27
Sep
2025

மழைக்காலம் வரும். கடும் மழைபெய்யும். பெருவெள்ளம் வரும். அபாயச் சங்குகள் ஒலிக்கும் தாழ்வான பகுதியில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வார்கள். ஆறுகளின் கரைகளில் இருக்கின்ற மக்களைக் காப்பாற்றுவதற்காக அபயக்குரல் எழுப்புவார்கள். இது இயற்கையின் சீற்றம்? இதனைவிடக் கொடியது இன்று இளைஞர்களின் சீற்றம்! இதனை இங்கு புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வெள்ளத்தின் சீற்றத்தைக் கண்டு நாம் வெளியேறி விடுவோம். ஆனால் இந்த இளவல்கள் எப்போதும் நம்மைச் சூழந்து இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வும், வாழ்வியலும் தன்னிலை உணராத காட்டாற்று வெள்ளம்போல் கரையை உடைத்துக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். காட்டாறு எப்படி தன்னையும் அழித்து, தான் சந்திக்கின்ற அத்தனையும் அழித்துவிடும். அதுபோல் தான் இன்றைய இளவல்களின் அர்த்தமற்ற வேகமும், பொறுத்தமற்ற அன்பு, பொறுப்பற்ற சுதந்திரம், பொறுமையில்லாத கோபம், பார்த்துப் பார்த்து வெறுத்துப் போனோம். இவர்கள் சமுதாயத்திற்குள் நுழையும் போதெல்லாம் நம்மைச் சாக்கடை ஆக்கிவிடுவார்களோ என்ற பயமும் வந்து விட்டது.
இவர்கள் இந்த நிலைக்கு வர யார் காரணம்? மழையானது துளியாகத்தான் வரும். பின்பு அது நகர்ந்து செல்லும் அளவிற்கு இணையும். கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுத்து, கரையை உடைத்து, சுற்றியுள்ளவைகளை அழித்து, எதிர்ப்பட்ட உயிர்களை எல்லாம் மூழ்கடித்து, நாட்டை நாசப்படுத்தும். பின்பு சாக்கடையாகி நாற்றமடிக்க வைக்கும்! அதுபோல் குழந்தைகள் துளியில் ஆரம்பித்து, தொட்டிலில் வளர்ந்து, குடும்பத்திற்குள் நடமாடும்போது அதனைப் பாதுகாப்பாக வைத்து தேக்க நீராக வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பம் என்னும் கரை சரியாக அமையாவிடில் அது உடைத்துக் கொண்டு வெளியே வரும்போது சில சாக்கடை நீர்களுடன் அது சங்கமமாகும். அனைவரும் அறுவெறுக்கத்தக்க நிலையில் அது ஓடும். அதுபோல்தான் இப்போது இவர்களது வாழ்க்கையும் அமைந்து விட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது.

இப்போது உள்ள குழந்தைகள், அதாவது நீங்களும் நானும் ஐம்பது வயதினை கடந்து விட்டவர்கள் எண்ணிப்பாருங்கள். அப்போது உள்ளது போல் இருக்கிறார்களா? இல்லையென்றால் அதற்கு யார் காரணம்? பிள்ளைகளா? பெற்றோர்களா? சமுதாயமா? நட்பா? சட்டதிட்டங்களா? நாகரீகங்களா? சமுதாய அமைப்புகளா? ஆய்வு செய்து பாருங்கள். பல்வேறு காரணங்களைக் கூறுவார்கள்.
இப்போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் இருக்கிறார்கள். அதனால் செல்லம் கொடுத்துப் பிள்ளைகளைக் கெடுத்துவிடுகிறார்கள் என்பார்கள். எல்லாக் குழந்தைகளும் அலைபேசியால் கெட்டுப்போகிறார்கள் என்றும் சொல்லுவார்கள். அனைவரும் இணைந்து இந்தச் சமூகத்தை இப்படியே விட்டுவிடுவோம் என்கிறீர்களா? அவர்கள் எப்படியாவது போய்த் தொலையட்டும் என்று விட்டுவிடப் போகிறீர்களா?
என்னைப் பொறுத்தமட்டில் பிள்ளைகள் வளர்ப்பில் பெரும்பங்கு வகிக்க வேண்டியவர்கள் பெற்றோர்களே! பெற்றோர்கள் தங்கள் பொறுப்பினை உணராது பிள்ளைகளை அவர்கள் மனம்போன போக்கில் வளர விடுவதால் வீட்டுச் செடிகள் அழகிழந்து காட்டுச் செடிகளாய் வளர்ந்து கண்ராவியாய்த் திரிகிறது. பெற்றோர்கள் குழந்தைகள் அழக்கூடாது வருத்தப்படக்கூடாது என்று அதன் விருப்பப்படி விடுவதால் அது சமுதாயத்தில் விரும்பாத செயலைச் செய்து சமூக விரோதியாக மாறி பிற்காலத்தில் யாவராலும் வெறுக்கப்பட்டு கண்ணீரில் காலம் தள்ளுகிறது.

பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு தன் குடும்ப நிலையைச் சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். அடுத்தவர்களோடு ஒப்பிட்டு அவர்களுக்கு நாம் என்ன குறைந்தவர்களா? எனத் தேவையில்லாத போட்டியை ஏற்படுத்தாதீர்கள். புலிக்குப் பிறந்தது புலிதான் பூனைக்குப் பிறந்தது பூனைதான்! ஒரு நாளும் பூனை புலிவேசம் போடக்கூடாது. அதனைப் பெற்றோர்களே போட்டு விடக்கூடாது. இப்போதெல்லாம் பெற்றோர்களே பிள்ளைகளுக்கு தமது நிலையை உணர்த்தாமல், தகுதிக்கு மீறி ஆங்கிலப் பள்ளி, ஊடீளுநு போன்ற பள்ளிகளில் நமது நிலை புரியாமல் நாடகக் கம்பெனி என நினைத்துக் கொண்டு இராஜா வேசம் போட விடுவது போல் அமைந்துவிடுகிறது.
நான் எப்பாடு பட்டாவது என் பிள்ளையை உயர்த்த வேண்டும் என்று நினைக்கிறீர்களே! அது உயர்ந்து விட்டதா? நமது நிலை இதுதான் அதனை அடைய வேண்டுமென்றால் நீயும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று சொல்லி வளர்த்தீர்களா? அந்த இடத்தை அடைய வேண்டுமென்றால் நீதான் கடுமையாக உழைத்து அதனை அடைய வேண்டும் என்று உணர்த்தியுள்ளீர்களா? மிக எளிதாக அடைந்த இடத்தை அவர்கள் எளிதாக இழந்து விடுகிறார்கள். இங்கு நமக்குக் கிடைத்த இலவசங்கள்தான் இங்கு ஏகப்பட்ட பிச்சைக்காரர்களை உருவாக்கி இருக்கிறது என்பதனை மறந்துவிடாதீர்கள்.
பிள்ளைகள் இஷ்டப்பட்டதைச் செய்ய விடாதீர்கள். அவர்கள் கஷ்டப்பட்டு எதையும் அடைய வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். இப்போதே பணக்காரப் பிள்ளைகளோடு பழக விடுகிறீர்கள் அவர்களைப்போல் பணத்திமிரில் செய்கின்ற அத்தனையும் இவர்கள் அவர்களுடன் பழகிய திமிரில் செய்கிறார்கள். அவர்களுக்கு கல்வி முக்கியமில்லை. அதனால் அதனைப் பொழுது போக்காகப் பயன்படுத்துவார்கள். அவர்கள்தான் உலகில் முக்கியம். மற்றவர்கள் எல்லாம் அவர்களின் தேவைக்குத்தான் என எண்ணம் உள்ளவர்களோடு பழக விட்டால் அவர்கள் எதைக் கற்றுக் கொண்டு வீட்டுக்கு வரப்போகிறார்கள்! எதைச் செய்தாலும் பணத்தைக் கொண்டு சரிகட்டிவிடலாம் என நினைக்கிறவர்களோடு தோழமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளை காப்பாற்ற எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள்? யோசித்துப்பாருங்கள்.

பள்ளி என்பது புத்தகம் மட்டும் கற்றுத்தருவதல்ல! அங்குள்ள இடம்? ஆசிரியர்கள், நண்பர்கள், அதனைச் சுற்றிய சமூகம் அதற்கு நமக்குத் தகுதியிருக்கிறதா? என யோசித்துப் பாருங்கள். தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தரித்திரம். மேலும் பெற்றோர்கள் இப்போதெல்லாம் குழந்தைகளின் அத்தனை தவறுகளையும் ஆசிரியர்கள்தான் திருத்த வேண்டும் என நினைக்கிறார்கள். ஆசிரியர்கள் கல்வியைப் பார்க்கலாம். பள்ளியில் வைத்துப் பார்க்கலாம்! ஒழுக்கத்தை யார் பார்ப்பது? வீட்டுக்கும், பள்ளிக்கும் இடையில் யார் கவனிப்பது? வீட்டிற்கும், பள்ளிக்கும் சமூகம் இருக்கிறது! இங்குதானே ஏகப்பட்ட தவறுகள் நடக்கிறது. இதனால் காவல்துறை வரை வந்து அரட்டுகிறது.
இப்போது சொல்லுங்கள் இந்தக் குழந்தைகள் இப்படி வளர்வதற்கு யார் காரணம்? வசதியான குழந்தைகளைப் போல் வாழ நினைக்கின்ற குழந்தைகள் ஏழைப் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்துகிறது, கஷ்டப்படுத்துகிறது, வார்த்தையால் காயப்படுத்துகிறது. பெற்றோர்களை ஏளனமாகப் பார்க்கிறார்கள். ஏமாளியாய் நினைக்கிறார்கள். தனக்குத் தேவையானது கிடைக்காமல்; போனால் தற்கொலை செய்யக் கூடத் துணிகிறார்கள். இல்லையென்றால் குறுக்கு வழியில் அடைய நினைத்து குற்றவாளியாக மாறுகிறார்கள்.

இதனால் இளம் குற்றவாளிகள் இப்போது பெருகுகிறார்கள். 2016ஆம் ஆண்டு 32% இருந்தது. 2024-இல்49% மாக இளம் குற்றவாளிகள் பெருகிவிட்டார்கள். இப்போது குற்றங்கள் பெருகிவிட்டது. தனது ஆசையை அடைய இளைஞர்கள், திருடுகிறார்கள், பெண்கள் தன்னை இழக்கிறார்கள். கற்பு காற்றில் பறக்கிறது. ஆபாசத்தோடு அதிக பாசம் வைத்திருக்கிறார்கள். வன்முறை வாடிக்கையாகிப் போனது. பெரியோர்களை மதிப்பதை பிழையாக நினைக்கிறார்கள். பொறுமையில்லை பொறாமை இருக்கிறது அன்பு செத்து அதிகாரம் தலைவிரித்தாடுகிறது. மொத்தத்தில் பிள்ளைகள் என்ற பெயரில் பிசாசுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
குடும்ப வாழ்வு விவகாரத்தில் எழுப்பப்படுகிறது. அன்பு வாழ்க்கை போதையில் அழிகிறது. உயர்ந்த மனிதர்கள் துரோகத்தில் வளர்கிறார்கள். தாம்பத்ய வாழ்க்கை சந்தேகத்தில் சரிகிறது. காதல் வாழ்க்கை தவறான உறவில் தடம்மாறிக் கிடக்கிறது. அண்ணன், தம்பி உறவு அப்பனின் சொத்துக்காய் அடித்துக் கொள்கிறது. எங்கே போகிறது இந்தத் தலைமுறை? இவர்கள் கெட்டுப் போவதற்கும் பட்டுப்போவதற்கும் யார் காரணம்? நாம் தானே! பாசம் என்ற பெயரில் பாசாங்கு செய்வதையும் குடும்பம் என்ற பெயரில் குற்றவாளிகளை வளர்ப்பதையும் நிறுத்துங்கள்.
குடும்பத்தை உணரச் செய்யுங்கள். அன்பு என்பது திருத்துவதற்காக! பொறுமை என்பது யோசிப்பதற்காக, தியாகம் என்பது பிறர் வளர்வதற்காக, அடக்கம் என்பது வளர்ச்சிக்காக, நாகரீகம் என்பது நல்லவற்றைக் கடைபிடிப்பதற்காக, சமூகம் என்பது அனைவரையும் ஏற்றுக் கொள்வதற்காக, கற்றுக் கொடுப்போம். பற்றுத் தவிர்ப்போம் கடமை செய்வோம் மடமை ஒழிப்போம். குழந்தைகள் பயணிக்க பாதைகாட்ட அல்ல பாதையாய் நிற்போம் நாமே அவர்களின் நம்பிக்கையாக நாளும் வளர்வோம்!
“தாய்மடி இருக்க
தலையணை எதுக்கு?
தந்தை சொல் இருக்க
மந்திரங்கள் எதற்கு?”