29

Nov

2025

எனது முதல் காதல்…

அன்புள்ள ஆசிரியருக்கு…

                                              உங்கள் மீது நான் கொண்ட அன்பு, உலகில் உள்ள எதன்மீதும் ஒப்புமை கூறமுடியாத அளவு இருந்தாலும் மார்க் எடுக்காத மாணவன் நான் என்பதால் எப்போதும் என்மீது வெறுப்பாகவும், நெருப்பாகவும் இருந்து சுட்டுக்கொண்டே இருக்கிற என் அன்பிற்கினிய ஆசிரியருக்கு ஒரு கடைநிலை மாணவனின் கண்ணீர் கடிதம் இது.

கல்வி என்பது கற்றலும், கற்பித்தலும் என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்போது எனக்கு கறத்தலும், உரித்தலும் போல் தெரிகிறது. இங்கு மனப்பாடம் செய்கிறவர்கள் மட்டுமே மன்னர்களாக இருக்கிறார்கள். மாற்றிச் சிந்திப்பவர்கள் எல்லாம் மக்கு என்றும் மடையர்கள் என்றும் சொல்லி வகுப்பிற்கு வெளியே நிற்பதும் நிற்க வைப்பதும்தானே வாடிக்கையாக இருக்கிறது. இது வருத்தமாக இருக்கிறது சார்.

ஐயா படிப்பு என்றாலே பரிட்சை என்று எப்போது பழகிப் போனது? ஏன் இப்படி கல்வி பாழாய்ப் போனது? புரியவில்லையே! தொடக்கத்தில் எண்ணும், எழுத்தும் கற்றுக் கொடுத்தார்கள். எழுத்து, கையெழுத்து, பத்திரங்கள், சட்டதிட்டங்கள் என எழுதிப் பழக்கினார்கள். எண் என்பது வாழ்க்கையில் தேவைப்படும் வரவு செலவுகளைப் பார்ப்பதற்கு… இதனால் அவர்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தார்கள். இன்று நடைமுறையில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களெல்லாம் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்களா? அதற்காகத்தான் என்னைப் படிக்கச் சொல்கிறீர்களா? மதிப்பெண்தான் ஒரு மாணவனை உருவாக்குமா? மனம் திறந்து சொல்லுங்கள்.

வாழ்க்கையில் படித்தவர்கள் குறைவாக இருக்கும்போது நாட்டில் ஒழுக்கம் எப்படி இருந்தது? படிப்பு அதிகமாகி அனைவரையும் பள்ளியில் சேர்த்து விட்டோம். அனைவருக்கும் கட்டாயக்கல்வி கொடுத்து கல்லூரி வரை பலரைக் காயப்படுத்தி நமது கருத்தை ஞாயப்படுத்தி சேர்த்து, என்ன பயனைக் கண்டோம்? களவு, கொலை, கற்பழிப்பு இல்லையா? அல்லது கற்றவர்கள் எல்லாம் குற்றவாளிகளே இல்லையா?

நீதிபதிகள், ஆட்சியாளர்கள், தேர்தல் கமிஷன், காவல்துறை, வக்கீல்கள், மருத்துவர்கள் என எல்லாம் படித்தவர்களும் நேர்மையானவர்கள் தானா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். இவர்கள் மீதெல்லாம் உங்களுக்கு வராத கோபம் பரிட்சையில் இரண்டு மார்க் குறைந்ததனால் நான் தேர்ச்சியடையவில்லை! உங்கள் பாடத்தில் உங்களுக்கும் நூற்றுக்கு நூறு கிடைக்கவில்லை பள்ளிக்கும் பாராட்டுக் கிடைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் நான்தான்.. என்பதால் ஏதோ தீவிரவாதியை மிரட்டுவது போல் தினமும் மிரட்டுகிறீர்கள்! நான் உங்கள் மேல் வைத்த பாசமெல்லாம் எனக்குப் பாடம் வராததால் நீங்கள் என்னைப் பார்க்கவோ பழகவோ மறுக்கிறீர்கள்!

சார் உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஒருவனுக்கு முதல் காதல் எதுவென்றால் அது பள்ளியும் ஆசிரியரும்தான்! நாம் பிறந்தது முதல் அம்மாவின் அரவணைப்பில் இருப்போம். எப்போது யார் அழைத்தாலும் அம்மாவை விட்டு வர மறுப்போம். வலுக்கட்டாயமாக யாராவது நம்மைத் தூக்கினால் அழ ஆரம்பிப்போம். அதற்கு அன்பு என்று பெயர். அதனைக் கடந்து அப்பாவின் பாதுகாப்பில் பல்வேறு இடங்களுக்குப் பாதுகாப்போடு சென்று வருவோம். அம்மாவின் அன்பையும், அப்பாவின் பாதுகாப்பையும் கடந்து வெளியே வந்து எந்த ஒரு இடமும் நபரும் நமக்கு மகிழ்ச்சி தரும் என்று நம்புகிறோமோ! அதுதான் நமது முதல் காதல். ஆகவே எனக்கு முதல் காதல் இந்தப் பள்ளியும் ஆசிரியராகிய நீங்களும்தான்!

எனது பாசத்தையெல்லாம் உங்கள் மீது கொட்டினாலும் எனக்குப் பாடம் வரவில்லை என்றவுடன் நீங்கள் என்னிடம் பாராமுகமாக இருக்கிறீர்கள்! பரவாயில்லை எனது முதல் காதல் முற்றிலும் சோகமாகிவிட்டது. ஆயினும் என்னால் நீங்கள் விரும்பியபடி அனைத்தையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க முடியவில்லை. நீங்கள் வெறுத்தாலும் உங்களைத்தான் எனக்கு ரொம்பப்பிடிக்கும்.

நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் மேலதிகாரிகளும், அரசாங்கமும் எங்கள் மார்க்குகளை வைத்துத்தானே மானத்தை வாங்குகிறார்கள். அந்த வலிதாங்காமல் அந்த அழுத்தத்தில்தான் இடியாய் எங்கள் மீது இறங்குகிறீர்கள். நாங்களும் அடியும் அவமானமும் தாங்காமல் அலறுகிறோம். இருப்பினும் கண்டிப்பாக நான் முன்னுக்கு வருவேன். நானடைந்த வெற்றியோடு உங்களை வந்து சந்தித்து உங்கள் மாணவன் என்று உரக்கச் சொல்வேன். ஏனென்றால் இது எனது முதல் காதல்! செத்தாலும் மறக்காது எனைச் சீர்படுத்திய காதல். ஏனென்றால் காதலுக்கு அதன் அர்த்தம் சொல்லிக் கொடுத்தவரையே காதலிக்க வைத்ததுதான் இந்தக் கல்வி.

சார் எல்லோருக்கும் கல்வியைக் கொடுத்து விட்டால் வறுமை நீங்கிவிடுமா? எல்லோரையும் கல்லூரியில் சேர்த்து விட்டால் ஒழுக்கத்தில் உயர்ந்து விடுவார்களா? இங்கு பலபேர் கெட்டுப் போவதே கல்லூரியில் தானே! போதைப் பொருளா? காமக் களியாட்டமா? வரம்பு மீறிய வாலிபக் கூத்தாட்டமா? கல்லூரியில் தானே கற்றுக்கொள்கிறோம்!

பிறகு ஏன் கல்லூரியில் சேர்ப்பதிலேயே கண்ணாயிருக்கிறீர்கள்? நாங்கள் மண்ணாய்ப் போவதற்கு நீங்கள் மடை திறந்து விடுகிறீர்களா? மன்னித்து விடுங்கள் நான் அதிகமாய் பேசியதற்கு!

சார் ஒண்ணு தெரியுமா? மனப்பாடமும் மார்க்கும் மாணவர்களை மதிப்பீடு செய்தபிறகு திறமைகள் எல்லாம் தீயில் திண்ணக் கொடுத்துவிட்டோம். விளையாட்டுகளில் விதி விளையாடிவிட்டது. சகலகலா வல்லவர்கள் எல்லாம் சமாதியாகிவிட்டார்கள். நடனக் கலைஞர்கள் நடைபிணமானார்கள். பலகுரல்(மிமிக்ரி) மன்னர்கள் எல்லாம் பாழாய்ப்போனார்கள். இசைக் கலைஞர்கள் இறந்து விட்டார்கள். இப்போதெல்லாம் படி, படி, படி இதைத்தவிர ஆசிரியர்கள் வாயில் அடுத்த வார்த்தையைக் கேட்டதில்லை மார்க் எடுத்தவன் மதிக்கப் படுகிறான் மற்றவன் மறுக்கப்படுகிறான் இதனை எங்கே போய் சொல்வது? பகவானே…!

சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள் முதல் மதிப்பெண் பெற்றுவிட்டால் அவனைத்தான் வகுப்புத்தலைவன் ஆக்குகிறார்கள். அவனுக்கு ஆளுமை முக்கியம் இல்லை அறிவு முக்கியம் இல்லை. சார் இந்த அளவீடு வந்த பிறகுதான் இந்தியாவின் விளையாட்டுத்துறை வீணாய் போனது, கவிதைகள் எல்லாம் எங்கள் இளைஞர்களின் கருப்பைக்குள் வராமல் மாணவர்கள் மனம் மலட்டுத்தன்மையானது. ஓவியன் எல்லாம் உயிரற்ற படம்போல் உணர்விழந்தான். மாலை முழுவதும் விளையாடினோம் என்று எங்கள் பாட்டி சொல்லும்போது ஆச்சர்யமாக இருக்கும்.

பள்ளியில் கல்வி என்ற பெயரில் கசக்கிப்பிழிவதும் சிறப்பு வகுப்பு என்று அடித்துத் துவைப்பதும் பிறகு டியூசன் என்ற பெயரில் துவைத்துத் தொங்கவிடுவதிலும் நாங்கள் சிக்கி சின்னாபின்னமாகும்போது சிந்திக்க எங்களுக்கு நேரம் ஏது? கடவுளே எங்களுக்குக் கருணைகாட்டி கல்வி என்பது அனைத்தையும் கற்றுக் கொள்வது என்று எங்கள் ஆசிரியருக்கு புரிய வையும். எங்கள் மூளையை அறுத்து பாடப்புத்தகங்களைப் புதைத்து அறுவைச் சிகிச்சை செய்வதல்ல கல்வி. மண்ணைத் தோண்டி பொன்னை எடுப்பதுபோல இருப்பதைச் சுத்தப்படுத்தி, செம்மைப்படுத்தி ஒளிரவிடுவதுதான் கல்வி என்பதனை ஆசிரியருக்குச் சொல்லிக் கொடுங்கள் கடவுளே…!

ஐயா இந்தப் பிறவியில் இழந்ததை அடுத்த பிறவியிலாவது நான் அனுபவிக்க வேண்டும். அடுத்த பிறவியிலும் எனக்கு ஆசிரியராய் நீங்கள்தான் வர வேண்டும். நான் விரும்பியதைப் படிக்கச் சொல்ல வேண்டும். கல்வியில் நான் தோற்றாலும் என் கரம்பிடித்து நடக்க வேண்டும். விரும்பிய திறன்களை எல்லாம் வளர்க்க எனக்கு வேராக, நீராக நீங்கள்தான் இருக்க வேண்டும். கல்லூhயில் சேரக் கட்டாயப்படுத்தாமல் விரும்பிய தொழிலைச் செய்ய எனை விட்டுவிட வேண்டும். படிப்பு வேண்டாம் இதில் பாகுபாடு அதிகம் ஒழுக்கத்தில் உயர, நெருக்கடியில்லாமல் எனை நேசிக்க அடுத்த பிறவியிலும் உங்களுக்காகக் காத்திருக்கும் அன்பு மாணவன்.

                 இப்படிக்கு
கடை நிலை மாணவன்

“புத்தகத்து…படிப்பதற்கு?
புத்தியுள்ள
மாணவர்களுக்கு…!”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES