதானா?
இதற்குபின் இனி என்ன நடக்கும்! ஒரு மதத்துக்காரர்கள் தான் இப்படிச் செய்துவிட்டார்கள் என்று ஊடக ஒளி முழுவதும் ஒன்றுபோல் பாயும். அந்த மதத்தின் அடையாளங்களை அணிந்தவர்களைப் பார்க்கும் போதெல்லாம் எதிரியைப் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டுமென்று திட்டம் போட்டு இந்த முட்டாள்கள் முழங்குவார்கள். ஏனென்றால் அறிவாளிகளைப் பிரித்தால்தானே முட்டாள்களுக்கு நாற்காலி கிடைக்கும் என்பதால் அவர்களுக்கு மூடத்தன்மையே மூலதானம்.

கற்றவர்கள் பழிச்செயலைச் செய்வார்களா? என்றால் எங்கே இங்கு கற்க விடுகிறீர்கள்? பள்ளிக்குப் பிள்ளையை அனுப்புமுன் சாதியையும், மதத்தையும் சட்டையாய் அணிந்து அனுப்புகிறீர்கள். கயிறுகளும், மாலைகளும் கல்வியைச் சூரையாடுகிறது. கோவில் கொடை இல்லாத நாட்களில்தான் பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். நோன்பு, வழிபாடு, விரதம், நேர்ச்சைகள் நாளில் எல்லாம் நாங்கள் பள்ளியோடு பகைத்துக் கொள்வோம். பள்ளி பல அடையாளங்களைக் கொடுத்தாலும் எங்களது சாதி, மத அடையாளங்களை இவர்கள் தொட்டால் கல்வி நிலையம் காணாமல் போய்விடும். ஆசிரியர்களுக்கு மத, சாதி அடையாளம் பூசப்பட்டு தேவைப்பட்டால் போக்சோ சட்டத்தால் பூட்டப்படுவார்கள்.
இந்தியாவில் இந்தச் சூழ்நிலை மாற வேண்டும் என்றால் அரசியல் மாற வேண்டும். அரசியல் மாற வேண்டுமென்றால் அரசியல்வாதிகளை மாற்ற வேண்டும். பிரித்தாளும் தன்மையுடன் பேசும் அரசியல்வாதிகளை ஊரை விட்டே துரத்த வேண்டும். மாணவர்களை மதவாதிகளாக மாற்றும் மடையர்களைக் கொளுத்த வேண்டும். அடுத்தவர்களை அவதூறாகப் பேசுபவர்களின் வாயைக் கிழிக்க வேண்டும் பிற சமயக் கோவில்களை இடிப்பவர்களின் கையை உடைக்க வேண்டும். இதற்கு வரிந்து கட்டி வக்காலத்து வாங்கும் அரசியல்வாதியை உயிரோடு புதைக்க வேண்டும். இது நடந்தால் இந்தியா ஒளிரும்.

இவ்வளவு கோபமும், வன்முறையும் எதற்கு? என் நெஞ்சில்? என்று கேட்கலாம். அவ்வளவு பிரித்து வைத்திருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா என்ற காலம் போய் ஒன்றுபட்ட மக்களை சாதியால், மதத்தால் பிரித்துப் பார்க்கும் பெரிய மனிதர்களின் வேட்டியைப் புடுங்கி வெளியே துரத்த வேண்டாமா?
சாதியையும், மதத்தையும் பேசுகிற பெரிய மனிதர்களே! உங்கள் சாதிக்காரனுக்கு அறுவைச் சிகிச்சை நேர்ந்தால் உங்கள் சாதி இரத்தம் இருந்தால்தான் உயிரைக் காப்பாற்றுவீர்களா? உங்கள் சாதி, மதக் குழந்தைகளுக்கு இலவசக்கல்வியும், எப்போது என்ன மருத்துவம் நேர்ந்தாலும் இலவசமாய் தருகிறோம் என்று சொல்லும் சாதிய மனிதர்கள் உண்டா? சொல்லுங்கள் நாங்கள் உடனே உங்கள் சொல்லைக் கேட்கிறோம்!

மதத்தையும் சாதியையும் வளர்ப்பது மத யானையைப் வளர்ப்பதற்குச் சமம் அந்த மடத்தனமாக செயலை இச்சமூகமும் அரசியல் தலைவர்களும் செய்கிறார்கள். நாம் வைக்கிற நெருப்பு கடைசியில் நம்மையே தின்று விடும் என்று இந்த அறிவீலிகளுக்குத் தெரியவில்லை? ஆகவே புரிந்து கொள்ளுங்கள் கல்வி உங்களை இணைக்கும், சாதிமதம் பிரிக்கும் இதை உணராவிட்டால் நீங்கள் நம்பும் அந்த கடவுள் கூட நம்மை காப்பாற்ற முடியாது. புத்தி இருந்தால் புரிந்து கொள்வோம்!
“கல்வியே பிரித்தால்…
குழந்தைகள் எண்ணாகும்?
கடவுளே வெறுத்தால்…
மனிதனே மண்ணாகும்!”