04

Oct

2025

கரூர் எனும் கறுப்பூர்…

ஒளியில் வந்தவனை வழியில் சந்திக்க, உணர்ச்சி வசப்பட்டு பார்க்க வந்தவர்கள் உணர்ச்சி இல்லாமல் உயிரைப் பறிகொடுத்து தன் குடும்பத்தை இருட்டாக்கிய கொடூர தினமாக கரூர் மாபெரும் பழியை தன் வரலாற்றுப் பக்கத்தில் பதிவு செய்து விட்டது.

அரசியல்வாதிகள் இதனை சதி என்கிறார்கள். ஆன்மீகவாதிகள் விதி என்கிறார்கள். கற்றவர்கள் அனைவரும் காறித்துப்புகிறார்கள். மற்றவர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால் குழந்தைகளை, குடும்பத்தை, உறவுகளை இழந்தவர்களின் கண்ணீரும், புலம்பலும்தான் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கிறது. சூரியன் கூட இப்போது உக்கிரமாய் எரித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு யார் காரணம்? இந்தக் கேள்வியை வைத்துத்தான். ஊடகம் ஒரு வாரமாக உருட்டிக் கொண்டிருக்கிறது. யார் காரணமாய் இருந்தால் என்ன? போன உயிரைத் திருப்பி வரவழைக்க கடவுளா வரமுடியும்? உயிர்கள் தானாகப் பிரியவில்லை. காட்டுமிராண்டிகளின் காட்டுத்தர்பார்களின் நெரிசலில் உயிர்கள் உடலிலிருந்து கொடூரமாக உரிக்கப்பட்டிருக்கிறது. ஒழுக்கம் சிறிது கூட இல்லாத ஓநாய்களிடம் அவர்களின் மமதைப் பசிக்காக பெற்றோர்களே அவர்களிடம் பிள்ளைகளைத் தின்னக் கொடுத்துவிட்டு திரும்பி இருக்கிறார்கள்!

உங்கள் தலைவன் சிங்கமாகவே இருக்கட்டும். சிங்கத்தைச் சந்திக்க கைக் குழந்தையுடன் யாரும் காட்டுக்குச் செல்வார்களா? புத்தியல்லையா? புத்தியில்லாததால் இப்போது உங்களுக்குப் புதல்வர்கள் இல்லை. நீங்கள் செய்த குற்றத்தால் உங்கள் குழந்தைகளை இழந்திருக்கிறீர்கள்.

யாரைப் பார்க்க வந்தீர்கள்? போதி மரத்துப் புத்தனையா? அன்பைச் சொல்;ல வந்த இயேசுவையா? அரக்கனிடம் இருந்து மக்களைக் காக்க வந்த இராமனையா? சகோதரத்துவத்தைச் சொல்ல வந்த நபிகளையா? இதற்காகவா ஊருவிட்டு ஊரு வந்து காத்துக் கிடந்தீர்கள்? உங்களுக்கு ஒரு வேலை இல்லையா?

எதைக் கேட்க வந்தீர்கள்? கீதையின் உபதேசங்களையா? குரானின் தத்துவங்களையா? விவிலியத்தின் முத்துக்களையா? எவனோ ஒருவன் வருவான்! அங்கு இல்லாத யாரோ ஒருவனைத் திட்டுவான்! இந்தக் கெட்ட வார்த்தைகளைக் கேட்கவா பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வந்தீர்கள்? அடுத்தவர்களைக் குறை சொல்லும் அளவிற்கு நம்மோடு எந்த அரிச்சந்திரன் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்?

நாளை தலைவன் வந்தவுடன் நம் வீடு குசேலன் வீட்டினைப் போல் செழிப்படைந்து விடப் போகிறதா? பிறகு ஏன் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வந்தீர்கள்? புத்தி கெட்டவர்களே! இனியும் எத்தனை பிள்ளைகளை இந்த நடிகர்களுக்காக நரபலி கொடுக்கப் போகிறீர்கள்;? நடிகர்கள் ஒரு காலத்தில் நம்மை மகிழ்விக்க வந்தவர்கள் பின்பு பகுத்தறிவு சொன்னார்கள். பல்வேறு பாடங்களை படங்களில் வைத்து பருகக் கொடுத்தார்கள். இப்போது நடிகர்கள் அனைவரும் நாடாள ஆசைப்பட்டதால் அவர்கள் ஆடிய ஆட்டத்தில் நாடு சுடுகாடாகிக் கொண்டிருக்கிறது.

இங்கு யாரைக் குற்றம் சொல்வது? நமக்குப் புத்தியல்லையா? ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. மானிட உயிர்கள் இவர்களுக்கு அரசியல் செய்யத் தேவைப்படுகிறது! இங்கு ஆளாளுக்குப் பேசுகிறார்கள் அதனை அரசியல் என்கிறார்கள். குடிகாரனைவிட, கிறுக்கனைவிட கேவலமாக உளறிக் கொண்டு இருக்கிறார்கள். இதனை உணர்ச்சியற்ற ஊடகங்கள் ஊருக்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஓடி வந்து உதவி செய்வது குற்றமா? அந்த இறப்பைக் கண்டு அழுதால் நடிப்பா? ஆம்புலன்ஸ்களெல்லாம் உளவு பார்க்க அனுப்பப்படுகிறதா? கேமராவிற்கு முன்னால் நடிப்பவர்களால்தான் இவ்வளவு கீழ்த்தரமாகச் சிந்திக்க முடியும்? நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆகலாம்! தப்பில்லை ஆனால் அரசியல்வாதிகள்தான் இங்கு நடிக்கக் கூடாது. அதைவிட அசிங்கமானது இந்த உலகத்திலே கிடையாது.

ஒரு நல்ல மரணத்திற்கு கூட்டம் தான் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும். ஆனால் ஒரு கூட்டத்தைக் கூட்டி மரணத்தை வரவழைக்கும் இந்தச் சாக்கடைகளை என்னவென்று சொல்வது? இதனை நா கூசாமல் யாரோ செய்த சதி என்று வேறு உளறிக் கொட்டுகிறார்கள். ஒரு கூட்டத்தில் உயர்ந்து நிற்பவன் தலைவனல்ல! ஒரு கூட்டத்தை தனது கட்டுக்குள் வைத்திருப்பவனே தலைவன் கட்டுப்பாடற்ற கூட்டத்தை நாட்டுக்குள் நடமாட விட்டது யார் குற்றம்? சிந்திக்க வேண்டும்.

இனியும் எந்த அரசியல்வாதியாவது காசு கொடுத்து கூட்டத்திற்கு அழைத்தால் உங்கள் கட்டைச்(இறுதிச்சடங்கு) செலவிற்கும் காசு வாங்கிவிட்டுச் செல்லுங்கள். இல்லையென்றால் உங்கள் இறப்பு இருப்பவர்களுக்குப் பாரமாகிவிடும். எவன் அழைத்தால் என்ன? இனிமேல் எமன் அழைக்கிறான் என்று எண்ணிக் கொள்ளுங்கள். கூட்டத்திலேயே ஒரு மாலையை வாங்கிக் கொண்டு சவக்குழிக்குள் சென்று படுத்துக் கொள்ளுங்கள்.

கரூரில் நடந்தது படுகொலைதான் அதனை கவனக் குறைவால் செய்து விட்டும் இன்னும் வீரம் பேசிக் கொண்டிருந்தால் உங்களுக்குப் பக்குவமில்லை என்று அர்த்தம். தோல்விகளையும், தவறுகளையும் ஒத்துக் கொள்ளாதவன் தலைவனாக இருக்க முடியாது. தறுதலையாகத்தான் இருக்க முடியும். அவனைப் பின்பற்றுகிறவர்கள் பொறுக்கிகளாகவும், போக்கிரிகளாகவும்தான் இருப்பார்கள். அந்தக் கூட்டம் வீட்டுக்கு அடங்காத விடலைப் பயல்களை அடையாளம் காட்டும்.

ஒரு நல்ல நடிகன் நீங்கள் அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். நாடாண்டு தான் நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் உடைத்து எறியுங்கள். நீங்கள்; சின்ன வயதில் உடன்பிறப்பை இழந்தவர். இறப்பின் இழப்பு எவ்வளவு வலி என்பது உங்களுக்குப்; புரியும் இதோடு இதனை நிறுத்திக் கொள்ளுங்கள். அரசியலையும், இந்த அழிவுகளையும் யாரோ எழுதிக் கொடுப்பதை கேமிரா முன் நடிக்கலாம். வசனங்களாக முழங்கலாம். இப்போது நீங்கள் பேசுகின்ற பேசுவதாக ஊடகம் உளறிக்கொட்டுவது விசமாக இருக்கிறது.

நீங்கள் கதாநாயகனாகவும், எதிர்கட்சிகள் வில்லனாகவும், நீங்கள் தோல்வியுற்றதாகவும், உடனே வீறுகொண்டு வீரவசனம் பேசி எதிரிகளை அழிக்க பழிகளைத் தானே ஏற்பதுபோல படத்திற்கு நல்லா இருக்கும். இன்னும் இதற்கும் நடிக்க வேண்டாம் யதார்த்திற்கு வாருங்கள். உங்கள் மீது மக்களுக்கு ஒரு மரியாதை உண்டு உங்களின் விடாமுயற்சி பல்வேறு தடைகளைத்தாண்டி நீங்கள் அடைந்த வெற்றி எல்லோருக்கும் ஒரு ரோல் மாடலாகத் தெரிகிறது. ஆனால் உங்களது அரசியல் வருகை இந்நிகழ்ச்சிக்குப் பிறகு கேவலமாகவும் கீழ்த்தரமாகவும் இருக்கிறது.

உங்கள் எண்ணம்போல் இந்த மக்களுக்கு உதவ நினைத்தால் வருடத்திற்கு இரு படம் நடியுங்கள். 400 கோடி வாங்குங்கள் 100 கோடியை நீங்கள் செலவு செய்யுங்கள். 300 கோடியை மக்களுக்குச் செலவழியுங்கள். உங்களை மக்கள் மகானாகப் பார்ப்பார்கள். யாரோ சிலர் உங்களை எரியவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள். அவர்கள் அரிப்புக்கு நீங்கள் ஆளானால் உங்கள் பயணங்கள் நாட்டிற்குப் பாவத்தைக் கொண்டு வரும் நாற்பது நாட்கள் துக்கம் அனுசரிக்கலாம். 41பேரை கொன்று துக்கம் கொண்டாட வேண்டுமா?

அரசியல் ஒரு சாக்கடை அதனை அள்ளத் தெரியவில்லை அசிங்கப்படுகிறீர்கள். உங்களிடம் இருப்பவர்கள் தொண்டர்களல்ல, குண்டர்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் கொலைப் பழிக்கு ஆளாவீர்கள். வீட்டுக்குக் கட்டுப்படாத விசிலடிஞ்சான் குஞ்சுகள், குரங்குகளைப் போல தாவுவதும், குடித்துவிட்டு ஆடுவதும், பொருட்களையெல்லாம் போட்டு நொறுக்குவதுமாக இருக்கின்ற ஒரு புத்தியில்லாத கூட்டத்தை உருவாக்கவா உங்கள் அரசியல் பிரவேசம்? ஜனநாயகன் பிணநாயகனாகக் கூடாது. மக்கள் காவலன் மரணத்திற்குத் தூதுவனாக மாறிவிடக் கூடாது. எவன் செத்தால் எனக்கென்ன? மக்களின் மரணத்தில்தான் எனது மறுமலர்ச்சி என்றால் உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. எங்கள் மக்கள்தான் ஏமாளிகள், மன்னனே பிணங்களை கண்டு அஞ்சியதால் அரசியலைத் துறந்து புத்தனைப் பின்பற்றி மகா அசோகன் ஆனான். ஆனாலும் அவன் மானமுள்ளவன் மனமும் உள்ளவன் ஆகையால் திருந்தினான். திருந்தாதவன் தலைவனாய் இருந்தால் மக்கள்தான் வருந்த வேண்டும்.

“நல்லவனுக்காகச்
சாகலாம்…..
நடிப்பவனுக்காகச்
சாகலாமா?”

Post Comments

Your email address will not be published. Required fields are marked *

இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறைகளையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கு இல்லை பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும் . நீக்கப்பட்ட விவரம் குறிப்பிடப்படும்

ARCHIVES