22

Nov

2025

நாய்கள் ஜாக்கிரதை…!

இதுதான் இன்று நடைமுறைச் சவால். மிகப்பெரிய ஆபத்து நமக்குள் இருந்து நம்மைச் சூழ்ந்து விட்டது. போதுமான விழிப்புணர்வு இல்லாத கூட்டத்தாலும், சமூக அக்கறை இல்லாத காரணத்தினாலும், புரிதல் இல்லாத பொது அறிவினாலும் இன்று ஆதரவற்றவர்களின் அழுகுரல் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது. ஆம் “நத்தத்தில் நாய் பெருத்தது போல” என்று சொல்வார்களே அதுபோல் இன்று நாட்டுக்குள் நாய்களும் அதனால் ஏற்படும் துன்பங்களும் நாளுக்கு நாள் பெருகிவிட்டது.

பிரச்சனைகளைத் தெருவுக்குக் கொண்டு வரக்கூடாது என்பார்கள். ஆனால் பிரச்சனையே தெருவில்தான் இருக்கிறது என்றால் என்ன செய்வது? தெருவெல்லாம் நாய்கள் சுற்றித் திரிகின்றன. எது எப்போது குரைக்கும்? எப்போது கடிக்கும்? என்று இனம் புரியாத பயம் எப்போதும் நம்மைப் பயமுறுத்துகிறது. உடலில் நோய்வாய்பட்டு சொரி நாயாகச் சுற்றிக் கொண்டு நோய்களைப் பரப்பும் நடமாடும் நாய்களும் உண்டு. வெறிபிடித்து அலைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் கடித்துக் குதறும் நாய்களும் உண்டு இவற்றை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்?

ஒரு காலத்தில் போதுமான வசதிகள் இல்லாதபோது இருள் சூழ்ந்த பகுதிகளில் எல்லாம் பேய்கள் இருப்பதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். பேய்களுக்குப் பயந்த காலம் போய் இப்போது நாய்களுக்குப் பயப்படும் காலம் வந்து விட்டது. பேய்களால் பெருந்துன்பம் வந்ததில்லை. ஆனால் நாய்களால் நாளெல்லாம் துன்பம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மனிதன் நாகரீக வளர்ச்சியில் மற்ற உயிர்களிடத்தில் இருந்து வேறுபட்டு வாழும்போது வீடு, காடு முதலிய செல்வங்களோடு வாழத் தொடங்கியவன் நமக்கு உதவியாக இருக்கும் விலங்குகளையும் தன்னோடு வைத்துக் கொண்டான். ஆடு, மாடு, கோழி, வீடு, மனை, மக்கள் என வாழத் தொடங்கியபோது தனக்கு மெய்க்காப்பாளனாகவும், பாதுகாப்பாகவும் நம்பிக்கைக்குரிய விலங்காக நாய்களையும் அருகில் வைத்து வளர்த்து அதனை நம்பி வாழ்ந்தார்கள்.

எல்லா உயிர்களும் அளவோடு இருக்கும் வரையில்தான் எல்லாம் வளமோடு இருக்கும் இங்கு இயற்கையும், அதனை நம்பி வாழும் உயிர்களும் சுழற்சி முறையில் தன்னைச் சுத்திகரித்துக் கொள்கிறது. தாவர உண்ணிகள் காடுகளில் மேய்வதால் காடுகள் அழிந்து விடாது. ஊன் உண்ணிகள் உணவிற்காக வேட்டையாடும்போது தாவர உண்ணிகளின் தரம் அழிந்து விடாது. இது பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தச் சுழற்சி சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் நாகரீகத்தில் வளர்ந்து விட்டோம். பொருளாதாரத்தில் உயர்ந்து விட்டோம். உலகைக் கைக்குள் கொண்டு வந்துவிட்டோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம் வாழ்வியலில் கோட்டை விட்டு விட்டோம். காடுகளை அழிக்க விட்டுவிட்டோம். ஆனால் நாய்களை பாதுகாக்க நாயாய் அலைகிறோம் இன்று கண்ணுக்குத் தெரியாத வெடிகுண்டுகள் நாய்கள்தான். வெடிகுண்டு வெடித்துக் கொல்லும் நாய்கள் கடித்துக் கொல்லும். எனவேதான் இதனைப் பற்றி பலமுறை ஆங்காங்கு எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் வந்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இதைப்பற்றி எழுத பேச வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்படுகிறேன்.

இதனைப்பற்றி இவ்வளவு அவசரமாகப் பேசக் காரணம் நவம்பர் 7ம் தேதி வந்த தீர்ப்புத்தான் அதாவது நாய்களையும், மாடுகளையும் பிடித்து உள்ளூர் காப்பகங்களில் அடைத்து விடுங்கள் என்பதுதான். இது புதிதல்ல ஏற்கனவே ஆகஸ்ட் 11ந் தேதி டெல்லியிலுள்ள தெரு நாய்களை எல்லாம் பிடித்துக் காப்பகத்தில் அடைக்கச் சொன்னார்கள். பிறகு விலங்கு ஆர்வலர்கள் கிளர்ந்து எழுந்தவுடன் முன்னர் இருந்த நடைமுறையே நீடிக்கட்டும் என்ற ஒரு தீர்ப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதாவது நாய்களைப் பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அதே, இடத்தில் கொண்டுபோய் விடப்பட வேண்டும் என்பது. இது அருகிலுள்ள பூடான் நாட்டில் 2009ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு 2023-ல் முடிந்தது. அதாவது 14 ஆண்டுகள் கருத்தடை செய்வித்துத் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களின் எண்ணிக்கை 1.5 இலட்சம்.

ஆனால் அது பரந்து விரிந்த நமது இந்திய நாட்டுக்கு ஏற்புடையதாக அமையாத காரணத்தால் மீண்டும் மூன்றாவது தீர்ப்பு நவம்பர் 7-ல் நாய்களையும், மாடுகளையும் பிடித்து காப்பகத்தில் அடைக்கச் சொல்லி உத்தரவு போட்டுள்ளது. ஆனால் தற்போது விலங்கு ஆர்வலர்களின் எதிர்ப்பு குறைந்துள்ளது. காரணம் அவர்களும் நாயின் தொல்லைகளை ஒரளவு உணர்கிறார்கள் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் அவர்களின் எதிர்ப்பு குறைந்து கொண்டு வருகிறது. இப்போது நாய்கள் மட்டுமே தெருக்களில் குரைத்துக் கொண்டிருக்கிறது.

சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொண்டு விலங்கு வதைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள் நல்லதுதான். அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றால் உயிர்கள் மீது அக்கரை உள்ளவர்கள் உயிர்களைப் பாதுகாக்க உழைக்கிறவர்கள். ஆனால் உங்கள் பார்வைக்கு ஒன்றைப் பதிய வைக்க விரும்புகிறேன் பதில் சொல்லுங்கள்.

இந்திய தேசத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 10,000பேர் நாய்களால் கடிபடுகிறார்கள். ஓர் ஆண்டில் 20,000 பேர் நாய் கடிபட்டு சிகிச்சைப் பலனின்றி இறக்கிறார்கள். அதுவும் சில காட்சிகளை நீங்கள் காணொலியில் பாருங்கள். குழந்தைகளை நாய் எவ்வளவு கொடூரமாகக் கடித்துக் குதறுகிறது. அவர்கள் உயிர்களெல்லாம் உங்களுக்குக் உயிர்களாகத் தெரியவில்லையா? அவையெல்லாம் வெறும் ….?

எத்தனை பசுக்கள், மாடுகள் சாலைகளில் கண்டபடித் திரிகின்றன. அதற்கெல்லாம் இங்கு மேய்ப்பர்கள் இல்லையா? இல்லை அவர்களுக்கு அக்கறை இல்லையா? அறிவில்லையா? இந்த மாடுகளாலும், தெரு நாய்களாலும் எத்தனை இரண்டு சக்கர வாகனங்கள் உருண்டிருக்கிறது. எத்தனை ஆட்டோக்கள் கார்கள் விபத்தினைச் சந்தித்திருக்கின்றன. எத்தனை சாலைகள் இன்றும் இரத்தக் கறையை தாராகப் பூசியிருக்கிறது. இதெல்லாம் உயிர்கள் இல்லையா? இல்லை இதனை உணர்வதற்கு உங்களிடம் இதயம் இல்லையா?

ஏனென்றால் கடிபடுவது எல்லாம் ஏழைக்குழந்தைகள் தானே! எந்தப் பணக்காரன் குழந்தையாவது நாயால் கடிபட்டிருந்தால் உங்களுக்கு அப்போது வலி புரியும். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த நாய்களெல்லாம் யாரோ ஒருவரால் அன்பாக வளர்க்கப்பட்டதுதான். ஆனால் அந்த நன்றிகெட்ட நாய் வளர்ந்தவர்களையே கடித்ததனால் தெருவிற்குத் துரத்தப்பட்டிருக்கிறது. அதுவும் உங்களுக்குத் தெரியவில்லையா? இப்போது ஆங்காங்கு தோன்றியுள்ளக் கோழிக் கடையின் கழிவுகளைத் தின்றுவிட்டு ரத்த வெறிபிடித்து அலையும் நாய்கள்தான் இப்போது குழந்தைகளைக் குதறிக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் நாய்களுக்கு அறிவில்லை! நமக்கு அறிவு இருக்கிறது அதனைப் பயன்படுத்த வேண்டும்.

நீதிமன்றம் நாய்களையும், மாடுகளையும் காப்பகத்தில் அடைக்கச் சொல்லியுள்ளது. இதனை நகராட்சியும், ஊராட்சியும் செய்ய வேண்டும். அவர்களிடம் போதிய நிதி ஆதாரம் இல்லை. இதனை அனைவரும் உணர வேண்டும். ஆகவே நீதிமன்றம் உத்தரவிட்டது. மாநகராட்சி பணியைத் துவக்கி விட்டது என்று நினைத்தால் இன்னும் நமது குழந்தைகளை நாம் இழக்க வேண்டியது வரும். இனியும் நாயைக் காப்பாற்ற நாமே அலைந்தால் நம் வீட்டுக் குழந்தைகளை யார் காப்பாற்றுவது? நாய்களே தின்றுவிட்டுப் போய்விடும். உயிர் முக்கியம் அதைவிட நம் குழந்தைகள் முக்கியம். பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களுக்கு இது புரியும். விரைவில் செயல்படுவோம் விழித்தெழுவோம்.

“மனித உயிர்களைவிட
மகத்தானது
மண்ணில் இல்லை…”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES